பெருந்துறை சிப்காட்டில் விஷவாயு தாக்கி 7 தொழிலாளர்கள் மரணம் சட்டப்படி நடவடிக்கை எடுக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

ஈரோடு மாவட்டம், பெருந்துறை  சிப்காட்டில் இயங்கி வரும் கே.பி.ஆர்.மில்லில் சாயக் கழிவுநீர்  சுத்திகரிப்புத் தொட்டியில் இறங்கி மின்மோட்டாரில் ஏற்பட்ட பழுதை சரிசெய்த இரண்டு தொழிலாளர்கள், அவர்களைக் காப்பாற்ற சென்ற ஐந்து தொழிலாளர்கள் என மொத்தம் 7 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களைத் தவிர 9 பேர் ஆபத்தான முறையில் பெருந்துறை கே.எம்.சி.எச். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இறந்தவர்களின் குடும்பத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.

இந்த கே.பி.ஆர்.மில்லில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பும் இது போன்று கழிவுநீர்த் தொட்டியில் இறங்கி இருவர் மரணமடைந்துள்ளனர். அப்போதே அரசு அதிகாரிகள் சட்டப்படி நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த சம்பவம் மீண்டும் நடந்திருக்க வாய்ப்பில்லை. தொழிலாளர் நலச்சட்டங்கள், தொழிற்சாலைகள் பாதுகாப்புச் சட்டங்கள், சுற்றுச் சுழல் பாதுகாப்புச் சட்டங்கள் என பல சட்டங்கள் இருப்பினும் இந்த சட்டங்களையெல்லாம் முதலாளிகளும், நிறுவனங்களும் கடைபிடிப்பதுமில்லை, அமல்படுத்துவதுமில்லை. இதுபோன்ற தொழிற்சாலைகளை சட்டப்படி ஆய்வு செய்ய வேண்டிய அதிகாரிகளும் தம் கடமையைச் செய்வதில்லை. இதனால்  இது போன்ற மனித உயிரிழப்புகள் என்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. லாபம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு தொழிலாளர்களின் உயிரை துச்சமாக மதிக்கும் முதலாளிகளின் இத்தகைய போக்கு வன்மையாகக் கண்டிக்கத் தக்கது.

தமிழக அரசு இந்நிறுவனத்தின் உரிமையாளர் மீது சட்டப்படி வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டுமென்றும், இறந்தவர்களின்  குடும்பத்திற்கு தலா ரூ. 15 லட்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டுமெனவும், இந்த விபத்தில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் 9 நபர்களுக்கும் உரிய சிகிச்சை மற்றும் நிவாரணம் வழங்கிட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு மாநில அரசை வலியுறுத்துகிறது.

Check Also

உமர் காலித் கைது சிபிஎம் கண்டனம்

உமர் காலித் உட்பட ஜேஎன்யு பல்கலைக் கழக மாணவர்கள் சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டிருப்பதற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ...

Leave a Reply