பெரும் பணக்காரர்களுக்கு வரியை அதிகரிக்க வேண்டும் என்றதற்காக இடைநீக்கமா?

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம்

பெரும் பணக்காரர்களுக்கு 40 சதவீதம் வருமான வரி விகிதத்தை உயர்த்த வேண்டும் என்றும், கோவிட் செஸ் வரி 4 சதவீதம் விதிக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்ததற்காக இந்திய வருவாய்ப் பணித் துறையைச் சேர்ந்த அதிகாரிகளில் சிலர் மோடி அரசாங்கத்தால் இடைநீக்கம்  செய்யப்பட்டிருப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுள்ள ஒழுங்கு நடவடிக்கைகளைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மோடி அரசாங்கம், இந்திய வருவாய்ப்பணித் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் சிலர், பெரும் பணக்காரர்களுக்கு 40 சதவீதம் வருமான வரி விகிதத்தை உயர்த்திட வேண்டும் என்றும், கோவிட் செஸ் வரி 4 சதவீதம் விதித்திட வேண்டும் என்றும் அதிகாரபூர்வமற்ற முறையில் அறிக்கை வெளியிட்டார்கள் என்று கூறி அவர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கையைத் தொடங்கியிருப்பதற்கு மோடி அரசாங்கத்திற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறது.

கோவிட் என்னும் கொரானா வைரஸ் தொற்றைத் தொடர்ந்து நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நிலைமையை மீட்டெடுப்பதற்கு ஒரு நிதித்திட்டத்தை அளித்திட வேண்டும் என்று அரசாங்கம் கோரியதன் அடிப்படையிலேயே அவர்கள் இத்தகு முன்மொழிவைத் தயாரித்திருந்தார்கள் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

FORCE (Fiscal Options and Responses to Covid-19 Epidemic) என்னும் அமைப்பின்கீழ் பணியாற்றிய அதிகாரிகளால் தயார் செய்யப்பட்ட முன்மொழிவுதான் பணக்காரர்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்கிற தங்களுடைய வெட்கங்கெட்ட நோக்கத்தைக் காட்டிக்கொடுக்கும் விதத்தில் மோசமாக இருந்தது என்பதால் அரசாங்கத்தை ஆத்திரப்பட வைத்திருக்கிறது.  

இவர்கள் அளித்த முன்மொழிவானது, ‘சந்தையில்’ நிச்சயமற்ற தன்மையை முடுக்கிவிடும் என்றும், பெரும் பணக்காரர்கள் ‘புனித பசுக்கள்’ என்றும் அரசாங்கம் தெளிவாகக் கூறியிருக்கிறது.    

பெரும் பணக்காரர்கள் ஆதரவான, ஏழைகளுக்கும்,  தொழிலாளர்களுக்கும் எதிரான இந்த அரசாங்கத்தின் வர்க்க அணுகுமுறை, இவர்கள் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களின் அகவிலைப்படியை பின்தேதியிட்டும், வரவிருக்கும் காலங்களில் கொடுக்க வேண்டியதையும் முடக்கி வைத்தும்,  ஒருதலைப்பட்சமாக முடிவு எடுத்திருப்பதிலிருந்து நன்கு தெரிகிறது. இதன் மூலம், வியக்கத்தக்க அளவிற்கு பிரம்மாண்டமான முறையில் அரசின் கஜானா நிரம்பும் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது.

வங்கிகளில் கோடானுகோடி ரூபாய் கடன் வாங்கிவிட்டு, வேண்டுமென்றே திருப்பிச்செலுத்தாமல் நாட்டைவிட்டே பறந்துசென்ற தலைமறைவு பேர்வழிகள் பெற்ற கடன்தொகைகளை இந்த அரசாங்கம் தள்ளுபடி செய்திருப்பதும் அதனை வெளியே தெரிவிக்காமல் இந்த அரசாங்கம் மறைத்து வந்திருப்பதும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் இப்போது பெறப்பட்டுள்ள விவரங்களிலிருந்து தெரிய வந்திருக்கிறது.  

இவற்றின்மூலம் இந்த அரசாங்கத்திற்கும்,  நாட்டையே சூறையாடிய கார்ப்பரேட்டுகளுக்கும் இடையேயான கூட்டு களவாணித்தனம் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.

இந்திய வருவாய்ப் பணித்துறை அதிகாரிகளுக்கு எதிராக இந்த அரசாங்கம் எடுத்தள்ள ஒழுங்கு நடவடிக்கைகளை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று அரசியல் தலைமைக்குழு கோருகிறது. பொருளாதாரத்தை மீட்டெடுத்திட வெளிப்படையானவிதத்தில் விவாதங்களைத் தொடங்கிட நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும்.

மேலும், பெரும் பணக்காரர்கள் நாட்டின் செல்வ வளத்தை மிகப்பெரிய அளவில் தொடர்ந்து சூறையாடும் அதே சமயத்தில், கோவிட் 19 தொற்றால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்காக ஏழைகள் மீதும், உழைக்கும் மக்கள் மீதும் ஒருதலைப்பட்சமாக சுமைகளை ஏற்றிடும் நடவடிக்கைகளைத் தடுத்திட உறுதி ஏற்போம் என்றும் அரசியல் தலைமைக்குழு தெள்ளத்தெளிவாகத் தெரிவித்துக்கொள்கிறது.

இவ்வாறு அரசியல் தலைமைக்குழு கூறியுள்ளது.

Check Also

தடுப்பூசி உபகரண ஏற்றுமதி தடையை அமெரிக்கா நீக்க வேண்டும்; சிபிஐ(எம்) வலியுறுத்தல்

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொடர்பான தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதற்குத் தேவைப்படும் பல்வேறு துணைப் பொருட்களின் பற்றாக்குறையால் தேவையான அளவிற்கு தடுப்பூசிகள் ...