பேருந்து கட்டணம், பால்விலை மற்றும் உத்தேச மின் கட்டண உயர்வுகளை உடனடியாக திரும்ப பெறுக!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநிலக்குழுக் கூட்டம்  நவம்பர் 16-17, 2011 ஆகிய தேதிகளில் சென்னையில் மாநில செயற்குழு உறுப்பினர் ப.செல்வசிங் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே. வரதராசன், தமிழ்நாடு மாநிலச் செயலாளர் ஜி, ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் என். வரதராஜன், டி.கே. ரங்கராஜன் எம்.பி., . வாசுகி மற்றும் மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:

பேருந்து கட்டணம், பால்விலை மற்றும் உத்தேச மின் கட்டண உயர்வுகளை உடனடியாக திரும்ப பெறுக! தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

தமிழக அதிமுக அரசு பால்விலையை லிட்டருக்கு முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு ரூ. 6.25ம், பேருந்து கட்டணத்தை செங்குத்தாக சுமார் இரண்டு மடங்காகவும் உயர்த்தியுள்ளது. மேலும் மாநில மின்சார ஒழுங்கு முறை ஆணையத்திற்கு மின் கட்டணத்தை உயர்த்த வேண்டுமென பரிந்துரை செய்துள்ளது.

மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையினால் உணவுப் பொருட்கள் விலையேற்றம் சுமார் 10 சதவிகிதமும், பெட்ரோலியம் மற்றும் உர விலை உயர்வும், மேலும் திட்டமிடப்பட்டு  வரும் ரயில் கட்டண உயர்வும் மக்களின் வாங்கும் சக்தி மீது மிகப் பெரிய சுமையை ஏற்படுத்தியுள்ள சூழலில் அஇஅதிமுக அரசின் இந்த கட்டண உயர்வு சாதாரண மக்கள் மீது பேரிடியாக இறங்கும்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மக்களின் பேராதரவுடன் ஆட்சிக்கு வந்த அஇஅதிமுக  உள்ளாட்சித் தேர்தலிலும் அமோக வெற்றி பெற்றது. அதிமுகவிற்கு வாக்களித்து மிகுந்த எதிர்பார்ப்போடு இருந்த ஏழை, எளிய சாதாரண மக்களுக்கு நிவாரணம் அளிப்பதற்கு பதிலாக  தமிழக முதல்வர் அறிவித்துள்ள இந்த கட்டண உயர்வுகள் “வெந்தப்புண்ணில் வேலை பாய்ச்சுவது” போல கடுமையான பாதிப்பை உருவாக்கியுள்ளது.

மாநில அரசின் இந்த விலை உயர்வை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு வன்மையாக கண்டிப்பதோடு, அறிவித்துள்ள கட்டண உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.

இந்த விலை உயர்வை எதிர்த்து கண்டனக்குரல் எழுப்புமாறு அனைத்துப் பகுதி மக்களுக்கும் கட்சியின் மாநிலக்குழு வேண்டுகோள் விடுக்கிறது.
 

Check Also

அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்களின் நிலுவையில் உள்ள 9 மாத ஊதியத்தை உடனே வழங்கிடுக!

காலமுறை ஊதியத்தில் பணியமர்த்தி – பணிநிரந்தரம் செய்திடுக! தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்! அரசுப் பள்ளிகளில் உடற்கல்வி, ...

Leave a Reply