பொதுமுடக்க நெருக்கடியிலிருந்து மக்களை பாதுகாத்திட 10,000 மையங்களில் சிபிஐ(எம்) நடத்தும் மாபெரும் மக்கள் இயக்கம் !

கொரோனா நோய்த்தொற்று மற்றும் பொதுமுடக்க நெருக்கடியிலிருந்து மக்களை பாதுகாத்திட ஆகஸ்ட் 25, 26 தேதிகளில் தமிழகத்தில் 10,000 மையங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தும் மாபெரும் மக்கள் இயக்கம்

 • அனைத்து குடும்பத்தினருக்கும் (வருமான வரி செலுத்தாத) அடுத்த ஆறுமாத காலத்திற்கு மாதம்தோறும் மத்திய அரசு ரூ. 7,500/-, மாநில அரசு ரூ. 5,000/- என ரூ. 12,500/- ரொக்கமாக வழங்கிட வேண்டும்.
 • தமிழகத்தில் கொரோனா நோய் பரவாமல் தடுத்திட சோதனைகளை அதிகப்படுத்திட வேண்டும்;
  பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவமனைகளில் சேர்த்து முறையான சிகிச்சை வழங்கிட வேண்டும்; தமிழகம் முழுவதும் மருத்துவ கட்டமைப்புகளை மேலும் அதிகரிப்பதோடு தமிழக அரசு தனியார் மருத்துவமனைகளையும் கொரோனா வார்டுகளாக கையகப்படுத்தி பயன்படுத்திட வேண்டும்.
 • தனியார் மருத்துவமனைகளில் 25 சதமான ஏழைகளுக்கு கொரோனா இலவச சிகிச்சையும் மற்றவர்களுக்கு குறைவான கட்டண விகிதங்களையும் தீர்மானித்து அமல்படுத்திட வேண்டும்.
 • வங்கி கடனுக்கான இ.எம்.ஐ., மற்றும் சுய உதவிக்குழுக்களின் கடன்கள் உள்ளிட்ட அனைத்து கடன் வசூலையும் ஓராண்டுக்கு ஒத்திவைப்பதுடன், இக்காலத்திற்கான வட்டியையும் ரத்து செய்ய வேண்டும்.
 • பொது விநியோக கடைகளில் பருப்பு, சர்க்கரை, சமையல் எண்ணெய் அனைத்தும் விலையின்றி வழங்கிட வேண்டும்.
 • இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மின் கணக்கீடு என்பதை மாற்றி, மாத மாதம் மின் கணக்கீடு செய்து மின் கட்டணம் வசூலிக்க வேண்டும். கொரோனா காலத்தில் கூடுதலாக பயன்படுத்தப்பட்ட மின்சார கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்.
 • கிராமப்புற வேலைவாய்ப்பு சட்டத்தின் படி, கிராமப்புற மக்களுக்கு வருடத்திற்கு 200 நாட்கள் வேலையும், ஊதிய உயர்வும் வழங்கப்பட வேண்டும். இந்த வேலைவாய்ப்பு சட்டத்தினை நகர்ப்புறங்களுக்கும் விரிவுபடுத்திட வேண்டும். வேலையில்லா இளைஞர்களுக்கு வேலையின்மை நிவாரணம் வழங்கிட வேண்டும். விவசாயிகளுக்கு நிவாரணம் மற்றும் கடன் வழங்கிட வேண்டும்.
 • தமிழகத்தில் ஆளுங்கட்சி மற்றும் அதிகாரிகளின் கூட்டுக் கொள்ளையாக நடைபெறும் பேக்கேஜ் டெண்டர்களை கைவிட்டு, தேர்வு செய்யப்பட்ட உள்ளாட்சி நிர்வாகிகளிடம் அனைத்து அதிகாரங்களையும், பணிகளையும் ஒப்படைத்திட வேண்டும்.
 • தொழிலாளர் நல சட்டங்களை பறிக்க முனையும் சட்ட முன்மொழிவுகளை திரும்பப் பெற வேண்டும். கேந்திரத் தொழில் மற்றும் பொதுத்துறைகளை தனியாருக்கு வழங்கும் முடிவுகளை ரத்து செய்ய வேண்டும். சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அவசர சட்டத்தை திரும்பப் பெற வேண்டும்.
 • புதிய கல்விக்கொள்கையை திரும்பப் பெற வேண்டும். தலித் பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கான இடஒதுக்கீடு கறாராக செயல்படுத்தப்பட வேண்டும்.
 • சட்ட விரோத நடவடிக்கைகள் தடை சட்டம், தேசிய பாதுகாப்பு சட்டம், இந்திய தண்டனை சட்டத்தில் தேச துரோக பிரிவு ஆகியவற்றின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும்.
 • தலித் மக்கள், பெண்கள், பழங்குடியினர் ஆகியோருக்கு எதிரான வன்முறைகள், காவல்நிலைய படுகொலைகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இத்தகைய வன்முறையாளர்களை, கொலையாளிகளை சட்டப்படி தண்டிக்க வேண்டும்.
  கொரோனா வைரஸ் தொற்று பரவலால் மக்களின் இயல்பு வாழ்க்கையும், நாட்டின் பொருளாதாரமும் பெரும் பாதிப்பை எதிர்கொண்டு வருகிறது.

நமது நாட்டில் கொரோனா தொற்றால் 25 லட்சத்திற்கு மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் 6500க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். நோய் பரவலும், உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே உள்ளன.

அவசர கோலத்தில் எவ்வித முன்யோசனையுமின்றி, மத்திய பாஜக அரசால் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக பல லட்சம் புலம் பெயர் தொழிலாளர்களும், கிராமப்புற – நகர்ப்புற உழைப்பாளி மக்களும், நடுத்தர மக்களும் பெரும் பாதிப்பை எதிர்கொள்ள நேரிட்டது. விவசாயமும், தொழிலும், நாட்டின் பொருளாதாரமும் பெரும் சரிவை சந்தித்துள்ளன. வாழ்வாதாரத்தை இழந்து பெரும் துயரில் மக்கள் உள்ளனர்.

தமிழகத்தில் அதிமுக அரசு நோய்த்தொற்று பரவலை தடுப்பதில் திட்டமிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள தவறியதால் நோய்த்தொற்று பரவும் ஆபத்து தொடர்கிறது. உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளது. நீடித்து வரும் பொதுமுடக்கத்தால் வேலையிழப்பும், வாழ்வாதார இழப்பும், வறுமையும் கோடிக்கணக்கான தமிழக மக்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கியுள்ளது.

மக்களின் நெருக்கடிகளை தீர்க்க நடவடிக்கை எடுப்பதற்கு மாறாக, கொரோனா சிகிச்சை, மருத்துவ உபகரணங்கள், உணவு ஏற்பாடுகள், நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை டெண்டர்கள், உள்ளாட்சி அமைப்புகள் போன்ற அனைத்திலும் அதிமுக அரசு ஊழல் – முறைகேடுகளில் தலைவிரித்தாடுகிறது.

கொரோனா மற்றும் ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து தரப்பு மக்களையும், தொழில்களையும் பாதுகாக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தும் நாடு தழுவிய கிளர்ச்சி இயக்கத்தின் பகுதியாக, தமிழகத்தில் ஒருவார காலம் மக்கள் சந்திப்பும், 2020 ஆகஸ்ட் 25-26 ஆகிய தேதிகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மையங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்களையும் நடத்துகிறது. இந்த கண்டன ஆர்ப்பாட்டங்கள் ஊரடங்கு விதிகளுக்கு உட்பட்டு நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறது.

மேற்கண்ட இயக்கத்திற்கு தமிழக மக்கள் பேராதரவு அளித்து கலந்து கொள்வதோடு, மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோதப் போக்கினை எதிர்த்து கண்டன குரலெழுப்பிட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது.

கே.பாலகிருஷ்ணன்,
மாநிலச் செயலாளர்.

Check Also

அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாக வழங்க இடதுசாரிக் கட்சிகள் வலியுறுத்தல்

மே தினமான இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ...