பொன்னாரின் ஒப்புதல் வாக்குமூலம்

கொள்கை வழிநின்று

இந்து அமைப்பினர் தாக்கப்படுவது தொடருமானால் “தமிழகம் கலவர பூமியாக மாறும்” என்று ஞாயிறன்று முழங்கியிருக்கிறீர்கள். இந்து அமைப்பினர் என்று தாங்கள் சொல்வதன் பொருளை இந்துத்துவா அமைப்பினர் என்று மக்கள் புரிந்து கொள்ளாத முறையில் சொல்லியிருக்கிறீர்கள். சமீபத்தில் இந்துத்துவா அமைப்பினர் எங்கே, எதற்காக தாக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை நீங்கள் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். மாறாக, தமிழகத்தில் சமீபகாலங்களில் நடக்கும் தனிப்பட்ட விரோதத்தின் காரணமான தாக்குதல்களை, காவல்துறைக்கு அவகாசம் கொடுக்காமலேயே, இஸ்லாமியர்கள் தான் அந்த தாக்குதல்களை நடத்தினார்கள் என்று அறிக்கை வெளியிடுவதும், அதேபோன்று தற்கொலை செய்து கொண்டவர்களை கொலை செய்யப்பட்டதாகவும், கொலை செய்யப்பட்டதற்கான நோக்கம் மதரீதியான அமைப்புகள் என்று தோன்றும் வகையிலும் தாங்கள் உட்பட பாஜகவின் மூத்த தலைவர்கள் பேசி வருகிறீர்கள். இதன் தொடர்ச்சியாக உங்கள் அமைப்பின் ‘கொள்கை’ வழியில் நின்று தமிழகத்தை கலவர பூமியாக மாற்ற நீங்கள் திட்டமிட்டிருப்பதையே தங்களின் பேச்சு வெளிப்படுத்துகிறது.

இந்தியாவின் எந்தவொரு பகுதியிலும் கலவரங்கள் இல்லாமல் சொத்து அழிப்புகளும், சிறுபான்மையினர் மற்றும் தலித்துகள் கொல்லப்படாமலும், தாக்கப்படாமலும் தாங்கள் ஆட்சிக்கு வந்ததாக காட்ட முடியாது. மற்றவற்றை விடுங்கள். நீங்கள் வெற்றி பெற்றுள்ள நாகர்கோவில் தொகுதியில் மண்டைக்காடு கலவரத்திற்கு பின்பு தான் தங்கள் அமைப்பு காலூன்ற ஆரம்பித்தது என்பதும், அதன் பிறகு இரு மதங்கள் உள்ள எல்லா ஊர்களிலும் ஏதோ ஒரு வகையில் பகைத் தீயை எரிய விட்டிருக்கிறீர்கள் என்பதும் தமிழகம் அறிந்த செய்தி.

அடுத்தது, கோயம்புத்தூர். கலவரங்களின் மூலமாகவும், அழித்தொழிப்புகளின் மூலமாகவுமே உங்கள் அமைப்பை காப்பாற்றி வருகிறீர்கள். திருப்பூரும் அப்படித்தான். எல்லா பிரச்சனைகளையும், அதன் பின்புலத்தையும் விளக்க வேண்டிய அவசியமில்லை. உதாரணத்திற்காக, சமீபத்தில் தங்கள் கட்சியினரின் அணுகுமுறை குறித்து குறிப்பிட விரும்புகிறேன்.

கற்பனை தலிபான்கள்

கடந்த 2017, ஜூன் மாதம் 22ந் தேதியன்று உங்கள் கட்சியின் இராமநாதபுரம் நகரத்தின் நிர்வாகியாக இருந்த அஸ்வின் குமார் மற்றும் அவரது தந்தை கடுமையாக தாக்கப்பட்டனர். இது குறித்து தங்கள் கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா வெளியிட்ட பத்திரிகைச் செய்தியில் அஸ்வின்குமார் மற்றும் அவரது தந்தை “முஸ்லீம் பயங்கரவாதிகளால் மிருகத்தனமாக தாக்கப்பட்டதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.” என்று விளம்பியிருக்கிறார். இதேபோன்று நாராயணன் “தமிழக காவல்துறை தலிபான்கள் அதிகம் உள்ள இராமநாதபுரத்தை தங்கள் கட்டுப்பாட்டில் எடுக்க வேண்டும். சிரமம் இருப்பின் இந்த மாவட்டத்தை மத்திய அரசின் பொறுப்பில் விட்டுவிட்டால் ஒரே மாதத்தில் பயங்கரவாதத்தை வேரோடு அறுக்கும்” என்று தனது ‘நோக்கத்தை’ உண்மை போல வெளியிட்டுள்ளார். கே.டி.ராகவன் “அஸ்வின்குமார் மற்றும் அவருடைய தந்தை ஆகியோர் இஸ்லாமிய அடிப்படைவாதக் கும்பல்களால் வெட்டப்பட்டுள்ளார்கள்” என்று பதிவிட்டிருக்கிறார்.

இப்படி ஒவ்வொருவரும் வரிந்து கட்டிக்கொண்டு முஸ்லீம்கள்தான், தீவிரவாத அமைப்புகள் தான் அஸ்வினையும் அவருடைய தந்தையையும் வெட்டிவிட்டார்கள், கடை சூறையாடப்பட்டுவிட்டது என்று கொளுத்திபோடுகிறார்கள். இவர்கள் சொல்வது எல்லாம் உண்மை என்று நம்புகிற அப்பாவிகள் இருந்தால் என்ன நடந்திருக்கும்… முஸ்லீம்கள் தாக்கப்பட்டிருப்பார்கள், முஸ்லீம் வீடுகள் சூறையாடப்பட்டிருக்கும், இந்த தாக்குதலில் ஈடுபட்ட அப்பாவிகள் சிறைக்கு போயிருப்பார்கள்; அல்லது உங்களை அண்டி வாழ நிர்ப்பந்திக்கப்பட்டிருப்பார்கள். அதை வைத்து நீங்கள் காவிக்கொடியை பறக்க விட்டிருப்பீர்கள். இதுதானே வழக்கம்.

இந்த தாக்குதல் வழக்கில் மணிகண்டன், தஸ்வே ரவி, முத்துராமலிங்கம், தஸ்வே தவசிநாதன் மற்றும் சதீஸ் என 5 பேரை போலீஸ் கைது செய்துள்ளது. இவர்கள் எல்லாம் தலிபான்களா? முஸ்லீம் தீவிரவாதிகளா?

உண்மையை தூக்கிலிட்டவர்கள்

இதேபோன்று இந்த ஆண்டு ஜனவரி மாதம் 26-ந் தேதி திருப்பூரில், திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக துணைத் தலைவர் முத்து என்கிற மாரிமுத்து தூக்கில் பிணமாக தொங்குகிறார். அவருடைய பிணத்தின் கீழே பாஜக கொடி, இந்து முன்னணி கொடி, பிரதமர் மோடியின் படம் மூன்றிற்கும் செருப்பு மாலை போடப்பட்டிருக்கிறது. உங்கள் கட்சியின் தலைவர்கள் இது கொலையென்றும், குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டுமென்றும் இந்துத்துவா இயக்க பிரமுகர்கள் இப்படி கொல்லப்படுவது தொடர்ச்சியாக நடைபெறுவதாகவும் பேசினார்கள். உண்மையில், அந்த படத்தை பார்க்கிற யாருக்கும் மனம் பதை பதைக்கும். தாங்கள் கூட அந்த குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறவும், உதவி செய்யவும் வருவதாக பத்திரிகைகள் செய்திகளை வெளியிட்டிருந்தன. பின்னர், உங்களுடைய அந்த பயணம் ரத்து செய்யப்பட்டதாகவும் பத்திரிகைகள் வழியாக தெரிந்து கொள்ள முடிந்தது. அதன் பிறகு உங்கள் கட்சியைச் சார்ந்த யாரும் முத்து அவர்களின் மரணம் பற்றி எதுவும் பேசியது கிடையாது. ஏனென்றால் இடைப்பட்ட காலத்தில் முத்து சொந்த காரணங்களுக்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது அம்பலமானது.

மரியாதைக்குரிய மத்திய இணை அமைச்சர் அவர்களே, அதுவொரு கொலையெனில் அதில் நீங்கள் உறுதியாக இருக்கும்பட்சத்தில் உண்மையான கொலையாளிகளை கண்டுபிடிக்க வேண்டுமென்று கோரியிருக்க வேண்டாமா? அது தற்கொலை தான் என்று தாங்கள் முடிவுக்கு வந்தால் உண்மையில் உங்கள் கட்சி இந்த பிரச்சனையை நேர்மையாக அணுகினால் பாஜக, இந்து முன்னணி கொடிகளுக்கும்,மோடி படத்திற்கு செருப்பு மாலை அணிவித்தவர் யார் என்று கண்டுபிடிக்க வேண்டுமென்று கோரியிருக்க வேண்டாமா? நிச்சயமாக, இதையெல்லாம் செய்து விட்டு முத்து தூக்கில் தொங்கியிருக்க வாய்ப்பில்லை.

இந்த கொலையை முதலில் பார்த்த உங்கள் அமைப்புகளைச் சார்ந்த ஒருவர் குடும்பத்திற்கும், பொதுமக்களுக்கும், போலீசுக்கும் சொல்வதற்கு முன்பாக கொடிகளுக்கும், மோடியின் படத்திற்கும் செருப்பு மாலை அணிவித்து விட்டு சொல்லியிருக்கிறார். எத்தனை நயவஞ்சகம், எத்தனை அழுகிப்போன வக்கிரமான மூளை அது. தொடர் பயிற்சியில்லாமல் மிக நிதானமாக ஒரு பிணத்தின் கீழே இவற்றையெல்லாம் ஒருவரால் நடத்தியிருக்க முடியுமா? உங்கள் அமைப்புகளுக்கு தொடர்பில்லை என்றால் தீய நோக்கத்துடன் இச்செயலை செய்தவரை கண்டுபிடிக்க வேண்டுமென்று நீங்கள் கோரிக்கை வைத்திருக்க வேண்டாமா? இன்று வரை அதை செய்யவில்லையே. இதன் பொருள் என்ன? திட்டமிட்டு மதமோதலை உருவாவதற்கு முயற்சித்திருக்கிறார்கள் என்பதைத் தவிர வேறென்ன இருக்க முடியும்?

கடந்த ஆண்டும் திருப்பூரில் பக்ரீத் பண்டிகை அன்று கடையடைப்பு செய்வதற்கு உங்கள் அமைப்பினர் செய்த முயற்சியினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அனைத்துக் கட்சிகளின் துணையோடு முறியடித்தது.

ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் குண்டு போட்ட இந்து முன்னணி

உங்கள் கட்சியில் வளர்ந்து வரும் திண்டுக்கல் நகர தலைவர் ஒருவர், தன் வீட்டில் யாரோ பெட்ரோல் குண்டு வீசி விட்டதாக போலீசில் புகார் கொடுத்தார். உங்கள் கட்சியினர் கண்டித்தார்கள். ஆர்ப்பாட்டங்கள் எல்லாம் நடைபெற்றது. காவல்துறையும் முடுக்கிவிடப்பட்டது. அப்புறம் தான் தெரிந்தது, உங்கள் கட்சியின் ஒவ்வொரு தலைவரும் ஆயுதம் தாங்கிய போலீஸ்காரர்கள் பாதுகாப்புடன் அலைவதை பார்த்ததும் தனக்கும் அப்படியொரு பாதுகாப்பிற்காக நாடகம் ஆடினார் என்று.

இது தங்கள் அமைப்புகளுக்கு ஒன்றும் புதிதல்ல. கடந்த கால தங்கள் அமைப்புகளின் செயல்பாட்டிலிருந்தே உங்களிடம் புதிதாக வருபவர்களும் ‘கற்றுக் கொள்கிறார்கள்’.

2008ம் ஆண்டு ஜனவரி மாதம் 24ந் தேதியன்று குடியரசு தினத்திற்கு இரண்டு நாள் முன்பு தென்காசி ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் குண்டு வெடிக்கிறது. குண்டு வெடித்த இடத்தில் முஸ்லீம்கள் அணியும் தொப்பி கிடக்கிறது. தென்காசி அதற்கு முன் பலமுறை மதமோதல்களையும், கொலைகளையும் கண்டிருக்கிறது. 2007ம் ஆண்டு தென்காசியில் மதமோதலில் 6 பேர் கொல்லப்பட்டார்கள். உடனடியாக பதற்றம் பற்றிக் கொள்கிறது. நம்மையெல்லாம் சந்தேகிப்பார்களோ என்று முஸ்லீம் இளைஞர்களுக்கு பதற்றம். நீங்கள் வழக்கமாக பேசுகின்ற “நாங்கள் எல்லாம் இந்துக்கள்” என்பதை நம்புகிற சாதாரண இந்து மனிதனுக்கு எந்தவொரு முஸ்லீமை பார்த்தாலும் இவர்கள் தான் செய்திருப்பார்களோ என்கிற சந்தேகம். இப்படிப்பட்ட ஒரு களம் உங்கள் வளர்ச்சிக்கு மிகப்பெரிய வாய்ப்பு அல்லவா? அது எளிய மனிதர்களுக்கு எங்கே தெரியப் போகிறது? நல்லவேளையாக அப்போதிருந்த காவல்துறையினர் மிகத் தீவிரமாக விசாரித்த பிறகு குண்டு போட்டவர்கள் இந்து முன்னணி அமைப்பினர் என்று கண்டுபிடித்தார்கள். நீதிமன்றமும் அவர்கள் தான் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்திருக்கிறது.

பொய் சொன்ன சி.சி.டி.வி.

இதேபோன்று இந்த ஆண்டு ஜூன் மாதம் 7-ந் தேதியன்று இரவு 8.30 மணிக்கு திருவனந்தபுரம் பாஜக அலுவலகத்தில் ‘அடையாளம் தெரியாத நபர்கள் குண்டு வீசி தாக்குதல்’ நடத்திவிட்டார்கள். ஆனால் 6 மணி 31 நிமிடத்திற்கெல்லாம் ஜெயதேவ் ஹரிந்தரன் நாயர் என்பவர் தனது முகநூல் பக்கத்தில் திருவனந்தபுரம் பாஜக அலுவலகத்தில் குண்டு வெடித்து விட்டதாக பதிவு செய்திருக்கிறார். அந்த அலுவலகத்தில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. அவை வேலை செய்யவில்லையாம். இதற்கு முன்பும் இப்படி ‘தாக்குதல்’ நடந்த போதும் அந்த சி.சி.டி.வி. கேமராக்கள் வேலை செய்யவில்லையாம். எனவே கலவர பூமியாக்கி விடுவோம் என்று நீங்கள் சொல்வதன் பொருள் தமிழகத்தை பொய்யான மோதல்கள் மூலம், தவறான தகவல்கள் மூலம் கலவர பூமியாக மாற்றுவதற்கு உங்கள் அமைப்பினர் முடிவு செய்திருப்பதாகவே பொருள் கொள்ளத் தோன்றுகிறது.

இதோ, கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசிய விஷ்வ இந்து பரிஷத்தின் தலைவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

மாண்புமிகு. மத்திய இணை அமைச்சர் அவர்களே, அதிகாரத்திற்காக பொய்யான தகவல்கள் மூலம், இத்தகைய வன்முறைகளை கட்டவிழ்த்து விடுவதை உங்கள் அமைப்பு வழக்கமாக வைத்திருக்கிறது. இப்போது நீங்கள் வாக்குமூலமாக சொல்லுவதற்கு முன்வந்திருக்கிறீர்கள். தமிழகத்திற்கு இதையும் எதிர்கொள்ளும் திறன் உண்டு.

– க.கனகராஜ்
மாநில செயற்குழு உறுப்பினர் சிபிஐ(எம்)

Check Also

சாதிய அணி சேர்க்கைக்கு இடமளிக்க வேண்டாம்!

வன்னியர்கள் மீது அவதூறுகள் பரப்பப்படும் போது அது தொடர்பான உண்மை நிலையை சம்பந்தப்பட்டவர்களுக்கு உணர்த்துவதற்காகவும், தீய பிற்போக்கு சக்திகளிடமிருந்து வன்னியர் ...