கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென்றும், அவர்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கை திரும்பப் பெறுவதோடு, அப்பகுதியில் ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்கள் மீது சட்டப்படி வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதோடு, ஆக்கிரமிப்புகளை மீட்டு மழைநீர் வடிகால் ஓடையை பாதுகாக்க வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.

பொன்னேரியில் மழைநீர் வடிகால் ஓடை ஆக்கிரமிப்பு எதிர்த்து போராடியவர்கள் அமைச்சரின் தூண்டுதலின் பேரில் கைது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகில் தடப்பெரும்பாக்கம் ஊராட்சி, பொன்னேரி – திருவொற்றியூர் டி.எச். ரோட்டில் சாலையோரம் உள்ள மழைநீர் வடிகால் ஓடையை சிறிய கடைகள் முதல் பெரிய கடைகள் மற்றும் தாபா ஓட்டல், பெட்ரோல் பாங்க் என ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. பெட்ரோல் பாங்கிற்கு வரும் வாகனங்களை நிறுத்துவதற்கான கட்டுமானப் பணிகளிலும் ஈடுபட்டுள்ளனர்.

மழைநீர் வடிகால் ஓடையை ஆக்கிரமித்து சட்டவிரோதமாக செய்து வரும் கட்டுமானப் பணிகளை உடனே தடுத்து நிறுத்த வேண்டுமெனவும், ஆக்கிரமிப்பாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அக்டோபர் 10 அன்று போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தின் விளைவாக, பொன்னேரி வட்டாட்சியர் அவர்களும் உடனடியாக தலையிட்டு மேற்கண்ட கட்டுமானப் பணிகளை நிறுத்த வேண்டுமென ஆக்கிரமிப்பாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.  ஆனால் அதையும் மீறி ஆக்கிரமிப்பாளர்கள் கட்டுமானப் பணியில் ஈடுபட்டதால் அக்டோபர் 14 அன்று மீண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அப்பகுதி பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்தியது.

இந்நிலையில் அன்றிரவே அமைச்சர் பெஞ்சமின் அவர்களின் தூண்டுதலின் பேரில், போராட்டம் நடத்திய வாலிபர் சங்க மாவட்ட தலைவர் தோழர் டி. மதன் மற்றும் அந்த  ஊராட்சி மன்ற  முன்னாள் வார்டு உறுப்பினர் டீ. பாலாஜி ஆகிய இருவரையும்  நள்ளிரவில் வீடுபுகுந்து அராஜகமாக கைது செய்து பொன்னேரி காவல்நிலையத்தில் அடைத்து வைத்து, பின்னர் திருப்பாலைவனம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று அவர்கள் இருவர் மீது பொய் வழக்கு புனைந்துள்ளனர்.

ஏற்கனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென்று தமிழகம் முழுவதும் பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றனர். மற்றொரு புறம் நீதிமன்றங்களும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமெனவும் வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில், மழைநீர் வடிகால் ஓடையையும், அரசு நிலத்தையும் சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்களை கைது செய்து நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக, ஆக்கிரமிப்புகளை மீட்க வேண்டும், மழை நீர் வடிகால் ஓடையை பாதுகாக்க வேண்டுமென்ற நோக்கத்தோடு போராடியவர்களை, அமைச்சரின் தூண்டுதலின் பேரில் நள்ளிரவில் வீடு புகுந்து காவல்துறையினர் கைது செய்துள்ளதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

மேலும் கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென்றும், அவர்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கை திரும்பப் பெறுவதோடு, அப்பகுதியில் ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்கள் மீது சட்டப்படி வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதோடு, ஆக்கிரமிப்புகளை மீட்டு மழைநீர் வடிகால் ஓடையை பாதுகாக்க வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.

Check Also

அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாக வழங்க இடதுசாரிக் கட்சிகள் வலியுறுத்தல்

மே தினமான இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ...