பொருளாதார வீழ்ச்சிக்கு யார் பொறுப்பு?

கடந்த சில தினங்களாக நாட்டின் பொருளாதாரம் குறித்து வந்து கொண்டிருக்கும் செய்திகள் தொடர்ந்து மிகவும் பயங்கரமாக இருக்கின்றன. வெளியாகியிருக்கும் தரவுகள் அனைத்துமே ரூபாய் நோட்டு செல்லாது என்று அறிவித்தது, நாட்டின் பொருளாதார மந்தத்தை துரிதப்படுத்தியிருக்கிறது என்றும் நாடு பின்னோக்கிச் செல்வதற்கு இட்டுச் செல்லும் என்றும் காட்டுகின்றன. ஒட்டுமொத்த இந்தியப் பொருளாதாரத்தின் இருண்ட பக்கத்தையே சமீபத்திய பொருளாதார ஆய்வறிக்கையின் இரண்டாம் தொகுதி காட்டியுள்ளது. 2016-17க்கான உண்மையான மதிப்புக்கூட்டல் (real Gross Value Added) வளர்ச்சி விகிதம்6.6 சதவீதமாகும். இது 2015-16 ஆம் ஆண்டில் 7.9 சதவீதமாக இருந்தது என்பதுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் வீழ்ச்சியைப் புரிந்து கொள்ள முடியும். இந்த ஆண்டு மொத்த மதிப்புக் கூட்டலின் நான்காவதுகாலாண்டுக்கான வளர்ச்சி, அதாவது ஜனவரி முதல் மார்ச் மாதத்திற்கு வெறும் 5.6 சதவீதம் மட்டுமேயாகும்.

உற்பத்தித் துறையின் (manufacturing sector) மொத்த மதிப்புக் கூட்டல் வளர்ச்சி இந்த ஆண்டின் முதல் காலாண்டுக்கு, அதாவது ஏப்ரல் முதல் ஜூன் மாதத்திற்கு வெறும் 1.2 சதவீதம் மட்டுமே. சென்ற ஆண்டு இதே காலண்டிற்கு இது 10.7 சதகடந்த மூன்றாண்டுகளாகவே ஏற்றுமதிகள் தேக்க நிலையிலேயே இருக்கின்றன. தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் செயல்படா சொத்துக்கள் (non-performing assets) அதீதமாக உயர்ந்திருக்கின்றன. 2017 ஜூன் இறுதியில் செயல்படா சொத்துக்களின் மொத்த மதிப்பு 8.26 லட்சம் கோடி ரூபாயாக ஊதிப் பெருத்திருக்கிறது. வேலைகளைப் பெருக்குதல் தொடர்பாக வெளியாகியிருக்கும் அனைத்துப் புள்ளி விவரங்களும் அமைப்புரீதியான துறைகளில் (organized sector) வேலைவாய்ப்புகள் குறைந்திருப்பதையும், கடந்த பத்தாண்டுகளில் புதிதாக உருவாக்கப்பட்ட வேலைகள் மிகவும் கீழ்மட்டத்தில் இருப்பதையுமே காட்டுகின்றன.

இரண்டாவது தொகுதி விவரங்களை மத்திய புள்ளி விவர அமைப்பு அளித்திருக்கிறது. இது, முதல் காலாண்டில், அதாவது நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்திற்கு, மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சி 5.7 சதவீதம் என மதிப்பிடப்பட்டிருக்கிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் கடந்த நான்கு காலாண்டுகளிலும் வீழ்ச்சி அடைந்திருக்கிறது. இந்தக் காலாண்டுக்கான தொழில் உற்பத்திக்கான அட்டவணை வளர்ச்சி விகிதம் 1.8 சதவீதம் என்று காட்டுகிறது. முதலீடுகளில் முன்னேற்றம் எதுவுமில்லை.

ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பானது பொருளாதார மந்தத்தை உக்கிரப்படுத்தி, முறைசாராத் துறையில் மிகப்பெரிய அளவுக்கு சீர்குலைவை ஏற்படுத்தியது என்பதிலோ, நாட்கூலி பெற்று வந்தவர்கள் தங்கள் உயிரையே இழக்க வேண்டிய நிலையை ஏற்படுத்தியது என்பதிலோ, விவசாயிகளின் வாழ்வில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியது என்பதிலோ எவ்விதச் சந்தேகமும் இல்லை. இந்திய ரிசர்வ் வங்கியும் இதன் பாதிப்பை கிரகித்துக் கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது. புதிய கரன்சி நோட்டுக்களை அச்சடிக்க வேண்டிய கட்டணத்தையும் அது ஏற்க வேண்டிய நிலையில் இருந்தது. இவற்றின் விளைவாக, அரசாங்கத்திற்கு இந்திய ரிசர்வ் வங்கி அளிக்க வேண்டிய ஈவுத்தொகை பாதியாகக் குறைந்தது. மூன்றாவதாக, செல்லாது என்று அறிவித்த கரன்சி நோட்டுக்கள் இந்திய ரிசர்வ் வங்கிக்குக் திரும்பி வந்த விவரங்கள் இப்போது வெளியாகி இருக்கின்றன.

செல்லாது என்று அறிவிக்கப்பட்ட 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களில் அநேகமாக 99 சதவீதம் திரும்பி வந்துவிட்டதாக கூறப்பட்டிருக்கிறது. மேலும் மத்திய மாவட்ட கூட்டுறவு வங்கிகளில் உள்ள தொகை கணக்கில் கொண்டு வரப்பட வேண்டியிருக்கிறதாம். இவை அனைத்தும் ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பின் மூலம் கறுப்புப் பணத்தை வெளிக் கொணர்வோம் என்றும் மற்றும் ஊழலை ஒழித்துக் கட்டுவோம் என்றும் அரசுத் தரப்பில் மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரங்கள் அனைத்தையும் தவிடுபொடியாக்கியிருக்கின்றன. ஒட்டுமொத்தத்தில் ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்தது, பொருளாதாரத்திற்கு ஊறு விளைவித்திடவும், ஏழை மக்களையும் முறைசாராத் தொழில்களையும் கடுமையாகத் தாக்கவும்தான் இட்டுச் சென்றிருக்கிறது. இத்தகைய பின்னணியில்தான் மத்திய அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டிருக்கிறது.

நன்கு செயல்பட்டோருக்கு வெகுமதி அளிக்கப்பட்டிருப்பதாகவும், செயலற்று இருந்தவர்கள் தண்டிக்கப்பட்டிருப்பதாகவும் மிகைப்படுத்தப்பட்டு பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர். ஆனால் உண்மையில் என்ன நடந்திருக்கிறது என்பதைப் பார்க்கும்போது இக்கூற்று எவ்விதத்திலும் அதற்குப் பொருந்துவதாக இல்லை. நிர்மலா சீதாராமன் வணிகம் மற்றும் தொழில்துறைக்கு அமைச்சராகயிருந்தார். அவருடைய பதவிக் காலத்தில்தான் ஏற்றுமதிகள் 2015-16 ஆம் ஆண்டில் 15.6 சதவீதம் வீழ்ச்சி அடைந்தது. வியட்நாம் மற்றும் வங்க தேசம் ஏற்றுமதிகளில் ஒரு நல்ல உயர்வினைப் பதிவு செய்துள்ள சமயத்தில்தான் நம் நாட்டில் இத்தகு சோர்வூட்டும் நிலை ஏற்பட்டிருக்கிறது. தொழில் உற்பத்தியைப் பொறுத்த வரை, வீழ்ச்சி மிகவும் அதலபாதாளத்திற்குச் சென்றிருப்பதையும் பார்த்துக் கொண்டிருக்கிறது.

எனவே, அவர் என்ன சாதித்தார் என்று பாதுகாப்பு அமைச்சராக பதவி உயர்வு செய்யப்பட்டிருக்கிறார்? தற்போது வணிகம் மற்றும் தொழில்துறைக்கு அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள சுரேஷ் பிரபுவைப் பொறுத்த வரை, கடந்த இரண்டு ஆண்டுகளில் மிகவும் மோசமான முறையில் தொடர்ந்து ரயில் விபத்துக்கள் ஏற்பட்டுக் கொண்டிருப்பதைத் தொடர்ந்து அவர் ரயில்வே அமைச்சர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார். வேளாண்துறைக்கான அமைச்சரும் மிகவும் திறமையாகச் செயல்பட்டார் என்று கருத முடியுமா? ஒவ்வொருவர் குறித்தும் ஆராய்ந்தோமானால் பட்டியல் நீளும். எதார்த்தம் என்னவென்றால் ஒவ்வொரு துறையில் நடைபெறும் வேலையின் வெற்றியைத் தீர்மானிப்பது அது பின்பற்றும் கொள்கைகளே தவிர, அத்துறையின் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ள தனிப்பட்ட அமைச்சர்கள் அல்ல. மோடியின் ஆட்சியின் கீழ் ஒவ்வொரு துறையின் அடிப்படைக் கொள்கையையும் தீர்மானிப்பது பிரதமர் மட்டுமே.

எனவே, வங்கிகளின் செயல்படா சொத்துக்கள் அதிகரித்திருக்கிறது என்றால் அதற்கு வங்கிகளைப் பொறுப்பாக்கி அவற்றைத் தனியாரிடம் தாரைவார்க்க வேண்டும் என்று சொல்கிறார்களேயொழிய, அவ்வாறு கடன் வாங்கிவிட்டுத் திருப்பிச் செலுத்தாத தனியார் நிறுவனங்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று கூற மறுக்கிறார்கள். ரயில்வே துறையைத் தனியாருக்குத் தாரை வார்க்க வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டால் பின்னர் பாதுகாப்பு என்பதற்கு முன்னுரிமை இல்லாமல் போய்விடுகிறது. ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று நிதி அமைச்சர் அருண் ஜெட்லிதான் தீர்மானித்தார் என்றால், அதனால் ஏற்பட்ட சொல்லொண்ணா துன்ப துயரங்களுக்குப் பொறுப்பேற்று அவர் அப்பொறுப்பிலிருந்து வெளியேறி இருக்க வேண்டும். ஆனால், இம்முடிவினை எடுத்தது யார் என்று எல்லோருக்குமே தெரியும்.

இந்திய நாடு மிகப்பெரும் பொருளாதாரப் பின்னடைவை (recession) நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. வேளாண் நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளின் எதிர்காலமே கேள்விக்குறியாகியிருக்கிறது. முறைசாராத் தொழில்களில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து அவதிக்குள்ளாகி இருக்கிறார்கள். இளைஞர்களுக்கு வேலைகள் இல்லை. ஒரு “வலுவான தலைவர்” என்று எந்த அளவுக்கு மோடி சித்தரிக்கப்படுகிறாரோ, அதற்கு முரணான முறையில், பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள இத்தனை குளறுபடிகளுக்குமான முழுப் பொறுப்பையும் அவர்தான் தன் தோள்களில் தாங்கிக் கொள்ள வேண்டும்.

பீப்பிள்ஸ் டெமாக்ரஸி

தமிழில்: ச.வீரமணி

Check Also

மோடியின் சுயசார்பு என்னும் கேலிக்கூத்து அமெரிக்காவிடம் சரணடைந்துவிட்ட இந்துத்துவா வெறியர்களின் ‘சுதேசிப்’ பிரச்சாரம்..

மோடியின் சுயசார்பு – சுதேசி பித்தலாட்டம் பிரதமர் நரேந்திர மோடி, சுயசார்பு என்னும் கருத்தை, இருபத்தோராம் நூற்றாண்டை இந்தியாவின் நூற்றாண்டாக ...