போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கைகள் நியாயமானவை உடனே நிறைவேற்றுக! – சிபிஐ(எம்)

தமிழக அரசுப் போக்குவரத்து ஊழியர்கள் வரும் 15-ந் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது என முடிவு செய்துள்ளார்கள். 12000 பேருந்துகள் நஷ்டம் வரும் என்று தெரிந்தாலும் மக்களுக்கு சேவை செய்வதற்காக லாபமற்ற வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன. மூன்று லட்சம் மூத்த குடிமக்கள் உள்ளிட்ட பலருக்கு இலவச பயணம் என்று மாநில அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. இதேபோன்று மாணவர்களுக்கு வழங்கும் இலவச பயணத்திற்கான கட்டணத்தில் 44 சதவிகிதத்தை போக்குவரத்துக் கழகங்களே ஏற்றுக் கொள்கின்றன. 56 சதவிகிதம் மாநில அரசாங்கம் அறிவித்துள்ள கட்டணச் சலுகைக்காக கொடுக்கப்பட வேண்டும். ஆனால் இதுவரையிலும் அந்த நிதி முறையாகவும், முழுமையாகவும் போக்குவரத்துக் கழகங்களுக்கு வழங்கப்படுவதில்லை. இதனால் போக்குவரத்துக் கழகங்கள் கடுமையான நிதிநெருக்கடியை சந்தித்து வருகின்றன.

இன்சூரன்ஸ் நிறுவனங்கள், வங்கிகள், கூட்டுறவு சங்கங்கள் ஆகியவற்றில் தொழிலாளிகள் வாங்கிய கடனுக்காக திருப்பிச் செலுத்திய பணத்தை சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அளிக்காமல் போக்குவரத்துக் கழகங்கள் தங்களின் நிதிநெருக்கடியை சமாளிக்க பயன்படுத்தியுள்ளன. மேலும் தங்களுடைய பணிக்காலம் முழுவதும் வழங்கிய தொகைகளோடு அளிக்க வேண்டிய பல்வேறு விதமான ஓய்வூதிய பணப் பயன்களை ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு  அளிக்காததன் காரணமாக கடுமையான சிரமத்திற்கும், மனஉளைச்சலுக்கும் உள்ளாகியுள்ளனர்.

மேற்கண்ட வகைகளில் மாநில அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு வழங்க வேண்டிய ரூ. 7000 கோடிக்கு மேல் வழங்காததால் போக்குவரத்துக் கழகங்கள் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளன. இதனால் போக்குவரத்துக் கழகங்கள் தொழிலாளர்களுக்கு அளிக்க வேண்டிய பணப் பயன்களை வழங்கவில்லை. போக்குவரத்துக் கழகங்கள் அன்றாடச் செலவுகளுக்கே திண்டாடும் நிலையில் உள்ளன. இதையெல்லாம் கவனத்தில் கொண்டு தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு தரவேண்டிய நிதியை உடனடியாக வழங்க வேண்டுமென்று போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் நீண்ட காலமாக போராடி வருகிறார்கள். தங்களுக்குள் நடக்கும் அதிகாரப் போட்டியின் காரணமாக அரசு நிர்வாகம் முடங்கியிருக்கும் நிலையில் இதர மக்கள் பிரச்சனைகளைப் போலவே போக்குவரத்துக் கழகங்களைப் பற்றியும், தொழிலாளர்களை பற்றியும் சற்றும் கவலைப்படாத நிலையில் தமிழக அரசு உள்ளது.

போக்குவரத்துக் கழக ஊழியர்களின் கோரிக்கை மிகவும் நியாயமானதாகும். எனவே தமிழக அரசு உடனடியாக போக்குவரத்துக் கழக ஊழியர் சங்க பிரதிநிதிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்துவதோடு போக்குவரத்துக் கழகங்களுக்கு தான் செலுத்த வேண்டிய நிதியை உடனடியாக வழங்க வேண்டுமெனவும் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள ஊதிய உயர்வையும் உடனடியாக வழங்கிட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது.

வேலைநிறுத்தம் ஏற்பட்டால் அனைத்து பகுதியினரும் கடும் சிரமத்திற்கு உள்ளாவார்கள். எனவே இந்த போராட்டத்தை தவிர்க்கும் வகையில் உரிய நிதியை போக்குவரத்துக் கழகங்களுக்கு வழங்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது.

Check Also

அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாக வழங்க இடதுசாரிக் கட்சிகள் வலியுறுத்தல்

மே தினமான இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ...