போக்குவரத்து தொழிலாளர் பிரச்சனைக்கு தீர்வு காண தமிழகம் முழுவதும் சிபிஐ(எம்) நாளை ஆர்ப்பாட்டம்

போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முழு ஆதரவு!

தமிழக முதல்வர் தலையிட்டு தீர்வுகாண வலியுறுத்தல்!

ஜனவரி 8ல் – தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துத் தொழிலாளர்களின் ஊதிய உயர்வுக்காகவும், ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கான நிலுவைத்தொகையை வழங்கிட வலியுறுத்தியும், பணியில்  உள்ள தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட பணத்தை வழங்கிடக் கோரியும் போக்குவரத்துத் தொழிலாளர்கள் ஓராண்டுக்கு மேலாக போராடி வருகிறார்கள்.

ஓய்வு பெற்ற போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு பல ஆண்டுகாலமாக கொடுக்க வேண்டிய நிலுவைத் தொகையை அரசாங்கம் பட்டுவாடா செய்யவில்லை. பாதிப்புக்குள்ளான தொழிலாளர்கள் உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில், நீதிமன்றம் அளித்த தீர்ப்பையும அரசு அமலாக்கவில்லை. இதனால், ஓய்வுப் பெற்ற தொழிலாளர்களின் குடும்பங்கள் சொல்லொணா துயருக்கு ஆளாகியுள்ளனர்.

ஒரு லட்சத்து முப்பதாயிரம் தொழிலாளர்களின் ஊதிய உயர்வுக்காக நிர்வாகம் மற்றும் அமைச்சர்கள் மட்டத்தில் கடந்த 16 மாதங்களில் 21 முறை பேச்சுவார்த்தை நடத்தியும் பயனில்லை. 2017 மே மாதம் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டபோது, மூன்று மாதத்தில் பிடித்தம் செய்யப்பட்ட தொகையை திரும்ப வழங்குவதாக மாநில அமைச்சர்கள் உறுதி கூறினர். ஆனால், ஆறு மாதமாகியும் வழங்கப்படவில்லை.

ஜனவரி 4ந் தேதியன்று தொழிற்சங்கங்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்த மாநில அரசு பெரும்பான்மை தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சிஐடியு, தொமுச உள்ளிட்ட சங்கங்களை புறக்கணித்துவிட்டு ஆளுங்கட்சி தலைமையிலான சங்கம் உள்ளிட்டு சில சங்கங்களோடு தொழிலாளர் நலன்களுக்கு விரோதமான ஒரு ஒப்பந்தத்தை உருவாக்கி பெரும்பான்மை தொழிலாளர்கள் மீது திணிக்க  முயற்சிப்பதை எதிர்த்து தொழிலாளர்கள் கடந்த இரண்டு தினங்களாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொழிலாளர்களின் கோரிக்கைகளை ஏற்று சுமூகத் தீர்வு காண்பதற்கு பதிலாக போராடும் தொழிலாளர்களை பிளவுபடுத்தி, அச்சுறுத்தி போராட்டத்தை ஒடுக்கிட மாநில அரசு முயற்சித்து வருகிறது. தொழிலாளர் நலன்களுக்கு விரோதமான தமிழக அரசின் இந்நடவடிக்கைகையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

ஒரு லட்சத்து முப்பதாயிரம் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு மற்றும் நியாயமான கோரிக்கைகளுக்காக நடைபெறும் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது முழு ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறது. தமிழக முதல்வர் இப்பிரச்சனையில் தலையீடு செய்து தொழிற்சங்கங்களோடு பேச்சுவார்த்தை நடத்தி சுமூகத் தீர்வுகாண மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. போக்குவரத்துத் தொழிலாளர்களின் இந்த நியாயமான போராட்டத்திற்கு ஆதரவு தர வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அனைத்துப்பகுதி மக்களையும் கேட்டுக் கொள்கிறது.

மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றிட தமிழக அரசை வலியுறுத்தி 8.1.2018 அன்று தமிழகம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.  இப்போராட்டத்தில் பங்கேற்க உழைப்பாளி சிபிஐ (எம்) மக்களை கேட்டுக் கொள்கிறது.

Check Also

பல்கலைக்கழக பாடப்புத்தகத்தில் அரசியல் கட்சிகளை கொச்சைப்படுத்துவதா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தில் தொலைதூரப் படிப்புகளைப் படிக்கும் மாணவர்களின் எம்.ஏ. சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் திமுக மற்றும் இடதுசாரி கட்சிகள் ...