போராடும் ஆசிரியர்கள் அரசு ஊழியர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்றுக!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (2.2.2016) சென்னையில் மாநில செயற்குழு உறுப்பினர் பெ. சண்முகம் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் கே. வரதராசன், அ. சவுந்தரராசன், பி. சம்பத், கே.பாலகிருஷ்ணன் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:

போராடும் ஆசிரியர்கள் அரசு ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்றுக!

ஆறாவது ஊதியக்குழுவில் உள்ள குறைபாடுகளை நீக்கி அனைத்து ஆசிரியர்களுக்கும் குறிப்பாக இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், தன் பங்களிப்பு ஓய்வூதியம் ரத்து செய்யப்பட்டு, பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது உட்பட 15 கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜேக்டோ முடிவுப்படி ஆசிரியர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து 3 நாட்களாக மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர். இம்மறியலில் மாநிலம் முழுவதும் பல்லாயிரம் ஆசிரியர்கள் கலந்து கொண்டு கைதாகியுள்ளனர்.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கமும், அதோடு இணைந்துள்ள சங்கங்களை உள்ளடக்கிய அனைத்துத் துறை ஊழியர் சங்கங்களின் போராட்டக்குழுவும் கடந்த சட்டமன்ற தேர்தல் வாக்குறுதியின்படி புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்பட்டு அனைவருக்கும் ஏற்கனவே நடைமுறையிலுள்ள வரையறுக்கப்பட்ட பயனளிப்பு ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், பேச்சுவார்த்தை மூலம் ஊதிய மாற்றம், தரப்படுத்தப்படாத ஊதிய விகிதங்களின் கீழ் பணியாற்றி வரும் சத்துணவு, அங்கன்வாடி உள்ளிட்ட அனைத்து ஊழியர்களுக்கும் நிரந்தரப் பணி மற்றும் வரையறுக்கப்பட்ட ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட அனைத்துப் பயன்களையும் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட 20 கோரிக்கைகளை வலியுறுத்தி 10-2-2016 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்துள்ளன. அரசால் ஒப்புக் கொள்ளப்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் அரசாணை வெளியிடக்கோரி வருவாய்த்துறை ஊழியர்கள் 2-2-2016 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை துவக்கியுள்ளனர்.

கடந்த தேர்தலில் வாக்குறுதி அளித்த கோரிக்கைகளுக்காகவும், ஒப்புக் கொண்டவற்றை நிறைவேற்றக் கோரியும், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், வருவாய்த்துறை ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் இறங்கியும் அரசு அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றாததால் தான் வேலை நிறுத்தத்தில் இறங்கும் நிலையை எற்படுத்தியுள்ளது. மேலும் காலம் கடத்தாமல் ஆசிரியர், அரசு ஊழியர் பிரதிநிதிகளை உடனடியாக அழைத்து பேச்சு வார்த்தை நடத்தி, நியாயமான கோரிக்கைகளை ஏற்று அமல்படுத்திட தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

Check Also

பல்கலைக்கழக பாடப்புத்தகத்தில் அரசியல் கட்சிகளை கொச்சைப்படுத்துவதா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தில் தொலைதூரப் படிப்புகளைப் படிக்கும் மாணவர்களின் எம்.ஏ. சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் திமுக மற்றும் இடதுசாரி கட்சிகள் ...