போராடும் தொழிலாளர் எல்லாம் நமது வர்க்கம் – அ.சவுந்தரராசன்

கார்ல் மார்க்ஸ் இரு நூற்றாண்டு விழா, நவம்பர் புரட்சி நூற்றாண்டு விழா, சிந்தன் நூற்றாண்டு விழா என முப்பெரும் விழாக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை புறநகர் மாவட்டக்குழுவின் சார்பில் மதுரையில் மதுரை, டிச.19-ல் நடைபெற்றது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் அ.சவுந்தரராசன் ‘தோழர் வி.பி.சிந்தன் வழியில் சிந்திப்போம்’ என்ற தலைப்பில் பேசியவை:-

தோழர் வி.பி.சிந்தன் அடக்குமுறைகளுக்கு எதிராகப் போராடியவர். இந்தியாவில் உள்ள முதலாளிகளுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சி இருப்பதை அறிந்து அக்கட்சியிலிருந்து வெளியேறினார். அவர் சிறையில் இருந்தபோதும்கூட சிறைக் கைதிகளின் உரிமைகளுக்காகப் போராடினார். வி.பி.சிந்தன் உருக்குப் போன்ற கட்டுக்கோப்பான மனிதர். தொழில் நகரமான சென்னையில் ஐஎன்டியுசி, எச்எம்எஸ் போன்ற சங்கங்கள் முதலாளிகளுக்கு சாதகமாக நடந்து கொண்டிருந்தன. இதைக் கண்டு தொழிலாளர்கள் கொந்தளித்துக் கொண்டிருந்தனர். அந்த காலகட்டத்தில் தொழிலாளர்களை திரட்டி அவர்களது கோரிக்கைகளுக்காகப் போராடியவர் வி.பி.சிந்தன்.

தொழிலாளர் போராட்டங்களை முறைப்படுத்தி, ஒழுங்குபடுத்தி, நடத்துவதில் வி.பி.சி.யின் பங்கு மகத்தானது. தொழிலாளர்களையும் காப்பாற்ற வேண்டும். அதேநேரத்தில் கோரிக்கைகளையும் வென்றெடுக்க வேண்டுமென்பதில் அவர் தனிக்கவனம் செலுத்துவார். 1968 ஆம் ஆண்டு சென்னையில் மாணவர்கள், போக்குவரத்துத் தொழிலாளர்கள் போராட்டம் தீவிரமாக நடைபெற்று வந்தது. அப்போராட்டத்தில் உமர் என்ற போக்குவரத்துத் தொழிலாளி மரணமடைந்தார். அவரது உடலை மசூதிக்கு கொண்டு செல்லக் கூடாது. அவர் உடலை சென்னை சட்டக்கல்லூரிக்கு கொண்டுசெல்ல வேண்டுமென தொழிலாளர்கள் கூறினர். அப்போது வி.பி.சிந்தன் மாணவர்களும், தொழிலாளர்களும் சமூகத்தின் இரு கண்கள். நீங்கள் உடனடியாக போராட்டத்தை நிறுத்துங்கள்.

இல்லையென்றால் எனது பிரேதத்தின் மீதுதான் உமர் உடலை கொண்டு செல்லவேண்டியிருக்கும் என்றார். இதைத் தொடர்ந்து போக்குவரத்துத் தொழிலாளர்-மாணவர்கள் மோதல் முடிவுக்கு வந்தது. போக்குவரத்துத் தொழிலாளர்கள்- மாணவர்கள் போராட்டம் முடிவுக்கு வந்தது, வி.பி.சிந்தன் போன்ற தலைவர்களால்தான் என்று சட்டமன்றத்தில் அன்றைய முதல்வர் அண்ணா வெளிப்படையாகவே பாராட்டினார். முரண்பாடுகள் வருகிற போது எந்த முரண்பாட்டை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். எந்த முரண்பாட்டின் மீது தொடர்ந்து போராட வேண்டும் என்பதில் வி.பி.சிந்தன் தெளிவாக இருந்தார். போராட்டத்திற்கு யார் தலைமை தாங்குகிறார்கள் என்பது விஷயமல்ல. போராடும் தொழிலாளர்கள் நமது வர்க்கம் என்ற சிந்தனை வி.பி.சி.க்கு உண்டு. அந்த சிந்தனையோடு அவர் போராட்டங்களில் பங்கேற்பார்.

தோழர் வி.பி.சிந்தன், குசேலர் போன்றவர்கள் போராட்டக் களத்திற்கு வரக்கூடாது என துண்டுப் பிரசுரங்கள் அச்சிட்டு வெளியிடப்பட்டபோதும், போராட்டக்களத்திற்கு எப்படியும் சென்றுவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் விபிசி. அப்படிச் சென்றபோதுதான் அவர் கத்தியால் குத்தப்பட்டார். அவர்அதிலிருந்து உயிர் பிழைத்ததற்கு மருத்துவர்களின் சிகிச்சை ஒரு காரணமென்றால் மற்றொருபுறம் அவரது மன உறுதியும் காரணம்.

வி.பி.சிந்தன் கட்சியைத் தாண்டி மிகப்பெரிய நட்பு வட்டத்தை வைத்திருந்தார். அவரிடம் சலிப்பு என்பதே கிடையாது. கட்சியைக் கட்டுவதற்கு வெகுஜன அரங்கங்கள் அவசியம் என்பார். நாம் யாருக்கு விசுவாசமாக இருக்கிறோமோ இல்லையோ புரட்சிக்கு விசுவாசமாக இருக்க வேண்டுமென்பார். மாற்றத்தை நோக்கிச் செல்லும்போது சில சங்கடங்களும் பின்னடைவுகளும் ஏற்படும். அவற்றை எதிர்கொண்டு முன்னேற வேண்டும். வரும் காலங்களில் கட்சிக்கு வலுவான பின் புலத்தை உருவாக்க வேண்டும்.

Check Also

சாதிய அணி சேர்க்கைக்கு இடமளிக்க வேண்டாம்!

வன்னியர்கள் மீது அவதூறுகள் பரப்பப்படும் போது அது தொடர்பான உண்மை நிலையை சம்பந்தப்பட்டவர்களுக்கு உணர்த்துவதற்காகவும், தீய பிற்போக்கு சக்திகளிடமிருந்து வன்னியர் ...