போராடும் விவசாயிகளுக்கு தண்ணீர் நிறுத்தம்; சிபிஐ(எம்) கண்டனம்

வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தில்லியில் எல்லைப் பகுதிகளில் போராடும் விவசாயிகளுக்கு, அண்டை மாநிலங்களிலிருந்து மக்கள் தண்ணீர், உணவு மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருள்கள் கொண்டுவந்து கொடுப்பதைத் தடுக்கும் விதத்தில் தில்லிக் காவல்துறையினர் நடவடிக்கைகள் எடுத்திருப்பதற்கு கண்டனம். இத்தகைய இரக்கமற்ற முற்றுகையை விலக்கிக் கொள்ள வேண்டும்.

இதில் மிகவும் கொடுமையான அம்சம் என்னவென்றால், தில்லி நீர் வாரியத்தின் மூலம் போராடும் விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டு வந்த தண்ணீர் டாங்குகள் அந்த இடங்களுக்கு வராமல் நிறுத்தப்பட்டுவிட்டன. தில்லி அரசாங்கத்தின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஒரு கார்ப்பரேஷனான தில்லி நீர் வாரியம் (Delhi Jal Board) இந்தக் கொடுமையான செயலைச் செய்திருக்கிறது. மேலும், கொரோனா வைரஸ் தொற்று காலத்தில் சுற்றுப்புறச் சூழல்கள் மிகவும் சுத்தமாக இருக்க வேண்டிய அவசியத்தின் காரணமாக ஏற்படுத்தப்பட்டிருந்த கழிப்பிடங்களும் இதர சுகாதார வசதிகளும் தில்லிக் காவல்துறையினரால் அப்புறப்படுத்தப்பட்டிருக்கின்றன. தில்லி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தில்லி அரசாங்கம் தன் சொந்த இடத்திலிருந்து தன் கடமையைச் செய்யத் தடுத்திருப்பது சட்டவிரோதமாகும்.

போராடும் விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை பிடிவாதமான முறையில் ஏற்க மறுத்திடும் அதே சமயத்தில், மத்திய அரசாங்கத்தின் உள்துறை அமைச்சகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டின்கீழ் இயங்கிடும் தில்லிக் காவல்துறை, விவசாயிகளைப் பட்டினி போட வேண்டும் என்பதற்காக, இத்தகைய மனிதாபிமானமற்ற இரக்கமற்ற நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கிறது. அதன்மூலம் போராட்டத்தை சீர்குலைத்து, சிதறடித்திடலாம் என எண்ணுகிறது. இத்தகைய இழி நடவடிக்கைகள் மூலமாக விவசாயிகளைப் பணிய வைத்திட முடியாது என்று போராடும் விவசாயிகள் பிரகடனம் செய்திருக்கிறார்கள். போராட்டத்தில் நாள்தோறும் விவசாயிகள் பெரும் எண்ணிக்கையில் சேர்ந்து அதனை உருக்குபோன்று உறுதிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

மத்திய அரசு இத்தகைய மனிதாபிமானமற்ற அரக்கத்தனமான நடவடிக்கைகளை உடனடியாகக் கைவிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கோருகிறது. போராட்டம் நடைபெறும் இடங்களில் தண்ணீர், உணவு, சுகாதார வசதிகள் மற்றும் இதர அத்தியாவசியப் பொருள்கள் விநியோகம் செய்யப்படுவதை தில்லிக் காவல்துறையால் தடுக்கப்படக் கூடாது. மத்திய அரசாங்கம், இத்தகைய நடவடிக்கைகளை தில்லிக் காவல்துறை கைவிடுவதற்கு, உடனடியாக உத்தரவிட வேண்டும், அதன் மூலம் மனிதாபிமானமற்ற முற்றுகையைக் கைவிட வேண்டும்.

அரசியல் தலைமைக்குழு
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

Check Also

நாட்டு மக்களை சட்ட விரேதமாகக் கண்காணித்திட யார் அதிகாரம் அளித்தது? பாஜக அரசே பதில் சொல்!

கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கை; இஸ்ரேல் உளவு நிறுவனமான NSO ஊடகவியலாளர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களின் போன்கள் ...