மகளிர் உரிமைகளைப் பாதுகாக்க…

மார்க்சிஸ்ட் கட்சிக்கு வாக்களியுங்கள்

இடதுசாரிகளைப் பலப்படுத்துவோம்

மகளிர் உரிமைகளைப் பாதுகாக்க

ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் இரண்டாவது ஆட்சியில் பெண்கள், குறிப்பாக உழைக்கும் ஏழைப் பெண்கள் கடுமையான பொருளாதார மற்றும் சமூகப் பாதுகாப்பின்மையை சந்தித்திருக்கிறார்கள். இரக்கமின்றித் தொட்ரும் அத்தியாவசியப் பண்டங்களின் விலையுயர்வு, அரசே வெளியிட்டுள்ள புள்ளி விபரத்தின்படியே கடுமையான வேலையிழப்புகள், பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு போன்றவை, அவர்கள் சந்தித்த கடுமையான நிலையைச் சுட்டிக்காட்டுபவையாக அமைந்துள்ளன. இந்தப் பிரச்சனைகளை எதிர்கொள்வதற்காக ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் முதல் ஆட்சியில் இடதுசாரிக் கட்சிகள் தலைமையில் நடந்த இயக்கங்கள் தந்த நிர்ப்பந்தத்தால் கிடைத்த சில நிவாரணங்கள் கூட, இரண்டாவது ஆட்சியில் சிதைக்கப்பட்டு, அழிக்கப்பட்டன.

ஐந்து பெண்களில் மூன்று பெண்கள் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டு, மூன்று வயதுக் குழந்தைகளில் ஒவ்வொரு இரண்டாவது குழந்தையும் எடைக்குறைவாக இருப்பது, ஒவ்வொரு மூன்றாவது குழந்தையும் வளர்ச்சி குன்றி இருப்பது மறறும் ஒவ்வொரு ஐந்தாவது குழந்தையும் நோயுற்று இருப்பது என்றிருக்கிற நாட்டில், முக்கியமான மற்றும் நலத்திட்டங்களுக்கான ஒதுக்கீட்டில், 2013-14 ஆம் ஆண்டில் சுமார் 32 ஆயிரம் கோடி ரூபாய் வெட்டப்பட்டது. அதே வேளையில், 2012-13 ஆம் ஆண்டில், சலுகைகள் மூலமாக பெரும் தொகையான 5 லட்சத்து 28 ஆயிரம் கோடி ரூபாய் பெரு நிறுவனங்களுக்கான வரியில் விலக்கு அளிக்கப்பட்டது. 

அரசின் உதவியோடு, இயற்கை வளங்கள் வெளிப்படையாகவே பெரு நிறுவனங்களால் கொள்ளை அடிக்கப்படுகின்றன. தீவனம், எரிபொருள், தண்ணீர் மற்றும் வனத்திலிருந்து கிடைக்கும் சிறிய பொருட்கள் ஆகியவற்றை சேகரிக்கும் பிரதான பொறுப்பு இருப்பதால், இது பெண்கள் மீது கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இயற்கை வளங்கள் ஆக்கிரமிப்பு மற்றும் கைப்பற்றிக் கொள்ளுதல், பெரிய திட்டங்கள் மற்றும் நிலம் கையகப்படுத்துதல் என்ற பெயரிலான நடவடிக்கைகளால்  பெண்களால் சேகரிக்கப்படும பொருட்கள் கைக்கெட்டாததாகவும், விலை அதிகமானதாகவும் ஆகி விடுகின்றன. அதே வேளையில், சமூக நலத்துறையில் மேற்கொள்ளப்படும் நிதி வெட்டுகளால், பெண்களின் வீட்டு வேலைகளில் அதிக பொறுப்புகள் வந்து விழுகின்றன. நிதி நிலைமையை சமாளிக்கும் பொறுப்பும் அதிகரிக்கிறது. அங்கீகாரமே இல்லாமல் பெண்களால் செய்யப்படும் இந்தக் கூடுதல் சுமை, ஒருபோதும் முடிவுக்கு வருவதில்லை.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் ஏராளமான தோல்விகள் பரந்த அளவிலான அதிருப்திக்கு இட்டுச் சென்றுள்ளது. இந்த நிலையை பெரு நிறுவனங்களின் ஆதரவு கொண்ட, வலதுசாரி மதவெறி சக்திகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பாஜக பயன்படுத்திக் கொள்ள முனைந்துள்ளது. இவர்களின் கொள்கைகள் பெண்கள் உரிமைகளுக்கு எதிரானதாகும். ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்துத்துவா அமைப்புகளைப் பொறுத்தவரை பெண்களானவர்கள் ஆண்களைச் சார்ந்தவர்களாவர். பாரம்பரியம் என்ற பெயரில் பிற்போக்கான நடைமுறைகளையும், கொள்கைகளையும் இந்த அமைப்புகள் முன்வைக்கின்றன. இந்திய அரசியல் சட்டத்தில் தரப்பட்டுள்ள பெண்களின் சுயேச்சையான குடியுரிமை என்ற உரிமைக்கு இந்த அமைப்புகள் பெரும் ஆபத்தாக எழுந்துள்ளன.

33 சதவிகிதம் மீதான துரோகம்

பெண்களுக்கான 33 சதவிகித இட ஒதுக்கீட்டை நிறைவேற்றாததில் கிடைத்த அப்பட்டமான தோல்வியானது, இரண்டாவது ஐக்கிய முற்போக்கு அரசின் மிகப்பெரிய துரோகங்களில், ஒன்றாகும். இத்தனைக்கும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இந்த அரசுக்கு இருந்தது. இந்த மசோதா நிறைவேறாமல் பார்த்துக் கொள்வதற்கு பாஜக உடந்தையாக இருந்தது. இடதுசாரிக்கட்சிகளைத் தவிர்த்து, வேறு எந்தவொரு கட்சியும் இந்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட வேண்டும் என்று தீவிரமாக வலியுறுத்தவில்லை. மக்களால் தேர்வு செய்யப்பட்டு முடிவெடுக்கும் அதிகாரமுள்ள இடங்களில் அமர்வதற்கான வாய்ப்புகளை பெண்களுக்கு மறுப்பது, ஜனநாயகத்தை  அழிக்கும் செயலாகும். 

எப்போதும் இல்லாத அளவில் பெண்கள் மீது வன்முறை

68 பாலியல் பலாத்காரங்கள் (ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 3) மற்றும் ஒவ்வொரு நாளும் 23 வரதட்சணை மரணங்கள் (கிட்டத்தட்ட மணி நேரத்திற்கு ஒன்று) என்றிருக்கும் பெண்கள் மீதான வன்முறை கவலையளிப்பதாகவும், ஒப்புக்கொள்ளவே முடியாத போக்கு இருப்பதையும் காட்டுகிறது.  ஒரு கூட்டுத்தாக்குதலைப் பெண்கள் எதிர்கொள்கிறார்கள். பண்டமாகச் சித்தரிப்பதை அதிகப்படுத்தியுள்ள நவீன தாராளமயக் கொள்கைகள் ஒருபுறம், மறுபுறத்தில் ஆணாதிக்க மற்றும் பழமைவாத மனநிலை கொண்ட சாதி, மத வெறியர்களின் தாக்குதல்கள் அதிகமாகியுள்ளன. 

மேற்கு வங்கத்தில் பெண்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. அங்கு எதிர்க்கட்சியினர் மற்றும் ஏதாவது மாற்றுக் கருத்து உள்ளவர்கள் மீது அரசின் பின்புலத்தோடு அரசியல் ரீதியான வன்முறையை ஆளும் கட்சி அவிழ்த்துவிட்டுள்ளது. இந்தக் கொடுரமான நிலை அனைத்துக் குடிமக்கள், அதிலும் குறிப்பாகப் பெண்களுக்கு தீவிரமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடியவையாகும். இது மேற்கு வங்கத்தில் குற்றவாளிகளின் பிடியில் அரசியல் சிக்கி வரும் நிலை மற்றும் குற்றங்களைச் செய்பவர்களுக்கு கிடைக்கும் ஆதரவு ஆகியவற்றின் நேரடி விளைவாகும். பாலியல் ரீதியான தாக்குதல்களுக்கான புகார்களை அளித்த பாதிக்கப்பட்ட பெண்களுக்கு எதிராக முதலமைச்சரே மோசமான கருத்துக்களை உதிர்த்து குற்றவாளிகளைப் பாதுகாக்கும் நிலை உள்ளது. மேற்கு வங்கத்தின் முதலமைச்சரைப் போன்று, பெண்கள் மீதான பாலியல் தாக்குதல்களில் எந்தவித அக்கறையும் காட்டாத முதல்வரை இந்தியா அபூர்வமாகவே கண்டுள்ளது. தொடர்ந்து இரண்டாவது முறையாக, பெண்கள் மீதான வன்முறைகள் மேற்கு வங்கத்தில் மிக அதிகமான அளவில் இருப்பதாகப் புள்ளி விபரங்கள் காட்டுகின்றன. 2012 ஆம் ஆண்டில் 30 ஆயிரத்து 942 வழக்குகள் பதிவாகியுள்ளன. அதில் 2 ஆயிரத்து 046 பாலியல் பலாத்காரங்கள் மற்றும் 4 ஆயிரத்து 168 கடத்தல் வழக்குகளும் ஆகும். 

அண்மையில் வெளியான தேசிய அளவிலான புள்ளிவிபரங்களும் அதிர்ச்சியடைய வைக்கின்றன. பெண்கள் மீதான வன்முறைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன என்று தேசிய குற்ற ஆவணப்பிரிவு தகவல் கூறுகிறது. 2012 ஆம் ஆண்டில் 2 லட்சத்து 44 ஆயிரத்து 290 குற்றங்கள் நடந்துள்ளன. 2011 ஆம் ஆண்டோடு ஒப்பிடும்போது இது 6.8 சதவிகித அதிகரிப்பாகும். 2010 ஆம் ஆண்டோடு ஒப்பிடும்போது பாலியல் பலாத்காரங்கள் 12.4 சதவிகித (24 ஆயிரத்து 923) அதிகரிப்பும், கடத்தல்கள் 28.4 சதவிகித அதிகரிப்பும் (38 ஆயிரத்து 262) கண்டுள்ளன. பாதிக்கப்பட்ட பெண்களில் 50.2 சதவிகிதத்தினர் 18 முதல் 30 வயது வரையிலானவர். 12.5 சதவிகிதத்தினர் 14 வயதுக்குக் கீழும், 14 முதல் 18 வயது வரையிலான பதின்பருவத்தினர் 23.9 சதவிகிதமாகவும் உள்ளனர். 

நாட்டில் நடந்துள்ள ஒட்டுமொத்தமான 5.3 கோடி வழக்குகளில், 19.3 சதவிகித பாலியல் பலாத்காரங்கள், 23.1 சதவிகித கடத்தல்கள், 14.6 சதவிகித வரதட்சணை மரணங்கள் மற்றும் 10.9 சதவிகித பாலியல் தொல்லைகள் ஆகியவை தில்லியில் நிகழ்ந்துள்ளன.

நன்றாக இருப்பதாக ஆர்.எஸ்.எஸ்.காரர்களால் சொல்லப்படும் பாரதத்தின் கிராமப்புறமும் இந்த நிலைக்கு விதிவிலக்காக இல்லை. சொல்லப்போனால், தலித்துகள், பழங்குடியினர் மற்றும் பிற ஒதுக்கப்பட்ட பிரிவுகளைச் சேர்ந்த பெண்கள்தான் மிகவும் அதிகமாகப் பாதிக்கப்படுபவர்களாக இருக்கிறார்கள். 2012 ஆம் ஆண்டில், செப்டம்பர் 9 முதல் அக்டோபர் 11 ஆம் தேதி வரையில், 19 பாலியல் ரீதியான தாக்குதல்கள் அரியானாவில் நடந்துள்ளன. இவற்றில் 70 சதவிகிதமானவை, கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்த குற்றங்களாகும். இதில் பாதிக்கப்பட்டவர்களில் 30 சதவிகிதம் தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவுகளைச் சேர்ந்தவர்களாவர். பாதிக்கப்பட்டவர்களில் 47 சதவிகிதத்தினர் 20 வயதுக்குக் கீழானவர்களாவர். குழந்தைகள் மீது பாலியல் தொல்லை, அமிலம் வீசுதல், கவுரவத்தைப் பாதுகாப்பது என்ற பெயரில் குற்றங்கள் மற்றும் கொலைகள், கூட்டாகப் பாலியல் பலாத்காரம் செய்தல் ஆகியவை அதிகரித்துள்ளன. பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எந்த அளவுக்கு பாதுகாப்பற்றதாக இந்த நாடு மாறியிருக்கிறது என்பதையே இந்த புதிய மற்றும் பழைய வன்முறை வடிவங்கள் ஒன்றிணைந்திருக்கும் சூழல் காட்டுகிறது. 

இளம் பெண்களின் வருங்காலக் கனவுகளையே சிதைக்கும் வகையில் அபாய நிலை இருப்பதை புள்ளி விபரங்கள் காட்டுகின்றன. 2001 முதல் 2011 வரையில் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை நிகழ்ந்ததாக 43 ஆயிரத்து 338 வழக்குகள் பதிவாகியுள்ளன என்று தேசிய குற்ற ஆவணப் பிரிவு கூறுகிறது. இந்தக் கால கட்டத்தில், குழந்தைகளைப் பாலியல் பலாத்காரம் செய்யும் கொடுமை, 336 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. மத்தியப் பிரதேசத்தில்தான் அதிக அளவில் குற்றங்கள் நடந்துள்ளன. அதைத் தொடர்ந்து, மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், ஆந்திரப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்கள் உள்ளன. மனித உரிமைகளுக்கான ஆசிய மையம் தரும் ஆய்வறிக்கை அதிர்ச்சியடைய வைக்கிறது. அந்த அமைப்பு ஆய்வு செய்த 39 பிரச்சனைகளில், 11 சம்பவங்கள் அரசால் நடத்தப்படும் கண்காணிப்பு மையங்களிலும், தனியார் மற்றும் என்.ஜி.ஓக்களால் நடத்தப்படும் மையங்கள், குழநதைகள் மையங்கள், ஆதரவற்ற விதவைகள் மையங்கள் மற்றும் அனாதை மையங்களில் 27 சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. அரசு மையங்களில், பொறுப்பாளர்கள், பாதுகாவலர்கள், சமையலர்கள், மையங்களில் நீண்ட நாட்களாக இருப்பவர்கள் உள்ளிட்டவர்கள் குற்றங்களைச் செய்கிறார்கள். தனியார் மையங்களைப் பொறுத்தவரை, மேலாளர்கள், இயக்குநர்கள், உரிமையாளர்கள், மையங்களைத் துவக்கியவர்கள் ம்ற்றும் இவர்களின் உறவினர்கள், நண்பர்கள் ஆகியோர் குற்றங்களைப் புரிகிறார்கள். குழந்தைகளுக்குப் போதுமான பாதுகாப்பு தருவதிலும், அவர்களின் நிலை பற்றி ஆய்வு செய்து, இருக்கும நிலையை மேம்படுத்துவதிலும் அரசு பெரும் தயக்கம் காட்டி வருகிறது.

பாலின வன்முறைக்கு எதிராக ஒரு முழுமையான வடிவம் கொண்ட  வழிகாட்டுதல்களை உருவாக்கிய வர்மா குழு அறிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரிக்கிறது. 2012ஆம் ஆண்டு நடந்த கும்பல் பாலியல் பலாத்காரம்  மற்றும் கொலை ஆகியவற்றிக்குப் பிறகு எப்போதும் இல்லாத அளவுக்கு மக்கள் மத்தியில் கோபம்  கிளம்பியது. இதற்குப் பிறகு  குற்றவியல் சட்டத்தில் பெரிய அளவிலான சீர்திருத்தம் செய்ய வேண்டிய வந்தது. குற்றவியல் சட்டத்தில் கொண்டு வரப்பட்ட திருத்தங்களை முறையாக நடைமுறைப்படுத்த கட்சி தொடர்ந்து போராடும். குற்றவியல் நீதியமைப்பில் தற்போதுள்ள குறைபாடுகளை அடையாளங்கண்டு, அவற்றைக் களைய வேண்டும் என்கிற கோரிக்கையை கட்சி தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும். வழக்குகளில் தண்டனை பெறுவதும் குறைவாக உள்ளது. பாலியல் பலாத்கார வழக்குகளில் 24 சதவிகிதம், வரதட்சணை மரணங்களில் 32 சதவிகிதம் மற்றும் ஒட்டுமொத்தமான பெண்கள் மீதான வன்முறை வழக்குகளில் 21.3 சதவிகிதம் என்றுதான் தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. குறைபாடுகளை நீக்குவதன் மூலம் தண்டனைகள் வழங்குவதை அதிகப்படுத்த முடியும்.

தங்கள் வீடுகளுக்குள் இருந்து கொண்டால் பெண்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்று பெண்கள் பாதுகாப்பான பரிந்துரையாக பழமைவாத சக்திகள் கூறுகின்றன. ஆனால் உண்மை நிலை என்ன? அதிகமான குற்றங்கள் வீட்டிற்குள்தான் நடக்கின்றன என்பதுதான் புள்ளிவிபரங்கள் தரும் செய்தியாகும். 8 ஆயிரத்து 233 வரதட்சணை மரணங்கள்(இந்தியக் குற்றவியல் சட்டம் பிரிவு 302 மற்றும் 304), கணவர் மற்றும் உறவினர்கள் செய்த கொடுமைகள் என்ற வகையில் 1 லட்சத்து 6 ஆயிரத்து 527 புகார்கள் (இந்தியக் குற்றவியல் சட்டம் பிரிவு 498 ஏ) மற்றும் வரதட்சணைத் தடுப்புச்சட்டத்தின் கீழ் 9 ஆயிரத்து 38 வழக்குகள் என்று தேசிய குற்ற ஆவணப்பிரிவு பதிவு செய்துள்ளது. இது குடும்ப வன்முறைக் குற்றங்களைப் படம் போட்டுக் காட்டுகிறது. 

சட்டத்தின் கீழ் வழக்குகளைப் பதிவு செய்ய கூடுதலாகப் பெண்கள் முன் வருகிறார்கள் என்றாலும், மத்திய பட்ஜெட்டில் இதற்கான நிதி ஒதுக்கீடே இல்லை. நிதி நெருக்கடியில் உள்ள மாநிலங்களும் சட்டத்தை நடைமுறைப்படுத்த சுயேச்சையான பாதுகாப்பு அதிகாரிகளை நியமிக்கவோ, அவர்களுக்குத் தேவையான  கட்டமைப்பு மற்றும் நிதி ஒதுக்கீடு போன்றவற்றையோ செய்யவில்லை. இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவதோடு, அதற்கு ஆதரவாக சமூக சீர்திருத்த இயக்கங்கள், வீடுகளிலும், பொது இடங்களிலும் ஆண்கள் மற்றும் பெண்கள், இளம் பெண்கள் மற்றும் இளைஞர்கள் ஆகியோருக்கு சமமான அந்தஸ்து என்பதை உறுதிப்படுத்த இளைஞர்களுக்குப் போதிய கல்வி ஆகியவை அவசியமானதாகும். 

உச்சநீதிமன்றம் வழங்கிய வரலாற்று சிறப்புமிக்க விசாகா தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று 16 ஆண்டுகள் மாதர் அமைப்புகள் தொடர்ந்து போராடியதன் விளைவாக, பணியிடங்களில் பாலியல் தொல்லைத் தடுப்புச்ட்டம் ஒருவழியாக நிறைவேற்றப்பட்டுள்ளது, இதில் உள்ள கடுமையான குறைபாடுகள் சிலவற்றைக் களையும் நோக்கத்தில் பல திருத்தங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்வைத்தது. எனினும், அரசாங்கம் மற்றும் பிரதான எதிர்க்கட்சியான பாஜக ஆகிய இரண்டுமே அந்தத் திருத்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தன. இந்த சட்டத்தைப் பலப்படுத்த வேண்டும் என்பதில் கட்சி உறுதியாக இருக்கிறது. 

பெண் சிசு மரணம் 

2011 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு  பாலின விகிதம்  சரிவடைந்ததைக் காட்டியது. 27 மாநிலங்கள் மற்றும் பிற யூனியன் பிரதேசங்களிலும் 2001 ஆம் ஆண்டில் 927  என்றிருந்த நிலை சரிந்து 2011 ஆம் ஆண்டில் 914 ஆக சரிந்தது. 2011 ஆம் கணக்கின்படி 1 முதல் 6 வயது வரையிலான  குழந்தைகளில் பாலின விகிதம் 919 ஆகவும், 7 முதல் 15 வயது வரையிலானவர்களில் பாலின விகிதம் இன்னும் குறைவாக 911 ஆகவும் உள்ளதாக அண்மையில் வெளியான புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. பெண் குழந்தைகள் விஷயத்தில் பெரும் அலட்சியத்தை அரசு  வெளிப்படுத்துகிறது. கருவிலேயே என்ன குழந்தை என்பதைக் கண்டறியும் சட்டத்தை  நடைமுறைப்படுத்துவதில் அரசு அடைந்துள்ள தோல்வியையே தற்போதுள்ள நிலைமை காட்டுகிறது. பெண்களுக்கு எதிரான மனநிலையை அதிகப்படுத்தும் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க.வின் கொள்கைகள் மீது குற்றம் சாட்டும் வகையில் இது அமைகிறது. மோசமான் பாலின விகிதம் கொண்ட மாநிலங்களில் தொடர்ச்சியாக மோசமான நிலையில் மோடி தலைமையிலான அரசுள்ள குஜராத்தும் உள்ளது.

பெண்கள் மீது மதவெறித் தாக்குதல்கள்

முசாபர் நகரில் வெட்கித் தலை குனியும் வகையிலான சம்பவங்கள் நடந்துள்ளன. சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த பல பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர். 40 ஆயிரம் இஸ்லாமியக் குடும்பங்கள் வீடிழந்து நிற்கின்றன. இது இந்துத்துவா கும்பலால் தீவிரமாக முன்னிறுத்தப்படும் பிளவுவாத மற்றும மதவெறி அரசியலின் விளைவேயாகும். வரும் தேர்லையொட்டி, ஆர்.எஸ.எஸ். அமைப்புகளின் துணையோடு இந்தப்பகுதி முழுவதும் பிளவு மற்றும் வெறுப்புக்கான விதைகள் தூவப்பட்டு வந்தன என்பது அனைவருக்கும் தெரிந்ததேயாகும். பாலியல் தொல்லைகளுக்கு சிறுபான்மை சமூகத்தினரைக் குற்றம் சாட்டி, பெண்களுக்குப் பாதுகாப்பு என்ற பெயரில் "மகள், மருமகளைப் பாதுகாப்போம்" என்ற முழக்கத்தை போலியாக முன்னிறுத்தி, இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டது வெட்ககரமானதாகும். சொல்லப்போனால், காவல்துறையின் ஆவணங்களின்படி, பாலியல் தொல்லைகளில் இரண்டு சமூகத்தினருமே ஈடுபட்டிருந்தனர். பாதிக்கப்பட்டவர்களிலும் இரண்டு பிரிவைச் சேர்ந்தவர்கள் இருந்தனர். ஆனால் எதிர்ப்புணர்வுகள் தூண்டப்பட்டு, சாதி மற்றும் மத ரீதியான நல்லிணக்கத்துக்கு அடையாளமாக இருந்த இந்தப் பகுதியில் இதுவரை நடந்திராத வகையில் அட்டுழியங்கள் நடந்தேறின. மேலும் பல பகுதிகளிலும் மத ரீதியான பிளவுகளை ஏற்படுத்த ஆர்.எஸ்.எஸ்.சின் முன்னணி அமைப்புகள் தீவிரமாகப் பணியாற்றின. தாக்குதலுக்கு எளிதான இலக்கு என்பதால், "அடுத்த சமூகத்திற்குப் பாடம் கற்பிக்கிறோம்" என்ற பெயரில் அனைத்துப் பெண்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டார்கள். 

பெண்களுக்குப் பாதுகாப்பு என்பது வெறுப்பைத் தூண்டும், வன்முறை தோய்ந்த கொள்கை மற்றும் நடைமுறையைக் கொண்டுள்ள மதவெறி சக்திகளுக்கு எதிராகப் போராடும் அமைப்புகளைப் பலப்படுத்துவது மற்றும் பாதுகாப்பதோடு தொடர்புடையதாகும்.

பிற்போக்குவாதத் தாக்குதல் மற்றும் கலாச்சாரக் காவல்

தங்கள் சொந்த வாழ்க்கை தொடர்பான ஜனநாயக உரிமைகளை உத்தரவாதப்படும்போது, சாதி மற்றும் பிற்போக்குவாத அமைப்புகளிடமிருந்து வரும் எதிர்த்தாக்குதல்கள் பெண்களுக்கு எதிரான குற்றங்களோடு தொடர்புடையதாகும்.சாதி மறுப்பு திருமணம் செய்து கொள்ளப்போகும் இளம் ஜோடிகள், பஞ்சாயத்தினர் என்று தங்களைத் தாங்களே சொல்லிக் கொள்பவர்களின் எதிர்ப்பை சந்திக்கிறார்கள். அவர்களின் உத்தரவுகள் அரசியல் சட்டத்திற்கு எதிராகவும், சட்டவிரோதமாகவும் உள்ளன. கவுரவம் என்ற பெயரால் வன்முறை பரவுகிறது. அது வாக்கு வங்கி அரசியலோடு பின்னிப் பிணைந்து கொள்கிறது. காப் பஞ்சாயத்துகள் மற்றும் பிற அரசியல் சட்டவிரோத அமைப்புகள் மீது நடவடிக்கை எடுப்பதில் அரசு தவறிவிட்டது. அரசியல் ரீதியான ஆதரவை இழந்துவிடுவோமோ என்ற அச்சத்தில் அத்தகைய குற்ற நடவடிக்கைகளுக்கு ஆதரவு தருகிறார்கள். தங்கள் வாழ்க்கைத்துணையைத் தேர்வு செய்யும் உரிமையைப் பயன்படுத்தும் இளம் ஜோடிகளைத் துன்புறுத்தும் அனைவ்ர் மீதான தண்டனை நடவடிக்கை மற்றும் கவுரவக் கொலைகள் என்ற பெயரில் நடக்கும் குற்றங்கள் ஆகியவற்றை எடுக்க தனியாக ஒரு சட்டம் கொண்டு வர வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிலைபாடு எடுத்துள்ளது.

வன்முறைக்கு காரணமாக பெண்களையே குற்றம் சுமத்தும் பழமைவாத மற்றும் ஆணாதிக்கத் தாக்குதல்கள் தொடர்கின்றன. எப்படி உடை அணிவது என்பதைத் திணிப்பது, இளம் பெண்கள் அலைபேசிகளை உபயோகிக்கத் தடை மற்றும் இருபாலர் கல்வி நிறுவனங்களுக்குத் தடை உள்ளிட்ட அம்சங்களோடு அனைத்துப் பிரிவினர் மீதும் பழமைவாத கலாச்சாரக் காவல் அதிகரித்துள்ளது. பாதுகாப்பு என்ற பெயரில் சட்டத்திற்குப் புறம்பான அமைப்புகள் மூலம் பெண்கள் மீதான கட்டுப்பாடுகளை மீண்டும் நடைமுறைப்படுத்த முயற்சிகள் நடக்கின்றன. இத்தகைய தாக்குதல்கள் அரசியல் சட்ட ரீதியாக பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகள் மீதானதாகும்.

பரவலான சமூக அநீதி

தலித்துகள், குறிப்பாக தலித் பெண்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்திருப்பது கடந்த மூன்று ஆண்டுகளில் உள்ள உறைய வைக்கும் அம்சமாகும். 2012 ஆம் ஆண்டில் 1,576 தலித் பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாகியுள்ளனர். இதோடு ஒப்பிடும்போது, 2010 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 1,349 ஆக இருந்தது. இந்த வழக்குகளில் 50 முதல் 60 சதவிகிதம் மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் நிகழ்ந்துள்ளன. இந்தக் காலகட்டத்தில், 37 சதவிகிதத்திலிருந்து 67 சதவிகித அதிகரிப்பு என்று அரியானாவில் நிலைமை இரட்டிப்பு மோசமாகியிருக்கிறது. சாதிப் பாகுபாட்டிற்கு எதிராக அரசியல் சட்டத்திலேயே ஏராளமான அதிகாரங்கள் தரப்பட்டும், சமூக வன்முறை என்ற உருவத்தில் நாட்டின் பல பகுதிகளிலும் தீண்டாமை தொடர்கிறது. தீண்டாமைக்கு எதிராக இடதுசாரிகள் தலைமையில் நடந்த ஆலய நுழைவு, பொது சுடுகாடு, தீண்டாமைச் சுவர்கள் உள்ளிட்டவை தொடர்பான போராட்டங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளன.

பெண்களும், உழைப்பும்

பெண்களுக்கான வேலை காணாமல் போவது அதிகரித்துள்ளது. அதன் மதிப்பும் சரிந்திருக்கிறது. குறைவான ஊதியம், சட்டப் பாதுகாப்பின்மை மற்றும் சுரண்டலுக்கு இலக்காகும் அபாயம் அதிகரிப்பு ஆகிய அம்சங்களைக் கொண்ட வீட்டு வேலை செய்பவர்களாக, வீடு சார்ந்த பணி செய்பவர்களாக, ஒப்பந்தத் தொழிலாளர்களாக அணிதிரட்டப்படாத துறையில் பெண்கள் தள்ளப்படுகிறார்கள். சுய வேலை செய்யும் லட்சக்கணக்கான பெண்களின் வாழ்வாதாரத்தை, சில்லரை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீடு கேள்விக்குறியாக்கியுள்ளது. சுரண்டல் அதிகமாக இருக்கும் பாதுகாப்பற்ற பணிகளைத் தேர்வு செய்யும் அபாயத்தில் பல ஏழைப் பெண்கள் தள்ளப்படுகிறார்கள்.

தங்கள் குடும்பங்களைப் பாதுகாப்பதற்காக இருக்கும் வேலைகளைச் செய்வதற்குத் தயாராகும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில்தான், 2004-05 மற்றும் 2009-10க்கு இடைப்பட்ட காலத்தில் உழைபோர் எண்ணிக்கையில் 2 கோடிப் பெண்கள் குறைந்துள்ளதாக அரசு தரும் புள்ளி விபரம் கூறுகிறது. இத்தனைக்கும் இந்தக் காலகட்டத்தில்தான் மிக அதிகமான வேகத்தில் பொருளாதாரம் வளர்ந்ததாகச் சொல்லப்படுகிறது. 

தடையின்றித் தொடரும் விவசாய நெருக்கடி, கிராமப்பகுதிகளில் கடுமையான பிரச்சனையை உருவாக்கியுள்ளது. அதிகமான அளவில், இன்னும் தொடரும் விவசாயிகள் தற்கொலை மற்றும் துயரம் காரணமாக இடம் பெயர்தல் ஆகியவற்றில் இந்த நெருக்கடி பிரதிபலிக்கிறது.தேசிய குற்ற ஆவணப் பிரிவின் புளளிவிபரப்படி, 2 லட்சத்து 70 ஆயிரத்து 940 இந்திய விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள். 2001 முதல் 2011 வரையிலான சராசரி என்பது ஆண்டுக்கு 16 ஆயிரத்து 743 ஆகவும், ஒருநாளைக்கு 46 என்றும் உள்ளது. குடும்பத்திற்கு வருமானத்தை ஈட்டித் தருபவரை இழந்த குடும்பங்களின் அவல நிலை, அதனால் அக்குடும்பத்தின் விதவை மீது சுமத்தப்படும் திடீர் சுமை, நவீன தாராளமயக் கொள்கைகள் உணர்த்தும் சோகமான உண்மையாகும். கூடுதலாக, விவசாயிகளாகப் பெண்கள் இதுவரை அங்கீகரிக்கப்படவோ அல்லது பதிவு செய்யப்படவோ இல்லை. கடன் மதிப்பீட்டில் அவர்கள் விலக்கி வைக்கப்படுகிறார்கள். கடன் தள்ளுபடித் திட்டங்களிலும் அவர்களுக்கு இடம் இல்லை. பெண்களுக்கான குறிப்பாக நடவடிக்கைகள் உள்ளிட்ட, சுவாமிநாதன் ஆணையம் வழஙகிய பல்வேறு பரிந்துரைகள் அலட்சியப்படுத்தப்பட்டுள்ளன. 

கிராமப்புற வேலையின்மை மற்றும் துயரத்தை எதிர்கொள்ள முக்கியமான கருவியாக மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதிச்சட்டத்தைக் கொண்டு வர 2007-08 ஆம் ஆண்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முனைப்பு காட்டியது. 2006-07 ஆம் ஆண்டில் 41 சதவிகிதமாக இருந்த பெண்களின் பங்கேற்பு, 2012-13 ஆம் ஆண்டில் 52 சதவிகிதமாக உயர்ந்தது என்பது ஏழைப் பெண்களிடம் சாதகமான விளைவை ஏற்படுத்தியதைக் காட்டியது. ஆனால், உழைப்பின் மதிப்பு தொடர்பான அம்சங்கள், குறைந்தபட்ச கூலியைக்கூட பெண்களுக்குத்தர மறுப்பதாகவே அமைந்தன. மேலும். இந்தத் திட்டத்தின்கீழ் உத்தரவாதமாக 100 நாட்களுக்கு வேலை என்பது தற்போது ஒரு ஆண்டுக்கு வெறும் 45 நாட்கள் என்று குறைந்துவிட்டன. சட்டத்தில் தந்துள்ள அதிகாரங்களை மீறும் வகையில், தற்போது நிதியும் வெட்டப்பட்டுள்ளது. பயனாளிகளுக்கு வேலைகள் மறுக்கப்படுகின்றன. 

மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதிச் சட்டம் முறையாக அமலாக வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராடியது. மேலும், நகர்ப்புற வேலைவாய்ப்புச் சட்டத்திற்கான போராட்டத்தையும் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும்.

இதுபோன்ற அரசுத்திட்டங்களில் பணியாற்றும் அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள், ஆஷா ஊழியர்கள், மதிய உணவு ஊழியர்கள் உள்ளிட்ட லட்சக்கணக்கான பெண்களின் உரிமைகளுக்கு எந்தவித அங்கீகாரமும் இல்லை. குறைந்தபட்ச ஊதியம் அவர்களுக்குக் கிடைத்துவிடக்கூடாது என்பதற்காக திட்டமிட்ட வகையில் இது செய்யப்படுகிறது. அவர்களுக்குரிய அங்கீகாரம் மற்றும் தொழிலாளர்களுக்குரிய உரிமைகளைப் பெற்றுத்தர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராடும்.

விலையுயர்வும், உணவுப் பாதுகாப்பும்

தடையின்றி உயரும் விலைவாசி

ஆணாதிக்க சமூகத்தில் குடுமபப் பொருளாதாரத்தை சமாளிக்கும் பொறுப்பை பெண் சுமக்கிறாள். குடும்பத்தைப் பாதுகாக்க தனது தேவைகளைக் குறைத்துக் கொள்பவராகவே அவர் இருப்பதால், விலை உயர்வு மற்றும் உணவுப் பாதுகாப்புப் பிரச்சனை, குறிப்பாகப் பெண்களைக் கடுமையாகப் பாதித்துள்ளது. பெரும்பான்மையான மக்களைப் பாதிக்கும் அதே வேளையில், பெண்களின் வாழ்க்கைத்தரம் மற்றும் வாழும் முறை ஆகியவை மோசமடைவதற்கு விலைவாசி என்ற சிக்கலான பிரச்சனையே பொறுப்பாகும். கொள்கை மாற்றம் செய்யாமல் இதை சமாளிக்க முடியாது. அத்தகைய மாற்றத்தை இடதுசாரிக்கட்சிகள் மட்டுமே முன்னிறுத்தி வருகின்றன. பெட்ரோல், டீசல் விலை மீதான ஒழுங்குமுறை நடவடிக்கைகள் மீண்டும் அறிமுகம், அத்தியாவசியப் பண்டங்களை ஊக வணிகத்தில் விற்பதற்குத் தடை, பதுக்கல்காரர்கள் மற்றும் கருப்புச் சந்தை நடத்துபவர்கள்  மீது கடுமையான நடவடிக்கை, போதிய அளவில் இல்லாத மற்றும் குறைகளைக் கொண்ட தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்திற்கு மாற்றாக, பொது விநியோகத்திட்டத்தின் கீழ் அனைவரையும் கொண்டு வருதல் ஆகியவற்றை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

குறைந்தபட்சம் ஒரு குடும்பத்திற்கு 35 கிலோ உணவு தானியங்கள், அதிலும் ஒரு கிலோ இரண்டு ரூபாய்க்கு மிகாமல், வழங்கும் வகையில் அனைவருக்குமான பொது விநியோக முறை கொண்டு வர வேண்டும் என்பதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுதியாக உள்ளது.

சமூக நலத்திட்டங்கள் கடுமையான தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ன. மக்களுக்கு அடிப்படையான வசதிகளைச் செய்து தருவதற்கான அம்சங்களை ஐக்கிய முற்போக்கு கூட்டணி மற்றும் பாஜக தலைமையிலான கூட்டணி ஆகிய இரண்டு அரசாங்கங்களுமே விலக்கிக் கொண்டுள்ளன. இந்த இரு கட்சிகளின் தனியார் மயக் கொள்கைகள், கல்வி மற்றும் சுகாதாரம் ஆகிய இரண்டையுமே பணம் பண்ணும் வியாபாரங்களாக மாற்றி விட்டன. போதிய நிதியின்மை மற்றும் அரசியல் நோக்கம் ஆகியவற்றால் கல்வி பெறும் உரிமை நீர்த்துப் போய்விட்டது. பொது சுகாதாரத்துறை சீரழிக்கப்பட்டு, அரசின் முன்முயற்சியோடு தீவிரமான தனியார் நிறுவனமயமாதலை சுகாதாரத்துறை கண்டு வருகிறது.அன்றாடத் தேவைகள் கூட தனியார் மயமாக்கப்பட்டு விட்டது. வளர்ச்சியுற்ற இந்தியாவில், 58 சதவிகிதக் குடுமபங்களுக்கு குழாய் வழியாகத் தண்ணீர் பெறும் வசதியில்லை. பாதிக்கும் மேற்பட்ட குடுமபங்கள் கழிப்பறை வசதியைப் பெறவில்லை. இந்தப் பொறுப்புகளைச் சுமக்கும் பெண்களின் நிலையோ, காங்கிரஸ் மற்றும் பாஜக அரசாங்கங்களின் அக்கறையற்ற அணுகுமுறையால் மோசமாகிவிட்டது. அனைவருக்குமான இலவச சேவைகளைப் பெறுதற்குள்ள அரசு நிதி ஒதுக்கீடு, நவீன தாராளமய காலகட்டத்தில் கடுமையாக சரிந்துள்ளது.

அனைவருக்கும் தண்ணீர், உடல் நலன் பாதுகாப்பு, வீட்டு வசதி, கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான உறுதி இல்லாமல் கவுரவமான வாழ்க்கைக்கான உத்தரவாதம் மக்களுக்கு இருக்க முடியாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுதியாகக் கருதுகிறது.

பெண்கள் பிரச்சனைகள் மற்றும் கோரிக்கைகள்,  ஜனநாயக இயக்கத்தின் இயற்கையான உள்ளடக்கம் என்றே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பார்க்கிறது. வன்முறையில்லா சூழல், சமூக நீதி மற்றும் கவுரவமான வாழ்க்கைக்கான பெண்களின் உரிமைகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் நிகழ்ச்சி நிரலில் மையமான இடம் பெற்றுள்ளது.

பெண்களின் மனித உரிமைகளுக்காகப் பணியாற்றுவது மற்றும் உழைப்பாளிகளாகவும், குடிமக்களாகவும் பெண்களைத் தளையிட்டு, ஒடுக்கும் பல்வேறு ஒடுக்கு முறைகளை எதிர்கொள்ள மாற்றுக் கொள்கைகளைக் கொண்டு வர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுதி பூண்டுள்ளது.

English Version:-

 

 

 

Check Also

‘ஸ்டெர்லைட்டை வெளியேற்றுவோம்’ : சிபிஐ(எம்) சார்பில் புத்தகம் வெளியீடு…!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்டக்குழு சார்பில் ‘‘ஸ்டெர்லைட்டை வெளியேற்றுவோம்’’ புத்தகம் வியாழனன்று வெளியிடப்பட்டது. தூத்துக்குடியில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்புகளை உண்டாக்கும் ...

Leave a Reply