மகளிர் சுவர் எதற்காக?

மகளிர் சுவர் எதற்காக? சென்னித்தலாவின் 10 கேள்விகளும் பினராயியின் அதிரடி பதில்களும்

சபரிமலை விவகாரத்தில் கேரள இடதுஜனநாயக முன்னணி அரசை களங்கப்படுத்தி எப்படியேனும் ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டும் என்ற இழிநோக்கத்துடன் ஆர்எஸ்எஸ் – பாஜக மதவெறிக் கும்பல்கள் மிகப்பெரும் வன்முறையை அரங்கேற்ற பல முயற்சிகள் செய்து பார்த்தன. ஆனால் அத்தனையையும் சாதுர்யமாக தவிடுபொடியாக்கியது பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அரசு.

பெண்களுக்கு வழிபாட்டுத்தலம் உட்பட அனைத்து துறைகளிலும் சம உரிமை நிலைநாட்டப்பட வேண்டும் என்ற முழக்கத்தை, காவிக்கும்பலின் முகத்தில் அறைந்தாற்போல் இன்னும் ஓங்கி ஒலிக்கிறது இடதுசாரி முற்போக்கு கேரளம். அதன் அடையாளமாக ஜனவரி 1 (இன்று) பிரம்மாண்டமாக எழுகிறது மலையாளத்தில் வனிதா மதில் என்று சொல்லப்படும் மகளிர் சுவர். காசர்கோடு முதல் திருவனந்தபுரம் வரை 600 கிலோமீட்டர் தூரம், இந்திய பெண்ணுரிமை இயக்க வரலாற்றில், ஏன், உலகப் பெண்ணுரிமை இயக்க வரலாற்றிலேயே இதுவரை இல்லாத விதத்தில் மிகப் பிரம்மாண்டமாக – மதவெறியர்களை எதிர்த்து – ஆணாதிக்க சிந்தனையை தரைமட்டமாக்கும் நோக்கத்தோடு – சம உரிமையை உரத்து முழங்கி எழுகிறது மகளிர் சுவர்.

கட்சி வேறுபாடுகளைத் தாண்டி, ஒட்டுமொத்த கேரள சமூகமும் – ஒட்டுமொத்த கேரளப் பெண்களும் வனிதா மதிலின் பகுதியாக மாறுகிறார்கள்; பினராயி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அரசின் அறைகூவலின் பக்கம் ஒட்டுமொத்த கேரளமும் அணிதிரள்கிறது. இது ஆர்எஸ்எஸ் – பாஜக கும்பல்களுக்கு பீதியை ஏற்படுத்தியிருக்கிறது.

மற்றொருபுறம், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த அதிர்ச்சியை எப்படி வெளிக்காட்டுவது எனத் தெரியாமல், மகளிர் சுவர் பற்றி அவதூறு செய்து பத்து கேள்விகளை கேரள காங்கிரஸ் மூத்த தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான ரமேஷ் சென்னித்தலா எழுப்பியுள்ளார். அந்தக் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் முதலமைச்சர் பினராயி விஜயன்.

பாறப்புறம் மாநாட்டின் 79 ஆம் ஆண்டு கூட்டத்தில் முதர்வர் பினராயி விஜயன் கலந்து கொண்டு பேசுகையில், மகளிர் சுவர் எதற்காக என்பது கூட தெரியாமல் எதிர்க்கட்சித் தலைவர் கேள்விகள் கேட்பதாக கூறினார். மேலும், காங்கிரஸ் கட்சியிலிருந்து கணிசமான ஒரு பகுதி ஆட்கள் காங்கிரஸ் கொள்கையிலிருந்து பிறழ்ந்துவிட்டனர். அதனால்தான் ராகுல்காந்தியின் நிலைபாட்டுக்கு விரோதமாக கேரளத்தின் காங்கிரஸ் தலைவர்கள் நிலைபாடு எடுத்தனர்.

பெண்களின் உரிமைகளுக்காக அவர்களோடு நிற்பதாக கூறிய ராகுல் காந்தியின் நிலைபாட்டினை அவரது தனிப்பட்ட கருத்து என்று கேரளத்தில் உள்ள காங்கிரஸ் தலைவர்கள் கூறினார்கள். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவரை கேரளத்தில் உள்ள காங்கிரசார் சிறுமைப்படுத்துவது ஆர்எஸ்எஸ்-பாஜகவுக்காகத்தான் என முதல்வர் கூறினார். பினராயி விஜயன் பதில்கள் வருமாறு:

1. மகளிர் சுவர் என்ன நோக்கத்திற்காக அமைக்கப்படுகிறது?

மகளிர் சுவர் எதற்காக என்பதைக் கூட எதிர்க்கட்சி தலைவரால் புரிந்து கொள்ள முடியவில்லை. ரகசியமாக ஏற்பாடு செய்யப்பட்டதல்ல மகளிர் சுவர். மறுமலர்ச்சியின் விழுமியங்களை பாதுகாத்து முன்னேறும் நாடாகும் இது. ஆனால், அண்மைக் காலமாக மறுமலர்ச்சி விழுமியங்களை தகர்க்கவும் 19 ஆம் நூற்றாண்டின் துவக்க காலத்திற்கு தள்ளிவிடவும் முயற்சிக்கிறார்கள். அதற்கு எதிராக அனைத்துப் பகுதியிலிருந்தும் இயல்பாக எதிர்ப்பு ஏற்பட்டது. அதை வேடிக்கை பார்க்க மாநில அரசால் முடியாது. மறுமலர்ச்சி விழுமியங்களை தகர்ப்பதற்கான முயற்சிகளை எதிர்கொள்வதே மகளிர் சுவரின் நோக்கம்.

2. மறுமலர்ச்சி விழுமியங்களை பாதுகாப்பதற்காக என்றால் ஆண்களை விலக்கி வைப்பது எதற்காக?

பதில்: பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளை பெண்களே நேரடியாக சந்திக்கும் கொள்கை ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. இன்று அது பெரிய அளவில் முன்னேற்றம் கண்டுள்ளது. அனேகமான அனைத்து மகளிர் அமைப்புகளும் மகளிர் சுவருக்காக அணி திரண்டுள்ளனர். கேரளத்துக்கு வெளியில் உள்ளவர்களும் இதன் பகுதியாக கைகோர்க்க உள்ளனர். ஆண்களுக்கு சமமான உரிமை பெண்களுக்கும் கிடைப்பதை எதிர்ப்பதே பிற்போக்கு சக்திகளின் நகர்வு. அதனை எதிர்கொள்வதற்கான பெண் சக்தி இங்கே எழுகிறது. அது தேவையானதுதான். அதனால்தான் மகளிர் மட்டுமே பங்கேற்கிற பிரம்மாண்ட மதிலாக எழுகிறது.

3. சபரிமலையில் பெண்களை அனுமதிப்பதோடு மகளிர் சுவருக்கு ஏதேனும் தொடர்பு உண்டா?

இந்த பிரச்சனை எழுவதற்கு காரணமான சபரிமலை குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பு வந்துள்ளது. அந்த தீர்ப்பு வந்தபோது ஆதரித்த யுடிஎப்பும் பாஜகவும் தீர்ப்பை அமல்படுத்த வேண்டும் என்று கூறின. அதைத்தவிர வேறு வழியில்லை என எதிர்க்கட்சி தலைவர் அன்று கூறினார். தங்களது எஜமானர்கள் என்று கருதும் சிலர் இதற்கு எதிராக களத்துக்கு வந்தபோது, தங்களது சொந்த கருத்துகளை மாற்றிக்கொண்டு வெட்கம் மறந்து கேள்வி கேட்க தயாராகிவிட்டனர். பெண்கள் அனுபவித்துவரும் உரிமைகளின் மீது கைவைக்க சிலர் தயாராகும்போது அதை கேள்வி கேட்க இயல்பாக சமூகம் தயாராகும்.

4. சபரிமலையில் இளம்பெண்கள் நுழைவதன் பின்னணியில் மகளிர் சுவர் என்கிற யோசனை உருவானது என்றாலும் சிபிஎம்மும் அரசும் அதை வெளிப்படையாக கூற தயங்குவது எதற்காக?

சபரிமலையில் பெண்கள் செல்ல வேண்டுமா இல்லையா என்பது மட்டுமல்ல, பெண்களின் சமநிலையே இங்கு பிரச்சனை. அதையே உச்சநீதிமன்றமும் விவாதித்தது. பெண்களின் பொதுவான சமநிலையையும் உரிமைகளையும் பாதுகாப்பதோடு, அவற்றை எதிர்ப்போரை அம்பலப்படுத்தவுமே இந்த சுவர்.

5. சில இந்து அமைப்புகளை மட்டும் அழைத்து கூட்டம் நடத்தி மறுமலர்ச்சி விழுமியங்களை பாதுகாப்பதற்கு பெண்களின் சுவர் அமைக்க முடிவு செய்ததன் முக்கியத்துவம் என்ன?

அது ஆர்எஸ்எஸ்சும் பாஜகவும் தவறாக பயன்படுத்திவிடக் கூடாது என்கிற எண்ணத்தில் நடத்தப்பட்ட கூட்டம். அந்த கூட்டத்தில் சிறுபான்மை அமைப்புகளையும் அழைத்தால் அது ஆர்எஸ்எஸ்சுக்கு கிடைக்கும் பெரிய ஆயுதமாக மாறும். அதனாலேயே கூட்டத்திற்கு சிறுபான்மை அமைப்புகள் அழைக்கப்படவில்லை.

6. கேரளத்தின் மறுமலர்ச்சி இயக்கத்திற்கு விலைமதிப்பற்ற பங்களிப்பை நல்கிய சிறுபான்மை பகுதியினரை ‘விலக்கி’ வைத்துவிட்டு ஒரு பகுதியினரை மட்டும் உட்படுத்தி நடத்தும் இந்த சுவர் சமூகத்தில் வகுப்புவாத பிரிவினைக்கு வழி வகுக்குமல்லவா?

நான் படித்த பாட்டையே பாடுவேன் என்பது போல இக்கேள்வி உள்ளது. கூட்டத்தில் மகளிர் சுவர் என்கிற கருத்து வடிவம் பெற்றபோதே தெளிவுபடுத்தப்பட்டது. அது இந்த நாட்டின் மறுமலர்ச்சிக்கு பெருமளவில் பங்களிப்பு செய்தவர்கள் கிறிஸ்தவ மிஷினரிகளும், முஸ்லிம் பண்டிதர்களும். அவர்களையும் தொடர்பு கொண்டு சாத்தியமான அளவில் பெண்களை இந்த சுவரில் பங்கேற்க செய்யுமாறு அந்த நேரத்திலேயே கேட்டுக்கொள்ளப்பட்டது. இப்போது கிறிஸ்தவ, முஸ்லிம் பகுதிகளிலிருந்து சாதகமான பதில் வருவது நல்ல எண்ணங்களின் அடிப்படையிலாகும். கேள்வி கேட்டதோடு ஒன்றாம் தேதி சாலையில் இறங்கி பார்த்தால் அப்போது அறிந்து கொள்ளலாம்.

7. மக்களை சமுதாயமாக கூறுபோடுவது கம்யூனிஸ்ட் கட்சி நிகழ்ச்சி நிரலான வர்க்கப் போராட்டத்திற்கு எதிரான அடையாள அரசியல் சிந்தாந்தத்தை அங்கீகரிப்பதல்லவா?

தொடர்ச்சியாக நீங்கள் பொய்ப் பிரச்சாரம் செய்கிறீர்கள். அனைத்து கட்டங்களிலும் பெண்கள் ஏராளமான ஒடுக்குமுறைக்கு உள்ளாகினர். அவர்களுக்கான உரிமைகள் கூட தட்டிப்பறிக்கப்படுகின்றன. இதில் மாற்றம் ஏற்படுவதை விரும்பாதவர்களோடு அதற்கான எதிர்ப்பே இந்த சுவர். இந்த சுவருக்கு எதிரில் மற்றொரு சுவரை அன்றைய தினம் காண முடியும். அது ஆண்கள் பங்கேற்பதாகும். பெண்களின் உரிமைகளுக்காக இந்த நாடே அணிவகுத்துள்ளது.

8. மகளிர் சுவருக்கு அரசின் ஒரு பைசாகூட செலவு செய்வதில்லை என்று வெளியில் கூறும்போது, அரசின் மேற்பார்வையிலும், அரசு நிதியை பயன்படுத்தியும் நடத்தும் நிகழ்ச்சிதான் என நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தது எதற்காக? சமூக பாதுகாப்பு ஓய்வூதியம் பெறுவோரிடம் கட்டாயப்படுத்தியது குறித்து விசாரணை நடத்தப்படுமா?

மகளிர் சுவருக்கு அரசு ஒரு பைசாகூட செலவு செய்யாது என்கிற உத்தரவாதத்தோடு முதல்நாளே அறிவிப்பு செய்யப்பட்டது.பெண்கள் முன்னேற்றத்திற்காக அரசு ஒதுக்கீடு செய்த தொகையைப் பற்றிய கணக்கே நீதிமன்றத்தில் கொடுக்கப்பட்டது. அதில் ஒரு பைசா கூட மகளிர் சுவருக்காக செலவிடப்படமாட்டாது. சமூக பாதுகாப்பு ஓய்வூதியத்திலிருந்து அள்ளி எடுப்பவர்களல்ல கம்யூனிஸ்ட்டுகள். நீங்கள் உங்களது பழக்கத்தை கூறுகிறீர்கள். கட்டாய வசூல் என்பது இல்லை. நான் நேரடியாக விசாரித்ததில் அப்படி எங்கேயும் நடக்கவில்லை. ஏதேனும் சான்று இருந்தால் விசாரிக்கலாம்.

9. அரசு இயந்திரம் தவறாக பயன்படுத்தப்படாது என அரசு அறிவித்ததற்கு நன்றி கூறும்போதே மகளிர் சுவரில் பங்கேற்க வேண்டும் என கேட்டுக்கொண்ட உயர் அதிகாரிகளின் சுற்றறிக்கை கீழ்நிலை பணியாளர்களுக்கு அளிப்பதும் மிரட்டுவதும் தவறான நடவடிக்கை அல்லவா?

மகளிர் சுவரில் பங்கேற்பதற்காக எந்த ஒரு உயர் அதிகாரியும் கீழ்நிலை ஊழியர்களை மிரட்டவில்லை. அரசு பணியாளர்கள் பங்கேற்க தடையில்லை என்பதையே தெளிவுபடுத்தியுள்ளனர்.

10. அரசியல் லாபம் அடைவதற்காக கேரளத்தின் சமூக கட்டமைப்பை தகர்த்து சமூகத்தை வகுப்புவாதமயமாக்குவது முதல்வர் என தங்களைப்பற்றி வரலாறு பதிவு செய்யும் என்பதை தாங்கள் எதனால் புரிந்துகொள்ளவில்லை?

அது வரலாறு பதிவு செய்ய வேண்டிய விஷயமாயிற்றே. எனக்கு அதில் யாதொரு கவலையும் இல்லை.

Check Also

சாதிய அணி சேர்க்கைக்கு இடமளிக்க வேண்டாம்!

வன்னியர்கள் மீது அவதூறுகள் பரப்பப்படும் போது அது தொடர்பான உண்மை நிலையை சம்பந்தப்பட்டவர்களுக்கு உணர்த்துவதற்காகவும், தீய பிற்போக்கு சக்திகளிடமிருந்து வன்னியர் ...