மகளிர் தின வாழ்த்துக்கள்

உலகெங்கிலும் சமத்துக்காகவும், உரிமைகளுக்காகவும், கண்ணியமான வாழ்க்கைக்காகவும் போராடும் பெண்களுக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உலக மகளிர் தின வாழ்த்துக்களை உரித்தாக்குகிறது.

விஷம் போல் ஏறி வரும் விலைவாசியும், அதிர்ச்சியளிக்கும் கொடும் வன்முறைகளும், ஒற்றுமையை சீர்குலைக்கும் மத வெறியும், பிற்போக்குக் கருத்தியலும் பெண்களின் பிரதான எதிரிகளாக உலா வருகின்றன. கும்பல் பாலியல் வல்லுறவு, குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல்கள், கௌரவக் கொலைகள், பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல் இக்கால கட்டத்தின் கண்டனத்துக்குரிய போக்குகளாக முன்னுக்கு வந்துள்ளன. 6 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளின் விகிதாச்சாரம் கவலையளிக்கும் நிலையிலேயே தொடர்கிறது. பாலியல் குற்றங்களில், பாதிக்கப் படும் பெண்கள் மீதே பழி சுமத்தும் பிற்போக்குக் கருத்தியல் உள்ளிட்ட  ஆணாதிக்க, நில உடமை கருத்துக்கள் பரவலாக நிலவுகின்றன.

அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, கல்வி, மருத்துவம், சுகாதாரம் போன்ற பொது சேவைகள் தனியார் மயத்துக்கும், ஒரு பகுதி கார்ப்பரேட்மயத்துக்கும் திறந்து விடப்பட்டதன் விளைவாக அவற்றுக்கான செலவினங்கள் அதிகரிப்பு போன்றவை குடும்பம் முழுமையையும் பாதித்தாலும், பெண்கள் கூடுதலான சுமையைத் தாங்க வேண்டிய சூழல் நிலவுகிறது. தற்போது பொது விநியோக முறை படிப்படியாக பாழ்பட்டுக் கொண்டிருக்கிறது. பன்னாட்டு நிறுவனங்களில் நிலவும் கடுமையான உழைப்புச் சுரண்டலிலும், சங்கம் வைக்கும் உரிமை உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் பறிக்கப் படுவதிலும் பெண் தொழிலாளிகளும் பாதிப்புக்குள்ளாகின்றனர். பல்வேறு அரசு திட்டப் பணியாளர்கள், தொழிலாளர்கள் என்ற அந்தஸ்து பெறாமல் குறைந்த கூலிக்கு உழைப்பு உறிஞ்சப் படுகின்றனர். விவசாய பாதிப்பின் விளைவை, பெண் சாகுபடியாளர்களும், விவசாய தொழிலாளிகளில் சரி பாதியாக உள்ள பெண்களும் அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். ஊரக வேலை திட்டத்தின் கீழ் சம்பளம் நிலுவையில் உள்ளது. பேரூராட்சிகளுக்கும் இத்திட்டத்தை விஸ்தரிக்க வேண்டியிருக்கிறது. சட்டமன்றம், நாடாளுமன்றத்தில் 33 சதவிகித இட ஒதுக்கீடு இன்னும் சட்டமாக்கப் படாததால், தீர்மானிக்கும் இடங்களில் பெண்கள் பங்களிப்பு மறுக்கப் படுகிறது.

சாதிய தாக்குதல்களில் தலித் பெண்கள் இலக்காவது ஒரு புறமும், சாதி தாண்டிய காதல், திருமணம் போன்ற நடவடிக்கைகளில் தலித் இளைஞர்களும், இதர சாதி பெண்களும் பலியாவது மறுபுறமும் நடந்து கொண்டிருப்பதைத் தமிழகம் பார்க்கிறது. தமிழகத்தின் சமூக நீதி பாரம்பர்யத்தைத் திசை திருப்பும் விதத்தில் சாதிய ரீதியான அணி சேர்க்கைகள் நடந்தேறுகின்றன. தமிழகத்தின் நெருக்கடியான அரசியல் நிலையைப் பயன்படுத்தி, பிஜேபி தமிழகத்தில் காலூன்ற முயற்சிப்பது, பெண்களுக்கு எதிரான கருத்தியலையே வலுப்படுத்தும்.

அதே சமயம், இவற்றை எதிர்த்த போராட்டங்களில் பெண்களின் பங்கேற்பு அதிகரித்து வருகிறது. பாலியல் வன்முறை குறித்துப் புகார் செய்வதும் நீதி கேட்டுப் போராடுவதும் அதிகரித்துள்ளது. வலுவான போராட்டங்களால் சில புதிய சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. தனது வாழ்க்கையைத் தானே தீர்மானிக்கும் உரிமையைக் கையிலெடுக்கும் நிலை பரவலாகிக் கொண்டிருக்கிறது. அடிப்படை உரிமைகளுக்காக கம்பெனிகளிலும், நிறுவனங்களிலும், ஊரக வேலை உறுதி சட்டத்தின் கீழும் பெண்கள் போராட்டக் களத்துக்கு வருவது அதிகரித்துள்ளது. பட்டா, குடிநீர், கழிப்பறை, சாலை வசதிக்காக பெண்கள் நீதி கேட்டு வீதிக்கு வருவதைக் கண்கூடாகப் பார்க்கிறோம். சல்லிக்கட்டு உரிமைக்கான எழுச்சியில் ஏராளமாகப் பெண்கள் பங்கேற்றது மகிழ்ச்சியளிக்கிறது. நெடுவாசலிலும் பெண்கள் முன்வரிசை தளபதிகளாக செயல்பட்டு வருகின்றனர். உள்ளாட்சி அமைப்புகளில் தேர்ந்தெடுக்கப் பட்ட பெண்கள் பலர் சிறப்பாகப் பணி செய்து வருகின்றனர். இவை மேலும் தொடர வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி கருதுகிறது.

நாம் சந்திக்கும் வாழ்வுரிமை பிரச்னைகள் இயல்பாய் வருவதில்லை. அரசாங்கம் கடைப்பிடிக்கும் நவீன தாராளமயக் கொள்கைகளால் உருவாக்கப் படுகின்றன. காங்கிரஸ், பிஜேபி இரண்டுமே இத்தகைய கொள்கைகளைப் பின்பற்றக் கூடியவை தான். மேலும் பிஜேபி மதவெறி நடவடிக்கைகளில் இறங்குவதன் மூலம் மக்கள் ஒற்றுமையை சீர்குலைக்கிறது. பெண்கள் உட்பட, சிறுபான்மை மக்கள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்து விடுகிறது. பிஜேபி பின்பற்றும் இந்துத்வம் பெண்களை சம உரிமை பெற்றவர்களாகக் கருதுவதில்லை. தமிழகத்தில் அரசியல் அரங்கில் நடக்கும் அதிகார போட்டியில், மக்கள் பிரச்னைகளை ஆட்சியாளர்கள் கவனத்தில்  எடுப்பதில்லை.

அனைத்து வித பாகுபாடுகளையும் எதிர்த்துப் போராடும் மார்க்சிஸ்ட் கட்சி, குடும்ப ஜனநாயகம் மற்றும் வன்முறையற்ற வாழ்வுக்காகக் குரல் கொடுக்கிறது. பெண்களுக்கெதிரான குற்றங்களை எதிர்த்து, நீதிக்காகக் களத்தில் நிற்கிறது. அரசியல், சமூக, உழைக்கும் வர்க்கக் கோரிக்கைகளுடன் துவங்கிய உலக மகளிர் தினத்தின் போராட்ட பாரம்பர்யம் முன்னெடுத்துச் செல்லப் பட, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ச்சியாகப் பங்களிப்பு செய்யும். அனைத்து தளங்களிலும் சம உரிமைகள் கோரி நடத்தப்படும் பெண்களின் ஜனநாயகப் போராட்டங்களுக்கு  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  ஆதரவு அளிக்கும்.

Check Also

நாட்டு மக்களை சட்ட விரேதமாகக் கண்காணித்திட யார் அதிகாரம் அளித்தது? பாஜக அரசே பதில் சொல்!

கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கை; இஸ்ரேல் உளவு நிறுவனமான NSO ஊடகவியலாளர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களின் போன்கள் ...