மக்களிடம் செல்வோம்!

– இடதுசாரிகளிடம் என்ன தவறு ஏற்பட்டது? ஏன் அவர்கள் இன்றைக்கு தோல்வியடைந்தது போன்ற நிலையில் உள்ளனர்?

ஏதோ தவறு நிகழ்ந்திருப்பதாக நான் சொல்லமாட்டேன். எப்போதும் நிகழ்வதைப் போன்றே, உலகம் வெகு வேகமாக மாறி வருகிறது. அந்த வேகத்திற்கு ஈடு கொடுப்பதில் நாங்கள் பின்தங்கியுள்ளோம். மார்க்சியத்தை லெனின் மிகச் சுருக்கமாக வரையறுத்துள்ளார் – ‘‘திட்டவட்டமான சூழலுக்கு ஏற்ப திட்டவட்டமான முடிவுகளை எடுப்பது’’ என்பதுதான் அது. குறிப்பான நிலைமைகள் மாறுகின்றபோது குறிப்பான ஆய்வுகள் அதே வேகத்தில் நடைபெறுவதில்லை. அதில் கால இடைவெளி என்பது உள்ளது. அத்தகைய கால இடைவெளியால் பாதிப்பிற்கு ஆளானவர்களே நாங்கள்.

– இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற தேர்தல்களில் உங்களது வாக்குகளின் பங்கு வெறும் 4 சதவீதமாக வீழ்ச்சியடைந்திருக்கிறது, வெகு சமீபகாலம் வரை மக்களவையில் 50 இடங்கள் என்றிருந்தது 10ஆகக் குறைந்துள்ளது. உங்களது வலுவான கோட்டையான மேற்கு வங்கத்தில் நீங்களாகவே மீண்டு வர இயலாத நிலையில் உள்ளீர்கள் என்ன நடக்கிறது?

இது இப்போது எங்கள் முன் உள்ள மிக முக்கியமான கேள்வியாகும். எங்களது கட்சியின் விசாகப்பட்டினம் அகில இந்திய மாநாட்டில் (21வது மாநாடு) எங்களது சொந்த பலத்திலும், அரசியல் தலையீட்டிற்கான திறனிலும் ஏற்பட்டுள்ள இந்தச் சரிவை எவ்வாறு சரி செய்வது என்பதே பிரதானமான விஷயமாக விவாதிக்கப்பட்டது. இம்மாநாட்டிற்கு முந்தைய பத்தாண்டு காலத்தில் இத்தகைய நிலை ஏற்பட்டுள்ளது. அந்த காலகட்டத்தில், தேர்தல் உடன்பாடு குறித்து நாங்கள் பேசுகின்றபோது, மதவாத சக்திகளின் எழுச்சியை எதிர்கொள்வது போன்ற இன்ன பிற பெரிய விஷயங்கள் முன்னுக்கு வந்த அதே நேரத்தில், மக்கள் நலனுக்கு எதிராக இருந்த பிரச்சனைகள் பின்னுக்குப்போயின. இதன் காரணமாக எங்களது சுய அடையாளத்தை நாங்கள் இழக்க நேர்ந்தது.

அதோடு, அப்போது எங்களது கவனத்தை அதிகம் ஈர்க்காமல் இருந்த ஸ்தாபன பலவீனங்கள் காரணமாகவும் இத்தகைய பின்னடைவு சிறிதளவு ஏற்பட்டது. நாங்கள் பெரிய அரசியல் ரீதியான விஷயங்களிலேயே கவனத்தை செலுத்தி வந்தோம். இந்த இரண்டு விஷயங்களையும் சரி செய்திட நாங்கள் முடிவு எடுத்துள்ளோம். 2015இல் நடைபெற்ற கட்சியின் அகில இந்திய மாநாட்டிற்குப் பிறகும், டிசம்பர் மாதத்தில் கொல்கத்தாவில் நடைபெற்ற பிளீனத்திற்குப் பிறகும் இதற்கான நடவடிக்கைகள் துவங்கப்பட்டுள்ளன. இத்தகைய நடவடிக்கைகள் துவங்கி ஓராண்டிற்கும் சிறிது கூடுதலான காலமே கடந்துள்ளது. எனவே, இந்நடவடிக்கைகளின் விளைவுகள் குறித்து மதிப்பீடு செய்வதற்கு இது மிகக் குறுகிய காலமாகும். ஆனால், மாநாட்டிற்கு முந்தைய பத்தாண்டு காலத்தில் எங்களது பலத்தில் வேகமாகவும், மிகக் கடுமையாகவும் சரிவு ஏற்பட்டது என்பது எங்களுக்கு நன்கு தெரியும்.

– அவ்வாறு ஏன் நிகழ்ந்தது?அது பற்றி மிகக் குறிப்பாகக் கூறுங்கள்.

அரசியல் காரணிகளின் சேர்க்கை காரணமாக இது நடைபெற்றுள்ளது. தேர்தல் அரசியலில் கூட்டணிக்கு இரண்டு அம்சங்கள் இருக்கின்றன. ஆட்சி அமைப்பு முறையில் ஏற்படும் மிகப் பெரிய அபாயங்களைத் தடுத்து நிறுத்துவது ஓர் அம்சமாகும். கூட்டணியில் இடம்பெறும் சக்திகளின் தவறான கொள்கைகளுக்கு எதிராக இயக்கங்களை நடத்திடுவதற்கான பலம் மற்றொரு அம்சமாகும்.

– ஆனால் ஐ.மு.கூட்டணியில் நீங்கள் இடம் பெற்றிருந்தபோது, பல்வேறு கொள்கைகளிலும், பிரச்சனைகளிலும் உங்களால் வலுவான தலையீட்டை செய்திட முடிந்ததே …

ஆம், நிச்சயமாக செய்திட முடிந்தது. கொள்கைப் பூர்வமாக மிக முக்கியமான 16 பிரச்சனைகளில் எங்களால் தலையீடு செய்து, பலவற்றை மாற்றிட முடிந்தது. எங்களது நிர்ப்பந்தம் காரணமாக சில முடிவுகளையும் எடுக்க வைத்தோம். கிராமப்புற வேலைவாய்ப்பு சட்டம், உணவிற்கான உரிமை, கல்விக்கான உரிமை, தகவல் பெறும் உரிமை போன்றவையே அவை. இவையெல்லாம் மிகப் பெரிய முன்னேற்றங்களாகும். இவையெல்லாம் இடதுசாரியின் நிர்ப்பந்தத்தால் நடைபெற்றவையாகும். ஆனால், இவையெல்லாம் எவ்வாறு பார்க்கப்பட வேண்டுமோ அவ்வாறு பார்க்கப்படாமல் போனது துரதிர்ஷ்டமாகும். பெல் நிறுவனத்தை தனியார்மயமாக்குவது, உதாரணமாக அதன் பங்குகளை விற்பனை செய்வது, பெருநகரங்களல்லாத இடங்களில் உள்ள விமான நிலையங்களை தனியார்மயமாக்குவது போன்ற ஐ.மு.கூட்டணியின் சில தவறான நடவடிக்கைகளை எங்களால் தடுத்து நிறுத்திட முடிந்தது. இந்த விமான நிலையங்கள் எல்லாம் விமானநிலைய ஆணையத்தாலேயே நவீனமயமாக்கப்பட்டுள்ளன. பல சாதனைகள் அப்போது செய்யப்பட்டன. ஆனால், பேரங்களில் எங்களது பலம் சரிந்தது. அது எங்களைப் பற்றிய மதிப்பீட்டை தெரிவிக்கத் துவங்கியது. ஆனாலும் கூட, ஐமுகூட்டணியின் ஆட்சிக் காலத்தில் நாங்கள் பல சாதனைகளைப் புரிந்தோம்.

– இத்தருணத்தில் உங்களிடம் ஒரு கேள்வியை கேட்க விரும்புகிறேன் – ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்து விலகிட நீங்கள் எடுத்த முடிவு வரலாற்றுப் பூர்வமான இரண்டாவது தவறா?

(சிரித்துக் கொண்டே …) இல்லை, அதனை நான் அவ்வாறு குறிப்பிடமாட்டேன். இந்திய – அமெரிக்க அணுசக்தி ஒப்பந்த பிரச்சனையில் நாங்கள் கூட்டணியிலிருந்து விலகியபோது, அப்பிரச்சனை பற்றி மக்களிடம் கொண்டு செல்ல நாங்கள் தவறிவிட்டோம். இதனை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். அணுசக்திப் பிரச்சனையை ஓர் தேர்தல் பிரச்சனையாக எங்களால்மாற்ற இயலவில்லை. அது எங்கள் பக்கம் இருந்த ஒரு பெரிய தவறாகும். அதற்கான விலையை நாங்கள் அளித்துள்ளோம். கூட்டணியிலிருந்து நாங்கள் வெளியேறியதற்கான காரணத்தை மக்களை ஏற்றுக் கொள்ளச்செய்ய எங்களால் இயலாமல் போனது.

– அமெரிக்க ஏகாதிபத்தியம் எனும் பூதத்தை இடதுசாரிகள் எப்போதும் இழுத்துக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் இன்றைய உலகில் அது காலாவதியாகிப் போன ஒன்று. கற்பனை எதிரியோடு போரிடுவதைத் தாண்டி வேறு எதனையும் நீங்கள் செய்யவில்லை என நிறைய பேர் சொல்கிறார்கள்.

அது எப்படி? கற்பனை எதிரியோடு நாங்கள் போரிடுவதாகச் சொல்கிறீர்கள். உலகம் முழுவதிலும் அமெரிக்கா என்ன செய்து கொண்டிருக்கிறது எனப் பாருங்கள்? தத்துவார்த்த ரீதியாக நாங்கள் அமெரிக்காவிற்கு எதிரானவர்கள் என்பதே விமர்சனம் ஆகும். பல்வேறு விஷயங்களில் நாங்கள் வேறுபடுகிறோம். இன்று என்ன நடக்கிறது? டிரம்ப் என்ன செய்து கொண்டிருக்கிறார்? டிரம்ப் இதனைச் செய்யவில்லை என்றால், அமெரிக்க அரசின் அதிகாரத்தில் இருக்கும் வேறு யாராவது ஒருவர் செய்திடுவார் என்பது எங்களது புரிதல். அதுவே ஏகாதிபத்தியத்தின் தன்மையாகும். அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நிழலின் கீழ் இருப்பது இந்தியாவின் சொந்த நலனுக்கு உகந்ததல்ல.

மற்றொரு விஷயத்தையும் நான் குறிப்பிட விரும்புகிறேன். இந்தியாவின் பிரதமராக மன்மோகன் சிங் அமெரிக்காவிற்கு முதன் முறையாகச் சென்றபோது, அப்போது ஜனாதிபதியாக இருந்த புஷ் தனது மனைவி லாராவுக்கு அவரை அறிமுகம் செய்து வைத்தார். பல லட்சம் முஸ்லிம் மக்கள் இருந்தும், அவர்களில் ஒருவர் கூட அல்கொய்தா அமைப்பில் உறுப்பினராக இல்லாத ஜனநாயகத்தின் தலைவர் என அப்போது புஷ் குறிப்பிட்டார் என்பதை தயவுசெய்து நினைவில் கொள்ளுங்கள். புஷ் இவ்வாறு குறிப்பிட்டது நமக்கெல்லாம் மிகப் பெருமையாக இருந்தது. இன்று என்ன நடக்கிறது என்று பாருங்கள். ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் இந்தியாவிலிருந்து சிலர் சேர்ந்திடுவது பற்றி அரசு என்ன சொல்கிறது? இவ்வாறு ஏன் நடக்கிறது? அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளோடு எவ்வளவு நெருக்கமாக நீங்கள் இருக்கிறீர்களோ, அந்த அளவிற்கு உங்களது நாட்டில் இது போன்ற விஷயங்கள் நடைபெற நீங்கள் வழிவகுக்கிறீர்கள். இவ்வாறு செய்வது நமது சொந்த நலனுக்கு உகந்ததல்ல. அணுசக்தி ஒப்பந்தத்தில் அமெரிக்காவுடன் கையெழுத்திடுவதில் இந்தியாவின் சொந்த நலனுக்கு என்ன ஆதாயம் இருந்தது?

– கேள்வியை நான் உங்களிடம் மற்றொரு கோணத்திலிருந்து கேட்கிறேன். நீங்கள் சொல்லியபடியே, அப்போது அரசின் கொள்கைகளில் இடதுசாரிகள் செல்வாக்கு செலுத்திக் கொண்டிருந்தார்கள். நீங்களே குறிப்பிட்டபடி, இன்னமும் செய்து முடிக்கப்பட வேண்டியவை பல இருந்தன. அவ்வாறு இருக்கையில், இந்தப் பிரச்சனைக்காக மட்டுமே கூட்டணியிலிருந்து வெளியேறுவது அவ்வளவு அவசியமான ஒன்றாக இருந்ததா? நீங்கள் ஐ.மு.கூட்டணியிலிருந்து வெளியேறியபின் இந்தியாவின் அரசியல் வரைபடத்தில் நிகழ்ந்தவற்றிற்கு நீங்கள் பொறுப்பேற்கிறீர்களா?

குற்றம் காணும் குணத்தைக் கொண்டவனாக நான் இருந்திருந்தால், நாட்டு நலனைப் பாதுகாப்பது என்பது எங்களது பொறுப்பு மட்டுமல்ல என்றெல்லாம் சொல்லியிருப்பேன். ஆனால், நான் அவ்வாறு சொல்லப்போவதில்லை. அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதால் இந்தியாவிற்கு ஒரு மெகாவாட் மின்சாரம் கூட வந்து சேரப்போவதில்லை என்பதை நாங்கள் அப்போதே மிகத் தெளிவாகக் குறிப்பிட்டோம். அது இன்று உண்மையாக நடந்திருக்கிறது.அணுசக்தி எனும் மிகப் பெரிய பரப்பில் நாம் அனுமதிக்கப்படவில்லை.அவ்வாறு இருக்கையில் அவர்களுக்கு அவ்வளவு அவசரம் ஏன்?இவ்விஷயத்தில் இவ்வளவு பிடிவாதத்துடன் அவர்கள் இருந்திருக்க வேண்டுமா என்பது பற்றி காங்கிரஸ் கட்சி மற்றும் ஐமுகூட்டணியின் தலைமையும் சிந்தித்திருக்க வேண்டும்.அவர்களுக்கு எத்தகைய நிர்ப்பந்தம் இருந்தது என்பதை இன்றுவரை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.இதனால் இந்தியாவிற்கு என்ன ஆதாயம் கிடைத்தது? வெளியுறவுக் கொள்கையிலிருந்து பாதுகாப்புத் துறை, பொருளாதாரம் வரை அனைத்துத் துறைகளிலும் அமெரிக்காவின் இளைய பங்காளியாக அதிகாரப்பூர்வமாக ஆக்கிடுவதாக அந்த ஒப்பந்தத்தை தற்போதைய நரேந்திர மோடி அரசு மாற்றியதைத் தவிர வேறெந்த ஆதாயமும் இந்தியாவிற்குக் கிடைக்கவில்லை.

 உங்களது அசைக்க முடியாத கோட்டையாக இருந்த மேற்கு வங்கம் பற்றி பேசிடுவோம். இங்கு தட்சிண கோண்டி (தெற்கு கோந்தி) தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் உங்களுக்குத் தெரிவிக்கும் செய்தி என்ன? பாஜகவிற்கு இரண்டாவது இடம் கிடைத்தது.உங்களுக்கு மூன்றாவது இடமே கிடைத்திருக்கிறது.தேர்தல்களில் கட்சிகள் தோல்வியடைவதை என்னால் புரிந்து கொள்ள முடியும்.ஆனால், நடைபெற்றிருப்பது என்பது முற்றிலும் வெளியிலிருந்து வந்த புதியவரால் (அதாவது பாஜகவால்) துடைத்தெறியப்படுவது போன்றதல்லவா?மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கட்சியினுள் என்ன நடக்கிறது?

மேற்கு வங்க அரசியல் என்பது வெறும் தேர்தல்களைப் பற்றியது மட்டுமல்ல, நடைபெற்றுக் கொண்டிருக்கும் வர்க்கப் போராட்டத்தின் பிரதிபலிப்பும் கூட என்பதனை புரிந்து கொள்ளுங்கள்.

மேற்கு வங்கத்தில் இன்றும் வர்க்கப் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறதா?

நிச்சயமாக, இன்றும் கூட நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நாங்கள் மிக மோசமானதொரு நிலையில் இருக்கும் மேற்கு வங்கத்தின் வடபகுதிக்குச் சென்றுவிட்டு இப்போதுதான் நான் திரும்பியுள்ளேன்.திரிணாமுல் காங்கிரசின் வளர்ச்சிக்கான உண்மையான காரணம் என்ன? நாங்கள் நடத்திய வர்க்கப் போராட்டம் நேர்மாறாக மாறியிருப்பதே இது. பல நூறாண்டுகளாக சட்டவிரோதமாக நிலத்தை வைத்துக் கொண்டிருந்த குடும்பங்கள் எங்களது ஆட்சிக் காலத்தில் நாங்கள் செயல்படுத்திய நிலச்சீர்திருத்தம் காரணமாக, அவற்றை இழக்க நேர்ந்தது. எதிர்த்தாக்குதல் தொடுப்பதற்கான சந்தர்ப்பத்தை எதிர்நோக்கி அவர்கள் காத்திருந்தார்கள்.அத்தகைய சந்தர்ப்பமும் அவர்களுக்குக் கிடைத்தது. இடதுசாரிகள் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் இடையிலான போராட்டம் என்பது, நிலத்தை யாருக்கு நாங்கள் பிரித்துக் கொடுத்தோமோ அவர்களுக்கும், யாரிடமிருந்து நிலத்தை கையகப்படுத்தினோமோ அவர்களுக்கும் இடையேயான போராட்டமாகும். பிரித்துக் கொடுக்கப்பட்ட அந்த நிலங்கள் எல்லாம் தற்போது திரிணாமுல் காங்கிரஸ் அரசின் கீழ், பினாமி பேரங்களின் கீழ் அந்த நிலவுடைமைதாரர்களுக்கே மாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

– நீங்கள் சொல்லுகின்ற விதத்தில் அதனை எளிதாக நம்பிவிட கடினமாக உள்ளது.உங்களது தொகுதிகளை மம்தா பானர்ஜி கைப்பற்றி வருகிறார் என்பது உண்மையாகும்.உங்களது பெரும்பாலான இடங்களை அவர் கைப்பற்றி வருகிறார்.சொல்லப்போனால், ஏழை மக்களின் தலைவராக நீங்கள் எவ்வாறு பார்க்கப்பட்டு வந்தீர்களோ, அதைப் போன்ற தலைவராக இன்றைக்கு மம்தா பார்க்கப்படுகிறார்.தேசிய அளவில், இத்தகைய மதிப்பிற்கான போராட்டத்தில் நரேந்திர மோடி வெற்றி பெற்றுள்ளார்.ஏழை மக்களின் தலைவராக அவர் உள்ளார்.இடதுசாரிகள் அவ்வாறு இல்லை … ‘ஏழை மக்களின்’, உழைப்பாளி மக்களின் கட்சியாக நீங்கள் இல்லை.

(உரக்கச் சிரித்து விட்டு) ஆம். நீங்கள் சொல்வது உண்மைதான். கோடீஸ்வரரும், பல விமானங்களுக்குச் சொந்தக்காரரும், நியூயார்க் நகரின் 5ஆவது அவென்யூவில் உள்ள ஏதேனும் உயரமான வீடுகளில் அமர்ந்திருக்கின்ற டொனால்ட் டிரம்ப்தான் அமெரிக்க உழைப்பாளி மக்களின் பாதுகாவலனாக இருக்கிறார்.

– ஆனால், அவர் அம்மக்களின் வாக்குகளைப் பெற்றுள்ளாரே, அதனை ஏளனம் செய்யாதீர்கள்.

இல்லை, இல்லை, நான் ஏளனம் எதுவும் செய்திடவே இல்லை, நிகழ்ச்சிப் போக்கை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள். ‘‘பிரெக்சிட்’’ நடவடிக்கைக்கு பிரிட்டனின் உழைப்பாளி மக்களின் ஆதரவு உண்மையில் அந்நாட்டு வலதுசாரி சக்திகளுக்குக் கிடைத்தது. இடதுசாரிகள் தாங்கள் முன்வைக்கும் காரணங்களுக்காக பிரெக்சிட் நடவடிக்கைக்கு தங்களது ஆதரவை தெரிவித்தனர்.ஆனால், அங்குள்ள வலதுசாரிகளுக்கு உழைப்பாளி மக்களின் ஆதரவு கிடைத்திருக்கிறது என்பது உண்மையே.இத்தகைய போக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஒரு மார்க்சியவாதியாக, இது எனக்கு மிகுந்த கவலையை அளிப்பதாக உள்ளது.

ஆனால், இவ்வாறு ஏன் நடைபெறுகிறது?

ஏனெனில், இடதுசாரிகள் அந்த இடங்களிலிருந்து வெளியேறிக் கொண்டிருக்கின்றனர். உழைப்பாளி மக்களிடையே அதிருப்தி காணப்படுகிறது. ஆனால், நாம் மீண்டும் அடிப்படைக்குச் சென்றிட வேண்டும். தொழிலாளர்களை அணி திரட்டத் துவங்கி, போராட்ட இயக்கங்களுக்கு அவர்களை ஊக்குவித்திட வேண்டும். உயர்மட்ட அளவில் மேற்கொள்ளப்படும் சமாளிப்பு நடவடிக்கைகள் எவ்விதத்திலும் பயனளிக்கப் போவதில்லை.மீண்டும் நாம் மக்களிடையே செல்ல வேண்டும்.

– உங்களுக்குத் தடையாக இருப்பது எது? எல்பிஜி சிலிண்டரின் விலை ஒரு முறை 86 ரூபாய் அதிகரித்தது, இடதுசாரிகளால் எந்த எதிர்ப்பையும் உருவாக்கிட இயலவில்லை. ஏழை மக்களின் தலைவராக மோடியே இருந்து வருகிறார்.

நாங்கள் மாணவர்களாக இருந்த காலத்தில், டிராம் கட்டணம் ஒரு பைசா அதிகரிக்கப்பட்டபோது கொல்கத்தாவில் மோசமானதொரு நிலைமை ஏற்பட்டது. மேற்கு வங்கத்தில் உள்ள ஒரு சில குறிப்பிட்ட காரணங்களைத் தவிர வேறு எதுவும் எங்களை தடுத்திடுவதில்லை. கிட்டத்தட்ட 35 ஆண்டுகள் நாங்கள் ஆட்சியதிகாரத்தில் இருந்தோம். அப்போது சில பிரச்சனைகளையும் உருவாக்கியிருந்தோம். எனவேதான், கொல்கத்தாவில் நாங்கள் பிளீனத்தை நடத்தினோம். மக்களிடையே வேலை செய்வது என்ற எங்களது அடிப்படையான கொள்கைகளை நாங்கள் பொருட்படுத்தாது இருக்கத் துவங்கியிருந்தோம். அங்குதான் இடைவெளியும் தோன்றியது. 35 ஆண்டுகள் அதிகாரத்தில் இருந்தது என்பது இடதுசாரி அரசியலின் கூர்மையை மழுங்கடித்தது. மக்களைத் திரட்டுவதை நாங்கள் கை விட்டோம். அரசின் மூலமாக மட்டுமே நாங்கள் செயல்பட்டோம். நாங்கள் சுயவிமர்சனமாக இதை ஒப்புக் கொண்டு, அந்தத் தவறை ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் அதன் பின்னர், 2009ஆம் ஆண்டிலிருந்து, திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் அவர்கள் பின்னுள்ள சக்திகளாலும் எங்கள் மீது பெருமளவிலான மூர்க்கத்தனமான தாக்குதல் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.

– மேற்குவங்கத்தில் ஆட்சியில் உங்களது கட்சி இருந்து வந்தபோது, எவ்வாறு திரிணாமுல் காங்கிரசால் தாக்குதலை கட்டவிழ்த்துவிட முடிந்தது?

அது எவ்வாறு நிகழ்ந்தது என்பதனை நான் குறிப்பிடுகிறேன். ஓர்ஒட்டு மொத்த தலைமுறை அல்லது அதற்கும் கூடுதலான காலத்தைச்சார்ந்த முன்னணி ஊழியர்கள், அவர்கள் வாயிலாக செய்துமுடிக்கப்பட வேண்டிய பணிகளுக்கு நிர்வாகத்தையும், அரசையும் சார்ந்திருந்தது என்பது, அவர்களை மழுங்கடிக்கச் செய்துவிட்டது. மேலும், மேற்குவங்க மாநில வாக்காளர்களில் கிட்டத்தட்ட 70 சதவீதத்தினர் ஜோதிபாசு முதலமைச்சரான பின்னர் பிறந்தவர்கள் ஆவர். அவர்கள் ஒரே ஒரு அரசை மட்டுமே பார்த்துள்ளனர். அவர்கள் பார்த்த ஜனநாயகம் என்பது இடதுசாரிகளின் ஜனநாயகம் மட்டுமே. மாற்றத்திற்கான பேராவல் அவர்களிடையே இருந்தது. இது மட்டுமின்றி, இடதுசாரி அரசின் பிந்தைய கட்டங்களில் விரும்பத்தகாத பல சக்திகளும் அதில் இடம் பெற்றிருந்தன என்பதும் மிக முக்கியமானதாகும்.

அது குறித்து நாங்கள் அறிந்திருந்தோம். ஆனால், அவர்களை களைவதற்குள் பாதிப்புகள் ஏற்படுத்தப்பட்டுவிட்டன. நாங்கள் ஆட்சியதிகாரத்தில் இருந்த போது கடைசி சில ஆண்டுகளில், கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் வங்கத்தைச் சார்ந்தவர்களாக இருந்தனர். எனவே, ஏராளமான தவறுகள் நடந்து கொண்டிருந்தன. அவற்றை சரி செய்வதற்கான முயற்சிகளை நாங்கள் மேற்கொண்டிருந்தோம். இவர்கள் எல்லாம் நாங்கள் ஆளும் கட்சியாக இருக்கிறோம் என்பதால் கட்சிக்குள் வந்தவர்களேயன்றி, தத்துவார்த்த ரீதியாக இல்லை. எனவே, அcவர்களை வெளியேற்றிட வேண்டியிருந்தது. ஆனால், இது போன்றவை அனைத்தும் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டிருந்த கடுந்தாக்குதலுக்கு ஆளாகக் கூடியவர்களாக எங்களை ஆக்கியிருந்தன. எதிர்தாக்குதலை நாங்கள் ஏன் நடத்திடவில்லை என்ற கேள்வியே எப்போதும் எங்களிடம் கேட்கப்படுகிறது. 35 ஆண்டு காலம் ஆட்சியதிகாரத்தில் இருந்த காரணத்தால் எங்களது எதிர்ப்பாற்றல் மழுங்கிப் போயிருந்தது. அரசினுள் ஏற்பட்ட முதலாளித்துவ தாக்கத்தால் ஏற்பட்ட விளைவாகும் இது. மேலும், இது குறித்து நாங்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டியிருந்தது.

– அடிமட்ட அளவில் உங்களுக்கு இருந்த இடத்தை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கைப்பற்றி வருவதும், உங்களுக்கோ அல்லது காங்கிரஸ் கட்சிக்கோ வாக்களித்து வந்த வேறு சில பகுதியினர் தற்போது பாஜகவை நோக்கி போய்க் கொண்டிருப்பதுமே மேற்குவங்கத்தில் நடைபெறுகிறது என்பதனை நீங்கள் நம்பிடவில்லையா? இதனையே சமீபத்திய தேர்தல் முடிவுகளின் போக்குகள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு சொல்வது ஓர் மேலோட்டமான ஆய்வாகும். நடைபெற்று வருவது என்பது அதைவிட மிகுந்த சிக்கலான ஒன்றாகும். வங்காளிகள் மிகுந்த அரசியல் ஞானம் கொண்டவர்கள் ஆவர். இடதுசாரிகளுக்கு வாக்களித்துக் கொண்டிருந்தவர்கள் திடீரென மம்தாவை அல்லது பாஜகவை நோக்கி சென்றுவிட்டார்கள் என்பதல்ல இது. 2005-06 முதல் மேற்குவங்கத்தில் நடைபெற்று வருவது என்பது மக்களை மதரீதியாக பிரித்திடுவது என்பதேயாகும். மேற்குவங்கத்தில் தன் காலைப் பதித்திட பாஜக முயல்கிறது என்றால், அதற்குக் காரணம் அரசியலை மதவாத அரசியலாக திரிணாமுல் காங்கிரஸ் ஆக்கியதே ஆகும். மம்தாவிற்கும், பாஜகவிற்கும் இடையே, ஒன்றோடு ஒன்று போட்டி போடும் மதவாத அரசியலில் மேற்குவங்கம் சிக்கியுள்ளது. இது அபாயகரமானதாகும். இஸ்லாமிய அடிப்படைவாதத்தை மம்தா ஊட்டி வளர்க்கின்றார். அதற்கு எதிரான இந்துக்களின் உணர்வை பாஜக தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறது. இவை எதுவும் நடைபெறுவதற்கான எந்தவொரு வாய்ப்பையும் நாங்கள் தரவில்லை. பாஜக நுழைந்திடுவதற்கான வாய்ப்பை மம்தா ஏற்படுத்தித் தந்தார். இஸ்லாமிய அடிப்படை வாதத்தை மம்தா விசிறி விடுகிறார். இந்து மதவெறியை பரவச் செய்திட பாஜக இதனைப் பயன்படுத்திக் கொள்கிறது. இதுகுறித்து நான் மிகுந்த கவலை கொள்கிறேன். எங்களது கட்சியைப் பற்றியோ அல்லது அதன் எதிர்காலம் பற்றியோ விடுங்கள், ஓர் இந்தியனாக இத்தகைய போக்கு எனக்கு கவலையை அளிக்கிறது. இத்தகைய போக்கு எல்லா இடங்களிலும் அறிவிக்கப்பட்டு வருகின்றது. மேலும், இது நமது ஒட்டுமொத்த அரசியல் சாசன அமைப்பையும், இந்தியா என்ற கருத்துரு வாக்கத்தையுமே வலுவிலக்கச் செய்கிற அச்சுறுத்தலைத் தொடுக்கிறது. இந்திய நாடாக மிக அபாயகரமானதொரு காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். எதிர்வரும் இரண்டாண்டுகளில் இவையெல்லாம் நிகழ்ந்திடும்…

– என்ன நடைபெறும்?

முதலாவதாக, இந்திய ஜனாதிபதிக்கான தேர்தலை நீங்கள் எதிர்கொள்வீர்கள். அது ஓர் மிக முக்கியமான திருப்பு முனையாகும். ஜனாதிபதி மாளிகைக்கு நமது அரசியல் சாசனத்தை பாதுகாக்கிற மதச்சார்பற்ற ஒருவரையோ அல்லது மதவாதியான ஒருவரையோ தான் தேர்ந்தெடுத்திடவேண்டும். மதச்சார்பற்ற மேற்பார்வை அல்லது மதரீதியான மேற்பார்வை என வாய்ப்பு தெளிவாக இருக்கிறது.

– உங்களிடத்தில் உத்தி ஏதேனும் கைவசம் இருக்கிறதா?

நாங்கள் முயன்று வருகிறோம். அதற்கான முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. யாருடைய வேட்பாளர் இவர் என்பதாக இப்பிரச்சனை பார்க்கப்படக்கூடாது. அதையும் தாண்டிய மிகப்பெரிய பிரச்சனையாகும் இது. மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசான இந்தியாவை நாம் பாதுகாக்கப் போகிறோமா அல்லது பலியிடப் போகிறோமா?

எனவே, ஒவ்வொருவருக்கும் இதில் பொறுப்பு இருக்கிறது. வெறும் அரசியல் ரீதியான பொறுப்பு மட்டுமல்ல. அரசியல் கட்சிகள் எங்கே நிற்கிறார்கள் என்பது குறித்து பரிசோதிக்கப்படும் போராட்டத்திற்கான கோடுகளை இந்த தேர்தல் ஏற்படுத்திடும்.

– உங்களது உட்கட்சி செயல்பாடு குறித்த பிரத்யேகமான இரண்டு கேள்விகளை இறுதியாகக் கேட்கிறோம். காங்கிரஸ் மற்றும் பாஜகவிடமிருந்து சம தூரத்தில் விலகி இருப்பது என்ற நிலைபாட்டை கடைப்பிடிப்பதில் எப்போதும் வெளிப்படையாக எழும் கருத்து வேறுபாடுகளை நீங்கள் களைந்துவிட்டீர்களா? அத்தகைய நிலைபாட்டை அதிகாரப்பூர்வமாக மாற்றிடுவதற்கான காலம்வந்துவிட்டதா? மாநிலங்களவை உறுப்பினராக மூன்றாவது முறையாக போட்டியிடுவதில் உங்களது நிலைபாடு என்ன?

மேற்குவங்கசூழலில், காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து செயல்படுவது என்பது எங்களது கொள்கையுடன் ஒத்துப் போகாது; அதுதவறு என்பதனை நாங்கள் தெளிவுபடுத்திவிட்டோம். அதேநேரத்தில், மதவாதிகள் அபாயகரமாக வளர்ச்சி பெற்று வருகின்றனர். எனவே, அவர்களுக்கு எதிராகப் பரந்த மேடை ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்றும் நாங்கள் குறிப்பிடுகிறோம். அனைத்து மதச்சார்பற்ற சக்திகளும் – அரசியல் கட்சிகளை மட்டும் நான் குறிப்பிடவில்லை – கூடிய விரைவில் பரந்த மேடையில் இணைவதை நீங்கள் விரைவில் காண்பீர்கள். இந்தியாவில் இன்று நிலவும் சூழலில் அது அவசியம் என நான் நம்புகிறேன். கடந்த கால அளவீடுகளைச் சார்ந்ததாக மக்கள் சிந்தனையின் வரையறைகள் இனி மேலும் இருந்திட இயலாது. குணாம்ச ரீதியாக சூழல் தற்போது மாறுபட்ட ஒன்றாக உள்ளது.

– குணாம்ச ரீதியாக எத்தகைய மாற்றம் என்பதனை நீங்கள் குறிப்பாக தெரிவித்திட இயலுமா? என்ன நடைபெற வேண்டுமென நீங்கள் விரும்புகிறீர்கள்?

இன்று நம்முன் உள்ள சவால் மிகப்பெரியது. இந்தியா எனும் கருத்துரு வாக்கத்தின் மீது விடப்படும் சவால் இது. இது முன்னெப்போதையும் விட பெரியதாக உள்ளது. நமது அரசியல் சாசனம் கூட தற்போதைய நிலையிலேயே தொடர்ந்திடுமா? இச்சவால் அரசியல் கட்சிகள் மட்டுமே எதிர்த்திட வேண்டிய ஒன்றல்ல, எல்லா விதமான சக்திகளும் இதில் ஒன்றிணைந்திட வேண்டும். அரசியல் கட்சிகள் மற்றும் அவற்றின் கூட்டணியில் உள்ள கட்சிகளைப் பற்றி மட்டும் சிந்தித்திடாதீர்கள். இது மிகவும் விரிவடைந்த கூட்டணியாக அமைந்திட வேண்டும். இத்தகையதொரு கூட்டணி அமைந்திடும் என நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம்.

– நிறைவுபெறவுள்ள உங்களது மாநிலங்களவை உறுப்பினர் காலம் குறித்து…

மாநிலங்களவை உறுப்பினராக ஒருவர் இரண்டுமுறை இருக்கலாம் என்ற தெளிவான காலவரையறை எங்களது கட்சியில் உள்ளது. கட்சியின் பொதுச் செயலாளராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, நாடாளுமன்ற உறுப்பினராக நீடித்தேன். ஏனெனில், அப்போது நான் ராஜினாமா செய்திருந்தால் அந்த காலியிடம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்குச் சென்றிருக்கும். ஆனால், தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக நான் இருக்கும் காலம் நிறைவடைய உள்ளது. எங்களது கட்சியின் வரையறையின்படி நான் மீண்டும் மாநிலங்களவை உறுப்பினருக்குப் போட்டியிடப் போவதில்லை என்பதில் தெளிவாக இருக்கிறேன்.

(நன்றி – ‘தி டெலிகிராப்’ நாளிதழ்) 
தமிழில் தீக்கதிர் – எம்.கிரிஜா

Check Also

சாதிய அணி சேர்க்கைக்கு இடமளிக்க வேண்டாம்!

வன்னியர்கள் மீது அவதூறுகள் பரப்பப்படும் போது அது தொடர்பான உண்மை நிலையை சம்பந்தப்பட்டவர்களுக்கு உணர்த்துவதற்காகவும், தீய பிற்போக்கு சக்திகளிடமிருந்து வன்னியர் ...