மக்களுக்கு நிலம் வேண்டும் என்பதே மார்க்சிஸ்ட் கட்சியின் நிலை. திமுக தலைவருக்கு பதில்.

தீக்கதிர் நாளேட்டில் திமுக மற்றும் அதிமுகவினர் நில அபகரிப்பு குறித்து நான்  எழுதிய கட்டுரைக்கு விளக்கமளித்து திமுக தலைவர் கருணாநிதி விடுத்துள்ள அறிக்கைக்கு பதிலளிக்க வேண்டியுள்ளது. திமுகவை மட்டுமல்ல எந்தக் கட்சியையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விருப்பு, வெறுப்போடு அணுகுவது கிடையாது; கொள்கை வழி நின்றே மதிப்பீடு செய்வோம், விமர்சிப்போம்.

இந்த அடிப்படையில் தான் தீக்கதிரில் வெளியான கட்டுரையும் அமைந்திருந்தது. மார்க்சிட் கம்யூனிட் கட்சி எடுக்கும் முடிவுகளின் அடிப்படையிலேயே கட்சி மாநிலச் செயலாளரின் அறிக்கைகள், பேட்டிகள் அமைந்திருக்கும். ஆனால், இதற்கு தனிப்பட்ட முறையில் நோக்கம் கற்பிப்பது என்பது திமுக தலைமையின் நீண்டகால வழக்கமாக உள்ளது.

தமிழகத்தில் சமீப ஆண்டு காலமாக நில அபகரிப்பு அதிகரித்து வருவதும், இதனால் ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்படுவதோடு பொதுச் சொத்தும் கொள்ளை போகிறது என்பதை சுட்டிக்காட்டி அரசியல் வித்தியாசமில்லாமல் நில அபகரிப்பு செய்வோர் மீது மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதே மார்க்சிட் கம்யூனிட் கட்சியின் கோரிக்கை ஆகும். திமுக தமிழகத்தில் எதிர்கட்சியாக இருந்தாலும் மத்தியில் ஆளும் கட்சியாக உள்ளது. விலை உயர்வுக்குக் காரணமான பல கொள்கை முடிவுகளை மத்திய அரசே எடுக்கிறது. இதில், திமுகவுக்கும் பங்கு உண்டு.

திமுக நடத்திய மறியல் போராட்டத்தில் விலைவாசி உயர்வுக்கு எதிரான கோரிக்கைகளும் வைக்கப்பட்டன என்பதை வாதத்திற்காக ஏற்றுக் கொண்டாலும் உர விலை உயர்வு, பெட்ரோல் விலை உயர்வு இவைகளை திமுக தலைமை கண்டு கொள்ளாதது ஏன்? சேலம் அங்கம்மாள் காலனி பிரச்சனை குறித்து திமுக ஆட்சியின்போது பள்ளப்பட்டி காவல் நிலைய ஆய்வாளரும், சேலம் வருவாய் கோட்டாட்சியரும் நடவடிக்கை எடுத்ததாக திமுக தலைவர் தனது அறிக்கையில் கூறுகிறார்.

அவர்களது சொந்த இடத்திலிருந்து விரட்டப்பட்ட குடும்பங்களுக்கு அந்த இடத்தை 14 நாட்களுக்குள் திரும்ப ஒப்படைக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் பள்ளப்பட்டி காவல் நிலைய ஆய்வாளரும், சேலம் வருவாய் கோட்டாட்சியரும் விசாரணை என்ற பெயரில் மோசடியாக அந்த இடம் கவுசிக பூபதிக்கு சொந்தமானது என்று அறிவித்து உயர்நீதிமன்றத் தீர்ப்பை அமுலாக்கிட மறுத்தனர். 2008ஆம் ஆண்டு பலவந்தமாக அப்புறப்படுத்தப்பட்ட 25 குடும்பங்களும் திமுக ஆட்சி நீடிக்கின்ற வரையில் மீண்டும் குடியமர்த்தப்படவில்லை என்பதற்கு திமுக தலைவர் விளக்கம் ஏதும் அளிக்கவில்லை. தூத்துக்குடி மாவட்டம், தெய்வச் செயல்புரத்தில் 915 ஏக்கர் நில அபகரிப்பு செய்ததில் திமுகவைச் சார்ந்தவரும், அதிமுகவைச் சார்ந்தவரும் இணைந்து செயல்பட்டுள்ளனர். மேலும் கோவில்பட்டி ஹாக்கி மைதானத்தை மோசடிக் கிரையம் பெற்றவர்கள் முன்பு திமுகவில் இருந்ததும், ஆட்சி மாறிய பிறகு அவர்கள் அதிமுகவில் சேர்ந்துவிட்டனர் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளேன். திமுக ஆட்சியின் போதும், இன்றைய அதிமுக ஆட்சியிலும் மணல் கொள்ளை, நிலமோசடி நடந்து வருவதை தீக்கதிர் கட்டுரையில் கீழ்க்கண்டவாறு சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

மணல் கடத்தல் என்பது முந்தைய திமுக ஆட்சியாக இருந்தாலும் சரி, இன்றைய அதிமுக ஆட்சியாக இருந்தாலும் சரி தங்குதடையின்றி நடைபெற்று வருகிறது. மணல்கடத்தலை தடுத்தவர்கள் சிலர் (அதிகாரிகள் உள்பட) படுகொலை செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில்  திமுக, அதிமுக  ஆகிய இரண்டு கட்சியினர் மீதும் நிலப்பறிப்பு – ஆக்கிரமிப்பு புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இப்பின்னணியில் நிலமோசடியை பொறுத்தவரை திமுகவினர் மீது தொடரப்படும் வழக்குகள் போல அந்தக் குற்றச்சாட்டுக்கு ஆளாகும் அதிமுகவினர் மீதும் தொடுக்கப்படுமா? என்பதுதான் தமிழக மக்கள் எழுப்பும் கேள்வியாகும். எனவே கட்சி வித்தியாசமில்லாமல் நில அபகரிப்பு செய்வோர் மீது மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிட் கட்சி வலியுறுத்தி வருகிறது.

திமுக தலைவர் தனது அறிக்கையில் நடந்த மணல் கொள்ளையைப் பற்றியும், அது இப்போது தொடருவது பற்றியும் ஏதும் கூறவில்லை. சிறுதாவூர் நிலப் பிரச்சனையில் நீதிபதி சிவசுப்பிரமணியம் அவர்கள் 28.2.2010 அன்றைய திமுக அரசிடம் தனது விசாரணை அறிக்கையை அளித்தார். இதற்குப் பிறகு திமுக அரசு 1 1/2 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தது. நீதிபதி அளித்த விசாரணைக் கமிஷன் அறிக்கை மீது திமுக அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை திமுக தலைவர் தான் விளக்க வேண்டும். தமிழகத்தில் 25 லட்சத்திற்கும் மேற்பட்ட ஏழைக் குடும்பங்கள் மனைப்பட்டா கேட்டு பல ஆண்டுகளாக போராடி வருகிற போது ஏழை எளிய மக்களின் நிலத்தையும், அரசுப் புறம்போக்கு நிலத்தையும் நில மோசடி மற்றும் அபகரிப்பு செய்வதையும் சுட்டிக்காட்டுகிற போது ஏதோ தனது கட்சி மீது வெறுப்போடு விமர்சனத்தைச் சொல்லுவதாக பிரச்சனையை திசை திருப்புவதை எங்கள் கட்சி ஊழியர்களும், தமிழக மக்களும் சரியாகவே புரிந்து கொள்வார்கள்.

மார்க்சிஸ்ட் கம்யூனிட் கட்சியைப் பொறுத்தவரை திமுக மீது தனிப்பட்ட வெறுப்பு எதுவும் இல்லை. மாறாக, தமிழக மக்கள் லட்சக்கணக்கானோர் குடியிருக்க நிலம் இல்லாமல் வானமே கூரையாய் வாழ்ந்து கொண்டிருக்கும்போது திமுக, அதிமுக ஆட்சிகள் மாறி மாறி வந்தாலும் லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மோசடியாக சுருட்டப்படுவது தடுக்கப்பட வேண்டுமென்பதே மார்க்சிட் கட்சியின் நோக்கம்.

Check Also

நிலைகுலைந்து நிற்கும் இந்தியப் பொருளாதாரம் மீட்க வழி தெரியாமல் முரட்டுத்தனமாக மக்களைத் தாக்கும் மோடி அரசு!

கொரோனா தாக்கத்திற்கு முன்பும், பின்புமான நிலைமைகளின் காரணமாக இந்தியப் பொருளாதாரம் நிலைகுலைந்து நிற்கிறது என்றும், அதிலிருந்து நாட்டை மீட்க வழி ...

Leave a Reply