மக்களுக்கு பாதிப்பு இல்லாமல் குளச்சல் துறைமுக திட்டத்தை அமைக்க மத்திய அரசு முன் வர வேண்டும்!!மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கன்னியாகுமரி மாவட்டச் செயற்குழு தீர்மானம்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கன்னியாகுமரி மாவட்டச் செயற்குழுக் கூட்டம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் என்.உஷாபாசி தலைமையில் பார்வதிபுரம் சிபிஐ(எம்) அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:

கன்னியாகுமரி மாவட்டத்தில் வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் குளச்சல் துறைமுகம் அமைக்க வேண்டுமென்ற கோரிக்கை நீண்டகாலமாக எழுப்பட்டு வருகிறது. கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கு இயற்கை வழங்கிய பரிசு குளச்சல் கடல் பகுதி. மிகவும் ஆழமான பகுதியாகும். இங்கு இயற்கையான துறைமுகம் அமைந்து உள்ளது. பிரிட்டீஷ்காரர்கள் காலத்திலேயே குளச்சல் துறைமுகம் செயல்பட்டு வந்தது. குளச்சல் துறைமுகம் வழியாக மாவட்டத்தில் உற்பத்தியாகும் கயறு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. தூத்துக்குடி துறைமுகம் விரிவாக்கம் செய்வதற்கு முன்பு வரை இந்திய அரிய மணலாலையில் இருந்து அருமணல் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட துறைமுகம் குளச்சல் துறைமுகம். இதன் மூலம் ஆயிரக்கணக்கான கரையோரப் பகுதி மக்களுக்கு வேலையும் கிடைத்து வந்தது. இயற்கையாகவே அமைந்துள்ள குளச்சல் துறைமுகத்தை சீரமைத்து வர்த்தக துறைமுகமாக மாற்ற வேண்டும் என்பதுதான் மாவட்ட மக்களின் கோரிக்கை. இதுவரையிலான அரசுகளும் இத்தகைய அறிவிப்பையே பலதடவை செய்துள்ளன. எனவேதான் பல காலகட்டங்களில் குளச்சல் துறைமுகத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்ற முறையில் ஆய்வுகளும் நடந்துள்ளன. சுற்று வட்டாரப் பகுதி மக்களுக்கு பெரும் பாதிப்பு இல்லாமல் இத்திட்டத்தை நிறைவேற்ற முடியும் என்பதும் தெளிவாக்கப்பட்டது.

இந்நிலையில் திடீரென பிஜேபி அரசும் அமைச்சரும் ஏற்கனவே உள்ள குளச்சல் துறைமுகத்தை புறம் தள்ளிவிட்டு இதுவரை பேச்சளவில் கூட இல்லாத இனயம் துறைமுகம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை துறைமுகம் பற்றிய விரிவான திட்ட அறிக்கை வணிகம் மற்றும் தொழில்நுட்ப ரீதியான அறிக்கைகள் வெளியிடப்படவில்லை. தமிழ்நாடு மீன்பிடி தொழிலாளர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் குறைதீர்க்கும் தினக் கூட்டத்தில் எழுப்பிய கேள்விக்கு இதுவரை கன்னியாகுமரி மாவட்டத்தில் துறைமுகம் அமைப்பது பற்றி எந்த அறிவிப்பும் மாவட்ட நிர்வாகத்திற்கு வரவில்லையென தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால்அமைச்சரோ இனயம் துறைமுகம் வந்துவிட்டதாகவும் திட்டஅறிக்கை தயாரிக்க நிதி ஒதுக்கபட்டுவிட்டதாகவும் கூறுகிறார். துறைமுகச் சாலைகள் அமைக்க பல பகுதிகளில் கல் நட்டு மக்கள் மத்தியில் பீதியை உருவாக்குகிறார். ஏற்கனவே குளச்சல் துறைமுகத்திற்கு சாலை அமைக்க கல் போட்டவை இப்போதும் ஆங்காங்கே காணப்படுகிறது.

இந்நிலையில் அமைச்சரின் இனயம் துறைமுக அறிவிப்பில் ஏதோ உள்நோக்கம் உள்ளது போல் கருத வேண்டியுள்ளது. “போகாத ஊருக்கு வழிகாட்டுவது போல்” ஏற்கனவே செயலில் இருந்த இயற்கை துறைமுகத்தை கைவிட்டு விட்டு பெரும் சேதங்களை உருவாக்கும் பகுதியான இனயம் துறைமுகம் என அறிவிப்பது மக்கள் மத்தியில் கோபம் வரும் போராட்டங்கள் வரும். எனவே எனது பதவி காலத்தில் துறைமுகம் கொண்டு வர முயற்சித்தேன் ஆனால் பலரின் தூண்டுதல் போராட்டம் காரணமாக தடைபட்டு விட்டது என மோசமான அரசியல் நாடகம் அரங்கேற்றுவதற்கான முயற்சியோ என மக்கள் கருதுகின்றனர். எனவே அமைச்சர் துறைமுகம் சம்மந்தமாக வெளிப்படை தன்மையாக அறிவிக்க வேண்டும். விரிவான திட்ட அறிக்கை வெளியிட வேண்டும். பொதுமக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் அரசியல் கட்சிகள் கூட்டத்தை மாவட்ட ஆட்சியர் கூட்டி கருத்துக் கேட்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக் கேட்டுக் கொள்வதோடு, ஏற்கனவே உள்ள இயற்கை துறைமுகமான குளச்சலில் வர்த்தக துறைமுகம் அமைக்க மத்திய அரசு முன் வர வேண்டுமனக் கேட்டுக் கொள்கிறது.

(என்.முருகேசன்)
மாவட்டச் செயலாளர்.

Check Also

கொரோனா பரவலை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தி தலைமைச் செயலாளருக்கு – கே.பாலகிருஷ்ணன் கடிதம்

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை தடுத்திட போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும், அனைத்து வயதினருக்கும் தடுப்பூசி செலுத்திட ...