மக்கள் கோரிக்கைகள் மீது மாநிலந் தழுவிய பிரச்சார இயக்கம்:இடதுசாரிக் கட்சிகள் கூட்டறிக்கை

சிபிஐ (எம்), சிபிஐ, சிபிஐ (எம்-எல்) ஆகிய கட்சிகளின் மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டம் இன்று (9.11.2014) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு அலுவலகத்தில் நடைபெற்றது. சிபிஐ (எம்) சார்பில் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் டி.கே. ரங்கராஜன், சிபிஐ சார்பில் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன், மாநிலக்குழு உறுப்பினர் ஜி.ஆர். ரவீந்தரநாத், சிபிஐ (எம்-எல்) சார்பில் மாநிலச் செயலாளர் எஸ். பாலசுந்தரம், மாநிலக்குழு உறுப்பினர் ஏ.எஸ். குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். மூன்று கட்சிகளும்  இணைந்து வெளியிடும் கூட்டறிக்கை.

மத்திய அரசினுடைய வகுப்புவாத நடவடிக்கைகளை எதிர்த்தும், நவீன தாராளமய பொருளாதாரக் கொள்கையை எதிர்த்தும் மற்றும் சமூக பிரச்சனைகள் மீதும் நாடு தழுவிய அளவில் பிரச்சார இயக்கம் நடத்துவதென 1.11.2014 அன்று புதுதில்லியில் கூடிய இடதுசாரிக் கட்சிகள் அறைகூவல் விடுத்தன. அகில இந்திய அளவிலான இயக்கத்தின் ஒரு பகுதியாக தமிழகத்தில் வருகிற 2014, டிசம்பர் 8 முதல் 14 வரையில் பிரச்சார இயக்கம் நடத்துவதென முடிவெடுக்கப்பட்டுள்ளது.

மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து நவீன தாராளமய பொருளாதாரக் கொள்கைகளை அமலாக்குவதோடு, ஆர்.எஸ்.எஸ். தலைமையிலான சங்பரிவார அமைப்புகள் மதவெறியூட்டி மதமோதலை உருவாக்கக் கூடிய வகுப்புவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.

நாடு முழுவதும் அமலாக்கப்பட்டு வரும் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை சீர்குலைக்கக் கூடிய முடிவை பாஜக அரசு எடுத்துள்ளது. அடுத்த நிதியாண்டிலிருந்து நாட்டிலுள்ள மொத்த கிராமப்புற மாவட்டங்கள் 645ல் 200 மாவட்டங்களில் மட்டுமே அமுலாகும் என அறிவித்துள்ளது. குறிப்பாக தமிழகத்தில் உள்ள 384 ஒன்றியங்களில் 198 ஒன்றியங்கள் மட்டுமே இத்திட்டம் அமலாகும். மேலும் இத்திட்டத்திற்கான நிதி குறைக்கப்படுவதோடு பல வகைகளில் இத்திட்டத்தை மத்திய பாஜக அரசு சீர்குலைத்து வருகிறது.

மத்திய அரசினுடைய பொருளாதாரக் கொள்கையினால் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் மாநில அரசினுடைய பால்விலை உயர்வு, உத்தேச மின் கட்டண உயர்வு மேலும் விலைகளை உயர்த்திடும் அபாயம் உள்ளது.

மக்கள் நலத் திட்டங்களுக்கான நிதியைக் குறைப்பதோடு பெட்ரோல் – டீசல் மீதான விலைக்கட்டுப்பாட்டை மத்திய அரசு நீக்கியுள்ளது. பன்னாட்டு, உள்நாட்டு கம்பெனிகளுக்கு சலுகையளிக்கக் கூடிய மத்திய அரசு தொழிலாளர் நலச்சட்டங்களைத் திருத்தி தொழிலாளர்களின் உரிமைகளை பறித்திட முனைந்துள்ளது. ஆலை மூடல், ஆட்குறைப்பினால் தொழிலாளர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

மத்தியில் பாஜக அதிகாரத்திற்கு வந்த பிறகு ஆர்.எஸ்.எஸ். மற்றும் இந்துத்துவா கருத்தியலை கல்வி, ஊடகம் மற்றும் பண்பாட்டு நிறுவனங்களில் திட்டமிட்டு புகுத்தி வருகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் மதக் கலவரங்களை உருவாக்கி வருகிறது. சிறுபான்மை மக்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருகின்றன.

பெண்கள் மீதான பாலின ஒடுக்குமுறைகளும், தலித் மக்கள் மீதான வன்கொடுமை சாதிய ஒடுக்குமுறைகளும் அதிகரித்து வருகின்றன.  நவீன தாராளமய பொருளாதாரக் கொள்கை அமலாக்கம் துவங்கிய பிறகு அரசியல்வாதிகள், பெருமுதலாளிகள், அதிகாரிகள் இணைந்து நடத்தும் ஊழல்கள் அதிகரித்து வருகின்றன. இயற்கை வளம் கொள்ளை போகிறது.

மேற்கண்ட பிரச்சனைகள் மீது தமிழகம் முழுவதும் இடதுசாரிக் கட்சிகளின் சார்பில் டிசம்பர் 8-14 தேதிகளில் தெருமுனைக் கூட்டம், அரங்கக் கூட்டம், பொதுக்கூட்டங்கள் போன்ற முறையில் ஒருவார காலம் பிரச்சார இயக்கம் நடத்துவதுதென முடிவெடுக்கப்பட்டுள்ளது.

மக்களின் அரசியல், சமூக, பொருளாதார கோரிக்கைகள் மீதும், ஊழலை எதிர்த்தும் இடதுசாரிக் கட்சிகள் நடத்தவுள்ள இயக்கத்திற்கு ஆதரவு தருமாறு அனைத்துப் பகுதி மக்களுக்கும் இடதுசாரிக் கட்சிகள் வேண்டுகோள் விடுக்கின்றன.

  • ஜி. ராமகிருஷ்ணன் (மாநிலச் செயலாளர், சிபிஐ (எம்))
  • தா. பாண்டியன் (மாநிலச் செயலாளர், சிபிஐ)
  • எஸ். பாலசுந்தரம் (மாநிலச் செயலாளர், சிபிஐ (எம்-எல்))

Check Also

கலவர நோக்கத்திற்காக நடத்தப்படும் பாஜகவின் ‘வேல் யாத்திரைக்கு’ தடை விதிக்க – சிபிஐ(எம்)வலியுறுத்தல்

தமிழகத்தில் ‘வேல் யாத்திரை’ என்கிற பெயரில் பாஜக கலவரத்திற்கு திட்டமிட்டிருக்கிறது. தங்கள் கலவர அரசியலை மறைத்து மக்களை ஏமாற்றவே ‘வேல் ...

Leave a Reply