மக்கள் சந்திப்பு இயக்கம் – பெருந்திரள் உண்ணாவிரதம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்

இருவரும் கூட்டாக பத்திரிகையாளர்களுக்கு அளித்திட்ட அறிக்கை:

மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத கொள்கைகளை எதிர்த்தும்

மாநில அஇஅதிமுக அரசின் மக்களைப் பாதிக்கும் செயல்பாடுகளை எதிர்த்தும்

மக்கள் சந்திப்பு இயக்கம் – பெருந்திரள் உண்ணாவிரதம்

  • நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு முந்தைய மன்மோகன் சிங் தலைமையிலான அரசு பின்பற்றிய அதே நவீன தாராளமயக் கொள்கைகளையே காங்கிரஸ் அரசை விட மிகத் தீவிரமாக பெருமுதலாளிகளுக்கு, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படுத்தி வருகிறது. ராணுவ பாதுகாப்பு கருவிகள் உற்பத்தியிலும், இன்சூரன்ஸ் துறையிலும் அந்நிய நேரடி முதலீட்டு வரம்பை 49 சதமாக உயர்த்துகிறது. ரயில்வே உள்கட்டமைப்பு மற்றும் மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் அந்நிய முதலீட்டை அனுமதிப்பது, பொது – தனியார் (PPP-Public Private Partnership) ஒத்துழைப்பு மூலம் தனியார் கொள்ளையை அனுமதிப்பது, 2013ல் நிறைவேற்றப்பட்ட நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தை தொழில் அதிபர்களுக்கு சாதகமாக திருத்தி நிலத்தை நம்பி வாழும் ஏழை கிராமப்புற மக்களை வஞ்சிப்பது, தொழிலாளர் நலச்சட்டங்களை திருத்தி தொழிலாளர்களை வஞ்சிப்பது போன்ற நடவடிக்கைகளை மத்திய பாஜக அரசு எடுத்து வருகிறது.
  • உலகச் சந்தையில் டீசல் விலை உயரும் போதெல்லாம் ரெயில்வே கட்டணம் உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கிராமப்புற வேலை உறுதி திட்டத்தை நீர்த்துப் போகச் செய்யவும், எரிபொருள்- உரம் – உணவுப் பொருட்களின் மானியத்தை வெட்டிச் சுருக்கவும் முனைகிறது. அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த மறுக்கிறது மத்திய பாஜக அரசு.
  • வகுப்புவாத மதவெறி நிகழ்ச்சி நிரலை செயல்படுத்துவதிலும் மோடி அரசு முனைப்பு காட்டுகிறது. கடந்த 2 1/2 மாதங்களில் 12-க்கும் மேற்பட்ட இடங்களில் வகுப்பு மோதல்கள் உத்தரபிரதேசம், குஜராத், கர்நாடகா, ஹரியானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் நடந்துள்ளன. புனேயில் மென்பொருள் பொறியாளர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். உத்தரபிரதேசத்தில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. பெண்கள் மீதான வன்முறைகளுக்கு மதவெறி சாயம் பூசப்படுகிறது. மத்திய அரசின் பள்ளிகளில் சமஸ்கிருத வாரம் கொண்டாடுவது; அரசியல் சாசன சட்டப்பிரிவு 370 ஐ நீக்குவதற்கான முயற்சி; இந்திய வரலாற்று ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக இந்துத்துவா ஆதரவாளர் ஒய்.சுதர்சன ராவ் நியமனம் போன்ற வகுப்புவாத நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் நடைபெறும் இஸ்ரேலின் கொடூரமான தாக்குதலை நாடாளுமன்றத்தில் கண்டிக்க மோடி அரசு மறுக்கிறது.
  • தமிழகத்தில் மத்திய பாஜக அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளையே அதிமுக அரசு செயல்படுத்துகிறது. இதனால் தொழில் வளர்ச்சியில் தேக்கம் உள்ளது. விவசாயத் துறையில் வளர்ச்சி இல்லை. விவசாய நெருக்கடி அதிகரித்துள்ளது. பருவ மழை பற்றாக்குறையால் டெல்டா மாவட்டங்கள் உட்பட நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளன. ஏரி, குளம், குட்டைகள் வறண்டு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளன. மாநிலத்தில் பல பகுதிகள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து நீடிக்கிற மின் பற்றாக்குறையால் சிறு, குறு, நடுத்தர தொழில்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளன. நோக்கியா கைபேசி நிறுவனத்திலிருந்து 8000 தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். அதனைத் தடுக்க அரசு எந்தத் தலையீடும் செய்யவில்லை. நல வாரியங்களின் செயல்பாடுகள் முடக்கப்பட்டுள்ளன. அரசுப் போக்குவரத்தில் ஊதிய ஒப்பந்தம் முடிந்து ஓராண்டு ஆகியும் புதிய ஒப்பந்தம் ஏற்படுத்த அதிமுக அரசு தயாராக இல்லை.
  • வேலை வாய்ப்புக்காக பதிவு செய்து காத்திருப்போரின் எண்ணிக்கை 89 லட்சம். புதிய வேலைவாய்ப்புகள் பெருமளவில் உருவாக்கப்படாததால் பிற மாநிலங்களுக்கு குடிபெயர்ந்து செல்லும் கிராமப்புற, நகர்ப்புற ஏழை, எளிய குடும்பங்களைச் சார்ந்த மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன. வெளி மாநிலங்களிலிருந்து இடம் பெயர்ந்து பிழைப்புக்காக தமிழகம் வந்துள்ள தொழிலாளர்கள் எந்தவித சட்டப் பாதுகாப்புமின்றி சொல்லொணாத்துயருக்கு ஆளாகும் நிலை உள்ளது.
  • அரசுத்துறை நியமனங்கள் – இடமாற்றங்கள் முதல் அரசின் நலத்திட்ட உதவிகள் பெறுவது வரை அனைத்திலும் லஞ்சம், ஊழல், முறைகேடுகள் பன்மடங்கு அதிகரித்துள்ளன. மணல் கொள்ளை தொடர்கின்றது – இதனைத் தடுக்க முனையும் அதிகாரிகள், பொதுமக்கள் பெருத்த பாதிப்புக்கு ஆளாகின்றனர். கொலை, கொள்ளை, ஆள் கடத்தல், பெண்கள் மீதான வன்முறைகள், தலித் மக்கள் மீதான தாக்குதல்கள், லாக்-அப் மரணங்கள் அதிகரித்துள்ளன. சட்டம் ஒழுங்கு பராமரிப்பு சீர்கெட்டுள்ளது.
  • ஜனநாயக இயக்கங்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. காவல்துறையின் அத்துமீறல்கள் அதிகரித்துள்ளன. தனியார் கல்வி நிறுவனங்களில் கட்டணக் கொள்ளை, கல்வி உரிமைச் சட்டத்தை முறையாக அமலாக்காத நிலை தொடர்கிறது. அரசு பள்ளிகளில் போதிய தரம், கட்டமைப்பு வசதிகள் – பராமரிப்புப் பணிகள் இல்லை. இதனால் ஏழைக் குழந்தைகளின் பள்ளிக் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 25-31 மக்கள் சந்திப்பு இயக்கம்

மக்கள் சந்திக்கும் மேற்கண்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு மத்திய, மாநில அரசுகள் பின்பற்றுகிற தவறான பொருளாதார கொள்கைகளே பிரதான காரணமாகும். இதனை எதிர்த்தும், மத்திய, மாநில அரசுகளின் மக்களுக்கு எதிரான செயல்பாடுகளை எதிர்த்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் இணைந்து முதற்கட்டமாக 2014, ஆகஸ்ட் 25 தொடங்கி ஆகஸ்ட் 31 வரை கிராமங்கள், நகரங்கள்தோறும் வீடு, வீடாகச் சென்று மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கத்தினை நடத்திட தீர்மானித்திருக்கிறோம்.

செப்டம்பர் 1 – பெருந்திரள் உண்ணாவிரதம்

2014 செப்டம்பர் 1 அன்று அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் பல்லாயிரம் பேர் பங்கேற்கும் பெருந்திரள் மக்கள் பங்கேற்பு உண்ணாவிரத இயக்கம் நடைபெறுகிறது. மக்களுக்கான இவ்வியக்கத்திற்கு ஆதரவாக அணி திரள தமிழகத்தின் அனைத்துப் பகுதி மக்களையும் சிபிஐ-சிபிஎம் அறைகூவி அழைக்கின்றன.

சென்னையில் நடைபெறும் உண்ணாவிரத இயக்கத்தில் சிபிஐ மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் பங்கேற்கிறார்கள். இதுபோல் அனைத்து மாவட்டத் தலைநகர்களிலும் இரு கட்சியின் மாநில மாவட்டத் தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.

 

Check Also

திருச்சியில் பெரியார் சிலை அவமதிப்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஒன்றியம், இனாம்குளத்தூர் ஊராட்சியில் வைக்கப்பட்டுள்ள பெரியார் சிலையை இழிவுபடுத்தும் நோக்கோடு நேற்று நள்ளிரவு சமூக விரோதிகள் ...

Leave a Reply