மக்கள் நலத்திட்டங்களை முடக்கும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை திரும்பப் பெறுக!

கடந்த புதன்கிழமை (13-2-2019) மதியம் முதல் புதுச்சேரியில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட புதுச்சேரி முதல்வர் திரு.நாராயணசாமி உட்பட அனைத்து அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் நேரடி போராட்டத்தில் இறங்கி துணைநிலை ஆளுநர் மாளிகை முன்பு தொடர் தர்ணா போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.  அனைத்து அரசியல் இயக்கங்களும் இந்தப்போராட்டத்துக்கு முழு ஆதரவைத் தெரிவித்து வருகின்றன.

திருமதி கிரண்பேடி அவர்கள் மத்திய பாஜக அரசின் எடுபிடியாக இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியின் அரசை செயல்படாமல் முடக்குவது, தனது அதிகார வரம்பை மீறிச் செயல்படுவது மற்றும் பாஜகவுக்கு நியமன எம்எல்ஏ-க் களைப் பெற்றுத்தருவது உட்பட அனைத்து வேலைகளையும் செய்யும் பாஜகவின் பிரதிநிதியாகவே செயல்பட்டு வந்துள்ளார்.

தற்போது புகழ் பெற்ற மூன்று பஞ்சாலைகளை உடனடியாக மூடிவிட வேண்டும், ரேஷன் அரிசியை வழங்க மறுப்பது, பாப்கோ நிறுவன ஊழியர்கள் சுமார் 7000 பேருக்கான ஊதிய  ஒதுக்கீடை (Grant) நிறுத்தி வைப்பது, செவிலியர்கள், ஹோம் கார்டு மற்றும் போலீஸ் உட்பட பதவிகளில் காலியிடங்களை நிரப்ப அனுமதி மறுப்பது போன்ற பல்வேறு நெருக்கடிகளையும் – நிர்ப்பந்தங்களையும் புதுச்சேரி அரசு மீது கிரண்பேடி திணித்து வருகிறார்.

தற்போது, மத்திய அரசின் உதவியோடு துணை இராணுவப்படையை வரவழைத்து அவர்கள் உதவியுடன் தனது யதேச்சதிகார செயல்பாட்டை ஸ்திரப்படுத்தி, அறிவிக்கப்படாத ஓர் அவசர நிலை சூழலை உருவாக்கியுள்ளார்.

தனது ஆளுநர் பதவியைப் பயன்படுத்தி அரசு அதிகாரிகள், காவல்துறை உயரதிகாரிகள் தான் சொல்வதை மட்டுமே நிறைவேற்ற வேண்டும் என்ற நிர்ப்பந்தத்ததை ஏற்படுத்தி வருகிறார். அவரது இந்தத் தவறான, முறைகேடான, அதிகார துஷ்பிரயோகத்தைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இதுகாறும் தொடர் இயக்கங்களைத் தனியாகவும், கூட்டாகவும் நடத்தி வந்துள்ளது. தற்போது, மாநிலத்திலுள்ள ஆளும் கட்சி, அதன் முதல்வர், அமைச்சர்கள் உட்பட அனைவரும் நேரடிப் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய நிர்ப்பந்தமான சூழலும் ஏற்பட்டுள்ளது.

எனவே, உடனடியாக மத்திய அரசு தலையிட்டு, துணை நிலை ஆளுநர் கிரண்பேடியை திரும்பப் பெற வேண்டும், மக்கள் நலத்திட்டங்களுக்கு அனுமதி மற்றும் ஒதுக்கீடுகளை வழங்க ஆவன செய்ய வேண்டும், புதுச்சேரியின் தொழில் வளர்ச்சி மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்கான திட்டங்களை முடக்கக் கூடாது. புதுவை மாநிலத்தில் நடைபெற்று வரும் ஜனநாயகம் காக்கும்,  மக்கள் ஆதரவுப் போராட்டத்திற்கு தனது முழு ஆதரவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தெரிவித்துக் கொள்கிறது.

Check Also

சிறப்பு டிஜிபி ராஜேஸ்தாசையும், செங்கல்பட்டு எஸ்.பி. கண்ணனையும் பணியிடை நீக்கம் செய்க!

பெறுநர்உயர்திரு காவல்துறை இயக்குனர் அவர்கள்,தமிழ்நாடு காவல்துறை,மயிலாப்பூர்,சென்னை – 600 004. அன்புடையீர், வணக்கம். பொருள்: பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருக்கும் ...