மக்கள் நல கூட்டியக்கத்தின் சார்பில் சிதம்பரத்தில் ஆர்ப்பாட்டம்!

மத்திய-மாநில அரசுகளைக் கண்டித்து செப் 2 அன்று நாடுதழுவிய அளவில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் பொது வேலை நிறுத்தம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சிதம்பரத்தில் ரயிலை மறிக்க ஊர்வலமாகச் சென்றனர். அப்போது சட்டமன்ற உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன் உள்ளிட்டோரிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட காவல்துறையினர் தாக்குதல் நடத்தி கைது செய்தனர். காவல்துறையினரின் இச்செயலைக் கண்டித்து மக்கள் நல கூட்டியக்கத்தின் சார்பில் சிதம்பரம் காந்தி சிலை அருகே 09.09.15 புதனன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் பங்கேற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், ‘சட்டமன்ற உறுப்பினர் கே.பாலகிருஷ்ணனை காவல் துறையினர் தாக்கி கைது செய்த காட்சியை தொலைக்காட்சிகளில் பார்த்த போது அதிர்ந்துபோனோம். அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது வாட்ஸ் அப்பில் வெளி வந்த படங்கள் மேலும் அதிர்ச்சியடையச் செய்தது. கே. பாலகிருஷ்ணன் சட்டமன்ற உறுப்பினர் மட்டுமல்ல. கட்சியின் பல்வேறு பொறுப்புகளில் உள்ளார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவராகவும் போராளியாகவும் உள்ளார். அவரை காவல்துறையினர் தாக்கியது ஜனநாயக விரோதமானது’ என்றார். `கடந்த ஜூலை 5ம்தேதி, 5 கட்சிகளை உள்ளடக்கிய மக்கள் நல கூட்டியக்கம் உருவாக்கப்பட்டது. அந்த இயக்கத்தின் சார்பில் பூரண மதுவிலக்கு கோரியும் ஆந்திராவில் 20 தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு நீதி வேண்டியும் தொடர்ந்து போராடி வருகிறோம். இந்த இயக்கம் பெரும் அரசியல் மாற்றத்தை உருவாக்கும்’ என்றும் அவர் கூறினார்.

தமிழ்நாட்டில் கடந்த 4ஆண்டுகளில் 100க்கும் அதிகமான படுகொலைகள் நடந்துள்ளன. இதனைத் தடுக்காத காவல்துறை, மக்களுக்காக நடைபெறும் அறப்போராட்டங்களை நசுக்க முயற்சிப்பதற்கு ஜி. ராமகிருஷ்ணன் கடும் கண்டனம் தெரிவித்தார்.

சட்டமன்ற உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன் இப்போதுதான் போராட வந்தவர் அல்ல; சிதம்பரம் பத்மினி வழக்கில் காவல்துறையை, எதிர்த்துப் போராடி நீதியைப் பெற்றுத் தந்தவர்; 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்த வாச்சாத்தி வழக்கில் 200 பேருக்கு தண்டனை பெற்றுத் தந்ததும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிதான் என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.

கே.பாலகிருஷ்ணனை தாக்கிய காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் அவர்கள் மீது நாங்கள் வழக்கு தொடுப்போம் என்றும் ராமகிருஷ்ணன் எச்சரித்தார்.

முன்னதாக, ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்டச் செயலாளர் டி.ஆறுமுகம் தலைமை தாங்கினார். மதிமுக மாவட்டச் செயலாளர் குணசேகரன், விடுதலை சிறுத்தைகள் மாவட்டச் செயலாளர் செல்லப்பன், சிபிஐ மாவட்டச் செயலாளர் மணிவாசகம், மனிதநேய மக்கள் கட்சி மாவட்டச் செயலாளர் யாசர்அராபத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கே. பாலகிருஷ்ணன் எம்எல்ஏ,சிபிஐ மாநில செயற்குழு உறுப்பினர் பெரியசாமி,மதிமுக மாநில பொறுப்பாளர் செந்தில் தீபன், விடுதலை சிறுத்தை கட்சி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார், மனிதநேய மக்கள் கட்சியின் ஷமீம் அஹமத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் மூசா மற்றும் கற்பனைசெல்வம், மாதவன், எஸ்.ஜி.ரமேஷ்பாபு, ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் பேசினர்.

Check Also

வாழ்விழந்த மக்களுக்கு வாழ்விடம் கோரிய போராட்ட பயணத்தடம்…

PDF பதிவிறக்கம் செய்யDownload பெருநகர சென்னை மாநகராட்சி, 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளப் பெருக்குக்கு சென்னையை சுற்றியுள்ள நீர்நிலைகளை ஆக்கிரமித்து ...