மக்கள் விரோத மத்திய பட்ஜெட்டை அதிமுக, திமுக, பாமக வரவேற்பதா? – ஜி.ராமகிருஷ்ணன்

கிருஷ்ணகிரி, மார்ச் 2-

மக்கள் விரோத மத்திய பட்ஜெட்டை அதிமுக, திமுக, பாமக ஆகிய கட்சிகள் வரவேற்றுள்ளது ஏன் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கேள்வி எழுப்பினார்.மக்கள் நலக் கூட்டணியின் மூன்றாம் கட்டப் பிரச்சாரத்தின் 2ம் நாள் பயணம் கிருஷ்ணகிரியில் புதனன்று துவங்கியது. புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு சிபிஐ மாவட்டச் செயலாளர் டி.ராமச்சந்திரன் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் பி.சுந்தர்ராஜன், மாவட்டச் செயலாளர் ஜி.சேகர் மற்றும் கூட்டணியின் தலைவர்கள் பங்கேற்றனர்.இக்கூட்டத்தில் பங்கேற்று ஜி.ராமகிருஷ்ணன் பேசுகையில், தமிழ்நாட்டில் 35 விவசாயிகள் உள்பட நாடு முழுவதும் 5 ஆயிரத்து 672 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஆனால் மத்திய பட்ஜெட் இதை கண்டுகொள்ளவில்லை. மக்களுக்கு விரோதமான பல்வேறு அம்சங்கள் இந்த பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளன. இந்த பட்ஜெட்டை அதிமுக, திமுக, பாமக ஆகிய கட்சிகள் வரவேற்பது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.இக்கூட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேசும்போது, தமிழக தேர்தலில் அதிமுக, திமுக கட்சிகள் முறைகேடு செய்ய திட்டமிட்டுள்ளன. இதை மக்கள் நலக் கூட்டணியின் தொண்டர்கள் தடுக்க வேண்டும். ஒவ்வொரு வாக்குச் சாவடி அளவிலும் கண்காணிப்பு படை அமைக்க வேண்டும் என்றார்.

சிபிஐ மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் பேசும்போது, மக்கள் நலக் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் குறைந்தபட்ச செயல்திட்டத்தின் அடிப்படையில் விவசாயிகளின் கடன்களை ரத்து செய்வோம் என்றார்.விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின்தலைவர் தொல்.திருமாவளவன் பேசுகையில், தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக மக்கள் நலக் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. எங்களது பயணம் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமையை மீட்பதற்கானது என்றார்.

Check Also

அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாக வழங்க இடதுசாரிக் கட்சிகள் வலியுறுத்தல்

மே தினமான இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ...