மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசைப் பாதுகாப்பதே காந்திக்கு செய்யும் அஞ்சலி!

2019 ஆம் ஆண்டு மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியின் 150வது பிறந்த நாளைக் கொண்டாட வேண்டிய ஆண்டாகும். காந்திஜி, இந்திய மக்களின் ஈடிணையற்ற வெகுஜனத் தலைவராக இன்றும் தொடர்கிறார். பிரிட்டிஷ் காலனி ஆட்சியாளர்களிடமிருந்து, சுதந்திரத்திற்கான போராட்டத்தில் நாட்டின் பல்வேறு பன்முகப் பண்புகளுடன் வாழ்ந்த மக்கள் அனைவரையும் மிகவும் வெற்றிகரமான முறையில் ஒன்றுபடுத்தினார்.

என்னுடைய தலைமுறை சுதந்திரம் பெற்ற பிறகுதான் வளரத் தொடங்கியதால், எங்களிடையே பதில் வேண்டி எப்போதும் ஒரு கேள்வி எழுந்து கொண்டிருக்கும். நாட்டு மக்களின் ஒப்புயர்வுமிக்கத் தலைவராக விளங்கிய காந்திஜி, நாட்டிலேயே பெரும் முதலாளியாக விளங்கிய, ஜி.டி. பிர்லாவின் வீட்டில்தான் அடிக்கடி வந்து தங்குவார். இது ஏன் என்ற கேள்வி எங்களிடையே அடிக்கடி எழும்.

புதுதில்லியில் உள்ள அவரது இல்லத்தில் தங்கியிருந்தபோதுதான், காந்திஜி 1948 ஜனவரி 30 அன்று இந்துத்துவ வெறியனின் துப்பாக்கிக் குண்டுகளால் படுகொலை செய்யப்பட்டார். நாட்டின் அடித்தட்டு ஏழை மக்களால் அரவணைக்கப்பட்ட காந்திஜி, அதே சமயத்தில் நாட்டில் அவர்களைச் சுரண்டி வாழ்ந்துவந்த முதலாளிகளாலும், நிலப்பிரபுக்களாலும் அரவணைக்கப்படுகிறார் எனில் இது முரண்பாடாகத் தெரியவில்லையா? இது குறித்து பின்னர் நாம் வருவோம்.

நாட்டின் இன்றைய பின்னணியில், காந்திஜியின் 150ஆவது ஆண்டு பிறந்த தினத்தை அனுசரிப்பது மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. இந்தியச் சுதந்திரப் போராட்டக் காலத்தில் எதற்காகவெல்லாம் காந்திஜி பாடுபட்டாரோ, அவை அத்தனையும் இப்போது தாக்குதலுக்கு உள்ளாகிக்கொண்டிருக்கிறது. காந்திஜி, ஏகாதிபத்தியத்திற்கு எதிராக உறுதியுடன் போராடிவந்தார். மதச்சார்பின்மையை உயர்த்திப் பிடித்தார். தீண்டாமைக்கு எதிராகவும், சமூக நீதிக்கு ஆதரவாகவும் அவர் மேற்கொண்ட போராட்டங்கள்தான் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கொள்கைகளை வகுத்திட அடித்தளமாக அமைந்தன.

இன்றைய தினம் இவை அனைத்தும் வீழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. கம்யூனிஸ்ட்டுகளுக்கும், காந்திஜிக்கும் இடையே அரசியல் வேற்றுமைகள் இருந்தபோதிலும், விடுதலைப் போராட்டக் காலங்களில் ஏற்ற இறக்கங்கள் ஏற்பட்ட சமயங்களில், மேலே கூறப்பட்ட கொள்கைகளின்பின் அவர் உறுதியாக நின்றதை அனைவரும் ஒப்புக்கொள்ள வேண்டும்.

2019 தேர்தலுக்குப் பின் உள்ள நிலைமைகள்

நாட்டில் 2019 தேர்தல் முடிவுகள், வலதுசாரி சக்திகளின் அரசியல் அதிகாரம் ஒருங்கிணைந்திருப்பதைக் காட்டுகிறது. அது அபரிமிதமான வெற்றியைப் பெற்றுள்ள விதமும், அதனை அது அடைந்தவிதமும் நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் நம் மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசுக்கும் அச்சுறுத்தும் நிலையில் இருக்கக்கூடிய சவால்களை ஏற்படுத்தி இருக்கின்றன.

கார்ப்பரேட்டுகள் – மதவெறியர்கள் கூட்டணி ஆதிக்கத்திற்கு வந்திருக்கிறது. இது, நாட்டு மக்களிடம், “நீங்கள் நாட்டுப்பற்று உள்ளவர்கள் என்பது உண்மையானால் நீங்கள் உங்கள் ஜனநாயக உரிமைகளையும் பறிகொடுத்திடத் தயாராக இருக்க வேண்டும்,” என்று கூறிக் கொண்டும் இவ்வழிகளில் அவர்கள் தியாகங்கள் செய்ய வேண்டும் என்றும் மிகவும் வெறித்தனமாக சித்தாந்தப் பிரச்சாரத்தை முடுக்கிவிட்டிருக்கிறது.

சமீபத்தில், மக்களவையில் தேசியப் புலனாய்வு முகமைச் சட்டத்திற்குத் திருத்தங்கள் கொண்டுவந்து நிறைவேற்றியபோது, உள்துறை அமைச்சர் இத்திருத்தங்களை எதிர்ப்போர் எல்லாம் பயங்கரவாதத்தை ஆதரித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும் பயங்கரவாதிகளைப் பாதுகாத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும் கத்தியதைப் பார்த்தோம். மிகவும் கொடூரமான முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள இத்திருத்தங்கள், குடிமக்களின் ஜனநாயக உரிமைகளையும், குடிமை உரிமைகளையும் மிகவும் கடுமையான முறையில் பறித்துக் கொண்டுவிட்டன.

பாஜக அரசாங்கத்திற்கு எதிராகவும், அதன் கொள்கைகளுக்கு எதிராகவும் எவரும் எவ்விதமான கருத்தையும் வெளிப்படுத்தினால், அவரை ‘தேச விரோதி’ என்று முத்திரை குத்தி, சிறையில் அடைத்துவிட முடியும். இவ்வாறு இச்சட்டத்திருத்தங்கள் போலீஸ் ராஜ்யத்தையே சட்டப்பூர்வமாக்கி இருக்கிறது.

காந்தி கனவு கண்ட எதிர்கால இந்தியா

காந்திஜி கனவு கண்ட இந்தியாவே, நம்முடைய மதச்சார்பற்ற ஜனநாயக அரசமைப்புச்சட்ட குடியரசே ஆபத்திற்கு உள்ளாகி இருக்கிறது. காந்திஜி கனவு கண்ட இந்தியா குறித்து அவர், தன்னுடைய கட்டுரைகள் எதிலும், தெளிவாக எதுவும் கூறவில்லை என்றபோதிலும், அவர் உயர்த்திப்பிடித்த கொள்கைகள், உண்மையில், இதன் அடித்தளங்களாக அமைந்திருக்கின்றன.

அவர் குறிப்பிட்ட மத நம்பிக்கை உடையவராக இருந்த அதே சமயத்தில், மதம் தனிப்பட்ட ஒருவரின் விஷயமாகக் கருதப்பட வேண்டும் என்பதிலும், அதனை அரசியலுடன் அல்லது ஆட்சியுடன் கலந்திடக் கூடாது என்பதிலும் உறுதியுடன் இருந்தார். அவர், ‘சர்க்காவைச் சுழற்றுங்கள், காதி உடுத்துங்கள்’ என்று கூறியதைப் பலர், ‘நவீனமயத்திற்கு எதிரானது’ என்று கூறி எள்ளி நகையாடியபோதும், அவற்றின் மூலம் அவர் நாட்டின் பொருளாதார சுயசார்பினை உயர்த்திப் பிடித்தார் என்பதும், அதன் மூலமாக இந்தியாவின் பொருளாதார இறையாண்மையைப் பாதுகாத்திட்டார் என்பதும் உண்மை.

நவீன தாராளமயக் கொள்கையை இன்றைய ஆட்சியாளர்கள் கடைப்பிடிப்பதோடு, குறிப்பாக மோடி அரசாங்கம் மிகவும் மூர்க்கத்தனமான முறையில் அதனைக் கடைப்பிடிப்பதோடு, இதனை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டியது மிகவும் முக்கியமான அம்சமாகும். மகாத்மா காந்தி உயர்த்திப்பிடித்த ஏகாதிபத்திய எதிர்ப்பு, மதச்சார்பின்மை, தீண்டாமைக்கு எதிரான பிரச்சாரங்கள் ஆகியவை இன்றைய நிலைமைகளில் மிகவும் பொருந்தக்கூடியதாகவும், முக்கியத்துவம் உடையதாகவும் விளங்குகின்றன.

இப்போதைய போர்க்களங்கள் இந்திய தேசியவாதத்திற்கும், இந்துத்துவா தேசியவாதத்திற்கும் இடையிலானதாகும். எனவே, மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்த தினக் கொண்டாட்டத்தை கடைபிடிப்பது என்பது, காந்திஜி உயர்த்திப்பிடித்த மேற்கண்ட கொள்கைகளின் அடிப்படையில் உருவான நம் அரசமைப்புச் சட்ட ஒழுங்கைப் பாதுகாப்பதற்கு மக்கள் உறுதிபூணுவதை இரட்டிப்பாக்கிக் கொள்ளக்கூடிய விதத்தில் அமைந்திட வேண்டும்.

மகாத்மா காந்தி கனவு கண்ட இந்தியா என்பது என்ன? சுருக்கமாகச் சொல்வதானால், இதன் கருத்தாக்கம் என்பது, அவர் கனவு கண்ட இந்தியா என்பது, இந்தியா ஒரு நாடு என்ற வகையில் பல்வேறுபட்ட வேற்றுமைப் பண்புகளுடன் வாழக்கூடிய மக்கள் அனைவரையும் ஒன்றுபடுத்தி முன்னேறிச் செல்ல வேண்டும் என்பதுதான். காந்தி உயர்த்திப்பிடித்த இந்திய தேசியவாதக் கொள்கை (Indian Nationhood), இந்துத்துவா தேசியவாதம் என்கிற கருத்தாக்கத்திற்கு முற்றிலும் எதிரானதாகும். இதுதான் இன்றைய போராட்டத்தின் முக்கிய அம்சமாகும்.

பல்வேறு கோட்பாடுகளுக்கு இடையிலான போராட்டம்

மகாத்மா காந்தியால் தலைமை தாங்கப்பட்ட இந்திய மக்களின் விடுதலைப் போராட்டத்தின் விளைவாகவே பல்வேறு வேற்றுமைப் பண்புகளுடன் கூடிய மக்கள் ஒன்றுபட்டு நிற்கின்ற இந்தியா என்கிற கருத்தாக்கம் உருவாகி மலர்ந்திருக்கிறது. 1920களிலிருந்து சுதந்திரத்திற்கான போராட்டம் தொடங்கிவிட்டது. இவ்வாறு போராடியவர்கள் மத்தியில் மூன்றுவிதமான கோட்பாடுகள் முட்டிமோதின.

காங்கிரஸ் கட்சியின் தலைமையில் போராடியவர்கள் மத்தியில் சுதந்திர இந்தியா என்பது ஒரு மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசாக இருக்க வேண்டும் என்பதாகும். இடதுசாரிகள் இதனுடன் ஒத்துப்போனாலும், இதற்கும் மேலாகச் சென்று, நாட்டின் அரசியல் சுதந்திரத்தை நாட்டில் சமூக-பொருளாதார சுதந்திரத்தையும் அனைவருக்கும் எய்தக்கூடிய விதத்தில், விரிவாக்கிடவேண்டும் என்பதும், இது, சோசலிசத்தின்கீழ் மட்டுமே சாத்தியம் என்பதுமாகும்.

ஆனால் அவ்விரண்டுக்கும் எதிரான மூன்றாவது கோட்பாடும் இருந்தது. அது, சுதந்திர இந்தியாவில் உள்ள மக்களை மதத்தின் அடிப்படையில் தீர்மானித்திட வேண்டும் என்று கூறியது. இவ்வாறு மதத்தின் அடிப்படையில் அமைந்திட வேண்டும் என்று கூறியவர்களில் முஸ்லீம் லீகைச் சேர்ந்தவர்கள், தங்களுக்கு இஸ்லாம் அடிப்படையிலான நாடு தேவை என்றார்கள். ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் கீழ் இயங்கியவர்கள் தங்களுக்கு ‘இந்து ராஷ்ட்ரம்’ தேவை என்றார்கள். துரதிர்ஷ்டவசமாக நாடு பிளவுண்டதன் காரணமாக, முஸ்லீம் லீகைச் சேர்ந்தவர்கள், தங்களுடைய கோட்பாட்டின் படி அமைந்த முஸ்லீம் நாட்டைப் பெறுவதில் வெற்றி பெற்றார்கள்.

பிரிட்டிஷ் காலனி ஆட்சியாளர்கள் எதிர்வருங்காலங்களில் இவர்கள் தொடர்ந்து சண்டையிட்டுக்கொண்டே இருக்க வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில்தான் இவ்வாறு நாட்டைத் துண்டாக்கினார்கள். அதன் விளைவுகள் இன்றளவும் தொடர்கின்றன. ஆயினும், ஆர்எஸ்எஸ் சுதந்திரம் பெற்ற சமயத்தில் தங்கள் குறிக்கோளை எய்திட முடியவில்லை. எனினும் சுதந்திரத்திற்குப்பின் அமைந்த நவீன இந்தியாவை, தங்களின் வெறிபிடித்த சகிப்புத்தன்மையற்ற பாசிச ‘இந்து ராஷ்ட்ரமாக’ மாற்ற வேண்டும் என்பதற்கான முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார்கள்.

இந்தியாவில் நடைபெற்ற சுதந்திர இயக்கம் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் சிந்தனையோட்டத்தையும் அரசியல் திட்டத்தையும் நிராகரித்தது. இதனால் விரக்தியடைந்த ‘இந்துத்துவ மதவெறியன்’ ஒருவன் மகாத்மா காந்தியைப் படுகொலை செய்தான்.

கடந்த நூறாண்டுகால இந்தியாவில் மூன்றுவிதமான கோட்பாடுகளுக்கு இடையேயான போராட்டமும், அரசியல் மோதல்களும் தொடர்ந்து நடைபெற்று வந்திருக்கின்றன என்பது தெளிவாகும். இந்தக் கோட்பாடுகளில் எவருடைய கோட்பாடு வெற்றி பெறுகிறதோ அவர்களின் தலைமையிலேயே இந்தியாவின் எதிர்காலம் அமைந்திடும் என்று கூறத் தேவையில்லை. இன்றைய இந்தியாவை உருவாக்கியதில் இந்திய இடதுசாரிகளுக்கு முக்கியமான பங்கு உண்டு.

ஆர்எஸ்எஸ்: பாசிஸ்ட்டுகளின் நிகழ்ச்சி நிரல்

ஆர்எஸ்எஸ் இயக்கம், இந்து ராஷ்ட்ரத்தை நிறுவ வேண்டும் என்கிற குறிக்கோளுடனேயே தன்னுடைய தேசியவாதக் கொள்கையை, தன்னுடைய தத்துவார்த்த-சித்தாந்த அடிப்படையில் அமைத்திருக்கிறது. மறைந்த ஆர்எஸ்எஸ் தலைவர் இதனை தன்னுடைய நூலின் முகப்புரையில் தெளிவுபடுத்தி இருக்கிறார். “இந்துக்கள் அந்நிய இனத்தினர் படையெடுத்து வருவதற்கு முன்பு, கடந்த எட்டு அல்லது பத்தாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக, இந்த நிலத்தில் எவரும் மறுக்க முடியாத விதத்திலும் மற்றும் எவ்விதத் தொந்தரவுமில்லாத விதத்திலும் இருந்திருக்கிறார்கள்.” எனவே, “இந்த நிலம், இந்துஸ்தான் என்று, அதாவது இந்துக்களின் நிலம், என்று அறியப்பட்டது.” (நாம் அல்லது வரையறுக்கப்பட்ட நம்முடைய தேசம்-எம்.எஸ்.கோல்வால்கர், 1939,ப.6) இந்துத்துவா மேலாதிக்கவாதிகள் இத்தகைய சகிப்புத்தன்மையற்ற சித்தாந்தத்தை உள்ளடக்கமாகக் கொண்டுள்ள இந்துத்துவா தேசத்தைக் கட்டி எழுப்ப வேண்டும் என்ற நோக்கத்துடன்தான் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள்.

கோல்வால்கருடைய நூலில் மேலும் கூறியிருப்பதாவது:

“…இவ்வாறு நாம் மேற்கொண்டுள்ள ஆய்வானது, நம்மை மறுக்க இயலாதவிதத்தில், – இந்துஸ்தான் இங்கேதான் தோன்றியது. மற்றும் புராதன இந்து தேசமும் இங்குதான் தோன்றியிருக்க வேண்டும். வேறெங்கும் அல்ல என்கிற முடிவுக்கே தள்ளிவிடுகிறது. இந்தத் தேசத்திற்குச் சொந்தமாயிராத மற்ற அனைவரும், அதாவது இந்து இனம், மதம், கலாச்சாரம் மற்றும் மொழி ஆகியவற்றுக்குச் சொந்தமாயிராத அனைவரும் இயற்கையாகவே, உண்மையான ‘தேசிய’ வாழ்விலிருந்து விலகிவிடுகிறார்கள்.

“தற்போதைய மந்த நிலைமையிலிருந்து, இந்த தேசத்தை மீண்டும் கட்டக்கூடிய விதத்தில், புத்துயிரூட்டி, விடுவிப்பதனைக் குறிக்கோளாகக் கொண்டு, செயல்படக்கூடிய இயக்கங்கள் மட்டுமே, உண்மையில் தேசிய இயக்கங்களாகும். அதில் செயல்படுபவர்கள் மட்டுமே, தேசப்பற்றாளர்கள். இந்து இனத்தைப் பெருமைப்படுத்தக் கூடிய விதத்தில், லட்சியத்தை எய்திட வேண்டும் என்கிற ஆர்வத்துடன் அவர்கள் மட்டுமே செயல்படுகிறார்கள். மற்றவர்கள் எல்லாம் தேசத்தின் இலட்சியத்தைக் காட்டிக் கொடுப்பவர்களாக இருக்க வேண்டும் அல்லது பரிவான பார்வையுடன் கூற வேண்டுமானால் முட்டாள்களாக இருக்க வேண்டும்.” (கோல்வால்கர், 1939, பக்.43-44)

நிச்சயமாக இது, விடுதலைப் போராட்டத்தில் முன்வைக்கப்பட்ட சுதந்திர இந்தியாவின் கொள்கைகளுக்கு முற்றிலும் முரணானதாகும். ஜவஹர்லால் நேரு, “கண்டுணர்ந்த இந்தியா” என்னும் தன்னுடைய நூலில், “இந்தியா என்பது புராதனக் காலந்தொட்டே ஒன்றன் மீது ஒன்றாக பல்வேறு கோட்பாடுகளால் செதுக்கப்பட்டு வந்திருக்கிறது. அவ்வாறு ஒன்றின்மீது மற்றொன்று செதுக்கப்பட்டபோதிலும், உள்ளே இருக்கும் சிந்தனைக் கருத்தாக்கத்தை அதனால் முற்றிலுமாக அழிக்கமுடியவில்லை,” என்கிறார்.

இதேபோன்றே ரவீந்திரநாத் தாகூரும், “ஆரியரிகள்-ஆர்யரல்லாதவர்கள், திராவிடர்கள் மற்றும் சீனர்கள், பத்தன்கள், சிந்தியன்கள், ஹன்கள், மொகலாயர்கள் – என அனைவரும் சங்கமித்து, ஒரே உடம்பில் தங்களை இணைந்துள்ளனர்” என்கிறார். இதுதான், இந்த உடம்புதான், இந்தியா. ஆனால், ஆர்எஸ்எஸ் இத்தகைய தேசியவாதக் கோட்பாட்டிலிருந்து, காந்திஜி முன்வைத்த கோட்பாட்டிலிருந்து, முற்றிலுமாக விலகி நிற்கிறது. இவர்களால் முன்னிறுத்தப்படும் கோட்பாடு என்பது, தங்களுடைய பாசிச ‘இந்து ராஷ்ட்ரத்தை’ நிறுவுவதற்கான இந்துத்துவா தேசியவாதம் ஆகும்.

ஆர்எஸ்எஸ் இழி முயற்சி

இப்போது ஆர்எஸ்எஸ் இயக்கம், சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபட்டவர்களைத் தமதாக்கிக்கொள்ளும் இழிமுயற்சியில் இறங்கியிருக்கிறது. இவர்களில் முக்கியமானவர், சர்தார் பட்டேல். உள்துறை அமைச்சராக அவர் இருந்தபோது, 1948 பிப்ரவரி 4 அன்று ஆர்எஸ்எஸ் இயக்கத்தைத் தடை செய்த அரசாங்கத்தின் அறிவிப்பில் கையெழுத்திட்டவர். அதில் அவர், “ஆட்சேபகரமான மற்றும் ஊறுவிளைவிக்கக்கூடிய நடவடிக்கைகளைத் தொடர்ந்து சங் பரிவாரங்கள் மேற்கொண்டு வருகின்றன. இதனால் பலர் பலியாகியிருக்கிறார்கள். இதில் கடைசியாகப் பலியானது காந்திஜியாகும்,” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும், 1948 நவம்பர் 14 அன்று, பட்டேல் தலைமையிலான உள்துறை அமைச்சகம் ஒரு செய்திக் குறிப்பை வெளியிட்டிருந்த்து. அதில், ஆர்எஸ்எஸ் தலைவரான கோல்வால்கருடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளின்போது, அவர் வஞ்சமான சமரசங்கள் பலவற்றைக் கூறியதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. எனினும் சர்தார் பட்டேல் ஆர்எஸ்எஸ் மீதான தடையை நீக்கிட மறுத்தார். பின்னர் 1949 ஜூலை 11 அன்றுதான் தடை விலக்கிக் கொள்ளப்பட்டது. அப்போது அரசாங்கம் கோரியிருந்த அனைத்து நிபந்தனைகளையும் ஆர்எஸ்எஸ் ஏற்றுக் கொண்டது. அதன்படி அது எதிர்காலத்தில் ஓர் அரசியல்சார்பற்ற “கலாச்சார அமைப்பாகத்தான்” செயல்படும் என்பதும், “ரகசியத்தைத் தவிர்ப்பது மற்றும் வன்முறையைத் தவிர்ப்பது” என்பதும் அந்த நிபந்தனைகளில் அடங்கும்.

முரண்பாடு

இப்போது நாம் ஆரம்பத்தில் எழுப்பப்பட்ட பிரச்சனைக்கு வருவோம். தோழர் இ.எம்.எஸ். காந்தியிடம் காணப்பட்ட முரண்பாடுகள் பற்றிக் கீழ்வருமாறு கூறுகிறார்: “காந்திஜி, தான் ஒரு சமூகக் கண்ணோட்டத்தில் பிற்போக்குத்தனத்துடன் இருந்தபோதிலும், நவீன தேசிய-ஜனநாயக இயக்கத்திற்கு கிராமப்புற ஏழை மக்களை அணிதிரட்டியது எப்படி, இது முரணாக இல்லையா என்று தோன்றலாம். இந்த சுய முரண்பாடு, நம் தேசத்தின் உண்மையான அரசியல் வாழ்க்கையில் காணப்படும் முரண்பாட்டின் வெளிப்பாடுதான். இது, தேசிய ஜனநாயக இயக்கத்தை நம் நாட்டில் முதலாளிகள் நிலப்பிரபுக்களுடன் கைகோர்த்துக் கொண்டு தலைமை தாங்குவதன் காரணமாக விளைந்துள்ள ஒன்று.”

காந்திஜியை, நிலப்பிரபுக்களும், முதலாளிகளும் ஏன் தூக்கிக் வைத்துக் கொண்டு கொண்டாடினார்கள் என்பதற்கு இதுதான் காரணமாகும். காலனியாதிக்கத்திற்கு எதிரான போராட்டத்திற்கு மக்களை ஈர்த்த அதே சமயத்தில், அவர்கள் முதலாளி வர்க்கத்தின் சுரண்டலுக்கு ஆபத்தானவர்களாக மாறாது பார்த்துக் கொள்வதையும் காந்திஜி மேற்கொண்டார். இதனை அவர் பலமுறை மெய்ப்பித்திருக்கிறார். அகமதாபாத்தில் ஜவுளித் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு, ஆலை முதலாளிகளின் வீட்டின்முன்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டபோது, அதனை நிறுத்துவதற்காக, உண்ணாவிரத்ப் போராட்டத்தை மேற்கொண்டார்.

‘சௌரிசௌரா’ நிகழ்வினைத் தொடர்ந்து, மக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட சமயத்தில், காந்திஜி, சிவில் ஒத்துழையாமை இயக்கத்தை விலக்கிக் கொண்டார். இதனைத் தொடங்கியது, தான் செய்த ‘இமாலயத் தவறு’ என்று கூறினார். இவ்வாறு காந்திஜி விலக்கிக் கொண்டதை ஆட்சேபித்து, சிறையிலிருந்த நேரு போன்றவர்கள் காந்திஜிக்குக் கடிதம் எழுதினார்கள். அந்த சமயத்தில் அவர் விடுத்திருந்த அறைகூவலுக்கு மக்கள் கிளர்ந்தெழுந்தது போன்று முன்னெப்போதும் நடந்ததில்லை.

உண்மையில், இவ்வாறு இவ்வியக்கத்தை இவர் விலக்கிக்கொண்டபின்னர்தான், பலர் விரக்தியடைந்து காங்கிரசை விட்டு பிரிந்து சென்றார்கள். ஒருபக்கத்தில் பகத்சிங்கும் அவருடைய தோழர்களும் இடதுசாரி மற்றும் சோசலிசக் கருத்துக்களை நோக்கி முன்னேறினார்கள். பி. சுந்தரய்யா, இ.எம்.எஸ்., பி.ராமமூர்த்தி, ஹர்கிசன்சிங் சுர்ஜித் போன்ற பல கம்யூனிஸ்ட் தலைவர்களும் மற்றும் பல விடுதலைப் போராட்ட் வீரர்களும் சோசலிசக் கோட்பாட்டை நோக்கி முன்னேறினார்கள். பிற்காலத்தில் நாட்டின் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முன்னணித் தலைவர்களாக உயர்ந்தார்கள்.

மக்களை அணிதிரட்டி, களத்தில் இறக்குவதில் காந்திஜிக்கு வல்லமை இருந்தது. அதே சமயத்தில் அவர்கள் மத்தியில் ஆளும் வர்க்கங்களுக்கு எதிராக தீவிரவாத சிந்தனை ஏற்படாதவாறும் அவர் பார்த்துக் கொண்டார். எனினும், இந்தியா சுதந்திரம் பெற்றபின், அவர்களின் வர்க்க ஆட்சி அமைந்தபின், முதலாளித்துவ-நிலப்பிரபுத்துவ ஆளும் வர்க்கங்கள் காந்தியமும் அதன் நடைமுறைகளும் தங்கள் வளர்ச்சிக்குத் தடையாக இருப்பதாகக் கருதினார்கள். இனி அவர்களுக்கு காந்திஜி தேவையில்லை. இப்போது மக்கள் மத்தியில் எழும் தீவிரவாதத்தை அடக்கிட காவல்துறையும் ராணுவமும் அவர்களிடம் இருக்கிறது.

காந்திஜியின் இறுதி நாட்கள், இஎம்எஸ் குறிப்பிடுவதைப் போன்று, காந்திஜி தன் விழுமியங்களுக்கு உண்மையாக இருந்த அதே சமயத்தில், புதிய ஆட்சியாளர்கள் இந்து-முஸ்லீம் ஒற்றுமை போன்று பல அம்சங்களில் அவர் கொள்கைகளை நிராகரித்தனர்.

1947 ஆகஸ்ட் 15 அன்று ஜவஹர்லால் நேருவும் இதர தலைவர்களும் மூவர்ண சுதந்திரக் கொடியை செங்கோட்டையில் பறக்கவிட்டபோது, அங்கே காந்திஜி இல்லை என்கிற உண்மை இன்றைய இளைய தலைமுறையினருக்குத் தெரியாது என்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானதாகும். அவர் எங்கே இருந்தார்? அப்போது அவர் (இப்போது வங்க தேசத்தில் உள்ள) நவகாளி என்னும் இடத்திற்குச் சென்றிருந்தார்.

அந்த சமயத்தில் நாடு பிரிவினையாவதன் காரணமாக, அங்கே ஏற்பட்டிருந்த இந்து-முஸ்லீம் கலவரங்களையொட்டி நடந்துவந்த கொலைகளை சாத்தியமான அளவிற்குத் தடுத்து நிறுத்துவதற்காகச் சென்றிருந்தார். மதக்கலவரங்களைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்பதற்காக, கல்கத்தாவில் காலவரையற்ற உண்ணாவிரதத்தைத் தொடங்கினார்.

காந்திஜியின் நான்கு விழுமியங்கள்

காந்திஜி உயர்த்திப் பிடித்த நான்கு விழுமியங்கள்தான் நம் அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைத் தூண்களாகப் நிறுவப்பட்டிருக்கின்றன. ஆனால் இப்போது அவற்றின்மீது மூர்க்கத்தனமான முறையில் தாக்குதல் தொடுக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பின்னணியில், காந்திஜியை நினைவுகூரும் போது, அவர் எந்தக் கொள்கைகளை உயர்த்திப்பிடித்தாரோ, அந்தக் கொள்கைகளுக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கிறது.

அதாவது, அவர் உருவாக்கிய இந்திய தேசத்திற்கு இன்றைய இந்துத்துவா தேசியவாதிகளால் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. இதனைத் தடுத்து நிறுத்தி, முறியடித்திட வேண்டியது அவசியமாகும். மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்த நாள் கொண்டாட்ட தினத்தை கடைபிடிக்கும்போது, நம் மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசை, பாசிச ஆர்எஸ்எஸ்/பாஜக வெறியர்களிடமிருந்து பாதுகாத்திட, உறுதியேற்பதை இரட்டிப்பாக்கிக் கொள்வோம்.

தமிழில்: ச. வீரமணி

Check Also

சாதிய அணி சேர்க்கைக்கு இடமளிக்க வேண்டாம்!

வன்னியர்கள் மீது அவதூறுகள் பரப்பப்படும் போது அது தொடர்பான உண்மை நிலையை சம்பந்தப்பட்டவர்களுக்கு உணர்த்துவதற்காகவும், தீய பிற்போக்கு சக்திகளிடமிருந்து வன்னியர் ...