மதம் அரசியலிலிருந்து பிரிக்கப்பட்டால்தான் இந்தியா தன்னை சுய அழிப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும்!

இன்றைய இந்தியாவின் நிலை மிகவும் பரிதாபகரமாக இருக்கிறது. ஒரு மதத்தின் பக்தர்கள் இன்னொரு மதத்தின் பக்தர்களுக்கு ஜென்ம விரோதிகளாக விளங்குகிறார்கள். ஒரு மதத்தைச் சார்ந்தவர் என்கிற ஒற்றைக் காரணமே இன்னொரு மதத்தைச் சார்ந்தவருக்கு எதிராக இருப்பதற்கு காரணமாக இருக்கிறது. இதை நம்புவதற்கு கடினமாக இருந்தால் சமீபத்தில் லாகூரில் வெடித்த வன்முறைகளைப் பாருங்கள். முஸ்லீம்கள் அப்பாவி சீக்கியர்களையும் இந்துக்களையும் எப்படியெல்லாம் கொன்று குவித்திருக்கிறார்கள். சீக்கியர்கள் கூட தங்களுக்கு வாய்ப்பு கிடைத்தபோது இதைவிட மோசமாக நடந்து கொண்டிருக்கிறார்கள்.

ஒரு மனிதன் தவறு செய்துவிட்டான் என்பதற்காக இந்த கொலைபாதகம் நடக்கவில்லை. ஆனால் ஒரு குறிப்பிட்ட மனிதன் இந்து என்கிற காரணத்திற்காகவோ சீக்கியன் என்கிற காரணத்திற்காகவோ முஸ்லீம் என்கிற காரணத்திற்காகவோ கொல்லப்படுகிறான்.

ஒரு முஸ்லீமால் கொல்லப்படுவதற்கு ஒருவன் இந்துவாகவோ சீக்கியனாகவோ இருப்பது போதுமானதாக இருக்கிறது. அதேபோன்று ஒரு முஸ்லீம் கொல்லப்படுவதற்கு அவன் முஸ்லீமாக இருப்பதே போதுமானதாக இருக்கிறது. இதுதான் நிலை என்றால் கடவுள்தான் இந்தியாவை காப்பாற்ற வேண்டும்.

இத்தகைய சூழ்நிலையில் இந்தியாவின் எதிர்காலம் கவலைக்குரியதாகத் தெரிகிறது. இந்த ‘மதங்கள்’ நாட்டை சீரழித்துவிட்டன. இந்த மத மோதல்கள் எவ்வளவு காலத்திற்கு நமது நாட்டை சீரழிக்கும் என்று தெரியவில்லை.

இந்தக் கலவரங்கள் உலகத்தின் பார்வையில் இந்தியாவை அவமானப்பட வைத்திருக்கிறது. குருட்டுத்தனமான நம்பிக்கையால் எப்படி ஒவ்வொரு அடித்துச் செல்லப்படுகிறார்கள் என்பதைப் பார்த்துக கொண்டிருக்கிறோம்.

இவற்றிலிருந்து விலகி நிற்கும் ஒரு இந்துவோ முஸ்லீமோ சீக்கியரோ அரிதாகத்தான் தென்படுகிறார்கள். இதர எல்லோரும் கட்டைகளையும் கூலியாட்களையும் வாள்களையும் கத்திகளையும் எடுத்துக் கொண்டு ஒருவரையொருவர் கொன்று கொண்டிருக்கிறார்கள். இவர்களிடமிருந்து தப்பித்தவர்கள் ஒன்று தூக்குமேடைக்குப் போகிறார்கள் அல்லது சிறையில் அடைக்கப்படுகிறார்கள். இப்படி ரத்தம் சிந்தப்பட்ட பிறகு ‘மதவாதிகளை’ ஆங்கில அரசாங்கத்தின் தடிகள் பதம் பார்க்கின்றன. அதற்குப் பின்புதான் அவர்களுக்கு புத்தி வருகிறது.

நாம் பார்த்த வரையில் மதவெறித் தலைவர்களும் பத்திரிக்கைகளும்தான் இந்தக் கலவரங்களுக்குப் பின்னே இருக்கிறார்கள். இப்போது இந்திய தலைவர்களின் செயல்கள் மிகவும் வெட்கப்படத்தக்கவை. இதற்குமேல் சொல்லாமல் இருப்பதே நல்லது. இதே தலைவர்கள்தான் இந்தியாவிற்கு விடுதலை பெற்றுத்தரும் சவாலை ஏற்றுக் கொண்டவர்கள்.

‘பொது தேசியம்’… ‘சுயராஜ்ஜியம்’… ‘சுயராஜ்ஜியம்’… என்று முழக்கமிடுவதில் ஒருபோதும் இவர்கள் சோர்ந்துவிடவில்லை. இந்த முழக்கங்களுக்குப் பின்னால் அவர்கள் தங்களை மறைத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால், இப்போது மத குருட்டுத்தனத்தின் அலையில் அடித்துச் செல்லப்படுகிறார்கள். இப்படி மறைத்துக் கொண்டிருந்தோரின் எண்ணிக்கை மிகக் குறைவானது. ஆனால், இந்த மதக்கலவரத்தில் கலந்து கொண்டவர்களை சுரண்டிப் பார்த்தால் நூற்றுக்கணக்கானவர்களின் உண்மை முகம் வெளிப்படும். மிகக் குறைவான தலைவர்களே இதயத்தின் அடியாழத்திலிருந்து மக்களின் நலன்களை விரும்பியவர்கள். மதவாதம் ஒரு பிரளயம் போல இவர்களெல்லாம் தாக்குப்பிடிக்க முடியாத அளவிற்கு அடித்துச் சென்றிருக்கிறது. இந்தியாவின் தலைமை திடீரென்று ஒன்றுமற்றவர்களாகத் தெரிகிறார்கள். இந்த மதக் கலவரத்தை எண்ணை ஊற்றி நெருப்பு மூட்டியவர்களில் மற்றொரு பகுதி பத்திரிக்கைக்காரர்கள்.

ஒரு காலத்தில் பத்திரிக்கை நடத்துவது என்பது மிகப் பெரிய கவுரமாகப் பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது மிகக் கேவலமான நிலைக்குத் தாழ்ந்திருக்கிறது. இவர்கள் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து கோபமூட்டும் தலைப்புகளை வெளியிடுகிறார்கள். மக்களை ஒருவரோடு ஒருவர் மோதுவதற்கான வெறியைத் தூண்டுகிறார்கள். இது கலவரத்திற்கு இட்டுச் செல்கிறது. இது ஒன்றிரண்டு இடங்களில் நடைபெறவில்லை. பெரும்பாலான இடங்களில் நடந்த கலவரங்கள் பத்திரிக்கைகள் மிக மோசமான கட்டுரைகளை எழுதியதன் காரணத்தினாலே நடந்திருக்கின்றன. சில எழுத்தாளர்கள் நிதானமாகவும் அமைதியாகவும் இந்த நாட்களில் கூட இருந்திருக்கிறார்கள்.

பத்திரிக்கைகளின் உண்மையான கடமை கற்றுக் கொடுப்பது. மக்களிடமுள்ள குறுகிய மனப்பான்மையைப் போக்குவது. மத உணர்வுகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பது. பரஸ்பர புரிதலை ஊக்குவிப்பது. இவற்றோடு பொது இந்திய தேசியத்தை உருவாக்குவது. ஆனால், அவர்களுடைய பிரதான பணியாக அறியாமையை பரப்புவதையும் குறுகிய மனப்பாங்கை போதிப்பதையும் பரஸ்பர சந்தேகத்தை விதைப்பதையும் அதன்மூலம் கலவரத்தை உருவாக்கி இந்திய பொது தேசியத்தை அழிப்பதாக மாறியிருக்கிறது. இந்தக் காரணத்தில்தான் நமது கண்களிலிருந்து கண்ணீராக ரத்தம் வழிந்து கொண்டிருக்கிறது. இன்றைய இந்தியாவின் நிலையைப் பார்த்து நமது இதயத்தில் எழுகிற கேள்வி ‘இந்த நாடு என்னவாகப் போகிறது?’

ஒத்துழையாமை இயக்கத்தின் எழுச்சியையும் உற்சாகத்தையும் அறிந்த தலைவர்கள் இன்றைய நிலை பார்த்து அழுது கொண்டிருக்கிறார்கள். அந்த நாட்களில் இந்த உற்சாகங்களால் அவர்கள் கண்ணுக்கு முன்பாக விடுதலை வந்துவிட்டது போன்ற தோற்றமிருந்தது. ஆனால், இன்று…

சுயராஜ்ஜியம் என்கிற நோக்கம் இப்போது ஒரு கனவைப் போலத் தோன்றுகிறது. மதக் கலவரங்களால் கொடுங்கோலர்களுக்கு சாதகமான நிலை உண்டாகிறது. எந்த அதிகாரிகள் அவர்களுடைய இருப்பு குறித்தே ஐயம் கொண்டிருந்தார்களோ அவர்கள் மிக ஆழமாக வேர்பதித்து நிற்கிறார்கள். அவர்களை அசைப்பது அத்தனை எளிதான காரியமாகத் தெரியவில்லை.

இந்த மதக்கலவரங்களின் வேர்களை நாம் நோக்கினால் அது பொருளாதாரக் காரணங்களாகவே இருக்கின்றன. தலைவர்களும் பத்திரிக்கையாளர்களும் ஒத்துழையாமை இயக்க காலத்தில் சொல்ல முடியாத தியாகங்களைச் செய்திருக்கிறார்கள். பொருளாதார ரீதியாகவும் அவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டார்கள். இந்த இயக்கம் தணிந்த பிறகு தலைவர்கள் மீதான நம்பிக்கை குறைய ஆரம்பித்தது. இதன் காரணமாக ஏராளமான மதத் தலைவர்களில் வேலைகளுக்கு வாய்ப்பில்லாமல் போனது.

உலகில் எந்தவொரு வேலையையும் எவரொருவரும் செய்தாலும் அது பசியைப் போக்குவதற்காகத்தான். கார்ல் மார்க்சின் மூன்று பிரதான கோட்பாடுகளில் இதுவும் ஒன்று. இந்தக் கோட்பாடுகளின் காரணமாகத்தான் தப்ளிக், தன்ஜீம், சுத்தி உள்ளிட்ட மத பழக்கவழக்கங்கள் துவக்கப்பட்டன. இந்தக் காரணத்தில்தான் இப்போது நாம் ஒரு பயங்கரமான சூழலில் மாட்டிக் கொண்டிருக்கிறோம்.

இந்த மதக்கலவரங்களுக்கு ஏதாவது ஒரு நிரந்தர தீர்வு இருக்குமென்றால் இந்தியாவின் பொருளாதார நிலைமையை மேம்படுத்துவதில் மட்டுமே அது இருக்கிறது. ஏனென்றால், இந்திய மக்களின் பொருளாதாரம் இன்று மிகவும் சீர்குலைக்கப்பட்டிருக்கிறது. எவரொருவரிடமும் நாலனா கொடுத்து இன்னொரு மனிதனை அவமானப்படுத்திவிட்டு வா என்று சொல்ல முடிகிறது. பசியாலும், கவலையாலும் துயருற்றிருக்கும் ஒரு மனிதன் எல்லாவிதமான தார்மீக நெறிமுறைகளையும் கைவிடுகிறான். அவனைப் பொறுத்தமட்டில் அது வாழ்வா சாவா பிரச்சினை.

ஆனால், இன்று பொருளாதார சீர்திருத்தம் இன்றைய சூழலில் மிகவும் கடினமானது. ஏனென்றால், இன்றைய அரசாங்கம் ஒரு அந்நிய அரசாங்கம். அந்த அரசாங்கம் மக்களின் வாழ்நிலையில் எந்த முன்னேற்றத்தையும் அனுமதிப்பதில்லை. இந்தக் காரணத்தினால் அனைத்து மக்களும் அவர்கள் அனைத்து சக்தியையும் திரட்டி அந்த அரசாங்கத்தைத் தாக்க வேண்டும். அந்த அரசாங்கத்தை முற்றிலுமாக மாற்றும் வரை ஓய்வெடுக்கக் கூடாது.

வர்க்க உணர்வு ஒருவருக்கொருவர் தங்களுக்குள்ளே மக்கள் சண்டை போட்டுக் கொண்டிருப்பதை நிறுத்துவதற்கு மிகவும் முக்கியமானதாகும். ஏழைத் தொழிலாளிகளும் விவசாயிகளும் அவர்களின் உண்மையான எதிரிகள் முதலாளிகள்தான் என்பதை புரிந்து கொள்ளும்படி செய்ய வேண்டும். அப்படிச் செய்வதன் மூலமாக முதலாளிகளின் விழாமல் அவர்களைத் தடுக்க முடியும்.

உலகத்தின் அனைத்து ஏழை மக்களுக்கு அவர்களின் சாதி எதுவாக இருந்தாலும் இனம் எதுவாக இருந்தாலும் இனம் எதுவாக இருந்தாலும் அல்லது தேசம் எதுவாக இருந்தாலும் ஒரே உரிமை படைத்தவர்கள். உங்களுடைய நலனின் பொருட்டே மதம் சார்ந்து, நிறம் சார்ந்து, இனம் சார்ந்து, தேசம் சார்ந்து கட்டியமைக்கப்பட்டுள்ள எல்லா பாகுபாடுகளும் ஒழிக்கப்பட வேண்டும். உங்களின் கைகளில் அரசாங்கத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த முயற்சிகள் உங்களை எந்த வகையிலும் பாதிக்காது. ஆனால், ஒரு நாள் உங்களை பிணைத்திருக்கும் சங்கிலிகள் நொறுக்கப்படும். நீங்கள் பொருளாதார விடுதலையைப் பெறுவீர்கள்.

ரஷ்ய வரலாற்றை அறிந்தவர்களுக்குத் தெரியும். ஜார் மன்னனின் ஆட்சியின் கீழ் இதே நிலைமைகள்தான் இருந்தன. அங்கே ஏராளமான குழுக்கள் இருந்தன. ஒருவர் காலை ஒருவர் வாரிவிட்டுக் கொண்டிருந்தார்கள். ஆனால், தொழிலாளர்களின் புரட்சி நடந்த தினத்திலிருந்து அவர்களின் நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. தற்போது அங்கு எந்தக் கலவரங்களும் இல்லை. அங்கு ஒவ்வொருவரும் மனிதனாக மதிக்கப்படுகிறார்கள். ஒரு மதத்தைச் சார்ந்தவர்கள் அல்ல. ஒவ்வொரு மனிதனும் மதிக்கப்படுகிறார்கள். ஜார் காலத்தில் மக்களின் பொருளாதார நிலைமை மிகப் பரிதாபமாக இருந்தது. அதன் காரணமாகவே கலவரங்கள் வெடித்தன. ஆனால், இப்போது ரஷ்யர்களின் பொருளாதார நிலைமை மேம்பட்டிருக்கிறது. அவர்களுக்கு வர்க்க உணர்வு வந்திருக்கிறது. அங்கிருந்து கலவரம் பற்றிய எந்த செய்தியும் இப்போது இல்லை.

இந்தக் கலவரங்களைப் பற்றி கேள்விப்படுகிற போதெல்லாம் இதயம் கணக்கிறது. ஆனால், கல்கத்தா கலவரங்களின் போது பாராட்டத்தக்க சில விசயங்களையும் நாம் கேள்விப்படுகிறோம். தொழிற்சங்கங்களின் ஊழியர்கள் அந்தக் கலவரங்களில் ஈடுபடவில்லை. தொழிற்சங்க உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்ளவில்லை. அனைத்து இந்து மற்றும் முஸ்லீம்கள் சாதாரண காலங்களைப் போலவே அவர்கள் பணிபுரியும் ஆலைகள் ஒருவருக்கொருவர் இயல்பாக நடந்து கொண்டார்கள். பல இடங்களில் கலவரங்களை நிறுத்த அவர்கள் முயற்சித்திருக்கிறார்கள். இது எப்படி நடந்ததென்றால் அவர்களிடம் வர்க்க உணர்வு இருந்தது. எது அவர்களது வர்க்கத்திற்கு பயனளிக்கும் என்பதை அவர்கள் புரிந்து கொண்டிருந்தார்கள். இந்த அழகான வர்க்க உணர்வு வழிதான் மதக்கலவரங்களை தடுக்கும் சக்தி கொண்டது.

இப்போது ஒரு சந்தோசமளிக்கும் செய்தி கிடைத்திருக்கிறது. இந்தியாவின் இளைஞர்கள் பரஸ்பர வெறுப்பையும் மோதலையும் உருவாக்கும் மதங்களின்பால் நம்பிக்கை இழந்திருக்கிறார்கள். அந்த மதங்களை கைகழுவ முடிவு செய்திருக்கிறார்கள் என்பதுதான் அந்த செய்தி. எத்தனை முற்போக்கானவர்கள் இவர்கள். அவர்கள் இந்திய மக்களை மதத்தின் கண்கொண்டு பார்க்கவில்லை. இந்துவாக, முஸ்லீமாக, சீக்கியர்களாகப் பார்க்கவில்லை, அவர்களை மனிதாகப் பார்க்கிறார்கள். இந்த தேசத்தின் குடிமக்களாகப் பார்க்கிறார்கள். இந்திய இளைஞர்களிடம் இத்தகைய உணர்வின் தோற்றம் நமக்கு நம்பிக்கை தருகிறது. ஒரு பொன்னான எதிர்காலம் நமக்கு காத்திருக்கிறது. இந்தக் கலவரங்களைப் பற்றி இந்திய மக்கள் கவலைப்படத் தேவையில்லை. அதேசமயம் இத்தகைய மோதல் சூழ்நிலை வராமலிருப்பதை தடுப்பதற்கு தயார் நிலைக்கு தங்களை தயார் செய்து கொள்ள வேண்டும். எந்தக் காலத்திலும் கலவரங்கள் நடக்கவே கூடாது.

1914-15ம் ஆண்டுகளில் நமது தியாகிகள் மதத்தை அரசியலிலிருந்து பிரித்திருந்தார்கள். மதம் தனிப்பட்ட மனிதனின் நம்பிக்கை என்று நம்பினார்கள் அவர்கள். அந்த நம்பிக்கையில் யாரும் தலையிடக் கூடாது என்றும் கூறினார்கள். அதேசமயம், யாரும் அரசியலுக்குள் மதத்தைத் திணிப்பதை அனுமதிக்கவில்லை. ஏனென்றால் மதம் மக்களை இணைப்பதில்லை அல்லது ஒன்றாகப் பணிபுரிய அனுமதிப்பதில்லை. இந்தக் காரணத்தினால்தான் கதார் கட்சி வலுவாக இருந்தது. ஒரே நோக்கோடு அது தூக்குமேடையாக இருந்தாலும் அதற்கு செல்வதற்கு சீக்கியர்கள் தயாரா இருந்தார்கள். இந்துக்களும் முஸ்லீம்களும் கூட இதில் பின்தங்கியவர்களாக இல்லை.

நிகழ்காலத்திலும் இந்திய தலைவர்களில் சிலர் அரசியலிலிருந்து மதத்தைப் பிரிக்க வேண்டுமென்று விரும்புகிறார்கள். இது ஒரு அற்புதமான தீர்வு. இதுவே ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்வதைத் தடுக்கும். அதனால் இதை நாம் ஆதரிக்கிறோம்.

மதம் அரசியலிலிருந்து பிரிக்கப்பட்டால் நாம் அனைவரும் வெவ்வேறு மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் அரசியலாக ஒன்றிணைவோம்.

இந்தியாவின் உண்மையான தேசபக்தர்கள் இந்தத் தீர்வை ஏற்றுக் கொள்வார்கள் என்று நாம் நினைக்கிறோம். இதன்மூலம் இந்தியா சுய அழிப்பிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும்.

நாம் உறுதியாக நம்புகிறோம், காங்கிரஸ் கட்சியின் தொழிலாளர் மற்றும் விவசாய அமைப்புக்களில் வர்க்க உணர்வு ஏற்படும் என்று. ஏனென்றால் இதுதான் மதக்கலவரங்களை தடுப்பதை விரைவுபடுத்தும்.

(குறிப்பு; இது தி ஒயர் இணையதளத்தில் பிரசுரிக்கப்பட்ட கட்டுரை. 1927ம் ஆண்டு கீர்த்தி என்கிற பத்திரிக்கையில் தோழர் பகத்சிங் மதவாரியான கலவரங்களும் அவற்றிற்கான தீர்வுகளும் என்ற தலைப்பில் எழுதியது)

https://thewire.in/history/bhagat-singh-reader-extract-religious-riots
தமிழில்: தோழர் க.கனகராஜ்

Check Also

உழைப்புச் சுரண்டலுக்கும், பாலியல் சீண்டலுக்கும் எதிராகப் போராடியதற்காக தூக்கிலிடப்பட்ட சின்னியம்பாளையம் தியாகிகள் நினைவு தினம்!

வரலாற்றில் எத்தனையோ முக்கிய நிகழ்வுகளை கண்டுள்ளது கோவை நகரம். ஆனால், அவற்றில் ஒரு சில நிகழ்வுகளே, உலகறியச் செய்தவை. அப்படிப்பட்ட ...