மதவெறியின் அபாயங்கள் – தோழர் உ.வாசுகி

விருதுநகர், நவ,23,-

அருப்புக்கோட்டையில் மக்கள் ஒற்றுமை காத்திட, இந்திய சமூக விஞ்ஞான கழகம் சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்க்சிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.தாமஸ் தலைமையேற்றார். போஸ்பாண்டியன் அறிமுக உரையாற்றினார். பகுத்தறிவாளர் கழகத்தின் ஆனந்தன், தமிழ்ப்புலிகள் அமைப்பின் கலைவேந்தன், மதிமுக நகரச் செயலாளர் மணிவண்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகர செயலாளர் குருசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயலாளர் செயதில்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயலாளர் காத்தமுத்து ஆகியோர் மதவெறி, சாதி வெறிக்கு எதிராக கருத்துரையாற்றினர்.

நூல் வெளியீடு :

“மௌனத்தின் சாட்சியங்கள்“ என்ற நூல் வெளியிடப்பட்டது. நூலை அறிமுகம் செய்து ஆயை. மு.அ.காஜாமைதீன் பேசினார். ஆசிரியர் சம்சுதீன்ஹீரா ஏற்புரை வழங்கினார்.

பின்பு, 21 பேர் கொண்ட மக்கள் ஒற்றுமை பாதுகாப்புக் குழு அமைக்கப்பட்டது.

முடிவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் மதவெறியின் அபாயங்கள் குறித்து சிறப்புரையாற்றினார். ஐ.மாடசாமியின் சமூக சீர்திருத்த பாடல்கள், மதிக்கண்ணன் குழுவினரின் நாடகம் ஆகியவை நடைபெற்றன.

தோழர் உ.வாசுகி பேச்சு

பல அப்பாவி இஸ்லாமிய இளைஞர்கள் மும்பை, கோவை உள்ளிட்ட பல சிறைச்சாலைகளில் தங்களுடைய இளமைக் காலத்தை கழித்து வருகின்றனர். செய்யாத தவறுக்கு தண்டனை அனுபவிப்பது நியாயமல்ல. தமிழகத்தில் உள்ள நாகூர் தர்காவிற்கும் வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் வழிபடச் செல்வது வழக்கம். அதேபோல வேளாங்கன்னி மாதா ஆலயத்தில் உள்ள அன்பளிப்பு பொருட்கள் இதர மதத்தை சேர்ந்தவர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேறியதற்காக வழங்கியதாகும். தனது குழந்தைக்கு உடல்நிலை சரியில்லையென்றால், மத வித்தியாசம் பார்க்காமல், பலரும் பள்ளிவாசலுக்கே செல்வார்கள். அவர்களுக்கு அங்கே உள்ளவர்கள் உதவி புரிகின்றனர்.

தற்போது இந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிரான கருத்துக்கள் முன்னுக்கு வந்துள்ளது. எனவே, மக்கள் ஒற்றுமை என்பதை மீண்டும் பேச வேண்டும். பாபர் மசூதி இடிக்கப்பட்டது. தாப்ரியில் மனிதம் இடிக்கப்பட்டது. இடித்தவர்கள் யார்? சங்பரிவார் மற்றும் ஆர்.எஸ்.எஸ் தலைமையிலான அமைப்புகள் இதில் ஈடுபட்டுள்ளன. முகமது இஸ்லாக் ஏன் கொலை செய்யப்பட்டார். மக்கள் பிரிந்தே இருக்க வேண்டும் என்பதற்காக இதைச் செய்கின்றனர்.

முன்பு, ஒரிசாவில் கன்னியாஸ்திரிகள் கற்பழிக்கப்பட்டனர். தனது இரு குழந்தைகளுடன் வண்டியில் தூங்கிக் கொண்டிருந்த பாதிரியார் எரித்துக் கொல்லப்பட்டார். தாப்ரி டெல்லியில் இருந்து 50 கி.மீ தூரத்தில்தான் உள்ளது. அங்கு இதற்கு முன்பு மதக் கலவரங்கள் வந்தது இல்லை. ஹிமாச்சல பிரதேசத்தில் மாடுகளை வாங்கி வந்தவர் அடித்தே கொல்லப்படுகிறார். அதை வாட்ஸ் அப்பில் அனுப்பியுள்ளனர். மாடுகள் மேல் இவர்களுக்கு என்ன அக்கறை?

நோயுற்ற மாடுகளை பாதுகாக்க, வயதான மாடுகளை பாதுகாக்க இவர்கள் எதுவும் செய்வதில்லை. பசு தாய் போன்றது என இவர்கள் கூறுவது வெறும் பசப்பு வார்த்தைகளே. மாட்டை வைத்து அரசியல் செய்வதுதான் இவர்களது நோக்கம். 2 முக்கிய மாட்டுக் கறி ஏற்றுமதி நிறுவனங்களை நடத்துவது பிஜேபியினர்தான். சங்கீத் சோம் என்ற பிஜேபி அமைச்சர் அப்துல்லா அல் என்ற பெயரில் மாட்டுக்கறி ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார். அதற்கான ஆதரத்தை பத்திரிக்கை ஒன்று வெளியிட்டது. தாங்கள் லாபம் சம்பாதிக்க எதை வேண்டுமானாலும் அரசியல் செய்வார்கள் பிஜேபியினர்.

மாட்டுக்கறி சாப்பிடுவேன் என கர்நாடக முதல்வர் கூறியதும், கழுத்தை அறுப்பேன் என தைரியமாக கூறுகின்றனர். ஒரே குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் ஒரே மாதிரி உணவுப் பழக்கம் உடையவர்களாக இல்லை.

அரசியல் சாசனத்தில் சத்தியம் செய்து விட்டு, பதவிக்கு வருபவர்கள், சட்டத்தை மதிக்காமல் செயல்படுகின்றனர். பாஜக எம்.பியின் பேச்சையடுத்து, மீரட்டில் 28 வயது நிரம்பிய கர்ப்பினி பிரசவத்தின் போது இறந்துபோனார். இதையடுத்து, அவரை புதைத்தனர். அந்த உடலை தோண்டி எடுத்து வல்லுறவு செய்துள்ளனர். மதத்தில் நம்பிக்கை இல்லாதவர்கள் பேசாமல் இருப்பது சரியல்ல. வெறியூட்டும் பேச்சுக்கு எதிராக, அனைவரும், ஒற்றுமைக்கு ஆதரவாக பேச வேண்டும்.

இவ்வளவு சம்பவங்கள் நடைபெற்ற போதும், நரேந்திரமோடி வாய் திறப்பதில்லை. நாடாளுமன்றத்தில், சொத்தில் சரிபாதி பெண்களுக்கு எனச் சட்டம் கொண்டு வந்தபோது, அதை எதிர்த்தவர்கள் இந்து மகா சபையினர். அரசியல் அமைப்புச் சட்டத்தில் மனுவின் கோட்பாடு ஒன்று கூட இல்லையென ஹோல்வார்க்கர் கூறியுள்ளார். எனவே, மத ஒற்றுமைக்கு ஒன்று சேர்ந்து அனைவரும் போராட வேண்டும். மக்கள் ஒற்றுமையை அரணாக இருந்து பாதுகாக்க வேண்டும்.

Check Also

வாழ்விழந்த மக்களுக்கு வாழ்விடம் கோரிய போராட்ட பயணத்தடம்…

PDF பதிவிறக்கம் செய்யDownload பெருநகர சென்னை மாநகராட்சி, 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளப் பெருக்குக்கு சென்னையை சுற்றியுள்ள நீர்நிலைகளை ஆக்கிரமித்து ...