மதவெறி சக்திகளை எதிர்ப்பவர்களை கைது செய்வதா? சிபிஐ(எம்) கண்டனம்

மத்தியில் ஆளும் பாஜக அரசு, வேலையின்மை, விவசாய நெருக்கடி, தொழில் நசிவு ஆகியவற்றால் அம்பலப்பட்டு, கூட்டணிக் கட்சிகளிடமிருந்தும் மக்களிடமிருந்தும் தனிமைப்பட்டுள்ள நிலையில், ஆர்.எஸ்.எஸ் பரிவார அமைப்புகளில் ஒன்றான வி.ஹெச்.பி மூலம் ‘ராம ராஜ்ய யாத்திரை’ என்கிற பெயரில் இந்தியா முழுவதும் கலவரக் கருத்துகளை விதைக்க முயற்சித்து வருகிறது. சாதாரணமாக அரசியல் கட்சிகள் மற்றும் பொதுஜன அமைப்புகளின் சார்பில் ஆர்ப்பாட்டம், ஊர்வலம், பொதுக்கூட்டம் நடத்துவதற்கு அனுமதி மறுத்து வரும் தமிழக அரசு,  இந்த ரத யாத்திரைக்கு அனுமதி அளித்துள்ளது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

இன்று அந்த யாத்திரை கேரளத்திலிருந்து தமிழக எல்லைக்குள் நுழையும் இடத்தில், பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து இயக்கம் நடத்த திட்டமிட்டிருந்தனர். இது அவ்வமைப்புகளின் ஜனநாயக உரிமையாகும்,  இந்த நிலையில் ஆர்ப்பாட்டம் நடத்த உத்தேசித்திருந்த அமைப்புகளின் தலைவர்களை தமிழக காவல்துறை கைது செய்துள்ளதுடன், திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவையும் பிறப்பித்துள்ளது. சிலர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில் முதல்நாள் இரவே கைது செய்யப்பட்டுள்ளார்கள். இத்தகைய ரத யாத்திரைகள் கலவரத்தைத் தூண்டி மக்களிடம்

பிளவை ஏற்படுத்துவதையே நோக்கமாகக் கொண்டவை என்பது கடந்தகால அனுபவம். இந்த நிலையில் யாத்திரைக்கு அனுமதி கொடுத்துவிட்டு, எதிர்ப்பு தெரிவித்து இயக்கம் நடத்துவோரைக் கைது செய்திருப்பதும். சட்டமன்றத்தில் இப்பிரச்சனையை எழுப்பிய திமுக செயல்தலைவரும், எதிர்க் கட்சித் தலைவருமான திரு. மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக மற்றும் எதிர்க் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களைக் கூண்டோடு வெளியேற்றியதையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. கைது செய்யப்பட்ட அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது.

மேலும், சமூகப் பதட்டத்தை உருவாக்கும் வகையில், புதுக்கோட்டை மாவட்டத்தில், தந்தை பெரியாரின் சிலை உடைக்கப்பட்டுள்ளது. பாஜகவின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா தமிழகத்தில் பெரியார் சிலை உடைக்கப்படும் என்று சொன்ன பிறகும், வி.ஹெச்.பி ரத யாத்திரையை ஒட்டியும் பெரியார் சிலை உடைக்கப்பட்டிருப்பது சங்பரிவாரத்தின் கெட்ட உள்நோக்கத்தை வெளிப்படுத்துவதாகவே அமைந்திருக்கிறது.

கடந்த முறை சிலை உடைப்பை தூண்டும் விதத்திலும், நியாயப்படுத்தும் விதத்திலும் சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட ஹெச்.ராஜா மீது உரிய முறையில் சட்டப்படியான நடவடிக்கை எடுக்காதது சமூக விரோத சக்திகளுக்கு தெம்பை அளித்துள்ளது. எனவே, தமிழக அரசு பாஜகவுக்கு விசுவாசம் காட்டுவதை மட்டுமே தன்னுடைய அரசின் கடமையாக கொண்டிருப்பதை கைவிட்டு சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் வகையில் தவறிழைக்கும் மதவெறி அமைப்புகள் மற்றும் நபர்கள் மீது உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்துகிறோம்.

மேலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழுக்கள்,  அனைத்து மாவட்டங்களிலும், இதர ஜனநாயக சக்திகளோடு இணைந்து கண்டன இயக்கங்களை நடத்த வேண்டும் எனவும், தமிழகத்தில் ஜனநாயக சக்திகளும், மதச்சார்பற்ற அமைப்புகளும் இதற்கெதிராக தங்கள் வலுவான எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது.

Check Also

கொரோனா பரவலை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தி தலைமைச் செயலாளருக்கு – கே.பாலகிருஷ்ணன் கடிதம்

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை தடுத்திட போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும், அனைத்து வயதினருக்கும் தடுப்பூசி செலுத்திட ...