மதுரை உயர்நீதிமன்ற தீர்ப்பின் படி ஜெயராஜ், பென்னிக்ஸ் வழக்கை- கொலை வழக்காக மாற்றுக!

ஆறுமாத காலத்திற்குள் வழக்கை முடித்து குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் – சிபிஐ (எம்) கட்சி வலியுறுத்தல்!!

சாத்தான்குளம் காவல்நிலையத்தில் சித்தரவதைக்குள்ளாக்கப்பட்டு மரணமடைந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை சுயமாக முன்வந்து  விசாரணை நடத்தியது. அவ்விசாரணையின் இறுதிகட்ட உத்தரவு நேற்று (30.6.2020) வெளியிடப்பட்டது. மதுரை உயர்நீதிமன்றத்தினுடைய இந்த உத்தரவு சாத்தான்குளம் காவல்நிலையத்தில் நடந்துள்ள அக்கிரமங்கள், அநியாயங்களையும் அது தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளையும் மிகத் துல்லியமாக தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது வரவேற்கத்தக்கது. இந்த உத்தரவு பிறப்பித்த நீதிபதிகளுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

மதுரை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் சத்தான்குளம் காவல்நிலையத்தில் கோவில்பட்டி, முதலாவது நீதிமன்ற நடுவர் திரு. பாரதிதாசன் அவர்களை காவல்துறையினர் அவமானப்படுத்தும் வகையில் நடந்துள்ள விபரங்களை அவர் அறிக்கையாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். அவ்வறிக்கையில், காவல்நிலையத்திலிருந்த போலீசார் தனது விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை எனவும், உரிய மரியாதை கொடுக்கவில்லை எனவும், தன்னை அவமானப்படுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார். காவலர் பரந்தமான் மிக கீழ்த்தரமான முறையில் நீதிபதியை திட்டியதையும் தனது அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

காவலர்கள் பயன்படுத்திய தடிகளையும் கொடுக்க மறுத்ததோடு, அங்குள்ள ரத்தக் கறைகளையும் அழிப்பதற்கு முயற்சித்துள்ளனர். இது காவல்நிலையத்திலிருந்த வீடியோ காட்சிகளும் அழிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அனைத்திற்கும் மேலாக நீதிபதியின் விசாரணைக்கு ஒத்துழைக்க வந்த தலைமைக் காவலர் ரேவதி மிரட்டப்பட்டதாகவும், அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் தனது விசாரணை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இவைகளிலிருந்தே சாத்தான்குளம் காவல்நிலையத்தில் பணியிலிருந்த காவல்துறையினர் எப்படிப்பட்டவர்கள் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

விசாரணைக்கு வந்த நீதிபதியையே இவ்வளவு கேவலப்படுத்திய காவல்துறையினர், காவல்நிலையத்திற்கு வந்த அப்பாவி பொதுமக்களை எப்படி நடத்தியிருப்பார்கள் என்பதற்கு விளக்கம் தேவையில்லை. இந்த கொலைகாரர்கள் கையில் தான் பென்னிக்சும், ஜெயராஜூம் கொடுமையான சித்தரவதைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்கள். இவையெல்லாம் அழுத்தமாக குறிப்பிட்ட மதுரை உயர்நீதிமன்ற கிளை, இவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்துள்ளது.

சாத்தான்குளம் காவல்துறையினரின் அராஜகமான இந்த போக்குகள் குறித்து நீதிபதி அறிக்கை தாக்கல் செய்துள்ள நிலையில் இதுபற்றி காவல்துறைக்கு பொறுப்பான தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி வாய்த்திறக்க மறுத்து வருகிறார். முன்னர், பென்னிக்சும், ஜெயராஜூம் மூச்சு திணறலில் இறந்துள்ளதாக குற்றமிழைத்த காவல்துறையினரின் குரலாக பேட்டியளித்த முதலமைச்சர், இதுவரையில் மேற்கண்ட காவல்துறையினர் மீது குறைந்தபட்ச நடவடிக்கை கூட எடுக்காமல் இருப்பது ஏன்?. நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒருபக்கம் இருந்தாலும் மேற்கண்ட சம்பவங்கள் அடிப்படையில் இக்காவலர்கள் மீது இப்போதாவது தமிழக முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பாரா என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

இவ்வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பில் பிரதே பரிசோதனை அறிக்கையில் காணப்படும் காயங்களை பார்க்கும் போது, இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றுவதற்கான முகாந்திரம் உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. சிபிஐ பல கட்ட அனுமதிகளை பெற்று விசாரணையைத் தொடங்குவதற்கு கால தாமதமாகும். இச்சம்பவத்தில் ஒரு நிமிடம் கூட தாமதிப்பது கூடாது என்ற நோக்கில் உடனடியாக சிபிசிஐடி அதிகாரி அனில்குமார் அவர்கள் விசாரணை மேற்கொள்ள வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த விசாரணையை உயர்நீதிமன்றம் தொடர்ந்து கண்காணிக்கும் எனவும் கூறியுள்ளது. கணவனையும், மகனையும் பறிகொடுத்து தவிக்கும் திருமதி செல்வராணியின் குடும்பத்தினருடைய கண்ணீரைத் துடைக்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது என்பதையும் நீதிபதிகள் பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி, குற்றமிழைத்த காவல்துறையினர் உட்பட அனைவரையும் கைது செய்ய வேண்டுமென ஒத்தக்குரலில் தமிழகம் ஒலித்த போது, அதை தமிழக அரசு செவி கொடுக்க மறுத்துவிட்டது. ஆனால் முன்னெப்போதும் இல்லாத வகையில் இவ்வழக்கில் மதுரை உயர்நீதிமன்றம் கொலை வழக்காக பதிவு செய்ய முகாந்திரம் உள்ளது என உத்தரவிட்டுள்ளது.

வரலாற்றிலேயே முதன்முறையாக ஒரு காவல்நிலையத்தை வருவாய்த்துறையினர் கையகப்படுத்த வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டு, தற்போது வருவாய்த்துறையினர் காவல்நிலையத்தை கையகப்படுத்தியுள்ளனர்.  இவைகளிலிருந்தாவது தமிழக முதலமைச்சர் உரிய படிப்பினைகளை பெற்றுக் கொள்ளுவாரா என்பதே கேள்வி.

சிபிசிஐடி போலீசார் உடனடியாக இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும். சத்தான்குளம் காவல்நிலையம் துவங்கி, அரசு மருத்துவமனை, சாத்தான் குளம் நடுவர் நீதிபதி, கோவில்பட்டி சிறைச்சாலை அதிகாரிகள் உள்ளிட்ட இதில் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும். மூன்று மாத காலத்திற்குள் இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, ஆறுமாத காலத்திற்குள் இவ்வழக்கை முடித்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரும் வகையில் சிபிசிஐடி காவல்துறை துரிதமாக செயல்பட வேண்டுமென வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.

இதே கோரிக்கைகளை முன்வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்டக்குழு சார்பில், மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவும் நிலுவையில் உள்ளது. அடுத்தடுத்து நடைபெறும் வழக்கு விசாரணையில் சிபிஐ (எம்) கட்சியின் சார்பில் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் வாதிடுவார்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

பாதிக்கப்பட்ட ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்திற்கு நீதி கிடைக்கும் வரை அரசியல் கட்சிகளும், பல்வேறு ஜனநாயக சக்திகளும், தொண்டு அமைப்புகளும், வழக்கறிஞர்களும் இணைந்து செயலாற்ற வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

கே. பாலகிருஷ்ணன்

மாநிலச் செயலாளர்

Check Also

தடுப்பூசி உபகரண ஏற்றுமதி தடையை அமெரிக்கா நீக்க வேண்டும்; சிபிஐ(எம்) வலியுறுத்தல்

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொடர்பான தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதற்குத் தேவைப்படும் பல்வேறு துணைப் பொருட்களின் பற்றாக்குறையால் தேவையான அளவிற்கு தடுப்பூசிகள் ...