மதுரை நாடாளுமன்ற தொகுதி சிபிஐ(எம்) வேட்பாளர் சு.வெங்கடேசன் தொகுதி தேர்தல் அறிக்கை

மதுரை நாடாளுமன்ற தொகுதி

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசன் தொகுதி தேர்தல் அறிக்கை

மாமதுரை

வரலாறு – வளர்ச்சி – நவீனம்

இம் மூன்றும் ஒருங்கே அமையப் பெற்ற அரிய வாய்ப்புகளை உள்ளடக்கிய தொகுதியாக மதுரை உள்ளது. இத்தகைய உள்ளார்ந்த சக்தியை முழுமையாக வெளிக்கொணர்ந்து  மதுரையின் வளர்ச்சியிலும், மக்களின் வாழ்நிலையிலும் பிரதிபலிக்கச் செய்து, புதிய தலைமுறைக்கான மதுரையை உருவாக்குவதே எனது இலக்கு.

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் கட்சிகள் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டுள்ளன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய அளவிலான தேர்தல் அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது. எனவே எனது தேர்தல் அறிக்கை தொகுதி நலன், மேம்பாடு ஆகியவற்றை உள்ளடக்கியதாகவே மக்கள் முன் வைக்கப்படுகிறது.

வரலாற்று பாரம்பரிய நகரம்

இத்தாலியின் வெனிஸ் நகரத்திற்கு இணையான வரலாற்றுப் பாரம்பரியம் உடையது மதுரை. தமிழகத்தின் பண்பாட்டுத் தலைநகரமாக கொண்டாடப்படுகிற தகுதியையும் கொண்டது. கீழடியின் ஆய்வுகள் இதன் தொன்மையை நிறுவுகிற ஆதாரமாக அமையப் போகிறது. இதன் வரலாற்றை வளர்ச்சியோடு இணைக்கிற வகையில் எனது செயல்பாடுகள் அமையும்.

1. வரலாற்று பாரம்பரிய நகரம் (HISTORICAL HERITAGE CITY)

உலகப் பாரம்பரிய நகரமாக மதுரை அறிவிக்கப்பட வேண்டும். இதன் வாயிலாக வளர்ச்சிக்கான நிதியை மத்திய அரசு அதிகரிப்பதற்கும், யுனெஸ்கோ போன்ற சர்வதேச  நிறுவனங்களின் நிதியாதாரங்கள்  கிடைத்திடவும் பாடுபடுவேன்.

2. கீழடி – மனித நாகரிகத்தின் தாய்மடி

தொல் நகரமான மதுரைக்கான வரலாற்று ஆதாரங்கள் கீழடியைச் சுற்றி அல்லிநகரம், மணலூர், கொந்தகை, மாரநாடு ஆகிய கிராமங்களுக்கு அடியில் இருப்பதாக ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். புதைந்து கிடக்கிற அப்பெருநகரத்தை போதுமான நிதி ஒதுக்கீட்டோடு, நவீன தொழில்நுட்பங்களின் துணை கொண்டு அகழாய்வு செய்ய முயற்சிகளை மேற்கொள்வேன். ஆய்வுக் கண்டுபிடிப்புகளை மக்களிடம் கொண்டு செல்ல அருங்காட்சியகம் அமைக்கவும் பாடுபடுவேன்.

3. சுற்றுலா வளர்ச்சி

அன்னை மீனாட்சி ஆலயம் இலட்சக்கணக்கான பக்தர்களை ஈர்த்து வருகிற பழமையையும் பெருமையையும் உடையது. இராமேஸ்வரத்தை, கன்னியாகுமரியை இந்தியாவின் இதர பகுதிகளோடு இணைக்கிற புள்ளியாகவும் மதுரை விளங்குகிறது. ஆன்மீகச் சுற்றுலாவுக்கான கட்டமைப்புகளை மேம்படுத்துவதன் மூலம் வேலைவாய்ப்புகள், வணிகம் அதிகரிப்பதற்கும், மதுரை தெப்பக்குளத்தை சுற்றுலாவை ஈர்க்கிற, மேலும் எழில்மிக்கதாக மாற்றுவதற்குரிய எல்லா முயற்சிகளையும் மேற்கொள்வேன். அன்னை மீனாட்சி ஆலயத்தைச் சுற்றி பக்தர்கள் தங்குவதற்கும், ஓய்வெடுப்பதற்குமான கட்டமைப்பு வசதிகளை உறுதிப்படுத்த முயற்சிகளை எடுப்பேன்.

அழகர்கோவில், பழமுதிர்சோலை, சித்திரைத் திருவிழா, சமணர் குகைகள், ஆயிரம் கால் மண்டபம்  ஆகிய பாரம்பரியத் தலங்கள் தமிழ் மக்களின் உணர்வுகளோடு இரண்டறக் கலந்தவை. அவற்றின் பொலிவு மெருகேற்றப்படுவதோடு, கட்டமைப்பு மேம்பாடுகள் வாயிலாக இன்னும் பல லட்சம் பேரை மதுரையை நோக்கி ஈர்ப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும். வணிகம், வாழ்வாதாரம் மேம்படும்.

திருமலை நாயக்கர் மஹால் உள்ளிட்ட மதுரையின் தொன்மைச் சின்னங்களை சுற்றுலா வளர்ச்சிக்கு உதவுகிற வகையில் மேம்படுத்த முயற்சிப்பேன்.

4. காந்தியின் அரையாடை நினைவுச் சின்னம்

காந்தியின் 150வது பிறந்த ஆண்டு நிறைவு பெறும் வேளையில் அவர் அரையாடைக்கு மாறிய வரலாற்று நினைவுச் சின்னம் அமைய  முயற்சிப்பேன்.

வளர்ச்சிக்கான வாய்ப்புகள்

மதுரை இதயம் போன்றும், 13 மாவட்டங்கள்  அதன் ரத்த நாளங்கள் போன்றும் திகழ்கின்றன. இரண்டு மணி நேரத்தில் மதுரை மாவட்டத்தோடு, இம்மாவட்டங்களின் எல்லைகள் தொடக் கூடியதாக உள்ளன. புவியியல் சார்ந்த இவ்வாய்ப்பு முழுமையாகப் பயன்படுத்தப்பட்டு தொழில் நகரமாகவும் மதுரை மாறுவதற்கு பாடுபடுவேன்.

1. மதுரைக்கு மெட்ரோ ரயில்

பிரதான வீதிகளெல்லாம்  போக்குவரத்து நெரிசலால் நிரம்பி வழிவதைத் தவிர்க்கவும், எதிர்கால விரிவாக்கத்திற்கு ஈடுகொடுக்கவும் மதுரைக்கு மெட்ரோ ரயில் திட்டத்தை உடனே கொண்டுவர முயற்சிகளை மேற்கொள்வேன்.

2. ரயில் சேவை விரிவாக்கம்

விரைவு ரயில் சேவைகள் இன்னும் பல மையங்களுக்கு விரிவாக்கப்பட பாடுபடுவேன். மதுரை – போடி ரயில் பாதை விரைவில் முடிப்பது, கூடல் நகர் ரயில் முனையம், நாகர்கோவில்-குமரி வரையிலான இருவழி ரயில் பாதை ஆகியவற்றை நிறைவேற்ற பாடுபடுவேன். தோழர் பி.மோகன் முன்னெடுத்த, தென்மாவட்டங்களின் வளர்ச்சிக்கு உதவக்கூடிய வகையில் கிழக்கு கடற்கரை வாயிலாக தூத்துக்குடி-சென்னை ரயில் பாதை அமைக்கப்படவும், மதுரை-அருப்புக்கோட்டை-தூத்துக்குடி ரயில் வழிப்பாதை அமைந்திடவும் வலியுறுத்துவேன்.

3. மதுரை – தூத்துக்குடி தொழில் வளமைச்சாலை (MADURAI – THOOTHUKUDI INDUSTRIAL CORRIDOR)

இது நீண்ட காலமாக பேசப்பட்டாலும் நடைமுறைக்கு வரவில்லை. கோவை, திருப்பூரில் உற்பத்தியாகும் பொருட்கள் மதுரை வழியாகத்தான் துhத்துக்குடி துறைமுகத்திற்கு எடுத்துச் செல்லப்படுகிறது. ஏற்கனவே கூறியது போன்று பல மாவட்டங்களை இணைக்கிற மையப்புள்ளியாகவும் மதுரை திகழ்கிறது. ஆகவே மதுரை-தூத்துக்குடி சாலையின் இருமருங்கிலும் தொழில் வளமைச்சாலை வாயிலாக தொழில்களை நிர்மாணிக்கவும், வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் பாடுபடுவேன்.

4. விமான நிலைய மேம்பாடு – விமானச் சேவை விரிவாக்கம்

2018ன் புள்ளிவிவரங்களின் படி விஜயவாடா, திருப்பதி, மங்களூர் போன்ற விமான நிலையங்களிலிருந்து அயல் பயணங்களை மேற்கொள்பவர்களை விட மதுரையிலிருந்து  செல்பவர்கள் மிக அதிகம். 2018 நிதியாண்டின் முதல் மூன்று காலாண்டுகளில் 2,54,000 பேர் பயணித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. 10 லட்சம் தென் தமிழக மக்கள் வளைகுடா நாட்டில் பணிபுரிகின்றனர். தென்கிழக்கு ஆசியா மற்றும் வளைகுடா நாடுகளுடன் இருவழிப்பாதை விமான சேவை உடன்பாடுகள் உருவாக்க பாடுபடுவேன். இதன் மூலம் POINT OF CALL வாய்ப்புகள் உருவாக்கப்பட்டு பயணங்கள் எளிதாக்கப்பட முயற்சிகளை மேற்கொள்வேன். சுங்க விமான நிலையமாக மட்டுமே தற்போது உள்ள மதுரை விமானநிலையம் உண்மையிலேயே சர்வதேச விமான நிலையமாக மாறுவதை உறுதி செய்ய முயற்சிகள் மேற்கொள்வேன். கொழும்பு, சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, வளைகுடா நாடுகளுக்கு பன்னாட்டு சேவைகளை மேலும் விரிவாக்கப் பாடுபடுவேன். 24 மணி நேரமும் செயல்படுகிற வகையில் உள்நாட்டு இணைப்புகளையும் மேம்படுத்த பாடுபடுவேன். சரக்கு ஏற்றுதல், இறக்குதலுக்கான 24*7 சேவையை உறுதி செய்கிற வகையில் ஏற்பாடுகள் செய்யப்படும். விமானநிலையத்தில் பயணிகளுக்கான எல்லா வசதிகளும் விமான நிலையத்திலேயே கிடைக்க ஏற்பாடு செய்வேன். மதுரை விவசாயிகளின் பூ, காய்கறி, பழம் ஏற்றுமதியை உறுதி செய்கிற வகையில் பூச்சியியல் அதிகாரிகளின் நிரந்தர  இருப்பை உறுதி செய்ய முயற்சி எடுப்பேன். இது எல்லா நாட்களிலும் ஏற்றுமதியை உறுதி செய்ய உதவும். இதற்கான தொடர் கவனமும், முயற்சிகளும் உறுதி செய்யப்பட முயற்சிப்பேன்.

5. சிறுதொழில் வளர்ச்சி

மதுரையின் பாரம்பரிய தொழில்களான நெசவு, இரும்பு பீரோ, கட்டில்கள், சில்வர் பாத்திரங்கள், சைக்கிள் ஸ்டாண்டு, சைக்கிள் கேரியர், கிரில் ஒர்க், அப்பளத் தொழில்கள் நசிந்துள்ளன. இத்தகைய சிறுதொழில்கள் பாதுகாக்கப்படவும், குறு சிறு தொழிலகங்கள் புதிதாய் உருவாகவும் தொடர் முயற்சிகளை மேற்கொள்வேன். ஜிஎஸ்டி, பண மதிப்பிழப்பு நீக்கத்தால் பாதிக்கப்பட்ட, முடக்கப்பட்ட சிறு தொழில்களுக்கு உரிய உதவிகள் கிட்டவும், உயிர்ப்பிக்கப்படவும் பாடுபடுவேன். கேபிள் டிவி ஆப்பரேட்டர்களின் பிரச்சனைகள் தீர்வதற்கு பாடுபடுவேன்.

6.  தூத்துக்குடி துறைமுக மேம்பாடு

கப்பல் சுற்றுலாவுக்கு உகந்த வகையில் தூத்துக்குடி துறைமுகத்தை மேம்படுத்த தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களை இணைத்து குரல் கொடுப்பேன். இது மதுரை தொகுதியின் வளர்ச்சிக்கும் உதவக் கூடியதாகும். தூத்துக்குடி உள்துறைமுக விரிவாக்கப் பணிகளை மத்திய அரசின் நிதி உதவியோடு மேற்கொள்வதோடு, அடுத்தகட்டமாக வெளி துறைமுக விரிவாக்கத்திற்கான முயற்சிகளையும் மேற்கொள்வேன். தூத்துக்குடி – உவரி – திருச்செந்தூர் – குமரி பயணிகள் படகு போக்குவரத்து உருவாக்குவதன் மூலம் தென் மாவட்டங்களின் சுற்றுலாவின் வளர்ச்சிக்கு வழிவகுப்போம்.

7. ரப்பர் தொழில் பூங்கா

மதுரை பகுதியில் 100க்கும் மேற்பட்ட ரப்பர் சார்ந்த தொழிலகங்கள் இருக்கின்றன. இதனை அடிப்படையாகக் கொண்டு ஓர் ரப்பர் தொழில் பூங்காவையும், ஆய்வு மற்றும் வளர்ச்சிக்கான கல்வியகங்களையும் (R&D INSTITUTES உருவாக்கப் பாடுபடுவேன்.

8. பெரும் தொழில்கள்

ஜவுளி, அலைபேசி, வாகனங்கள், கார் பேட்டரிகள், கனரக வாகன பராமரிப்பு உள்ளிட்ட பெரும் தொழிலகங்கள் அமையப் பாடுபடுவேன்.

9. பெரியார் அணை

அணையின் நீர்மட்டத்தை 152 அடிக்கு உயர்த்துவதன் மூலம் மேலுhர் பகுதி விவசாயத்தை பாதுகாக்கவும், விவசாயிகள் நலனை உறுதி செய்யவும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வேன்.

10. விவசாயம் சார்ந்த தொழில்கள்

விவசாயம் சார்ந்த தொழில்கள், மல்லிகைப் பூக்களுக்கு குளிர்பதன கட்டமைப்பு, நவீன சந்தைப்படுத்துதல் மேம்பாடு ஆகியன அமையப் பாடுபடுவேன்.

11. நிரந்தரக் குடிநீர் திட்டம்

மதுரை மாநகரின் தலையாய பிரச்சனை இது. புதிய குடிநீர்த் திட்டம் அறிவிக்கப்பட்டு நிதி ஏதும் ஒதுக்கப்படாமல் உள்ளது. அதனை நடைமுறைக்கு கொண்டு வர பாடுபடுவேன். நிலத்தடிநீர் பராமரிப்பு திட்டங்கள், குளங்களை மீட்டெடுத்தல், அறிவியல் ரீதியான நடைமுறைகள் உள்ளிட்டவற்றோடு மதுரை மக்களின் குடிநீர் தேவையை நிவர்த்தி செய்கிற நீண்ட காலத்திட்டத்தை நிறைவேற்ற பாடுபடுவேன். வைகை குடிநீர் திட்டத்தை மேம்படுத்துவேன்.

12. வைகை பாதுகாப்பு

மதுரையின் அடையாளம் வைகை. வைகை தூய்மை, மண்வளம் பாதுகாக்கப்பட உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்வேன்.

13. கிருதுமால் நதி மீட்பு

புராதன மதுரையின் குருதியோட்டமாக இருந்த கிருதுமால் நதியை மீட்டு, புனரமைத்து நீராதர பாதுகாப்பை உறுதி செய்ய முயற்சிகளை மேற்கொள்வேன்.

14. நீராதார பாதுகாப்பு

இல்லங்கள், தொழில்கள், பாசனம் ஆகியவற்றிற்கான நீராதாரத்தை பாதுகாப்பதே எதிர்கால வளர்ச்சிக்கான அடிப்படைத் தேவையாகும். நிலத்தடி நீர் மட்டம் உயர செல்லூர் கண்மாய், மாடக்குளம் கண்மாய், முத்துப்பட்டி வீரமுடையான் கண்மாய், வண்டியூர் கண்மாய், தென்கால் கண்மாய் உள்ளிட்ட அனைத்து கண்மாய்களில் நீர் சேகரிப்பு ஆகியவற்றினை உறுதி செய்ய பாடுபடுவேன்.

15. உயர்கல்வி மேம்பாடு

 • மதுரையில் இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி) அமையப் பாடுபடுவேன்.
 • மதுரைக்கு மத்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கழகத்தை (IISER) மதுரையில் நிறுவுவதற்கு பாடுபடுவேன்.
 • மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தை திறம்பட்ட கல்வி மையம் (Centre for Excellence) என அறிவித்து மத்திய அரசின் நிதி உதவி அதிகமாகக் கிட்ட பாடுபடுவேன்.
 • மதுரை விவசாயக் கல்லுhரி மற்றும் ஆராய்ச்சிக் கழகத்தை உயர் நவீன தொழில்நுட்ப உதவியோடு மேம்படுத்துவேன்.
 • மதுரைக்கு இந்திய மேலாண்மை கல்விக் கழகத்தை (IIM) கொண்டு வர முயற்சிப்பேன்.
 • உயர்தனிச் செம்மொழி வளர்ச்சி நிறுவனத்தின் கிளை மதுரையில் அமைய பாடுபடுவேன்.

16. கல்விக்கான கட்டமைப்பு:

மதுரை மாவட்டத்திலுள்ள கள்ளர் சீரமைப்புத்துறை பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகளை உறுதிப்படுத்தவும், மாநகராட்சி பள்ளிகளை தரம் உயர்த்திடவும் பாடுபடுவேன். ஆதி திராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கான அரசு மாணவர் விடுதிகள் நகரின் எல்கைக்குள், கல்வி நிலையங்களுக்கு அருகில் அமைவதை உறுதிசெய்ய முயற்சிப்பேன்.

17. மருத்துவ மேம்பாடு

 • சென்னை போன்ற மருத்துவ சுற்றுலா மையமாக மதுரையை மாற்றப் பாடுபடுவேன்.
 • பி.மோகன் எம்பி முதல் குரல் தந்த எய்ம்ஸ் மருத்துவமனை விரைவில் செயல்பாட்டுக்கு வருவதை உறுதி செய்வேன்.
 • ஏழை நடுத்தர மக்களின் உயிர்வாழும் உரிமையை உறுதிசெய்கிற வகையில் மதுரை ராசாசி மருத்துவமனையின் கட்டமைப்பு மேம்பாடு, நிதி ஒதுக்கீடு அதிகரிப்பு, பரிசோதனை இயந்திரங்களின் தரம், செயல்படுகிற நிலை, மருந்துகளின் இருப்பு, ஆம்புலன்ஸ் எண்ணிக்கை அதிகரிப்பு ஆகியவற்றை உறுதி செய்ய உரிய நடவடிக்கை எடுப்பேன். நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியை மாநகராட்சி மருத்துமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களின் கட்டமைப்பு மேம்பாடுகளுக்கு முன்னுரிமை அளித்து பயன்படுத்துவேன்.
 • மதுரை தென்மாவட்டங்களுக்கான மருத்துவ மையமாக இருப்பதால், நோயாளிகள், நோயாளிகளின் உதவியாளர்கள், மருத்துவ அனுமதி தவிர்த்த காலங்களிலும், அறுவைச் சிகிச்சை காலங்களிலும் தங்குவதற்கு குறைவான செலவில் இல்லங்கள் அரசால் அமைக்கப்பட முயற்சிப்பேன்.

18. மாநகரக் கட்டமைப்பு மேம்பாடு

 • பெரியார் நிலையத்திலிருந்து அனுப்பானடி வரை நீண்ட மேம்பாலம்,
 • அனுப்பானடி ரயில்வே கேட் மேம்பாலம்,
 • பழங்காநத்தம் பாலத்தின் பயன்பாடு மேம்படும் வகையில் மேம்படுத்துதல்,
 • வசந்த நகர் பாலத்தை இருவழியாக விரிவாக்கி பழங்காநத்தம் பாலத்தோடு இணைத்தல்,
 • தெப்பக்குளத்தில் நிரந்தரமாக தண்ணீர் சேமிக்கப்பட்டு நிழல் தரும் மரங்களை அதனைச் சுற்றி ஏற்படுத்துதல் ஆகியவற்றிற்கு பாடுபடுவேன்.
 • நகர்ப்புற ஏழைகளுக்கு அடுக்குமாடி குடியிருப்புகளைக் கட்டித்தர முயற்சிகளை மேற்கொள்வேன்.
 • மனிதக் கழிவை அகற்றவும், பாதாளச் சாக்கடை அடைப்புகளை அகற்றவும் ரோபோ தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்.
 • சென்ட்ரல் மார்க்கெட், குன்னத்தூர் சத்திரம் பணிகள் விரைவாக நிறைவேற பாடுபடுவேன்.
 • சுகாதார மேம்பாட்டில் கவனம் செலுத்துவேன். அடித்தள மக்கள் வாழும் பகுதிகளில் பட்டா மற்றும் அடிப்படை தேவைகளை உறுதி செய்தல் ஆகியவற்றிற்காக குரல் கொடுப்பேன்.

19. பாதாளச் சாக்கடைத் திட்டம்

விரிவாக்கப்பட்ட மாநகராட்சிப் பகுதிகளில் பாதாளச் சாக்கடைத் திட்டம் அடிப்படைத் தேவையாகும். அதற்கான முயற்சிகளை உடனடியாக மேற்கொள்வேன். ஏற்கனவே மாநகரில் அமைக்கப் பெற்ற பாதாள சாக்கடைத் திட்டத்தை பயன்பாட்டிக்கு ஏற்றவகையில் புனரமைத்திட உரிய நடவடிக்கைகளை எடுப்பேன். குடிநீர் இணைப்புகள் இல்லாத பகுதிகளில் அதனை உறுதிப்படுத்தவும் முயற்சிகள் எடுப்பேன்.

20. கிராமப்புற கட்டமைப்புகள்:

மும்முனை மின்சாரத்தை அனைத்து கிராமங்களுக்கும் வழங்குவதன் வாயிலாக மின் இழப்பைக் கட்டுப்படுத்துதல், மோட்டார் பழுதுகளைத் தவிர்த்தல் ஆகியவற்றை உறுதிசெய்ய முயற்சிகளை எடுப்பேன்.

மேலூர், ஒத்தக்கடை, பரவை, விளாங்குடி உள்ளிட்ட கிராமப்புற கண்மாய்கள் மற்றும் ஊரணிகளை உரிய காலங்களில் துhர்வாரி பராமரிப்பதற்கு முன்னுரிமை அளிப்பேன். கிராமப்புற கண்மாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி, நீர்வளம் காக்க, விவசாயம் பெருக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

21. நூறு நாள் வேலைத்திட்டம்:

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் நூறு நாள் வேலைகளை முழுமையாக உறுதிப்படுத்தவும், சட்டப்படியான கூலி கிடைத்திடவும், வறட்சி காலங்களில் வேலைநாட்களை 200 ஆக உயர்த்தவும், அக்காலங்களில் நாள் கூலியை ரூ.400 ஆகக் கிடைத்திடவும் வலியுறுத்துவேன். கண்மாய், ஊரணிகளை துhர் எடுக்க இயந்திரத் திணிப்பை தவிர்த்து மனித உழைப்பை பயன்படுத்தி வேலைவாய்ப்பை உறுதி செய்ய பாடுபடுவேன்.

22. அமைப்புசாரா உழைப்பாளிகள்:

கட்டுமானம், சாலையோர வியாபாரம், தையல், கை நெசவு உள்ளிட்ட முறைசாரா உழைப்பாளிகளுக்கு நலவாரிய சலுகைகளுக்கான நிபந்தனைகள் தளர்த்தப்படுவதற்கும், ஓய்வூதியம் கிடைப்பதற்கான வழிமுறைகளை எளிதாக்கவும், நலவாரியப் பயன்கள் முடக்கப்படுவதை தடுக்கவும் உரிய முயற்சிகளை மேற்கொள்வேன்.

நவீன மதுரை

கோவில் நகரம் தொழில்நகரமாக மட்டுமின்றி, நவீன நகரமாகவும் வளர்ச்சி அடைய வேண்டும். வேலைவாய்ப்புகளுக்காக தென்மாவட்ட இளைஞர்கள் மேற்கு நோக்கியும், சென்னை நோக்கியும் நகர வேண்டிய நிலை மாற்றப்பட வேண்டும். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் குறைபாடுகளை நீக்கி எல்லாத்தரப்பு மக்களையும், எல்லாப் பகுதிகளையும் எட்டுகிற வகையில் வடிவமைக்கப்படவும், மேம்படவும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வேன்.

 • மதுரை மாவட்ட வளர்ச்சிக்கான ஆலோசனைக் குழுவை தொழிலதிபர்கள், வணிக சங்கப் பிரதிநிதிகள், தொண்டு நிறுவனங்கள், சமூக சேவகர்கள், வரலாற்றாளர்கள் ஆகியோரை உள்ளடக்கி உருவாக்குவோம்.
 • இலந்தைக்குளம், வடபழஞ்சி நவீன தொழில்நுட்ப பூங்காக்கள் விரிவடைய உரிய முயற்சிகளை மேற்கொள்வேன். தற்போதைய மதுரையில் 150க்கும் மேற்பட்ட மென்பொருள் நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் இரண்டு மட்டுமே பெரிய நிறுவனங்கள். மற்றவை எல்லாம் சிறு, மிகச் சிறு நிறுவனங்கள். 5000 பேர் மட்டுமே பணிபுரிகிறார்கள். பெரும் நிறுவனங்களை ஈர்ப்பதன் மூலம் இவ்வேலை வாய்ப்புகளை கணிசமாக உயர்த்தப் பாடுபடுவேன். தரமான மதிப்புமிக்க வேலைவாய்ப்புகள் உருவாக பாடுபடுவேன்.
 • திறன் வளர்ப்பு கழகங்கள் (SKILL DEVELOPMENT CENTER) உருவாக்கப்பட்டு இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட வேண்டும். மாறி வருகிற சூழல்களுக்கு ஈடுகொடுக்கிற வகையிலான மனித வளத்தைக் கொண்ட நகரமாக மதுரை உருவாக பாடுபடுவேன்.
 • அரசு மற்றும் தனியார் மூலதனத்தை ஈர்ப்பதற்கான திட்டங்களை வகுக்க வேண்டும். கல்விக்கடன், சிறுதொழில் கடன் உள்ளிட்டவை எளிமையான முறையில் உரியவர்களை எட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
 • இந்திய விளையாட்டு ஆணையத்தின் மண்டல தலைமையகத்தை மதுரையில் அமைக்க முயற்சிகள் எடுப்பேன்.
 • சேவைத்துறை வேலைவாய்ப்புகளை உறுதி செய்யவும் உரிய முயற்சிகளை மேற்கொள்வேன்.

உள்ளாட்சி அமைப்புகளின் செயல்பாடு

மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்கள் நடத்தப்படாததால் அவற்றின் செயல்பாடுகள் முடங்கியுள்ளன. சுகாதாரம் உள்ளிட்ட மக்கள் நலத் திட்டங்களின் அமலாக்கம் பாதிக்கப்பட்டுள்ளது. எனினும் வீட்டு வரி, குழாய் வரி, சாக்கடை வரி, குப்பை வரி பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளன. உள்ளாட்சி தேர்தல்கள் உடனடியாக நடத்தப்படவும், அதீத வரி விதிப்பு ரத்தாகவும் குரல் கொடுப்பேன். உடனடி முயற்சிகளை மேற்கொள்வேன்.

வருங்காலத் தலைமுறைக்கான மதுரையாக உருவாக்குவோம். மதச்சார்பற்ற நல்லாட்சி மத்தியில் அமைந்திட மதுரையின் மகத்தான பங்களிப்பையும் உறுதி செய்வோம். தோழர் பி.மோகன் வழியில் நேர்மையான மக்கள் சேவையை உறுதிப்படுத்துகிற நாடாளுமன்ற உறுப்பினராக செயல்படுவேன் என்றும் உறுதி கூறுகிறேன்.

மதுரை நாடாளுமன்ற தொகுதி தேர்தல் அறிக்கை

Check Also

கட்சியின் தேர்தல் கணக்குகள் குறித்து அரசியல் தலைமைக்குழு அறிக்கை…

ஊடகச் செய்திகளில் கட்சி செலவு செய்ததாக குறிப்பிடப்பட்டுள்ள ‘தொகை’ என்பது முற்றிலும் திரித்துக் கூறப்பட்ட ஒன்றாகும்.