மதுவுக்கு எதிரான போராட்டம் வெற்றி – தமிழக அரசின் அடக்குமுறைக்கு கண்டனம்!

தமிழகத்தில் மதுவிலக்கை செயல்படுத்த வலியுறுத்தி ஆகஸ்ட் 4 அன்று முழுஅடைப்பு போராட்டத்திற்கு மதிமுக, விடுதலைசிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி, சிபிஐ (எம்), சிபிஐ உள்ளிட்ட கட்சிகள் விடுத்த அறைகூவலுக்கேற்ப முழுஅடைப்பு போராட்டம் தமிழகம் முழுவதும் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது. பொதுமக்கள், வியாபாரிகள், உழைப்பாளி மக்கள் என அனைத்துப் பகுதியினரும் இவ்வியக்கத்திற்கு ஆதரவாக அணிதிரண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தப் போராட்டத்தை சீர்குலைக்க அஇஅதிமுக அரசு காவல்துறையை பயன்படுத்தி பல மாவட்டங்களில் முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் போராட்டத்திற்கு அறைகூவல் விடுத்த கட்சியினரையும் மாணவர், வாலிபர், மாதர் இயக்கத்தினரையும் கைது செய்துள்ளனர். இன்று (4.8.15) காலை சென்னை மயிலாப்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஆர். முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநிலத் தலைவர் தொல். திருமாவளவன், மனித நேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் ஜவாஹிருல்லா மற்றும் கட்சித் தொண்டர்களையும் கைது செய்துள்ளனர். சென்னை, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், பெரம்பலூர் உள்ளிட்டு பல மாவட்டங்களில் மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சி ஊழியர்களை காவல்துறையினர் அராஜகமாக தூக்கிச் சென்றுள்ளனர். ஆயிரக்கணக்கானோரை கைது செய்துள்ளனர். தமிழக அரசின் இத்தகைய அடக்குமுறை நடவடிக்கையையும், காவல்துறையினரின் அத்துமீறல்களையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

மதுவிலக்கை வலியுறுத்தி நடைபெறும் போராட்டத்தையும், பொதுமக்களின் உணர்வையும் கருத்தில் கொள்ளாமல் “இந்த போராட்டம் அரசியல் ஆதாயத்திற்காக நடத்தப்படுகிறது” என்று கொச்சைப்படுத்தி அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் வெளியிட்டுள்ள அறிக்கை கண்டனத்திற்குரியது.

மதுவிலக்கை வலியுறுத்தி தமிழக மக்கள் வெளிப்படுத்தியுள்ள உணர்வை கருத்தில்கொண்டு அஇஅதிமுக அரசு மதுவிலக்கு நடவடிக்கைகளை செயல்படுத்த முன்வர வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

உடனடியாக கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள், குடியிருப்பு பகுதிகள், மக்கள் கூடும் கடைவீதிகள், பேருந்து – ரயில்நிலையங்கள், தேசிய – மாநில நெடுஞ்சாலை ஓரங்கள், பொதுமக்களிடமிருந்து வரும் புகாருக்கு உள்ளான கடைகளை அகற்றுவது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்திட மார்க்சிஸ்ட் கட்சி மாநில அரசை வற்புறுத்துகிறது.

மதுவிலக்கை வலியுறுத்தி நடைபெற்றுள்ள போராட்டத்தில் பங்கேற்று கைது செய்யப்பட்டுள்ள அனைவரையும் நிபந்தனையின்றி உடனே விடுதலை செய்ய வேண்டுமென்றும், மதிமுக பொதுச் செயலாளர் திரு. வைகோ உள்ளிட்டு பலர் மீதும் புனையப்பட்டுள்ள வழக்குகளை திரும்ப பெற வேண்டுமென்றும், மதுவிலக்கு போராட்டத்தில் பங்கேற்ற மாணவ – மாணவிகள் மற்றும் இளைஞர்கள், பொதுமக்கள் மீது வன்முறைத் தடியடி தாக்குதல் நடத்திய காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் மார்க்சிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது.

Check Also

மனுவாதிகளின் ஆதிக்க செயலை முறியடித்த அய்யா வைகுண்டரின் 189-வது பிறந்த தினம்…

அய்யா வைகுண்டரின் 189வது பிறந்த தின விழாவை கொண்டாடி வரும் அய்யாவின் அன்புக்கொடி மக்களுக்கு இனிய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். ...