‘மது அடிமைத்தனத்திற்கு எதிராக மனித நேயமுள்ளோர் குரலெழுப்புவோம்’

தமிழகத்தில் மதுவுக்கு அடிமையாவோர் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்துள்ளது. மாநிலத்தில் உள்ள 6 ஆயிரத்து 823 மதுக்கடைகள் மூலம் அரசு ஈட்டும் வருமானம் 26 ஆயிரம் கோடி ரூபாய்கள். கிட்டத்தட்ட 80 சதவீதம் கிராமப்புற குடும்பங்களின் மாத வருமானமே ரூ.5 ஆயிரத்திற்கும் குறைவாகும். அந்தக் குடும்பங்களின் மீது நடத்தப்படும் கடுமையான சுரண்டலாக மது அடிமைத்தனம் அமைகிறது.

மது அடிமைத்தனத்தால் ஏற்படும் பொருளாதார இழப்பு, உடல் பாதிப்பு, உளவியல் பாதிப்புகளால் ஏழைக் குடும்பங்கள் துன்புறுகின்றன. தற்போது பள்ளி மாணவர்கள், குழந்தைகள் வரை இந்த சீர் கெட்ட நிலைமையால் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

மது விற்பனையை இலக்கு வைத்து அதிகரிக்கும் நிலைமை அதிமுக, திமுக என இரண்டு கட்சிகளின் ஆட்சியிலுமே தொடர்ந்தது. கூடுதல் வேலை நேரம், விடுமுறை நாட்களிலும் கடை திறப்பு என்ற விதத்தில் அரசு மது விற்பனையே கண்ணாக இருந்தது, இருக்கிறது!.

மது அடிமைத்தனத்திற்கு எதிரான பிரச்சாரத்திலும், போராட்டங்களிலும் இருந்து அதிமுக, திமுக என இரு பிரதான கட்சிகளும் விலகியே இருந்தன.

இந்த நிலைமையில் “மதுவிலக்கு சட்டத்தை அமலாக்கினால் என்ன?” என்று திமுக தலைமை கேள்வியெழுப்பியுள்ளதுடன், ‘மீண்டும் ஆட்சிக்கு வந்தால் … மதுவிலக்கை அமலாக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவித்துள்ளது. ‘ஆட்சிக்கு வந்தால்’ என்ற நிபந்தனையுடன் சொல்வது – தேர்தலை மனதில் வைத்துத் தானோ என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது.

எப்படியிருப்பினும், மது அடிமைத்தனத்தை ஒழிப்பது அவசர முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனையாகும். தமிழக மாணவர்களின், இளைஞர்களின் ஏன் ஒட்டுமொத்த மக்களின் வாழ்வை, குடும்பத்தை, உயிரை, பொருளாதாரத்தை, பண்பாட்டை, நாகரீகத்தைச் சிதைக்கும் மது போதை அடிமைத்தனம் என்ற பெருங்கேட்டிற்கு எதிராக – மனித நேயமுள்ள அனைவரும் குரல் எழுப்புவோம்.

Check Also

அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்களின் நிலுவையில் உள்ள 9 மாத ஊதியத்தை உடனே வழங்கிடுக!

காலமுறை ஊதியத்தில் பணியமர்த்தி – பணிநிரந்தரம் செய்திடுக! தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்! அரசுப் பள்ளிகளில் உடற்கல்வி, ...