மத்தியக்குழு – அரசியல் நிகழ்வுகள் பற்றிய அறிக்கை (2012அக். 12 – 14)

மத்தியக்குழு

அரசியல் நிகழ்வுகள் பற்றிய அறிக்கை
(2012அக். 12 – 14 தேதிகளில் நடைபெற்ற மத்தியக்குழு கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது)
 
சர்வதேச அரங்கம்
 
ஐரோப்பிய பிராந்தியத்தில் தொடரும் நெருக்கடியும் அதிலிருந்து மீண்டு வருவதற்கான முயற்சிகளுமே கடந்த நான்குமாத சர்வதேச சூழலின் குறிப்பிடத்தக்க அம்சமாக இருந்து வந்துள்ளன. உலகப் பொரு ளாதார வேகம் குறைந்த வளர்ச்சி அடுத்த ஆண்டிலும் நீடிப்பதற்கான சாத்தியக் கூறுகள் காணப்படுகின்றன. மேலும் புதிய சிக்கன நடவடிக்கைகள் மக்களின மீது திணிக்கப்பட்டு வருவதையும், அவற்றுக்கு எதிராக கடுமையான எதிர்ப்பினை கிரீஸ் மற்றும் ஸ்பெயின் நாட்டு மக்கள் வெளிப்படுத்தி வருவதையும் காணமுடிகிறது. மேற்கு ஆசியாவில் சிரியாவில் நடைபெற்றுவரும் மோதல் மேலும் தீவிரமடைந்து அந்த பிராந்தியம் முழுவதிலும் பாதிப்பை ஏற்படுத்திவருகிறது. இஸ்லாமிய எதிர்ப்புத் திரைப்படம் ஒன்றின் காரணமாக உலகம் முழுவதிலும் உள்ள முஸ்லிம் நாடுகளில் தோன்றிய பரவலான கோபாவேசம் மற்றும் எதிர்ப்புக்கு அமெரிக்கா இலக்காகியுள்ளது. டெஹ்ரானில் நடைபெற்ற அணிசேரா நாடுகளின் உயர்மட்டத் தலைவர்களின் கூட்டம் ஈரானைத் தனிமைப்படுத்தும் முயற்சிகளுக்கு எதிரான பதிலடியாக அமைந் திருந்தது. வெனிசுலா நாட்டு அதிபர் தேர்தலில் ஹுயுகோ சாவேஸ் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம் வரலாறு படைத்துள்ளார். இந்த வெற்றி லத்தீன் அமெரிக்காவில் இடதுசாரிகள் அடைந்துள்ள முன்னேற் றத்தை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
 
உலகப் பொருளாதார சூழல்
 
இந்த ஆண்டின் உலகப் பொருளாதார வளர்ச்சி குறித்த தனது முன் மதிப்பீட்டை சர்வதேச நிதியம் 3.5 சதவிகிதத்திலிருந்து 3.3 சதவிகிதமாகக் குறைத் துள்ளது. 2013ம் ஆண்டு குறித்த அதன் முன் மதிப்பீட்டை 3.9 சதவிகிதம் என்பதி லிருந்து 3.6 சதவிகிதமாகக் குறைத்துள்ளது. ஐரோப்பிய மண்டல பொருளாதாரம் 2012-ம் ஆண்டில் 0.4 சதவிகிதம் அளவுக்கு சுருங்கியுள்ளது. அமெரிக்காவில் போது மான பொருளாதார மீட்சி இல்லாமையும் ஐரோப்பாவில் நீடிக்கின்ற பொரு ளாதார மந்தநிலையும் முக்கிய வளர்முக நாடுகளின் வளர்ச்சியின் மீது தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. 2013ல் சீனா, இந்தியா, பிரேசில் ஆகிய நாடுகள் ஒரு குறைவான விகிதத்திலேயே வளர்ச்சியை பதிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
ஐரோப்பிய மண்டல நாடுகளின் வேலையின்மையானது முன்னெப் போதும் இல்லாத ஒரு உயர்மட்டத்தை எட்டியுள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் இந்த நாடுகளில் ஒரு கோடியே 82 லட்சம் மக்கள் வேலை இழந்த நிலையில் இருந்தனர். 1999ம் ஆண்டில் ஐரோப்பிய ஒன்றியம் துவக்கப்பட்ட பிறகு இதுவே உச்சகட்ட வேலையின்மை என்பதைக் குறிப்பிட வேண்டும். கடன் நெருக்கடியில் சிக்கிய நாடுகளுக்குள் முன்னணி நாடாக இப்போது ஸ்பெயின் விளங்குகிறது. உச்சகட்ட வேலையின்மை விகிதமான 25.1 சதத்தை அது எதிர்கொண்டு வருகிறது. ஸ்பெயின், கிரீஸ் ஆகிய இரண்டு நாடுகளின் மக்களின் மீது திணிக்கப்பட்ட ஈவிரக்கமற்ற சிக்கன நடவடிக்கைகள் பிரம்மாண்டமான எதிர்ப்பியக்கங்களுக்கும் வேலை நிறுத்தங்களுக்கும் இட்டுச் சென்றுள்ளன. பல்லாயிரம் சுரங்கத் தொழிலாளர்கள் ஸ்பெயின் தலைநகரான மாட்ரிடை நோக்கி நடத்திய மூன்றுவார அணிவகுப்பு போராட்டமும் இதில் அடங்கும்.
 
ஐரோப்பிய ஸ்திரப்படுத்தல் ஏற்பாடு (European Stablisation Mechanism) என்ற பெயரில் பிணையளித்து பாதுகாக்கும் நிரந்தர நிதி ஒன்றை நிறுவுவதன் மூலம் சூழ்நிலையை ஸ்திரப்படுத்தும் முயற்சிகளில் ஐரோப்பிய ஒன்றியம் ஈடுபட்டு வருகிறது. ஆனால் கிரீஸ் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளின் கடன் நெருக்கடி மிகவும் மோசமான நிலையை எட்டியதை அடுத்து யூரோவானது இன்னமும் பாதுகாப்பற்ற நிலையிலேயே வைக்கப்பட்டுள்ளது.
மேற்காசியா
சிரியா மோதல்
 
இப்பிராந்தியத்தில் ஏகாதிபத்தியக் குறுக்கீடு சிரியா மற்றும் ஈரானை குவிமையமாகக் கொண்டிருக்கிறது. கடந்த நான்கு மாதங்களில் சிரியா உள்நாட்டு யுத்தம் தீவிரமடைந்துள்ளது. வன்முறையிலும் போரிலும் 30,000-த்துக்கும் மேற்பட்ட மக்கள் மரணமடைந்துள்ளனர். 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் சிரியாவிலிருந்து தப்பியோடி துருக்கி மற்றும் ஜோர்டானில் அகதிகள் முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர். இந்த மோதல் இப்போது துருக்கி மற்றும் லெபனானுக்கும் பரவி இப்பிராந்தியம் முழுவதையும் சூழ்ந்துகொள்வதற்கான அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளி நாடுகளுடன் இணைந்து செயல் படுவதற்கு ரஷ்யாவும் சீனாவும் உறுதியான முறையில் மறுப்புத் தெரி வித்துள்ளதுடன் ஐ.நா. பாதுகாப்புக் குழுவில் அவைகளுடைய தீர்மானங் களுக்கு எதிராக தங்களுடைய ரத்து அதிகாரங்களையும் பயன் படுத்தியுள்ளன. ராணுவக் குறுக்கீட்டுக்கு ஐ.நா. பாதுகாப்புக் குழுவின் ஆதரவைப் பெறத்தவறிய நிலையில் அமெரிக்காவும் நேட்டோ நாடுகளும் கலகக்காரர்களுக்கு சவுதி அரேபியா, கத்தார், துருக்கி ஆகிய நாடு களின் மூலம் நிதி மற்றும் ஆயுத உதவிகளை செய்யும் வேலையில் ஈடு பட்டுள்ளன. இஸ்ரேலும் ரகசியமான முறையில் ஆதரவு அளித்து வருகிறது. சிரியாவுக்குள் இப்போது செயல்பட்டுவரும் ஆயுதக் குழுக்கள் மோதலை விரிவுபடுத்துவதில் வெற்றிபெற்றுள்ளன. டமாஸ்கஸ் மற்றும் அலெப்போ நகரங்கள் தெருச்சண்டைகளையும் நகர்ப்புறப் போர் முறையையும் சந்தித்து வருகின்றன.
 
கலகப்படைகள் தொடர்பான ஒரு குறிப்பிடத்தக்க அம்சம் யாதெனில் அவற்றில் அல்கொய்தா போராளிகள் மற்றும் பிற இஸ்லாமியக் குழுக்கள் மேலும் மேலும் அதிக அளவில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன என்பதாகும். ஜஹாட் (Jahat) போன்ற அல்கொய்தா போராளிகளும் அமெ ரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் ஆதரவுடன் செயல்பட்டுவரும் சுதந்திர சிரியப்படையும் இந்த போராளிகளை ஏற்றுக்கொண்டுள்ளன. அசாத் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கான போராட்டத்தில் அவர்களே முக்கிய பங்கினை ஆற்றி வருகின்றனர்.
 
எங்கெல்லாம் அமெரிக்காவும் நேட்டோ படைகளும் ராணுவ ரீதியாக தலையிட்டனவோ அது இராக்கோ, லிபியாவோ அல்லது இப்போது சிரியாவோ எதுவாக இருந்தபோதிலும் மதச்சார்பற்ற அராபிய ஆட்சி களுக்கு எதிராக இஸ்லாமிய சக்திகளும் தீவிரவாதிகளுமே முன்னணிக்குக் கொண்டு வந்து நிறுத்தப்பட்டன. இத்தகைய வியூகத்தின் அபாயகரமான விளைவுகளை லிபியாவில் நடந்த  பதில் தாக்குதலில் காண முடிந்தது. இஸ்லாமிய எதிர்ப்புத் திரைப்படத்துக்கு எதிராக பென்கழியில் நடைபெற்ற எதிர்ப்பியக்கத்தின்போது அமெரிக்க தூதர் மற்றும் அலுவலகம் தாக்கப்பட்டது. தீவிர இஸ்லாமிய படைப்பிரிவுகளால் அமெரிக்க தூதரகம் மூன்று அமெரிக்கர்களும் கொல்லப்பட்டனர். அந்நாட்டின் மீது அமெ ரிக்காவும் நேட்டோ படைகளும் குண்டுமாரி பொழிந்தபோது இதே கலகக்காரர்களுக்குத்தான் அவை ஆயுதம் வழங்கி ஆதரவளித்தன.
 
சுன்னி பிரிவு தீவிரவாதக்குழுக்களால் அல்வைட் மற்றும் கிறித்துவச் சிறுபான்மையினர் கண்மூடித்தனமான வன்முறைக்கு உட்படுத்தப் பட்டதை அடுத்து சிரியா நாட்டுக்குள் இனக்குழு மோதல்கள் தலைதூக்கி யுள்ளன. சிரியாவில் அமெரிக்கா நேரடியாகத் தலையிடாது. ஆனால் சிரியாவையே அழிப்பதாக இருந்தாலும், அப்பிராந்தியத்தில் இஸ்லாமிய அடிப்படைவாதிகளும் தீவிரவாத சக்திகளும் தலைதூக்குவதாக இருந்தாலும் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் அசாதின் ஆட்சியை அகற்றுவதற்கு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும்.
 
ஈரான்
 
சிரியாவில் ஸ்திரமற்ற நிலையைத் தோற்றுவிப்பது என்ற அமெரிக்காவின் முடிவு அதன் பிரதான இலக்காகிய ஈரான் நாட்டுடன் தொடர் புடையது. சிரியா ஈரானின் நெருங்கிய கூட்டாளி நாடாக இருப்பதால் அசாத் ஆட்சியை அகற்றுவது என்பது ஈரானைத் தனிமைப்படுத்தும் நோக்கம் கொண்டது. ஈரான் நாட்டுடன் பி5+1 நாடுகளின் குழு இரண்டு சுற்றுப்பேச்சுவார்த்தைகளை நடத்தியபிறகும் அணுசக்திப் பிரச்சனையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. அணு ஆயுதப்பரவல் தடை ஒப்பந் தத்தின் கீழான தனது உரிமையான அணுஆயுத எரிபொருள் செறிவூட்டலைத் தொடரப்போவதாக ஈரான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
 
ஈரான் நாட்டின் அணுசக்திக் கட்டமைப்புகளுக்கு எதிராக ஒரு ராணுவ ரீதியான முன்தாக்குதலை நடத்தப்போவதாக இஸ்ரேலிய பிரதமர் நெதான்யகு கடந்த இரண்டு மாதங்களாக மிரட்டி வருகிறார். தன்னுடைய திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்குமாறு அதிபர் ஒபாமாவை நிர்ப்பந்திக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டு வந்தார். அமெரிக்க குடியரசுத் தலைவர் தேர்தல் பிரச்சார இயக்கத்தின் மத்தியில் உள்ள ஒபாமா தமது நிர்ப்பந்தத்துக்கு இணங்கிவிடும் நிலையில் இருப்பார் என்ற எண்ணத் துடன் அவர் இவ்வாறு செயல்பட்டார். எனினும் நெதான்யகுவின் திட்டத் துக்கு இசைவளிக்க ஒபாமா நிர்வாகம் மறுத்துவிட்டது. மேலும் இஸ்ரேல் நாட்டின் பாதுகாப்பு அமைப்புகளும் கூட யுத்தத் திட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. இத்தகைய சூழலில் பின்வாங்க நேரிட்ட நெதான்யகு ஈரான் நாடு (தனது திட்டத்தின்) நுழைவாயிலை எட்டுவதற்கு இன்னும் சில மாதங்கள் பிடிக்கும், அப்போது இஸ்ரேல் செயல்படும் என்று விளக்கமளித்தார். ஈரான் நாட்டுக்கு எதிரான நிர்ப்பந்தத்தையும் மோதல் போக்கையும் அதே வேகத்தில் தொடர்வதற்காக அமெரிக்கக் கடற்படை யின் தலைமையில் ஒரு பெரும் ராணுவப் பயிற்சி ஆகஸ்ட் மாதத்தில் பாரசீக வளைகுடாவில் நடத்தப்பட்டது.
 
ஆப்கானிஸ்தான்
 
ஆப்கானிஸ்தானிலிருந்து தமது படைகளை 2014ம் ஆண்டில் திரும்ப அழைத்துக்கொள்வதென்று அமெரிக்காவும் நேட்டோவும் திட்டமிட்டுள்ளன. இதற்காக அமெரிக்க நேட்டோ துருப்புகள் ஆப்கானிஸ் தானிலிருந்து வெளியேறிய பிறகு அவற்றின் இடத்தில் இருந்து செயல் படுவதற்காக அவைகள் ஆப்கன் ராணுவத்தை கட்டுவதிலும் அதற்கு பயிற்சி அளிப்பதிலும் ஈடுபட்டு வருகின்றன. எனினும் இத்திட்டம் சிக்கலுக் குள்ளாகிவிட்டது. சமீப மாதங்களில் ஆப்கன்படை வீரர்கள் தங்கள் துப்பாக்கிகளை அமெரிக்கா மற்றும் நேட்டோ படை வீரர்களுக்கு எதி ராகவே திருப்பியுள்ளனர். இந்த ஆண்டில் இதுவரை ஆப்கன் படை வீரர்களால் 36 தாக்குதல்கள் தொடுக்கப்பட்டு அவற்றில் அமெரிக்க நேட்டோ படைகளைச் சேர்ந்த 51 படைவீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதன் காரணமாக கூட்டு நடவடிக்கைகளை நிறுத்த வேண்டிய கட்டாயத்தில் அமெரிக்கத் தளபதி வைக்கப்பட்டார். பல்வேறு பாதுகாப்புப் பணிகளை ஆப்கன் படைகளிடம் உடனடியாக ஒப்படைக்குமாறு வலியுறுத்தியுள்ள ஆப்கன் ஜனாதிபதி அதன் மூலம் ஓரளவுக்கு சுயாட்சி அதிகாரத்தை உருவாக்குவதற்கு முயற்சித்துள்ளார். இந்த ஆண்டு துவக்கத்தில் தாலிபான்களுடன் அமெரிக்கா துவக்கிய பேச்சுவார்த்தைகள் தோல்வி யடைந்ததை அடுத்து தாலிபான்களின் நடவடிக்கைகள் இடைவிடாமல் தொடர்கின்றன. சுருக்கமாகக் கூறினால் ஆப்கானிஸ்தானிலிருந்து சீரான முறையில் வெளியேறுவதற்கு அமெரிக்கா வகுத்த திட்டம் சீர்குலைந்துபோயுள்ளது.
 
அணிசேரா நாடுகளின் உயர்மட்டக் கூட்டம்
 
அணி சேரா நாடுகளின் 16வது உயர்மட்ட கூட்டம் ஆகஸ்ட் மாதத்தில் டெஹ்ரானில் நடைபெற்றது. அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் ஈரானுக்கு எதிராக கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளதுடன் அணுசக்திப் பிரச்சனையில் அதனைத் தனிமைப்படுத்துவதற்கு தங்களால் முடிந்த அனைத்தையும் செய்துவரும்  பின்னணியில் இக்கூட்டத்தை ஈரானில் நடத்தியதானது முக்கியத்துவம் பெறுகிறது. அணுசக்தித் தொழில்நுட்பத்தை அமைதி நோக்கங்களுக் காகப் பயன்படுத்துதல் மற்றும் எரிபொருள் சுழற்சிக் கொள்கைகள் (அணு எரிபொருள் செறிவூட்டல் தொடர்பான கொள்கைகள் உள்ளிட்ட) ஆகியவை தொடர்பாக ஈரான் போன்ற நாடுகளின் தேர்வுரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்று அணிசேரா நாடுகள் மாநாட்டின் டெஹ்ரான் பிரகடனம் ஐயத்துக்கிடமின்றி தெளிவுபடுத்தியது. இது அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளி நாடுகளின் பலவந்த முயற்சிகளுக்குக் கிடைத்த பதிலடியாகும். சர்வதேச அளவில் ஈரானைத் தனிமைப்படுத்துவதற்காக செய்யப்பட்ட ஒருங்கிணைந்த முயற்சிகள் வெற்றி பெறவில்லை என்பதை அணிசேரா நாடுகளின் கூட்டம் சுட்டிக்காட்டியது. அணிசேரா நாடுகளுக்கு எதிராக சுமத்தப்பட்டும் தன்னிச்சையான பலவந்த நடவடிக்கைகள் மற்றும் தன்னிச்சையான பொருளாதாரத் தடைகளுக்கு தனது எதிர்ப்பை அணிசேரா நாடுகளின் உயர்மட்ட மாநாடு மீண்டும் வலியுறுத்தியது. பாலஸ்தீன சுயநிர்ணய உரிமைக் குறிக்கோளுக்கு தனது ஆதரவை அது மீண்டும் உறுதிப்படுத்தியதுடன் இஸ்ரேலிய ஆக்கிர மிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என்றும் கோரியது.
 
இன்றைய சர்வதேச சூழலிலும் அணிசேரா நாடுகள் இயக்கத்தைச் சேர்ந்த பலநாடுகள் அமெரிக்காவுடன் இணைந்திருக்கும் மெய்யான சூழலிலும் மாநாட்டுப் பிரகடனம் அணிசேரா நாடுகளின் சுதந்திரம், இறையாண்மை மற்றும் சுயாட்சியுரிமையை வலியுறுத்தியது என்பது ஒரு வரவேற்கத்தக்க வளர்ச்சிப் போக்காகும்.
 
கொதிநிலையில் உள்ள சிரியா பிரச்சனையைப் பொருத்தவரை அணி சேரா நாடுகளின் கூட்டத்தால் ஒரு ஒன்றுபட்ட நிலைபாட்டை எடுக்க முடியவில்லை. அசாத் அரசாங்கத்துடன் பகைமை பாராட்டும் பல வளைகுடா மற்றும் அரபு நாடுகள் இம்மாநாட்டில் பங்கேற்றுள்ள நிலையே இதற்கான காரணமாகும். சிரியாவின் அதிபர் பதவி விலக வேண்டும் என்று கோரிய எகிப்திய ஜனாதிபதி மோர்சி-சிரியா பிரச் சனையின் தீர்வுக்காக எகிப்து, ஈரான், துருக்கி மற்றும் சவுதி அரேபியா அடங்கிய ஒரு பிராந்திய தொடர்பாளர் குழு அமைக்கப்பட வேண்டும் என்ற ஆலோசனையைத் தெரிவித்தார். இந்த முயற்சியை ஈரான் வரவேற்றது. ஆனால் இது குறித்து சவுதி அரேபியா எதுவும் கூறவில்லை என்பதுடன் கெய்ரோவில் கூட்டப்பட்ட முதல் கூட்டத்திலும் அது பங்கேற்கவில்லை.
 
வெனிசுலாவில் கிடைத்த வெற்றி
 
அக்டோபர் 7ந்தேதி நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஜனாதிபதி ஹியுகோ சாவேஸ் நான்காவது முறையாக மீண்டும் தேர்ந்தெடுக்கப் பட்டார். அவர் 55 சதம் பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றார். எதிர்க் கட்சியைத் சேர்ந்த வலதுசாரி, வேட்பாளரைவிட 11 சதம் வாக்குகளை அவர் கூடுதலாகப் பெற்றிருந்தார். இந்த தேர்தல்கள் மிகமிக முக்கிய மானவையாகும். அனைத்துத்தரப்பினருக்கும் பெரிய அளவில் நீண்ட காலத் தாக்கங்களை ஏற்படுத்துவதை உள்ளடக்கியதாகவும் இருந்தன. தேசிய இறையாண்மையில் தனது உறுதியான நம்பிக்கையை வெளிப் படுத்தக்கூடியதும் நவீன தாராளமய நடவடிக்கைகளை நிராகரிப்பதையும் கொண்ட ஒரு பாதையை வெனிசுலா வகுத்திருந்தது. சாவேசின் ஆட்சி யின் கீழ் எண்ணெய் தொழிலை அரசு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவ தன் மூலமும் சில தொழில்களை தேசிய மயமாக்கியதன் மூலமும் அன்னிய கட்டுப்பாட்டைக் குறைப்பதற்கான குறிப்பிடத்தக்க நட வடிக்கைகள் எடுக்கப்பட்டன. லத்தீன் அமெரிக்காவில் உள்ள இடதுசாரி மற்றும் முற்போக்கு அரசுகளை அணிதிரட்டுவதில் வெனிசுலா ஒரு முக்கியமான பங்கினை ஆற்றியுள்ளது. கியூபாவுடன் இணைந்து நின்று அல்பா (ALBA)  என்ற அமைப்பை உருவாக்குவதற்கு வெனிசுலா காரண மாக இருந்தது.
 
இம்முறை எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஹென்ரிக் கேப்ரைல்ஸ் என்ற வேட்பாளரின் பின்னே அணி வகுத்திருந்தன. சாவேசை எப்படி யாவது பதவியிலிருந்து அகற்றிவிட வேண்டும் என்பதற்காக செய்யப்பட்ட முயற்சியில் அதிகாரத்தைக் கைப்பற்ற விரும்பிய மேல்தட்டுப் பிரிவின் சிறிய குழு மற்றும் அமெரிக்காவின் பெரும் பணபலத்தின் ஆதரவு இருந்தது. வலதுசாரி ஊடகத்தில் இடைவிடாத பகைமைப் பிரச்சாரம் தொடர்ந்து நடத்தப்பட்டது தேர்தலில் தோற்றாலும் சாவேஸ் பதவி விலகமாட்டார் என்ற பீதி கிளப்பப்பட்டது. புற்றுநோயுடன் போராடி வந்த சாவேஸ் பணவீக்கம் மற்றும் வளர்ந்துவரும் குற்றச் செயல்களால் உருவாக்கப்பட்ட அதிருப்தியையும் சமாளித்து மீண்டும்  போராட வேண்டியிருந்தது.
 
பொலிவாரியப் புரட்சிகர நிகழ்முறைப் பாதையில் வெனிசுலா தொடர்ந்து பயணிப்பதையே வெனிசுலா மக்கள் விரும்புவார்கள் என்பதற்கு அடையாளமாக சாவேசின் வெற்றி அமைந்திருந்தது. லத்தின் அமெரிக்க சக்திகளின் பலாபலத்திலும் உலகின் பெரும் எண்ணெய் உற்பத்தி நாடுகளின் ஒன்றாக வெனிசுலா இருப்பதால்  உலக எண்ணெய் அரசியலிலும் சாவேசின் வெற்றி ஒரு போற்றத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும்.
 
இலங்கை
 
தமிழர் பிரச்சனையில் அரசியல் தீர்வை நோக்கி முன்னேறுவதற் காக முனைப்பான எண்ணம் எதனையும் ராஜபக்சே அரசாங்கம் வெளிப் படுத்தவில்லை. தமிழ் தேசியக் கூட்டணியுடன் (டிஎன்ஏ) நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் பலனளிக்கவில்லை. வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் தமிழ் பேசும் மக்கள் வாழும் பகுதிகளுக்கு அதிகாரங்களை வழங்கக்கூடிய அரசியல் அமைப்பு ரீதியான மற்றும் அரசியல் ரீதியான ஏற்பாடுகள் எவ்வாறு அமையப் போகின்றன என்பதே முக்கிய பிரச் சனையாகும். 13வது அரசியல் சட்டத்திருத்தத்தோடு கூடுதலான அம்சம் கொண்ட  ஒரு ஏற்பாடே அத்தகைய தீர்வுக்கான அடிப்படையாக இருக்க முடியும். இதிலிருந்து ஜனாதிபதி ராஜபக்சே பின்வாங்கிவிட்டார். அரசியல் பேச்சுவார்த்தைகள் மற்றும் உடன்பாட்டுக்கு வழிவகுப்பதற்குத் தேவையான அரசியல் மற்றும் ராஜீய முயற்சிகளை இந்திய அரசாங்கம் மீண்டும் துவக்க வேண்டும்.
 
தேசீய சூழல்
 
ஜூன் மத்திய குழுக் கூட்டத்திற்குப் பிந்தைய நான்கு மாதகாலம் தொடர்ந்த கீழிறங்கும் பொருளாதார வளர்ச்சியை வெளிக்காட்டும் காலமாகவே இருந்தது. டீசலின் செங்குத்தான விலையேற்றம் மற்றும் மானிய விலை எரிவாயு உருளைகளின் எண்ணிக்கை குறைப்பு ஆகிய வற்றின் மூலம் மக்களின் வாழ்க்கையின் மீது தொடுக்கப்பட்ட கடுமை யான தாக்குதல்களிலிருந்தும் உயரிய பணவீக்கத்திலிருந்து சிறிதுகூட தப்பமுடியாத நிலையில் மக்கள் வைக்கப்பட்டனர். அன்னிய நிதிமூலதனத் தையும் பெருமுதலாளிகளையும் மேலும் திருப்திப்படுத்துவதன் மூலம் பொருளாதாரப் பிரச்சனைகளிலிருந்து வெளியே வருவதற்கு மன்மோகன் அரசாங்கம் முயற்சித்து வருகிறது. பன்முகப்பட்ட சில்லரை வர்த்தகத் திலும் நேரடி அன்னிய முதலீடுக்கு அனுமதிக்கும் அரசின் முடிவிலிருந்து இதனைக் காணமுடிகிறது. இந்த நடவடிக்கைகளுக்கு எதிரான மக்கள் போராட்டங்களும எதிர்ப்புகளும் பேரலைகளாக எழுச்சி பெற்று வருகின்றன. நிலக்கரிச்சுரங்க தொகுப்பு ஒதுக்கீடு செய்வது தொடர்பான மற்றொரு பெரும் ஊழலில் ஐ.மு. கூட்டணி அரசாங்கம் சிக்கியுள்ளது. அஸ்ஸாமின் போடோ பகுதி  சுயாட்சி மாவட்டப் பகுதியில் நிகழ்ந்த வன் முறை மற்றும் மோதல்களால் ஏராளமான மக்கள் வெளியேற்றப்பட்டுள் ளனர். இதன் எதிர்விளைவுகளை நாடு முழுவதிலும் காணமுடிந்தது. வகுப்புவாத நிகழ்வுகள் மற்றும் பிரிவினைவாத சக்திகளின் நடவடிக்கை கள் சமீபகாலங்களில் அதிகரித்துள்ளதைக் காணமுடிகிறது.
 
பொருளாதாரச் சூழல்
 
ஜூன் மத்திய குழுக் கூட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த குறைவான பொருளாதார வளர்ச்சி தொடர்கிறது. தற்போதைய நிதி ஆண்டின் முதல் மூன்று மாதங்களின் (ஏப்ரல் முதல் ஜூன் வரை) மொத்த உள்நாட்டு உற்பத்தி 5.5. சதவிகிதமாக இருந்தது. இது முந்தைய நிதி ஆண்டின் கடைசி காலாண்டில் பதிவு செய்யப்பட்ட வளர்ச்சியான 5.3 சதவிகிதத்தைவிட ஒரு சிறிதளவே கூடுதலாக இருக்கிறது. இந்த நான்குமாத காலத்தில் தொழில் உற்பத்தி மூன்றாவது முறையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. ஜூன் மாதத்தில் தொழில் உற்பத்தி 1.8 சதவிகிதம் அளவுக்கு சுருங்கியது. பொது பணவீக்க விகிதம் ஆகஸ்ட் மாதத்தில் 7.55 சதவிகிதம் என்ற அளவில் தொடர்ந்து வந்துள்ளது. இதில் கவலை அளிக்கும் அம்சம் யாதெனில் ஜூலை மாதத்தில் 9.86 சதவிகிதமாக இருந்ச உணவுப் பொருள் பணவீக்கம் ஆகஸ்ட் மாதத்தில் 10.03 சதவிகிதத்தை எட்டியுள்ளது.  உள்நாட்டு உணவுப் பண்டங்களின் விலைகள் குறைவதற்கான வாய்ப்புகள் எதுவும் இல்லை. சர்வதேச அளவில் இந்த ஆண்டு உணவுப் பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. ஜூலை 2012ல் முடிவுறும் ஓராண்டில் அனைத்து நாடுகளின் கோதுமை விலைகளிலும் இரண்டாவது பெரிய விலை உயர்வும் (சூடானுக்கு அடுத்தபடியாக) இந்தியா பதிவு செய்துள்ளது என்பதை உலக வங்கி அளித்துள்ள புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இதேபோல அனைத்து நாடுகளின் அரிசி  விலையில் மூன்றாவது பெரிய விலை உயர்வை இந்தியா பதிவு செய்துள்ளது என்றும் அது தெரி வித்துள்ளது. இந்திய உணவுக்  கழகத்திடம் போதிய அளவு உணவு தானிய இருப்பு உள்ளது என்பதுதான் ஊக நடவடிக்கை அதிகரிப்பதற்கான முக்கிய காரணமாகும். காய்கறிகள் மற்றும் பருப்பு வகைகளின் விலைகளும் செங்குத்தாக உயர்ந்துள்ளதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
 
இத்தகைய சூழ்நிலையில்தான் டீசலின் விலையை லிட்டருக்கு ரூ. 5/- வீதம் ஏற்றும் முடிவையும் மானிய விலையில் வழங்கப்படும் சமையல் எரிவாயு உருளைகளின் எண்ணிக்கையை ஒரு இணைப்புக்கு ஆண்டுக்கு ஆறு என்ற அளவில் வரம்பிடும் முடிவையும் ஐ.மு. கூட்டணி அரசாங்கம் எடுத்தது. மானியமில்லாத உருளைகளின் விலை சுமார் ரூ. 920ஆக இருக்கும். இந்த நடவடிக்கைகள் பணவீக்கத்தை மேலும் அதிகரிக்கும்.
 
நாட்டின் பல்வேறு பகுதிகளில் விவசாயமும் விவசாயிகளும் வெள்ளம் மற்றும் வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அஸ்ஸாமில் கடுமையான வெள்ளத்தால் 22 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 7 லட்சம் ஹெக்டேருக்கும் மேலான நிலங்களில் நெற்பயிர்கள் நாசமடைந் துள்ளன. மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் ஆந்திர மாநிலத் தின் சில பகுதிகளில் விவசாயிகள் வறட்சியின் காரணமாக மோசமான முறையில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கெல்லாம் மேலாக உரவிலைகளின் தொடர்ச்சியான அதிகரிப்பின் காரணமாக விவசாயத் தொழிலை நடத்து வதே கடினமானதாக மாறியுள்ளது. யூரியாவின் விலையை டன்னுக்கு ரூ. 50/- உயர்த்தும் அறிவிப்பை ஐ.மு. கூட்டணி அரசாங்கம் அக்டோபரில் வெளியிட்டது.
 
அன்னிய மூலதனம் மற்றும் பெரு முதலாளிகளை திருப்திப்படுத்தும் போக்கு பல நவீன தாராளமய நடவடிக்கைகளையும் மக்கள் விரோதக் கொள்கைகளையும் ஐ.மு. கூட்டணி அரசாங்கம் முன்னெடுத்துச் சென் றுள்ளது. மேலும் புதிய நவீன  தாராளமய நடவடிக்கைகளை எடுக்கத் தவறியதனால் பிரதமர் செயலிழந்து முடங்கிப்போய்விட்டார் என்று தொழில் நிறுவனத்துறையும் அன்னிய நிதி மூலதனமும் வெளியிட்ட விமர்சனங்களை அடுத்தே அது இவ்வாறு செயல்பட்டுள்ளது. நிதியமைச்ச ராக ப. சிதம்பரம் நியமிக்கப்பட்ட பிறகு அன்னிய மூலதனம் மற்றும் இந்தியப் பெருமுதலாளிகளின் நலன்களை மேம்படுத்தும் விதத்திலும் அவர்களை திருப்திப்படுத்தும் விதத்திலும் திடீர் திருப்பமாக சில நடவடிக்கைகளை பிரதமர் முன்னெடுத்துச் சென்றுள்ளார்.
 
பொது வரி தவிர்ப்புக்கு எதிரான விதிகளை (GAAR) பரிசீலனை செய்வதற்காக பார்த்தசாரதி ஷோம் தலைமையில் ஒரு வல்லுநர் குழுவை பிரதமர் நியமனம் செய்தார். இந்த விதிகள் மூன்றாண்டு காலத்துக்கு நிறுத்திவைக்கப்பட வேண்டும் என்று அக்குழு பரிந்துரைத்தது. அத்துடன் வரி வரம்பிலிருந்து பல அன்னியக் கம்பெனிகள் தப்பிக்கும் விதத்தில் விதிகளை நீர்த்துப்போகச் செய்யும் முடிவுகளை அக்குழு எடுத்துள்ளது. பட்டியலிடப்பட்ட பிணைய பத்திரங்களை மாற்றுவதற்கு விதிக்கப்படும் மூலதன ஆதாய வரியை அகற்றுவதற்குமான பரிந்துரையையும் அக்குழு வழங்கியுள்ளது. வோடபோன் நிறுவனத்திடமிருந்து வரவேண்டிய 12000 கோடி ரூபாயை வசூலிக்க அரசாங்கம் நடவடிக்கைகளை தொடராது என்று நிதியமைச்சர் ப. சிதம்பரம் அறிவித்துள்ளார். முன் தேதியிலிருந்து வரிவசூல் செய்யும் சட்டத்திருத்தத்தை நீக்குமாறு மற்றொரு அறிக்கையில் ஷோம் குழு பரிந்துரைத்துள்ளது. கடந்த நிதிநிலை அறிக்கையின்போது அப்போதைய நிதி அமைச்சரான பிராணாப் முகர்ஜி கொண்டுவந்த தனது அரசாங்கத்தின் சட்டத்திருத்தத்தையே இதன் மூலம் அரசாங்கம் செல்லாததாக்கிவிட்டது.
 
பல கம்பெனி தயாரிப்புகளின் சில்லரை வர்த்தகத்தில் 51 சதம் வரை அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் முடிவு மத்திய அமைச்சரவையில் செப்டம்பர் மாதத்தில் எடுக்கப்பட்டது. இதன் மூலம் அமெரிக்கா மற்றும் அன்னிய மூலதனத்தின் நீண்டகாலக் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப் பட்டது. சில்லரை வர்த்தகம் படிப்படியாக அன்னிய பேரங்காடித் தொகு திக்கு திறந்துவிடப்பட்டுள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சியின்போது மொத்த வணிகத்திலும் ரொக்க விற்பனை நடவடிக்கை களிலும் அன்னிய நேரடி முதலீடு அனுமதிக்கப்பட்டது. ஐ.மு. கூட்டணி – 1ன் ஆட்சிக் காலத்தில் ஒரு குறிப்பிட்ட பொருள் விற்பனையில்  சில்லரை வர்த்தகம் அனுமதிக்கப்பட்டது. இப்போது பன்முக குறியீட்டு பொருட்களின் சில்லரை வர்த்தகத்தையும் அனுமதித்தன்மூலம் அந்த நிகழ்வு வட்டம் முழுமையடைந்துள்ளது. சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இடதுசாரிகளும் கடுமை யாக எதிர்த்து வந்துள்ளன. இந்த எதிர்ப்பின் காரணமாகவே பன்முக குறியீட்டு பொருட்களின்  சில்லறை விற்பனையில் வால்மார்ட் மற்றும் பிற அன்னியப் பேரங்காடி நிறுவனங்களின் நுழைவை முதல் ஐ.மு. கூட்டணி அரசாங்கத்தால் அனுமதிக்க முடியவிலலை.
 
இந்தியாவின் சில்லரை வர்த்தகத்தில் 1.4 கோடி கடைகள் உள்ளன.  அவற்றில் 4 கோடிப் பேர் பணி புரிகின்றனர். விவசாயத்துறைக்கு அடுத்த படியாக மிகப்பெரும் அளவிலான வேலை வாய்ப்புக்கான ஆதாரமாக இந்த துறையே இருந்து வருகிறது. வால்மார்ட், டெஸ்கோ, காரிஃபோர் போன்ற பேரங்காடி சங்கிலித் தொடர்கள் சில்லரை வர்த்தகத்தில் நுழைந்தால் அது பெரும் எண்ணிக்கையிலான சிறுகடைக்காரர்கள் மற்றும் வணிகர்களை இடம் பெயரச் செய்துவிடும். இந்தப் பேரங்காடிகள் தங்களுடைய ஆதிக்கத்தை நிலைநாட்டிய உடனேயே என்ன விலைக்கு விற்க வேண்டும் என்பது குறித்து உற்பத்தியாளர்களுக்கு தாக்கீது பிறப்பிக்கும்  தரக்கட்டுப்பாட்டின் அடிப்படையில் விவசாயிகள் பெறக்கூடிய விலைகள் குறித்தும் கட்டுப்பாடுகளை விதிக்கும்.
 
பன்முக குறியீட்டு பொருட்களின்  சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதற்கு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் தவிர பிற அனைத்துக் கட்சிகளும் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளன. தங்களுடைய மாநிலங்களில் அன்னிய பேரங்காடி சங்கிலித் தொடர்களை அனுமதிப்பதில்லை என்ற நிலைபாட்டை காங்கிரசல்லாத அனைத்து மாநில அரசாங்கங்களும் எடுத்துள்ளன.
 
அத்தகைய சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டின் நுழைவானது இப்போதுள்ள வேலை வாய்ப்புகள் மற்றும் மக்களின் வாழ்க்கையின் மீது தொடுக்கப்படும் ஒரேயொரு மிகப்பெரும் தாக்குதலாக அமைந்துள்ளது. சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை கட்சி உறுதியாக எதிர்க்க வேண்டும். அதற்கு எதிரான விரிவான அடித்தளம் கொண்ட இயக்கத்தை உருவாக்குவதில் ஒருமுகச் சிந்தனையுடன் செயல்பட வேண்டும். விரிவான பகுதி மக்களை அணிதிரட்டுவதற்கு ஏற்றதாக இப்பிரச்சனை அமைந்துள்ளது.
 
பெரு முதலாளிகளை மகிழ்விக்கச் செய்யக் கூடியதும் பங்குச் சந்தையை மேம்படுத்தக்கூடியதுமான மற்றொரு முடிவை மத்திய அமைச்சரவை எடுத்துள்ளது. ஆயில் இந்தியா, நால்கோ, இந்துஸ்தான் காப்பர் மற்றும் எம்எம்டிசி ஆகிய நான்கு பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்வதற்கான முடிவுதான் அது. ஆயில் இந்தியாவின் 10 சதவிகிதம் பங்குகளையும் நால்கோவின் 12.15 சதவிகிதம் பங்கு களையும் விற்பனை செய்யும் ஆலோசனை முன்மொழியப்பட்டுள்ளது. இந்த விற்பனையின் மூலம் 15000 கோடி ரூபாயை ஈட்ட முடியும் என்று அரசாங்கம் நம்புகிறது. அவர்கள் விரும்பியவாறே பங்குச்சந்தையில் ஒரு நீர்க்குமிழி வளர்ச்சியினை அது ஏற்படுத்தியுள்ளது. இந்த நடவடிக்கைகளை தொழில் நிறுவனங்களும் அன்னிய நிதி அமைப்புகளும் வரவேற்றுள்ளன. பங்குச்சந்தையும் கணிசமான அளவில் உயர்ந்துள்ளது. அன்னிய நிறுவன முதலீட்டாளர்களிடமிருந்து நிதிப்பாய்ச்சல் அதிகரித் துள்ளது.
 
அன்னிய மற்றும் இந்தியப் பெருமூலதனத்துக்கு அளிக்கப்பட் டுள்ள மற்றொரு சமிக்ஞையாக காப்பீட்டுத்துறையில் அந்நிய நேரடி முதலீட்டு வரம்பை 49 சதவிகிதம் என்ற அளவுக்கு உயர்த்த அனுமதிக்கும் காப்பீட்டுத்துறை சட்டமுன்வரைவைக் கொண்டுவரவும்; பென்சன் நிதியை தனியார்மயமாக்கி அதில் 26 சதவிகிதம் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் ஓய்வூதிய சட்டமுன்வரைவை நிறைவேற்றவும் மத்திய மந்திரிசபை முடிவு செய்துள்ளது.
 
நிலக்கரிச் சுரங்கத் தொகுதி ஒதுக்கீட்டில் ஊழல் 2004ம் ஆண்டு முதல் 2009 வரையிலான காலத்தில் தனி உபயோகத்துக்காக நிலக்கரிச்சுரங்கத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டதில் அந்த கம்பெனிகளுக்கு சுமார் 1.86 லட்சம் கோடி நிதி ஆதாயம் கிடைத் துள்ளதாக நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடரில் முன் வைக்கப்பட்ட மத்திய தணிக்கை அதிகாரி (CAG)யின் அறிக்கையில் வெளிப்படுத்தியுள்ளது. இவ்வாறு ஒதுக்கப்பட்ட 142  தொகுதிகளில் 70 தொகுதிகள் தனியார் கம்பெனிகளுக்கும் மற்றவை அரசு பொதுப்பயன் பாட்டுக்கும் வழங்கப்பட்டிருக்கின்றன. தணிக்கை அதிகாரியின் அறிக்கை திறந்தவெளி சுரங்கங்களைப் பற்றி மட்டுமே பேசுகிறது பூமிக்குக் கீழே உள்ள சுரங்கங்களைப் பற்றி அல்ல;  2006ம் ஆண்டில் ஏலமுறையைக்  கொண்டு வருவதில் செய்யப்பட்டதாமதம் தனியார் கம்பெனிகளுக்கு எதிர்பாராத பெருந்தொகை ஆதாயத்தை அளித்துள்ளது எனவும், இதன ஒரு பகுதி அரசாங்கத்தின் வருவாய் இழப்பு எனவும் சிஏஜி அறிக்கை குறிப்பிடுகிறது.
 
பிரதமர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பிய பாஜக இப்பிரச்சனைக்காக நாடாளுமன்றத்தை முடக்கிவைத்தது. கூட்டத் தொடரின் கடைசி இரண்டு வார நடவடிக்கைகள் சீர்குலைக்கப்பட்டன.
 
இந்த ஒட்டுமொத்த பிரச்சனையின் மீது உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட வேண்டும் என்ற நிலைபாட்டை நமது கட்சி எடுத்தது. இக்காலத்தில் நிலக்கரித்துறையை பிரதமர் கவனித்து வந்ததால் பிரதமர் அலுவலகத்தின் பங்கும் கூட விசாரணை வரம்புக்குள் கொண்டுவரப்பட வேண்டும். முறைகேடுகள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளுக்குப் பொறுப்பானவர்கள் மீது குற்ற நடவடிக்கைகள் தொடரப்பட வேண்டும், தனியார் கம்பெனிகளுக்கு செய்யப்பட்ட ஒதுக்கீடுகள் ரத்து செய்யப்பட வேண்டும். வருவாய் இழப்பை திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். எவ்வாறு தனி உபயோகத்துக்கான நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டுப்பாதையானது லஞ்ச ஊழலுக்கும் சலுகை சார் முதலாளித்துவத்துக்கும் இட்டுச் சென்றுள்ளது என்பதை நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் அம்பலப்படுத்தியுள்ளது.
 
பிற கனிமங்களைப் போலன்றி நிலக்கரித் தொழில் தேசிய மயமாக்கப்பட்ட துறையில் உள்ளது. நிலக்கரியைத் தோண்டி எடுக்கும் வேலையில் தனியார் துறையை  அனுமதிப்பதற்குத் தேவையான சட்டத் திருத்தத்தை தேசிய ஜனநாயகக் கூட்டணி மற்றும் ஐ.மு. கூட்டணி அரசாங்கங்கள் கொண்டுவரத் தவறியதால் தனி உபயோகத்துக்கான சுரங்க ஒதுக்கீட்டுப்பாதையானது தனியார் மயத்துக்கான கொல்லைப்புற வழியாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தனியார் உற்பத்தியாளர்களின் தனி உபயோகத்திற்காக நிலக்கரிச் சுரங்கத் தொகுதிகளை ஒதுக்க வழிவகுக்கப்படுவதற்காகக் கொண்டுவரப்பட்ட நிலக்கரி தேசிய மயச் சட்டத்துக்கு 1993ம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட திருத்தத்தினை நாம் எதிர்த்துள்ளோம். 2000ஆம் ஆண்டின் நிலக்கரி தனியார் மய சட்டமுன் வரைவையும் நாம் கடுமையாக எதிர்த்தோம். அது மாநிலங்களவையில் இன்னமும் நிலுவையில் உள்ளது. இந்த சட்டமுன்வரைவுக்கு எதிராக நிலக்கரித் தொழிற்சங்கங்கள் ஒரு பெரும் வேலை நிறுத்தத்தை நடத்தியுள்ளன.
 
நிலக்கரித்துறை ஒதுக்கீட்டில் ஏலமுறை கொண்டுவரப்பட்டால் அது தனியார் மய நிகழ்முறையைத்தான் பலப்படுத்தும். பெரும் தனியார் கம்பெனிகளும், இரும்பு எஃகு, மின்சாரம் போன்ற துறைகளில் செயல்படுவோரும், ஏலமுறையில் பங்கேற்று நிலக்கரி வளங்களை தங்கள் வசப்படுத்திக்கொள்வதற்கு வழிவகுக்கும். அது ஏகபோகத்துக்கும் வணிகக் கூட்டணிகளுக்கும் இட்டுச் செல்லும். நிலக்கரி ஆதாரவளங் களின் 20 விழுக்காடு ஏற்கெனவே தனி உபயோக ஒதுக்கீட்டுப் பாதை மூலம் ஒதுக்கப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
 
தனி உபயோகத்துக்காக நிலக்கரித் தொகுதிகளை ஒதுக்குவதற்கு ஏலமுறையைக் கொண்டு வருவதற்கு பதிலாக வேறு ஒரு பாதை தேவைப்படுகிறது. கோல் இந்தியா நிறுவனம் (Nodal) ஒரு ஒருங்கிணைப்பு முகமையாக செயல்பட்டு அதன் மூலம் நிலக்கரி தொகுதி ஒதுக்கீடுகள் செய்யப்பட வேண்டும். அத்தகைய தனியார் மின்சாரம் மற்றும் எஃகு உற்பத்தியாளர்களுக்கென தனியாக ஒதுக்கப்பட்ட நிலக்கரித் தொகுதிகளை கோல் இந்தியா நிறுவனம் வழங்கலாம். நிலக்கரியைத் தோண்டி எடுக்கும் வேலையை கோல் இந்தியா நிறுவனமும் அதன் துணை அமைப்புகளுமே செய்ய வேண்டும். எரி பொருள் வழங்கும் ஒப்பந்தங்களின் மூலம் அவற்றுக்கு நிலக்கரி வழங்கப் பட வேண்டும். நிலக்கரி வளம் நிறைந்த மாநிலங்களில் மாநில அரசால் இயக்கப்படும் சுரங்கக் கழகங்களின் மூலம் தோண்டியெடுக்கும் வேலை நடத்தப்படலாம்.
 
இது லஞ்ச ஊழல் நடைமுறைகளையும் தற்போதைய ஒதுக்கீட்டு முறையில் உள்ள சலுகைசார் முதலாளித்துவத்தையும் தவிர்க்கும். ஏல முறையின் மூலம் நிலக்கரி ஆதாரவளங்களை விற்பனை செய்வதானது காலப்போக்கில் தேசீய மயமாக்கப்பட்ட நிலக்கரி ஆதார வளங்களை படிப்படியாக அழித்துவிடும்.
 
நிலக்கரி ஒதுக்கீட்டு ஊழல் பிரச்சனையில் அரசாங்கத்தின் மீது தாக்குதல் தொடுத்த பாஜகவுக்கு ஐ.மு. கூட்டணி அரசாங்கத்துடன் எத்தகைய கொள்கை வேறுபாடும் கிடையாது. நிலக்கரி தேசிய மயச் சட்டத்துக்கு ஒரு திருத்தத்தைக் கொண்டுவருவதன் மூலம் நிலக்கரித் தொழிலை தனியார் மயமாக்க தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கம் முயற்சித்தது. அதனை முன்னெடுத்துச் செல்லத் தவறியதை அடுத்து ஆய்வுமுறைப் பாதையின் மூலம் தனி உபயோகத்துக்கான நிலக்கரி சுரங்கத் தொகுதி ஒதுக்கீட்டு முறையைத் துவக்கியது. லஞ்ச ஊழலும் சலுகைசார் முதலாளித்துவமும் இதன் விளைவாக ஏற்பட்டன.
 
தொடர் வரிசையில் லஞ்ச ஊழல்கள் வெளிப்பட்டு வந்த பின்னணி யில் நிலக்கரிச் சுரங்கத் தொகுதி ஊழலானது காங்கிரஸ் மற்றும் ஐ.மு. கூட்டணிக்கு மேலும் கடுமையான சேதாரத்தை ஏற்படுத்தியுள்ளது. வெட்கங்கெட்ட முறையில் இதனை அரசாங்கம் நியாயப்படுத்தியதும் அமைப்பு முறையில் தவறு எதுவுமில்லை என்று அது கூறிக்கொண்டதும் 2ஜி அலைக்கற்றை ஊழலை அதுகையாண்ட விதத்தையே நினைவு படுத்தியது.
 
நாடாளுமன்றம் முடக்கப்பட்டுவிட்டதால் இடதுசாரிக் கட்சிகள் சமாஜ்வாதிக் கட்சி மற்றும் தெலுங்கு தேசக் கட்சியுடன் இணைந்து ஒரு கூட்டு நிலைபாட்டை எடுத்தன. நாடாளுமன்றத் தேக்கநிலை ஒருமுடிவுக்கு வர வேண்டும். ஒரு உச்ச நீதிமன்ற நீதிபதி விசாரணை நடத்தப்பட வேண்டும். தனியார் கம்பெனிகளுக்கான ஒதுக்கீடுகள் ரத்து ஆகியவற்றை நாம் கோரினோம்.
 
நிலக்கரித் தொகுதி ஒதுக்கீட்டு ஊழல், கோவா சுரங்கக்கொள்ளை மற்றும் கிரானைட் தோண்டி எடுப்பதில் ஊழல்-இவையனைத்தும் கனிம மற்றும் தேசிய வளங்களை அரசுக்கட்டுப்பாட்டில் கொண்டுவருவது மற்றும் சுரங்கத் தொழில் என்பது ஒரு அரசு நிறுவனமாக இருப்பது ஆகியவற்றின் தேவையை அடிக்கோடிட்டு காட்டுகின்றன.
 
ஊழல்களின் வரிசையில் பிற சிஏஜி அறிக்கைகள்
 
நிலக்கரி ஒதுக்கீடு தொடர்பான அறிக்கையுடன் கூடவே வேறு இரண்டு சிஏஜி அறிக்கைகளும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. இவற்றில் ஒன்று சசன் உல்ட்ரா மெகா மின்சாரத் திட்டம் தொடர்புடையது. இந்த திட்டத்தில் யூஎம்பி-க்கு ஒதுக்கப்பட்ட நிலக்கரித்  தொகுதியி லிருந்து கூடுதலாக தோண்டி எடுக்கப்பட்ட நிலக்கரியைப் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டது. தொகுதி ஒதுக்கப்பட்ட பிறகு ரிலையன்ஸ் மின்சாரக் கம்பெனிக்கு இந்த சலுகை அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அக் கம்பெனிக்கு ரூ. 29,033 கோடி ஆதாயம் கிடைத்தது. அந்த தொகையை வசூலிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
 
மற்றொரு அறிக்கை இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத் துக்காக ஜிஎம்ஆர் குழுவிடம் செய்யப்பட்ட தனியார் பொதுத்துறை கூட்டுத் திட்டம் தொடர்பானது. இந்த ஒப்பந்தத்தின் கீழ் விமான நிலையத்துக்குச் சொந்தமான மொத்த நிலத்தில் ஒரு பெரும் பகுதி தனியார் விமானக் கம் பெனிக்கு ஆண்டுக்கு ரூ. 100 என்ற அளவில் குத்தகைக்கு விடப்பட்டது. மேலும் இந்த திட்டச் செலவுக்கான நிதி பயணிகள் செலுத்த வேண்டிய வளர்ச்சிக் கட்டணமான ரூ. 3415 கோடியிலிருந்துதான் பெறப்படுகிறது.  இந்த பயன்படுத்துவோர் வளர்ச்சிக் கட்டணம் என்பதே சட்ட ரீதியான தல்ல. இந்த இரண்டு அறிக்கைகளின் மீதும் நாம் சிறப்புக்கவனம் செலுத்த வேண்டும். அவற்றின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்த வேண்டும். ஜி.எம்.ஆருடன் செய்யப்பட்ட தனியார் பொதுத்துறைத் கூட்டுத் திட்டத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்பதையும் பயன்படுத்துவோர் கட்டணம் நீக்கப்பட வேண்டும் எனவும் அரசியல் தலைமைக்குழு கோரியுள்ளது.
 
ராபர்ட்வத்ரா விவகாரம்
 
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வத்ராவின் சந்தேகத்துக்கிடமான தொழில் நடவடிக்கைகள் அம்பல மானது காங்கிரஸ் கட்சியின் தோற்றத்தை மேலும்  கெடுத்துள்ளது. ஒரு பெரிய சொத்து விற்பனைக் கம்பெனி அரியானா காங்கிரஸ் அரசாங்கம் மற்றும் சக்தி வாய்ந்த அரசியல் தொடர்புள்ள ஒரு நபர் ஆகியோருக் கிடையேயான பிணைப்பினை வெளிக்காட்டுகிறது. ராபர்ட் வத்ரா கம்பெனியின் வணிக விவகாரங்கள் மற்றும் டிஎல்எப் அமைப்புடன் அவற்றுக்குள்ள தொடர்பு ஆகியவை பற்றி ஒரு விசாரணை நடத்தப்பட வேண்டும்.
 
அஸ்ஸாம்
 
அஸ்ஸாமில் உள்ள போடோலாண்டு பிராந்திய சுயாட்சி மாவட் டத்தின் கொக்ராஜர் மற்றும் அதன் அருகாமை பகுதிகளில் போடோக் களுக்கும் வங்காளி பேசும் முஸ்லிம்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல்கள் 100 பேர் கொல்லப்படுவதற்கும் நான்கு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் இல்லங்களை விட்டு வெளியேறி நிவாரண முகாம்களில் தங்க வேண்டிய நிலைக்கும் இட்டுச் சென்றுள்ளன. ராணுவம் மற்றும் காவல்துறை படைகள் ஈடுபடுத்தப்பட்ட பிறகும்கூட ஆங்காங்கே சில நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. ஆகஸ்ட் கடைசி வாரத்தில் நிவாரண முகாம்களில் தங்கியிருப்பவர்கள் அல்லது அவற்றுக்குத் திரும்புபவர்கள் தாக்கப்படுவது, கொல்லப்படுவது அல்லது காயப்படுத்துவது போன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக நிகழ்ந்துள்ளன.
 
போடோ விடுதலைப் புலிப்படைக்கும் மத்திய அரசாங்கம் மற்றும் மாநில அரசாங்கத்துக்குமிடையே 2003 பிப்ரவரியில் போடோ ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இதன் விளைவாக அரசியல் அமைப்புச் சட்டத்தின் ஆறாவது அட்டவணையின் கீழ் கொக்ராஜர், சிராங், பாஸ்கா, உடல்குரி ஆகிய நான்கு மாவட்டங்களை உள்ளடக்கிய போடோலாந்து பிராந்திய சுயாட்சி மாவட்ட அமைப்பு அமைக்கப்பட்டது. பல்வேறு போடோ குழுக்கள் ஆயுதந்தாங்கிய அமைப்புகளாக இருந்து கலக நடவடிக்கையில் ஈடுபட்டுவந்தன. சுயாட்சி மாவட்ட அமைப்பு உருவாக்கப்பட்ட பிறகும் கூட போர் நிறுத்தத்தை ஏற்றுக்கொள்ளாத ஒரு குழு இருந்து வருகிறது. தனி போடோலாந்து மாநிலக் கோரிக்கையை எழுப்பிவரும் மற்ற போடோ அமைப்புகளும் இருந்து வருகின்றன.
 
கொக்ராஜர் மாவட்டத்தில் போடோக்கள் 32 சதவிகிதம் அளவிலும், வங்காளிகள் 21 சதவிகிதம் அளவிலும், அஸ்ஸாமியர் 20சதவிகிதம் அளவிலும் சந்தால் ஆதிவாசிகள் 17 சதவிகிதம் அளவிலும் இருந்து வருகின்றனர். நிதி மற்றும் ஆதார வளங்கள் தொடர்பாக போடோக்களும் போடோ அல்லாத சமூகப் பிரிவினருக்குமிடையே பதற்றமும் மோதலும் இருந்து வருகின்றன.
 
1996 மற்றும் 1998ம் ஆண்டில் போடோக்களுக்கும் சந்தால் ஆதிவாசிகளுக்குமிடையே மோதல்கள் நடைபெற்றன. இவற்றில் நூற்றுக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டன. அப்போது இடம் பெயர்ந்த பலரும் நிவாரண முகாம்களில் பத்தாண்டுகளுக்கு மேலாக தங்கியிருக்க வேண்டியிருந்தது. சில முஸ்லிம் இளைஞர் தலைவர்களின் கொலை மற்றும் சில முஸ்லிம் மாணவர்கள் தலைவர்களைக் கொல்வதற்கான முயற்சி களை அடுத்து தற்போதைய மோதல்களுக்கான தூண்டுதல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பதிலடித் தாக்குதல்களில் சரணடைந்த நான்கு போடோ புலிப்படை ஊழியர்கள் கொல்லப்பட்டனர். நான்கு லட்சத்துக்கும் மேற்பட்டோர் 278 நிவாரண முகாம்களில் அடைக்கலம் புகுந்தனர். போதுமான பாதுகாப்புப் படைகளை ஈடுபடுத்துவதில் மாநில அரசாங்கத்தில் தாமதமும் எதிர்வினையாற்றுவதில் மத்திய அரசு காட்டிய தாமதமும் முதல் ஒரு வாரத்தில் சூழ்நிலை மேலும் மோசமடைவதற்கும் வன்முறை பரவுவதற்கும் காரணமாக இருந்தன. மோதலைத் தூண்டி விடும் வேலையில் தீவிரவாதக் குழுக்கள் ஈடுபட்டு வந்துள்ளன. இரண்டு தரப்பிலும் ஏராளமான மக்களின் வாழ்க்கை இதனால் பாதிப்புக்குள்ளாயிற்று.
 
நிலம் மற்றும் நில உரிமைகள் தொடர்பான பிரச்சனை மிகவும் முக்கியமானதும் சிக்கல் நிறைந்ததுமாகும். காலனி ஆட்சியின் போது சமவெளி ஆதிவாசிகளான போடோக்கள் போன்ற பழங்குடியினரின் நில உரிமைகளை பாதுகாக்கும் வழிமுறையாக எல்லைக் கோட்டுமுறை (line system) அறிமுகப்படுத்தப்பட்டது. அதே நேரத்தில் பிரம்மபுத்ரா பள்ளத்தாக்கில் விளைச்சலை அதிகரிப்பதற்காகவும் நிலவரியை பெருகச் செய்யவும் கிழக்கு வங்காளத்திலிருந்து விவசாயிகள் புலம்பெயர்வதை அவர்கள் ஊக்குவித்தனர். போடோ சுயாட்சி மாவட்டப் பகுதிகளிலிருந்து முஸ்லிம் விவசாய உற்பத்தியாளர்களை விரட்டியடிப்பதற்காக இனக் குழுத் துப்புரவு முயற்சியில் போடோ குழுக்கள் ஈடுபட்டுள்ளதாக முஸ்லிம் அமைப்புகள் இப்போது குற்றம்சாட்டிவருகின்றன. வங்காள தேச ஊடுருவல்காரர்கள் என்று முஸ்லிம்களை போடோக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். ஆனால் நாட்டு விடுதலை மற்றும் நாட்டுப் பிரிவினைக்கு முன்னதாக 20ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலிருந்தே இந்த முஸ்லிம்களில் பெரும்பான்மையினர் போடோக்களுடன் அருகருகே வசித்து வந்துள்ளனர்.
 
வன்முறை பயன்படுத்தப்பட்ட இனக்குழு மோதல்களையும் அந்த வன்முறையைக் கட்டுப்படுத்துவதில் மாநில அரசாங்கத்தின் தோல்வி யையும் அஸ்ஸாம் கட்சி கண்டித்துள்ளது. அமைதியையும் இயல்பு நிலை யையும் குறிப்பாக முஸ்லிம்கள்  மத்தியில் கொண்டுவருமாறு மக்களுக்கு அது வேண்டுகோள் விடுத்துள்ளது. பல்வேறு இடங்களில் குறிப்பாக கீழ் அஸ்ஸாம் பகுதிகளில் அமைதிப் பேரணிகளையும் பொதுக்கூட்டங் களையும் கட்சி நடத்தியுள்ளது. பல்வேறு கோரிக்கைகளின் பட்டியல் அடங்கிய ஒரு மனுவையும் அது முதலமைச்சரிடம் சமர்ப்பித்துள்ளது. சட்டவிரோத ஆயுதங்கள் மற்றும் துப்பாக்கி குண்டுகள் போன்றவற்றைக் கைப்பற்றுவதற்கான நடவடிக்கைகள், பாதிக்கப்பட்டவர்களுக்கு போதுமான நிவாரணப் பொருட்களையும மருத்துவ உதவியையும் வழங்குதல், புலம்பெயர்ந்த மக்களை அவர்கள் சொந்த இடங்களில் உள்ள குடியிருப்புகளில் மீண்டும் குடியமர்த்துதல், இழப்புகளுக்கு உரிய இழப்பீடுகள், போடோ சுயாட்சி மாவட்டப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு ஜனநாயக பண்பாட்டு மற்றும் நில உரிமைகளைத் துவக்குதல் ஆகியவை தொடர்பான கோரிக்கைகள் அவற்றில் அடங்கியுள்ளன.
 
பல்வேறு நிவாரண முகாம்களில் 1.56 லட்சம் முஸ்லிம்களும் 18ஆயிரம் போடாக்களும் இருப்பதாக அண்மையில் வெளியிடப்பட்ட அதிகாரபூர்வ அறிக்கைகள் தெரிவிக்கின்றன. நிலப்பதிவேடுகளையும் குடியுரிமைக்கான ஆதாரங்களையும் காட்டக்கூடிய முஸ்லிம்களை மட்டுமே அவர்களுடைய இல்லங்களுக்குத் திரும்ப அனுமதிக்க முடியும் என்ற நிலைபாட்டை போடோ பிராந்திய கவுன்சிலும் இந்து வகுப்புவாத சக்திகளும் எடுத்துள்ளன. இந்த நிலைபாட்டின் காரணமாக முஸ்லிம்கள் பலராலும் அவர்களுடைய இல்லங்களுக்குத் திரும்பிச் செல்ல முடியாது. ஏனெனில் அவர்களை தங்களுடைய பதிவேடுகளை அளிக்க முடியாத நிலையில் உள்ளனர். நிவாரண முகாம்களில் உள்ளவர்கள் அனைவரும் தங்கள் இல்லங்களுக்கும் நிலத்துக்கும் திரும்புவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்ற நிலைபாட்டை கட்சி எடுத்துள்ளது. அவர்களுடைய பாதுகாப்பையும் ஆபத்தின்மையையும் உறுதிப்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.
 
பல்வேறுவிதமான வகுப்புவாத மற்றும் அடிப்படைவாத சக்திகள் இந்த சூழ்நிலையைப் பயன்படுத்துவதற்காக முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன. ஆர்எஸ்எஸ் மற்றும் விஸ்வ இந்து பரிஷத்தின் உதவியுடன் ஆகஸ்ட் 27ந்தேதியன்று அஸ்ஸாம் முழு அடைப்பை பஜ்ரங்தள் நடத்தியது. இதனைத் தொடர்ந்து அடுத்த நாளன்று முழு அடைப்புக்கான அறைகூவலை அகில அஸ்ஸாம் சிறுபான்மை மாணவர் அமைப்பும் வேறு சில அமைப்புகளும் விடுத்தன. இந்த முழு அடைப்புகள் சில இடங்களில் வன்முறை மோதல்களுக்கும் பிரம்புத்திரா பள்ளத்தாக்கில் வகுப்புவாத ரீதியில் எதிரெதிர் அணிதிரட்டல்களுக்கும் இட்டுச் சென்றன.  வங்காள தேசத்திலிருந்து ஊடுருவல் தொடர்பான பிரச்சனை மீண்டும் முன்னணிக்கு வந்துள்ளது. இது தொடர்பாக 1971ஆம் ஆண்டின் வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் குடிமக்களுக்கான தேசிய பதிவேட்டின் அண்மைத் தகவல்களையும் இணைக்குமாறும் அதன் அடிப்படையில் குடிமக்கள் அனைவருக்கும் புகைப்பட அடையாள அட்டைகளை விநியோகிக்குமாறு கட்சி கோரியுள்ளது.
 
அஸ்ஸாமுக்கு வெளியே இதன் பின் விளைவுகள்
 
கீழ் அஸ்ஸாம் மாவட்டங்களின் நிகழ்வுகள் நாட்டில் எதிர்பாராத தாக்கத்தை ஏற்படுத்தின. கொக்ராஜர் பகுதி முஸ்லிம்களின் மீது நிகழ்த்தப்பட்ட அட்டூழியங்களைப் பற்றி நாடு முழுவதிலும் விரிவான அளவில் பிரச்சாரம் நடத்தப்பட்டது. சில தீவிரவாத முஸ்லிம் அமைப்புகளும் இப்பிரச்சனை குறித்து உணர்வுகளை தூண்டிவிட்டன. மும்பையில் ஆசாத் மைதானத்தில் ஒரு முஸ்லிம் அமைப்பு ஒரு எதிர்ப்புப் பேரணியை நடத்தியபோது கூட்டத்தின் ஒரு பகுதியினர் காவல்துறையினர் மற்றும் ஊடகத்தினரின் மீது தாக்குதல் தொடுத்தன. அப்போது நடைபெற்ற தூப்பாக்கிச் சூட்டில் இருவர் கொல்லப்பட்டனர். முஸ்லிம் இளைஞர்கள் வெளிப்படுத்திய கோபாவேசத்தின் பின்னே அவர்கள் காவல்துறையினருக்கு எதிராக அடக்கி வைத்திருந்த கோபம் – பல்வேறு பயங்கரவாதத்தாக்குதல்களின் போது முஸ்லம் இளைஞர்களையே குறிவைத்து காவல் துறையினர் செயல்பட்டதால் ஏற்பட்ட கோபத்தின் வெளிப்பாடாக அமைந்திருந்தது. புனேயில் வடகிழக்கு மாநில மக்களுக்கு எதிராக சில முஸ்லிம் இளைஞர்கள் தாக்குதல் நடத்திய நிகழ்வுகளும் அரங்கேறியுள்ளன. பெங்களூரு மற்றும் கர்நாடகாவின் பிற பகுதி களிலிருந்து பெரும் அளவிலான வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த மக்களின் வெளியேற்றங்கள் நிகழ்ந்தன. இது சென்னைக்கும் வேறு சில இடங்களுக்கும் பரவியது. தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான மக்கள் அஸ்ஸாமுக்கும் வடகிழக்கு மாநிலங் களுக்கும் திரும்பிச் சென்றனர். சுற்றுக்கு விடப்பட்ட குறுஞ்செய்திகளில் இருந்த அச்சுறுத்தல்கள் மற்றும் ஊர் திரும்புமாறு குடும்பத்தினர் விடுத்த வேண்டுகோளுக்கு எதிர்வினையாகும் விதத்திலேயே அவர்கள் இவ்வாறு செயல்பட்டனர். வடகிழக்கு மாநில மக்களை, முஸ்லிம்கள் அச்சுறுத்தி வருவதாக கர்நாடகாவின் ஆர்எஸ்எஸ்சும் அதன் துணை அமைப்புகளும் பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்துவிட்டன. இத்துடன் தீவிரவாத முஸ்லிம் குழுக்கள் நடத்திய பிரச்சாரக்குழு சேர்ந்து கொண்டதனால் அங்கே வசித்துவந்த வடகிழக்கு மாநில மக்களின் மத்தியில் பாதுகாப்பின்மையும் அச்சமும் ஏற்பட்டது.
 
பல்வேறு சமூகங்களுக்கிடையே உறவுகள் எவ்வளவு வலுவற்றவை யாக இருக்கின்றன என்பதை இந்த ஒட்டுமொத்த நிகழ்வுகள் வெளிப் படுத்துகின்றன. வடகிழக்கு மாநில மக்கள் பலநேரங்களில் இன ரீதியில் மோசமாக நடத்தப்படுகின்றனர். இதனால் இந்தியாவின் பிற பகுதிகளில் தாங்கள் அந்நியர்கள் என்பது போன்ற உணர்வு அவர்களுக்கு ஏற் படுகிறது.
 
பிளவுவாத சக்திகள்
 
மும்பையில் மகாராஷ்டிர நவநிர்மான் சமிதி (எம்என்எஸ்) மற்றும் சிவசேனா போன்ற அமைப்புகள் `அன்னியர்களைக் குறிவைத்து அவர்களுக்கு எதிரான வெறுப்பை வெளிப்படுத்துவதற்கு இது போன்ற தருணங்களைப் பயன்படுத்துவதை மற்றொரு அம்சமாகக் குறிப்பிடலாம். ஆசாத் மைதான் பேரணியில் நடைபெற்ற வன்முறைக்காக முஸ்லிம்களை தாக்கியதுடன் நிற்காமல் பீகாரிகளை ஊடுருவல்காரர்கள் என்று குறிப்பிட்டு அவர்களை விரட்டியடிக்கப்போவதாக  ராஜ்தாக்கரே அச்சுறுத்தியுள்ளார். கர்நாடகாவில் ஒரு தொடர் வண்டியில் பயணித்த புலம்பெயர் தொழிலாளர்கள் மீது அகில் பாரதீய வித்யா பரிஷத்தைச் சேர்ந்த மாணவர்கள் தாக்குதல் தொடுத்துள்ளனர். ஒரிசா, வங்காளம் மற்றும் பீகாரைச் சேர்ந்த இந்த தொழிலாளர்களின் மீது ஊடுருவல் காரர்கள் என்ற முத்திரையைக் குத்தி அவர்களை அடித்து நொறுக்கி யுள்ளனர்.
 
பஞ்சாபில் சீக்கிய தீவிரவாதத்தின் புகழ்பாடுவதற்கான முயற்சி கள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. முதலமைச்சர் பியாக் சிங்கைக் கொன்றதற்காக தண்டனை பெற்றவர்களை அகால்தத்தில் பெருமைப்படுத்திய பிறகு ஜெனரல் வைத்தியாவைக் கொன்றதற்காக மரண தண்டனை பெற்றவர்களின் உறவினர்களை எஸ்ஜிபிசி கவுரவப்படுத்தியது. காலிஸ்தானி உணர்வுகளைப் பரப்புவதற்கு செய்யப்பட்டுவரும் நட வடிக்கைகளை அகாலிதள-பாஜக அரசாங்கம் கண்டும் காணாமல் இருக்கிறது.
 
பொருளாதார நிலைகள் மோசமடைந்து அதிருப்தி தலைதூக்கி வரும் ஒரு சூழ்நிலையில் புலம்பெயர் தொழிலாளர்களையும் பிற மாநிலங் களிலிருந்து வந்துள்ள மக்களையும் குறிவைத்துத் தாக்குவதன் மூலம் மக்களின் கவனத்தை திசைதிருப்புவதற்கு பல்வேறு பிளவுவாத சக்திகள் முயற்சித்து வருகின்றன. இதுபோல ஒரு சூழலில் முஸ்லிம்களைக் குறிவைத்துத் தாக்கும் வேலையில் ஆர்எஸ்எஸ்-சும் இந்துத்துவா சக்திகளும் வழக்கம்போல் ஈடுபட்டு வருகின்றன.
 
வகுப்புவாத வன்முறை
 
கடந்த மூன்று மாதங்களாக பல வகுப்புவாத நிகழ்வுகள் நடை பெற்றுள்ளன. உத்தரப்பிரதேச மாநிலத்தில் அதிலும் குறிப்பாக மேற்கு உத்தரப்பிரதேசத்தில் கோசிகலான், பரெய்லி, முசாபர்நகர், சஹ்ரான்பூர், பிரதாப்கர் மற்றும் ஏனைய பகுதிகளில் வகுப்புவாதக்  கலவரங்களும் வன்முறையும் நடைபெற்றுள்ளன. சிறிய நிகழ்வுகளை ஊதிப்பெரிதாக்கி வகுப்புவாதப் பதற்றத்தை உருவாக்குவதில் ஆர்எஸ்எஸ் முனைப்புடன் செயல்படுகிறது. சமாஜ்வாதி கட்சி அரசாங்கத்தை ஒரு முஸ்லிம் ஆதரவு அரசாங்கமாக சித்தரித்து வகுப்புவாதப் பிரிவினையை ஏற்படுத்துவதன் மூலம் 2014 மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு உதவுவதற்காகவே இம்முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
 
கர்நாடகாவில் இந்துத்துவா குழுக்கள் தங்களுடைய வலுச் சண்டைப் போக்கைத் தொடர்கின்றன. பெல்காமில் நடைபெற்ற ஒரு வன்முறைச் சம்பவத்தில் இருவர் கொல்லப்பட்டனர். பிள்ளையார் சிலையை ஆற்றில் கரைப்பதற்கான ஊர்வலங்கள் நடைபெற்றபோது சிந்தாமணி மற்றும் பல இடங்களில் மோதல்கள் நடைபெற்றுள்ளன.
 
நரோடாபாத்தியா தீர்ப்பு
 
நரோடாபாத்திய வழக்கில் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜோத்ஸ்னா  யானிக் அளித்த தீர்ப்பு ஒரு திருப்புமுனை என்று கூறலாம். 2002ஆம் ஆண்டின் குஜராத் வகுப்புக் கலவரத்தின்போது நடைபெற மிகவும் மோச மான நிகழ்வுகளில் ஒன்று என்று நரோடாபத்தியா படுகொலையைக் குறிப் பிடலாம். இதில் 97 பேர் கொல்லப்பட்டனர். அந்த தீர்ப்பின்படி 32 பேர் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டுள்ளனர். சிலருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது. அப்பகுதியின் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான மாயா கொட்னானியும் பஜ்ரங்தள் அமைப்பாளரான பாபு பஜ்ரங்கியும் தண்டிக்கப்பட்டுள்ளனர். கொட்னானிக்கு 10 முதல் 18 வருடங்களுக்கான சிறைத் தண்டனையும், பஜ்ரங்கிற்கு மரணமடையும் காலம் வரையிலான ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு அம்சங்களில் இத்தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஒரு வகுப்புவாத வன்முறை வழக்கில் இவ்வளவு பேர் தண்டனை பெறுவது இதுவே முதல் முறையாகும். இரண்டாவதாக அரசியல் தலைமை மட்டத்தில் உள்ளவர்களின் மீது சதிச் செயலில் ஈடுபட்டவர்களாகவும் தூண்டிவிடுபவர்களாகவும் குற்றச் செயல்களுக் கான பொறுப்பு நிலைநிறுத்தப்பட்டுள்ளது. குஜராத் மனிதப்படுகொலை யில் எத்தகைய அரசியல் திட்டமிடுதலோ தொடர்போ இல்லை என்று கூறி மறுத்துவந்த நரேந்திரமோடிக்கு இந்த தீர்ப்பு ஒரு பலத்த அடியாகும். எதிர்காலத்தில் வகுப்புவாத வன்முறை தொடர்பான வழக்குகளில் நீதிமன்ற அணுகுமுறைக்கு இத்தீர்ப்பு நீதிமன்றத் தீர்ப்பு வழிகாட்டுதலாக உதவ  வேண்டும்.
 
குடியரசுத் தலைவர் தேர்தல்
 
குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை 14ந்தேதி நடைபெற்றது. ஐ.மு. கூட்டணி பிரணாப்குமார் முகர்ஜியை தனது வேட்பாளராக நிறுத்தியது. அஇஅதிமுக மற்றும் பிஜேபியால் முதலில் முன்மொழியப்பட்ட பி. ஏ. சங்மாவை தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆதரித்தது. பிரணாப்குமார் முகர்ஜிக்கு காங்கிரஸ் அல்லாத பெரும்பாலான மதச்சார்பற்ற கட்சிகளின் ஆதரவு கிடைத்தது. இவ்வாறு ஆதரவு தெரிவித்த கட்சிகளில் சமாஜ்வாதி கட்சி, பிஎஸ்பி, ஜனதா தள்(எஸ்), ராஷ்டிரீய ஜனதா தள் மற்றும் ஜேடி(யூ) (இக்கட்சி இந்த விஷயத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முடிவை ஆதரிக்கவில்லை) ஆகிய கட்சிகள் அடங்கும். இடதுசாரிக் கட்சிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் பார்வர்டு பிளாக் கட்சியும் பிரணாப் முகர்ஜிக்கு ஆதரவளிக்க முடிவு செய்தன. இதே நேரத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும் ஆர்எஸ்பியும் தேர்தலில் பங்கேற்பதில்லை என்று முடிவு செய்தன.
 
குடியரசுத் தலைவர் பதவியில் மதச்சார்பற்ற தகுதிப்பாடுகள் கொண்ட ஒருவரே அமர வேண்டும் என்ற முரணற்ற நிலைப்பாட்டை 1992ம் ஆண்டு முதலே நமது கட்சி எடுத்துவருகிறது. பாஜக மற்றும் மதவாத சக்திகளின் செல்வாக்குக்கு உட்படக்கூடிய ஒருவர் இப்பதவியினை வகிக்கக் கூடாது. எனவே பாஜகவின் ஆதரவைப் பெற்ற ஒரு வேட்பாளரை ஆதரிப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை. மம்தா பானர்ஜியும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் துவக்கத்தில் பிரணாப் முகர்ஜி வேட்பாளராக அறிவிக்கப்படுவதை எதிர்த்து வந்தன. அப்துல்கலாமை எதிர்க்கட்சி வேட்பாளராக்குவதற்காக அவை பாஜகவுடன் இணைந்து செயல்பட்டன. ஆனால் முலாயம் சிங்கும் ஜேடி(யு) கட்சியும் இத்திட்டத்துக்கு இணங்கிவர மறுத்ததை அடுத்து இம்முயற்சி வெற்றி பெறவில்லை. திரிணாமுல் காங்கிரசுக்கும் காங்கிரஸ் கட்சிக்குமிடையேயான பிளவு குடியரசுத் தலைவர் தேர்தல் பிரச்சனை தொடர்பாக மேலும் மோசமடைந்து வந்தது. இந்த கட்டத்தில் திரிணாமுல் கட்சியின் முயற்சிகளுக்கு எதிராக செயல்படுவது இன்றியமையாததாக இருந்தது. பிற மதச்சார்பற்ற எதிர்க்கட்சிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு பிரணாப் முகர்ஜிக்கு ஆதரவளிப்பது  என அரசியல் தலைமைக்குழு முடிவு செய்தது. தனிமைப்பட்டுப்போன திரிணாமுல் காங்கிரஸ் கட்சி இறுதியாக பல்டியடிக்க வேண்டியிருந்தது. பிரணாப் முகர்ஜிக்கு ஆதரவளித்தது.
 
பெண்கள் மீதான தாக்குதல்கள் கவலையளிக்கும் சூழ்நிலை கடந்த சில மாதங்களாக நாடு முழுவதிலும் பெண்களுக்கு எதிரான அட்டூழியங்கள் அச்சத்தை ஏற்படுத்தும் வண்ணம் அதிகரித் ததை காணமுடிந்தது. பெண்கள் சிறுமிகள் மற்றும் குழந்தைகள் கூட பாலியல் வன்புணர்ச்சிக்கு உட்படுத்தப்படுவது பெரும் அளவில் அதிகரித் துள்ளது. இளம் பெண்களை பலர் கூட்டாக பாலியல் வன்புணர்ச்சிக்கு உட்படுத்துவது நகரங்களில் ஒரு வழக்கமான நிகழ்வாக மாறியுள்ளது. அரியானா மாநிலத்தில் செடம்பரிலிருந்து அக்டோபருக்குள்ளான ஒரு மாதத்தில் 13 பாலியல் வன்புணர்ச்சி சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் பலரும் தலித் பிரிவினர் மற்றும் சிறுவயதுப் பெண்களுமாகும். பாலியல் வன்புணர்ச்சி மற்றும் பாலியல் வன்முறை நிகழ்வுகள் மேற்குவங்காளம், பீகார், ஜார்கண்ட், உத்தரப் பிரதேசம் மற்றும் பிற மாநிலங்களில் பெரும் அளவில் நடைபெற்றுள்ளன. சமூக விழுமியங்களின் சீர்குலைவும், பெண்களை மிருக வேட்டையாடு பவர்கள் அதற்குரிய தண்டனைகளிலிருந்து தப்பித்துவிடுவதும் அதிகரித் துள்ளன. உடனடியாக செயல்பட்டு இத்தகைய குற்றங்களுக்கு எதிரான கடும் நடவடிக்கைகள் காவல்துறையினர் எடுக்கத் தவறியதானது பெண்கள் மற்றும் இளம் சிறுமிகளின் மத்தியில் பாதுகாப்பின்மையைத் தோற்றுவித்துள்ளது. கட்சியும் வெகுஜன அமைப்புகளும் இப்பிரச் சனையை முனைப்புடன் கையில் எடுத்துக்கொண்டு பெண்களுக்கு எதிரான இத்தகைய குற்றச் செயல்களுக்கு எதிராகவும் சமூக சீரழிவுக்கு எதிராகவும் பிரச்சாரம் நடத்த வேண்டும். பொது இடங்கள், பொதுப் போக்குவரத்து மற்றும் பணியிடங்களில் பெண்களின் பாதுகாப்பையும் ஆபத்தின்மையையும் உறுதிப்படுத்துவதற்கான உறுதியான நடவடிக்கை களை கட்சி கோர வேண்டும்.  
 
சிறுபான்மைப் பிரிவு இளைஞர்கள் மீது குற்ற நடவடிக்கைகள்
 
பயங்கரவாதக் குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்குகளில் முஸ்லிம் இளைஞர்கள் இலக்காக்கப்பட்டு கைது செய்யப்பட்டு வருவதனால் முஸ்லிம் சமுதாயத்தினர் சீற்றம் அடைந்துள்ளனர். நிரபராதி இளைஞர்கள் கைது செய்யப்படுவதும் போதுமான ஆதாரமின்றி நீண்டகால சிறைவாசத்துக்கு உட்படுத்தப்படுவதும் கடந்துபோன ஆண்டுகளில் அதிகரித்துள்ளன. மாலேகால் மற்றும் மெக்கா மசூதி குண்டு வெடிப்புகளில் இந்துத்துவா பயங்கரவாத அமைப்புகளுக்கு தொடர்புள்ளது அம்பலமானதை அடுத்து இந்த வழக்குகள் தவறாக போடப்பட்டது என்பது வெளிப்படையாகத் தெரிந்தது. எனினும் பயங்கரவாதம் தொடர்பான வழக்குகளிலும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழும் முஸ்லிம் இளைஞர்கள் சுற்றிவளைத்துக் கைது செய்யப்படுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
 
ஜமியா ஆசிரியர் ஒருமைப்பாட்டு அமைப்பின் சமீபத்திய ஒரு ஆய்வில் அரசுக்கு எதிராக மக்களைத் தூண்டிவிடுதல் மற்றும் பயங்கர வாதம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட முஸ்லிம் இளைஞர்களின் 16 வழக்குகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இந்த 16 வழக்குகள் அனைத் திலும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். லஷ்கர் ஈ தொய்பாவுடனும் சவுதி அரேபியாவைத் தலைமையிடமாகக் கொண்ட குழுக்களுடனும் தொடர் புடையவர்கள் என்ற குற்றச்சாட்டுக்களின் கீழ் சுமார் ஒரு டஜன் படித்த முஸ்லிம் இளைஞர்கள் சமீபத்தில் கர்நாடகாவில் கைது செய்யப்பட் டுள்ளனர். சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் பயன்படுத்தப் பட்டுள்ள அத்தகைய வழக்குகளில் எல்லாம் குற்றம்சாட்டப்பட்டவர் தாங்கள் நிரபராதிகள் என்று நிரூபிப்பது கடினமானது. அதே நேரத்தில் உறுதியற்ற மற்றும் பல நேரங்களில் திரித்துக் கூறப்படும் சான்றுகளின் அடிப்படையில் குற்றச்சாட்டுக்களை சுமத்துவது காவல்துறைக்கு எளிதானது.
 
பயங்கரவாதம் தொடர்பான வழக்குகளில் சிறுபான்மை சமுதாயத்தினரை தொல்லைப்படுத்துவதும், இலக்காக்குவதற்குமான ஆதாரங்கள் குவிந்துவரும் பின்னணியில் அத்தகைய ஒரு சார்பு விசாரணைகளுக்கு எதிரான தெளிவான தாக்கீதுகளை அரசாங்கம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை நாம் எழுப்ப வேண்டும். முஸ்லிம் இளைஞர்களை அவ்வாறு தொல்லைப்படுத்தப்படும் மாநிலங்களின் காவல்துறை விசாரணை அமைப்புகளின் மீது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என்பது அந்த மாநிலங்களுக்குத் தெளிவாகத் தெரிவிக்கப்பட வேண்டும். இத்தகைய அனைத்து தேர்வுகளிலும் சிறுபான்மை சமூகத் தினரின் ஜனநாயக உரிமைகள் மற்றும் குடிமை உரிமைகளின் பாது காப்புக்காக கட்சி பிரச்சார இயக்கத்தை நடத்த வேண்டும்.
 
கூடங்குளம் அணுசக்தி நிலையம்
 
கூடங்குளத்தில் நிறுவப்பட்டுள்ள அணு உலைகளுக்கு எதிராக அப்பகுதி மக்கள் ஒரு போராட்டத்தை நடத்தி வருகின்றனர். அவற்றின் பாதுகாப்பு குறித்து மக்கள் மத்தியில் – குறிப்பாக ஜப்பானின் ஃபுகுஷிமா விபத்துக்குப்பிறகு உண்மையான அச்சங்கள் நிலவி வருகின்றன. கூடங் குளம் பகுதி ஒரு சுனாமியின்போது தாக்கப்பட்டிருக்கிறது. இந்திய-அமெ ரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தின் பின்னணியில் இறக்குமதி செய்யப்படும் அணு உலைகளை நிறுவுவதற்கு கட்சியின் எதிர்ப்பு 20வது அகில இந்திய மாநாட்டின் அரசியல் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தீர்மானத்தில் நாம் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தோம்: அணுசக்தி ஒப்பந்தத்துக்கு வெகுகாலம் முன்னர் ரஷ்யாவிலிருந்து விலைக்குவாங்கி கூடங்குளத்தில் நிறுவப்பட்டுள்ள இரண்டு அணு உலைகள் வேறு ஒரு வகையின் கீழ் வருகின்றன. இந்த அணு உலைகளின் பாதுகாப்புத்தன்மை மற்றும் சுற்றுச்சூழலின் மீது அவை ஏற்படுத்தக்கூடிய பாதிப்பு குறித்து அப்பகுதி மக்களுக்கு அதிலும் குறிப்பாக ஃபுகுஷிமா விபத்துக்குப்பிறகு பல்வேறுவிதமான அச்சங்கள் உள்ளன. அதன் பாதுகாப்பு குறித்து ஒரு சுயேச்சையான மறு பரீசீலனை செய்யப்படுவது அவசியம் என்பதுடன் உலையை நிறுவுவதற்கு முன்னர் மக்களின் அச்சங்கள் போக்கப்பட வேண்டும்.
 
இதனை அடிப்படையாகக் கொண்டு அணு உலையை நிறுவுவதற்கு முன்னர் அதன் பாதுகாப்பான தன்மை குறித்து ஒரு சுயேச்சையான மறு பரிசீலனை செய்யப்பட வேண்டும் எனவும் போதுமான பாதுகாப்பு நடவடிக் கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் நாம் கோரி வருகிறோம். மேலும் எதிர்ப்பு தெரிவித்துவரும் மக்களின் மீது கட்டவிழித்துவிடப்பட்டுள்ள காவல்துறை ஒடுக்குமுறைக்கு எதிராகவும் பலருக்கு எதிராக அரசு எதிர்ப்பு கலகத்தைத் தூண்டிவிடும் பிரிவின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதற்கு எதிராகவும் கண்டனங்களை கட்சி வெளி யிட்டுள்ளது.
 
இஸ்லாமிய எதிர்ப்பு திரைப்படத்துக்கு எதிர்ப்பு
 
முகமது நபிகளையும் இஸ்லாத்தையும் இழிவுபடுத்தும் விதத்தில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட திரைப்படம் ஒன்று முஸ்லிம் உலகம் முழுவதிலும் உலகளாவிய எதிர்ப்பைத் தோற்றுவித்தது. இந்தியாவிலும் ஹைதராபாத், சென்னை, கொல்கத்தா மற்றும் பிற நகரங்களிலும் முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டன. சுதந்திரமான பேச்சுரிமை என்பது ஒரு அடிப்படை உரிமை என்பதனால் அப்படத்தைத் தடைசெய்யவோ அல்லது அதற்கு அனுமதி மறுக்கவோ முடியாது என்று அமெரிக்க அரசாங்கம் கூறியது. எந்த மதத்துக்கோ அல்லது சமூகத் துக்கோ எதிராக உணர்வுகளைத் தூண்டிவிடுவதை பேச்சுரிமையின் கீழ் பாதுகாப்பு அளிக்க முடியாது என்பதனால் அமெரிக்க அரசாங்கம் அத்தகைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய அரசாங்கம் கோரியிருக்க வேண்டும்.
 
கருத்துக்களை வெளியிடும் உரிமை மற்றும் சுதந்திரமான பேச் சுரிமைக்கு வழிவகை செய்யும் குடியுரிமை மற்றும் அரசியல் உரிமை களுக்கான சர்வதேச ஒப்பந்தம் வரம்புகளை விதித்துள்ளது. அந்த ஒப்பந் தத்தின்படி, தூண்டிவிடுதல், பாரபட்சம் காட்டுதல், பகைமையுணர்வு அல்லது வன்முறையாக அமைந்த தேசீய, இன ரீதியான அல்லது மத ரீதியான வெறுப்புணர்வும் ஆகியவற்றுக்கான எந்த ஆதரவும் சட்டப்படி தடை செய்யப்படும்.
 
அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் இஸ்லாமிய எதிர்ப்புப் பிரச்சார அலையும் இஸ்லாமுக்கு எதிரான வெறுப்புணர்வும் அதிகரித்து வருகின்றன. இஸ்லாம் மற்றும் அதன் இறைத்தூதருக்கு எதிராக விஷம் கக்குவதற்கு எந்த பெயர் தெரியாத செய்தி இதழ் அல்லது திரைப்படத் தயாரிப்பாளருடைய உரிமையை உயர்த்திப் பிடிப்பதனால் ஏற்படும் விளைவுகளுடன் ஒப்பிடும்போது முஸ்லிம்களின் மத உணர்வுகள் மற்றும் அவர்களுடைய ஆழமான நம்பிக்கைகளை அவமதிப்பதனால் ஏற்படும் விளைவுகள் குறைவான முக்கியத்துவம் வாய்ந்தவை என்று கருதப் படுகிறது.
 
பயங்கரவாதத்துக்கு எதிராக போரிடுவது என்ற பெயரில் மத்திய கிழக்கில் முஸ்லிம் நாடுகளை ஆக்கிரமித்தல் மற்றும் தாக்குதல்களைத் தொடுத்துவரும் அமெரிக்கக் கொள்கைகள் முஸ்லிம் சமூகத்தின் கோபத்தைத் தூண்டிவிட்டுள்ளன.
 
சட்டமன்றத் தேர்தல்கள்
 
இமாச்சலபிரதேசம் மற்றும் குஜராத் மாநில சட்டமன்றத் தேர்தல்கள் முறையை நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடைபெறவுள்ளன. இதனைத் தொடர்ந்து 2013 பிப்ரவரி மாதத்தில் திரிபுரா சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறவுள்ளன.
 
இமாச்சலப்பிரதேசத்தில் பாஜக அரசாங்கம் தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதற்கான அறைகூவலை நாம் விடவேண்டும். அத்துடன் காங்கிரஸ் கட்சியையும் நாம் எதிர்க்க வேண்டும். சிம்லா மாநகராட்சித் தேர்தல்களில் நமக்குக் கிடைத்த முன்னேற்றங்கள் மற்றும் மாணவர் சங்கத்திலும் மற்றும் பிறவெகுஜன நடவடிக்கைகளிலும் கிடைத்துள்ள வெற்றிகளின் அடிப்படையில் சிம்லா பகுதியில் உள்ள இடங்களில் நாம் நன்கு செயல்பட முடியும், சில இடங்களில் வெற்றிபெறுவதற்கு முழு முயற்சியை நாம் மேற்கொள்ள வேண்டும். குஜராத்தில் நாம் மோடி அராங்கம் மற்றும் பாஜகவின் தோல்விக்கான அறைகூவலை விட வேண்டும். நமது தேர்தல் செயல்பாட்டை மேம்படுத்தக்கூடியதும் கட்சி யையும் வெகுஜன அமைப்புகளையும் கட்டுவதற்கு உதவியளிக்கக் கூடியதுமான ஒரு சில இடங்களில் நமது கட்சி போட்டியிட வேண்டும்.
 
திரிபுரா தேர்தல்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்கும். ஏனெனில் தற்போது இடதுசாரிகள் தலைமையிலான அரசாங்கம் உள்ள ஒரே மாநிலம் அதுவே. இடது முன்னணி ஆற்றியுள்ள தனிச்சிறப்பான பணியும் அது கடைப்பிடித்த மக்கள் ஆதரவு நடவடிக் கைகளும் மக்கள் மத்தியில் அதற்கு சாதகமன நிலையை ஏற்படுத்த வேண்டும். வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள அட்டைதாரர்களுக்கு கிலோ அரிசி ரூ. 2க்கு வழங்கும் திட்டம், கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் போன்ற சமூக நலத் திட்டங்களை நிறைவேற்றுவதில் சிறப்பான செயல்பாடு, புதிய மாவட்டங்கள் மற்றும் உப பிரிவுகளை அமைத்து செய்யப்பட்ட அதிகாரப்பரவல் நடவடிக்கைகள் மற்றும் ஆதிவாசி மக்கள் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சிப் பணிகள் ஆகியவை இவை அனைத்தும் அரசாங்கத்துக்கு மக்களின் ஆதரவைப் பெற்றுத்தந் துள்ளன.
 
சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்துவதற்கும் அரசாங்கம் மற்றும் அவற்றின் தலைவர்களுக்கு எதிரான அவதூறுப் பிரச்சாரத்தை நடத்துவதிலும் காங்கிரஸ் கட்சி இடைவிடாத முயற்சிகளை மேற் கொண்டு வருகிறது. அமைதிச் சூழலைச் சீர்குலைக்கும் முயற்சியில் ஈடு படுமாறு அது தீவிரவாத சக்திகளைத் தூண்டிவிட்டும் வருகிறது. சூழ்ச்சி நடவடிக்கைகளுக்கு எதிராக கட்சியும் இடது முன்னணியும் விழிப்புடன் இருக்க வேண்டும். மத்திய அரசாங்கத்தின் மக்கள் விரோதக் கொள்கை களுக்கு எதிராக கிளர்ச்சிகளையும் இயக்கங்களையும் கட்சி நடத்தி வருகிறது. தேர்தல் போர்க்களத்தில் வெற்றிகரமான முறையில் ஈடுபடு வதற்கு திரிபுரா மாநிலக்குழுவுக்கு கட்சி மையம் அனைத்துவித உதவி களையும் வழங்கும்.
 
நாடு தழுவிய எதிர்ப்பு இயக்கங்கள்
 
டீசல் விலை உயர்வும் எரிவாயு உருளைகளின் எண்ணிக்கைக்கு வரம்பிடும் முடிவும் உடனடியான நாடு தழுவிய எதிர்ப்பை சந்தித்தன. அரசியல் தலைமைக்குழுவின் அறைகூவலுக்கிணங்க எதிர்ப்பு ஆர்ப் பாட்டங்களுக்கும் தர்ணா போராட்டங்களுக்கும் கட்சி அமைப்புகள் ஏற் பாடு செய்தன. பன்முகப்பட்ட சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதித்தல் பொதுத்துறை நிறுவனப் பங்கு விற்பனை ஆகிய முடிவுகளை அரசாங்கம் அறிவித்தவுடன் இடதுசாரிக் கட்சிகள் முன் முயற்சி எடுத்து அதனால் எட்டு கட்சிகள் ஒன்றிணைந்து செப்டம்பர் 20ந்தேதியன்று எதிர்ப்பியக்கம் மற்றும் வேலை நிறுத்தத்துக்கான அறைகூவலை விடுத்தன. அதே நாளில் முழு அடைப்புக்கான அறை கூவலை தேசிய ஜனநாயகக் கூட்டணி வெளியிட்டது. அன்றைய தினம் பெரும்பாலான மாநிலங்கள் அர்த்தாலில் பங்கேற்ற ஒருமிகப் பெரும் எதிர்ப்பு  நடவடிக்கையை நாடு எதிர்கொண்டது. டீசல் விலை உயர்வுக்குப் பிறகு உடனடியாக முன்னதாகவே கேரள மாநிலத்தில் அர்த்தால் நடத்தப்பட்டது. மகாராஷ்டிரா மாநிலத்தில் விநாயக சதுர்த்தி விழா நடைபெற்றதன் காரணமாக எதிர்ப்பு  ஆர்ப்பாட்டங்கள் அன்றைய தினம் அணுசரிக்கப்பட்டன. நாடு முழுவதிலும் கடைகளும் சந்தைகளும் மூடிக்கிடந்தன. வணிகர்களின் அமைப்புகள் பலவும் வேலை நிறுத்த அறைகூவலில் இணைந்துகொண்டன. மோட்டார் போக்குவரத்து அன்றைய தினம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டது.
 
உணவுப்பாதுகாப்பு இயக்கம்
 
உணவுப் பாதுகாப்புக்காகவும் அனைவருக்குமான பொது விநியோக முறைக்காகவும் இக்காலத்தில் இடதுசாரிக் கட்சிகள் நாடு தழுவிய இயக்கத்தை நடத்தின. ஜூலை துவக்கத்திலிருந்து வட்டார அளவில் இந்த இயக்கம் தொடங்கப்பட்டது. இது இடதுசாரிக் கட்சிகள் பங்கேற்ற ஐந்து நாள் தர்ணாவாக புதுடில்லியிலும் அதே காலத்தில் மாநில அளவிலான தர்ணாக்களாகவும் பேரணிகளாகவும் நிறைவடைந்தன. இதனைத் தொடர்ந்து செப்டம்பர் 12ந்தேதியன்று உணவுப்பாதுகாப்பு தினம் அனுசரிக்கப்பட வேண்டும் என்ற அறைகூவலை இடதுசாரிக் கட்சிகள் விடுத்தன. இந்த இயக்கத்தின்போது இந்திய  உணவுக் கழகக் கிட்டங்கிகளுக்கு வெளியே மறியல் போராட்டங்கள், மாவட்ட அளவிலான ஆர்ப்பாட்டங்கள் மற்றும் சிறைநிரப்பும் போராட்டங்கள் விரிவான அளவில் நடத்தப்பட்டன. அந்த இயக்கம் மேலும் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டும்.
 
அரசியல் சூழ்நிலை நிலக்கரிச் சுரங்கத் தொகுதி ஒதுக்கீட்டில் நடைபெற்றுள்ள பிரம்மாண்டமான ஊழலின் காரணமாக ஐ.மு. கூட்டணி அரசாங்கம் மேலும் அம்பலப்பட்டுள்ளது. இப்போது பிரதமரே இதில் சம்பந்தப்பட்டுள்ளாரோ என்ற கேள்வியும் எழுந்துள்ளது. உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியா வசியப் பண்டங்களின் தொடர்ந்த விலையேற்றம் காரணமாக ஐ.மு. கூட்டணி அரசாங்கத்தின் ஆதரவு கடுமையான முறையில் அரிக்கப் பட்டுள்ளது. இந்தக் கட்டத்தில்தான் சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீடு, டீசல் விலையேற்றம் மற்றும் இதர நடவடிக்கைகளைக் காரணம் காட்டி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியானது அரசாங்கத்துக்கு அளித்துவந்த ஆதரவை விலக்கிக் கொண்டதுடன் ஐ.மு. கூட்டணியுட னான உறவை முறித்துக்கொண்டு வெளியேறியது. நவீன தாராளமயக் கொள்கைகளை மேலும் முன்னெடுத்துச் செல்வது என்பதே இந்த நெருக்கடிக்கு மன்மோகன் சிங் அரசின் எதிர்வினையாக இருந்தது. இது அரசாங்கத்துக்கும் மக்களுக்குமிடையேயான முரண்பாட்டை அதிகரிக் கவே செய்யும்.
 
பல்வேறு பகுதி மக்களின் எதிர்ப்பு இயக்கங்களும், போராட்டங் களும் இக்காலத்தில் அதிகரித்துள்ளன. செப்டம்பர் 20ந்தேதி வேலை நிறுத்தம் இதன் ஒரு அடையாளமாக இருந்தது. மக்கள் போராட்டங்களையும் இயக்கங்களையும் தீவிரப்படுத்துவதற்கும் விரிவுபடுத்து வதற்கும் சாதகமானதாக இப்போதைய சூழ்நிலை அமைந்துள்ளது.
 
இத்தகைய போராட்டங்கள் மற்றும் இயக்கங்களின் எதிர்ப்பு மையமாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கமும் காங்கிரஸ் தலைமையுமே இருக்க வேண்டும். 20வது அகில இந்திய மாநாட்டில் கட்சி சுட்டிக்காட்டி யுள்ளதுபோல, ஒருபுறம் பெரும் சுமையாக மக்களை அழுத்திவரும் விலைவாசி ஏற்றம், வேலையின்மை, விவசாயிகள் மற்றும் தொழி லாளிகளின் துன்பதுயரமாக இருக்க மறுபுறத்தில் வெட்கங்கெட்ட முறை யிலான லஞ்சலாவண்யம் மற்றும் பெருமுதலாளிகளுக்கும் செல்வந்தர் பிரிவுகளுக்கும் அளிக்கப்படும் பெரும் சலுகைகள் என்ற பின்னணியில் காங்கிரஸ் கட்சியையும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத் தையும் தோற்கடிப்பது அவசர அவசிய கடமையாகியுள்ளது.
 
மத்திய அரசாங்கத்துக்கு தனது ஆதரவை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி விலக்கிக்கொண்டுவிட்டது என்றபோதிலும் அது நீடிப்பதற்கு எத்தகைய ஆபத்தும் ஏற்படவில்லை. அதனை சமாஜ்வாதி கட்சி, பிஎஸ்பி போன்ற கட்சிகள் வெளியிலிருந்து ஆதரித்து வருவதே இதற்கான காரணம் ஆகும். எனினும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் அரசியல் ரீதியாக மேலும் தனிமைப்பட்டுவிட்டது. சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுப் பிரச்சனையின் மீது நாடாளுமன்றத்தின் குளிர்காலத் கூட்டத் தொடரின்போது அரசாங்கத்தைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தும் விதத்தில் நமது உத்தியை வகுக்க வேண்டும். இக் கொள்கை அனைவராலும் எதிர்க்கப்பட்டுவருவதால் சில்லரை வர்த்த கத்தில் அன்னிய நேரடி முதலீட்டை எதிர்த்துக்கொண்டே அரசாங்கத்தை ஆதரித்து வரும் கட்சிகளையும் அணிதிரட்டுதல் சாத்தியமே. அவ்வாறு அணிதிரட்டி இக்கொள்கைக்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெறப்பட வேண்டும் என்ற கோரிக்கையை நாம் எழுப்ப வேண்டும்.
 
மக்கள் மத்தியில் காங்கிரசுக்கு எதிரான உணர்வு வளர்ச்சி அடைந் துள்ளது. பாஜக இதனை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள முயற்சிக்கும். எனவே ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தின் மக்கள் விரோதக் கொள்கைகளின் மீது நமது பிரதான கவனத்தை வைத்துக்கொண்டு அதற்கு எதிராகப் போராடிவரும் அதே வேளையில் பாஜகவையும் அதன் கடந்தகால லஞ்ச ஊழலையும் காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளுடன் அதன் கொள்கைகளின் ஒத்த தன்மையையும் நாம் அம்பலப்படுத்த வேண்டும்.
 
அண்மையில் நடைபெற்ற தனது தேசிய கவுன்சில் கூட்டத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியை விரிவுபடுத்துவதைப் பற்றியும் புதிய கூட்டாளிகளைப் ஈர்ப்பதைப் பற்றியும் பாஜக பேசியுள்ளது. அவ்வாறு நிகழாதவாறு தடுப்பதற்கு நாம் முயற்சிக்க வேண்டும் என்பதுடன் மதச் சார்பற்ற எதிர்க்கட்சிகளுடனான நமது உறவை நாம் தொடர்ந்து பராமரிக்க வேண்டும்.
 
சில அரசியல் வட்டாரங்களில் மூன்றாவது அணியைப் பற்றிய பேச்சுக்கு புத்துயிரூட்டப்படுகிறது. அதற்கான உடனடி வாய்ப்புகள் இல்லை என்று பெரிய கட்சிகளில் சில கருதுகின்றன. மக்களவைத் தேர்தல் களுக்குப் பிறகு மூன்றாவது அணி உருவாகும் என்று கொல்கத்தாவில் நடைபெற்ற சமாஜ்வாதிக் கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டத்துக்கு பிறகு முலாயம் சிங் யாதவ் தெரிவித்துள்ளார். கட்சியின் 20வது அகில இந்திய மாநாட்டில் நாம் வகுத்துள்ள அரசியல் திசைவழியின்படி ஒன்றுபட்ட இடதுசாரி செயல்பாட்டை பலப்படுத்துவதற்கு நமது சுயேச்சையான நட வடிக்கைகளையும் பங்கினையும் அதிகரிக்க வேண்டும். பிரச்சனைகளின் மீதான கூட்டு நடவடிக்கைகளுக்காக காங்கிரஸ் அல்லாத மதச்சார்பற்ற கட்சிகளை இழுப்பதுடன் நாடாளுமன்றத்துக்குள் அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு எதிராக போராடுவதில் அவர்களோடு ஒத்துழைக்க வேண்டும்.
 
மக்களவைத் தேர்தல்களுக்கான தயாரிப்புகளுக்காகவும், நாம் போட்டியிட விரும்பும் இடங்கள் குறித்தும் நாம் விவாதிக்க வேண்டும். இந்த விஷயத்தை மாநிலக்குழுக்கள் விவாதித்துவிட்டு பிறகு அதனை மத்தியக்குழுவின் அடுத்த கூட்டத்தில் எடுத்துக்கொள்ளலாம்.
சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீடு, விலைவாசி உயர்வு மற்றும் லஞ்ச லாவண்யம் ஆகியவற்றுக்கு எதிரான போராட்டத் தினை முன்னெடுத்துச் செல்வதுடன் வரும் நாட்களில் அவற்றைத் தீவிரப் படுத்த வேண்டும். இந்த முடிவுக்கு எதிரான அனைத்து சக்திகளையும் அணிதிரட்டுவதற்கு நம்மால் முடிந்தால் சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுப் பிரச்சனை ஒரு பிரம்மாண்டமான தேசிய இயக்கத்தின் மையப் பகுதியாக ஆகமுடியும்.
 
மக்களின் ஒற்றுமையை சீர்குலைத்து அவர்களின் கவனத்தை உண்மையான பிரச்சனைகளிலிருந்து திதை திருப்ப முயலும் வகுப்புவாத மற்றும் பிளவுவாத சக்திகளுக்கு எதிரான இயக்கத்தை கட்சி நடத்த வேண்டும். பெண்கள் மற்றும் சிறுமிகளின் மீது அதிகரித்துவரும் தாக்குதல்களுக்கு எதிராக மக்கள் கருத்தை உருவாக்குவதுடன் அவர்களது பாதுகாப்பினையும் ஆபத்தின்மையையும் உறுதி செய்வதற் கான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதற்கு வலியுறுத்த வேண்டும். அக்டோபர் 30ந்தேதியன்று ஒரு எதிர்ப்பு தினத்தை அனுசரிக்க வேண்டும். அப்போது பெண்களுக்கு எதிராக வன்முறை குறித்து பொதுக்கருத்தை உருவாக்குவதுடன் அத்தகைய குற்றங்களை இழைக்கும் குற்றவாளி களுக்கு எதிரான உறுதியான நடவடிக்கைகளை கோர வேண்டும்.
 
2013 பிப்ரவரி 20, 21  தேதிகளின் பொது வேலை நிறுத்தத்துடன் நிறைவடையும் கூட்டுப் போராட்டத்துக்காக மத்திய தொழிற்சங்கங்கள் விடுத்துள்ள அறைகூவல் செயல்முனைப்புடன் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். 2012 டிசம்பரில் நடைபெறவுள்ள சிறை நிரப்பும் போராட்டம் மற்றும் இரண்டு நாள் வேலை நிறுத்தத்துக்கு ஆதரவாக திட்டமிட்டு தொடர்ந்த பிரச்சாத்தில் ஈடுபட வேண்டும்.
 
ஆங்கிலத்தில் படிக்க
http://cpim.org/documents/2012-Oct-CC-Report-Political.pdf

Check Also

பல்கலைக்கழக பாடப்புத்தகத்தில் அரசியல் கட்சிகளை கொச்சைப்படுத்துவதா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தில் தொலைதூரப் படிப்புகளைப் படிக்கும் மாணவர்களின் எம்.ஏ. சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் திமுக மற்றும் இடதுசாரி கட்சிகள் ...

Leave a Reply