மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் காணும் ஆண்டாக அமையட்டும்!

மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் காணும் ஆண்டாக அமையட்டும்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புத்தாண்டு வாழ்த்து

தமிழ் மக்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம். இப்புத்தாண்டு இந்திய மக்கள் எல்லோரது வாழ்விலும் ஒளியேற்றும் ஆண்டாக அமையும் என்று நம்புகிறோம். எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்கும் பொதுவுடமை சமூகத்தை அமைப்பதற்கான போராட்டப் பாதையை வலுப்படுத்தும் ஆண்டாக இந்த ஆண்டும் இருக்க வேண்டும்.

உலகின் மூத்த மொழியான தமிழ் மொழியை மத்தியில் ஒரு ஆட்சி மொழியாகவும், தமிழகத்தில் உயர்நீதிமன்ற மொழியாகவும், அனைத்து உயர் படிப்புகளிலும் பயிற்று மொழியாகவும் உயர்த்துவதற்கான போராட்டங்களோடு, இந்தி, சமஸ்கிருத  மொழிகளின் கட்டாயத் திணிப்பை எதிர்த்த போராட்டங்களை முன்னெடுப்போம்.

தனது நான்கரை ஆண்டு கால ஆட்சியில்  இந்திய நாட்டின் ஏழை, நடுத்தர மக்களை ஓட்டாண்டியாக்கி  உள்நாட்டு, வெளிநாட்டு கார்ப்பரேட் முதலாளிகளை கொழுக்க வைக்கும் பாஜகவையும், பன்முகத்தன்மை கொண்ட இந்திய தேசத்தை சீரழித்து, ஒற்றை மதக்கலாச்சாரத்தை திணிக்க முயற்சிக்கும் பாசிச மதவாத சக்திகளையும், அதற்கு தலைமை தாங்கும் மோடி அரசையும் வீழ்த்துகிற ஆண்டாக இந்தப் புத்தாண்டு அமைந்திட வேண்டும். இன்னொரு பக்கம், தமிழக மக்களையும், தமிழக நலன்களையும் காவு கொடுத்து, தலைவிரித்தாடும் ஊழல் முறைகேடுகளில் மூழ்கி, மோடி அரசுக்கு எடுபிடியாக இருக்கும் அதிமுக அரசையும் வீழ்த்துகிற ஆண்டாகவும்  இந்த ஆண்டு அமைந்திட வேண்டும்.

அரசு பயங்கரவாத நடவடிக்கையின் மூலம் தூத்துக்குடியில் 14 உயிர்களைப் பறித்ததோடு, மனிதர்களின் பிறப்புரிமையான பேச்சுரிமையையும், போராடுகிற உரிமைகளையும் பறிக்கும்,  அனுதினமும் தொடர்ந்து வரும் அடக்குமுறைகளையும் முறியடிப்பதற்கான களங்கள் பல காணும் ஆண்டாகவும் இந்த ஆண்டு அமைந்திட வேண்டும். மக்களை கூறு போடுகிற சாதி, மத பேதங்களையும், தொடர்ந்து வரும் ஆணவக்கொலைகள், சமூக ஒடுக்குமுறைகளை எதிர்த்தும், பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுந்தாக்குதல்களையும் அறவே அழித்து ஒழிக்கும் ஆண்டாக இந்த ஆண்டு திகழ்ந்திடவும், அதற்கான பலமிக்க இயக்கங்களை நடத்திடவும் இந்த ஙுபுத்தாண்டில் சபதமேற்போம்.

Check Also

பல்கலைக்கழக பாடப்புத்தகத்தில் அரசியல் கட்சிகளை கொச்சைப்படுத்துவதா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தில் தொலைதூரப் படிப்புகளைப் படிக்கும் மாணவர்களின் எம்.ஏ. சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் திமுக மற்றும் இடதுசாரி கட்சிகள் ...