மத்திய அரசின் இரண்டாவதுநிதித்தொகுப்புமிகவும் குரூரமான ஏமாற்றுவேலைமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை

மத்திய அரசின் இரண்டாவது நிதித் தொகுப்பு, மிகவும் குரூரமான ஏமாற்றுவேலை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது.

இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட, புலம்பெயர் தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் ஏழை மக்களுக்கான 20 லட்சம்  கோடி ரூபாய் இரண்டாவது நிதித்தொகுப்பு, ஒரு குரூரமான ஏமாற்றுவேலையாகும். மக்களுக்கு உதவிட மத்திய அரசாங்கம் செய்ததாக, நிதியமைச்சர் தன் உரையில்  கூறியிருப்பதெல்லாம் பொய்யானவைகளாகும்.

மிகவும் பாதிப்புக்கு உள்ளான மக்களுக்கு, அதிலும் குறிப்பாக புலம்பெயர் தொழிலாளர்கள், வீதிகளில் வியாபாரம் செய்பவர்கள், வீட்டுவேலை செய்யும் தொழிலாளர்கள், மீனவர்கள் போன்றோருக்கு அரசாங்கத்திடமிருந்து ஒரு காசு கூட இதுவரையிலும் வரவில்லை. இப்போது அறிவிக்கப்பட்டிருக்கும் நிதித்தொகுப்பு என்பது பிரதானமாக கடன்கள் அளிக்கப்படுவதேயாகும்.

  நேரடி ஆதாயங்கள் என்பது இலவச உணவு தான்யங்களுக்காக 3,500 கோடி ரூபாய் ஒதுக்கியிருப்பது மட்டுமேயாகும். ஊழல் என்ற பெயரில் பல கோடிக்கணக்கான ரேஷன் கார்டுகளை ரத்துசெய்து, ஏழை மக்களை நிர்க்கதியாய் தள்ளியுள்ள நிலையில், நாட்டிலுள்ள அனைத்துக் குடும்பங்களும் ரேஷன் கார்டுகள் இல்லாவிட்டாலும் 5 கிலோ உணவு தான்யங்களும், ஒரு கிலோ பருப்பு வகைகளும் இலவசமாகப் பெறுவார்கள் என்று இப்போது பீற்றிக்கொண்டுள்ளார்கள். ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ என்னும் திட்டம் நாட்டில் 2021 மத்தியில் மட்டுமே நடைமுறைக்கு வர முடியும். அதுவரையிலும் நாட்டிலுள்ள கோடானுகோடி மக்கள் இன்றுபடும் துன்ப துயரங்களிலிருந்து மீள்வதற்கு வழியில்லை.

நிதியமைச்சர், புலம் பெயர் தொழிலாளர்களின் எண்ணிக்கையைக் குறைத்து மதிப்பிட்டிருக்கிறார். இவர்களின் எண்ணிக்கை வெறும் 8 கோடி என்று கூறியிருக்கிறார். 2020 மார்ச்சில் நாடாளுமன்றத்தில்.  நடப்பு மதிப்பீட்டின்படி, புலம் பெயர் தொழிலாளர்கள் 10 கோடி பேர் என்று அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன் பொருள், இலவச உணவுக்கான ஒதுக்கீடுகள் ஒட்டுமொத்த மக்களுக்கும் கிடையாது என்பதாகும்.    

மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டத்தின்கீழ் வேலைநாட்கள் 40 முதல் 50 சதவீதம் அதிகரிக்கப்பட்டிருப்பதாகக் கூறியிருப்பதன்மூலம் மத்திய நிதி அமைச்சர் நாட்டைத் தவறான முறையில் வழிநடத்தி இருக்கிறார். சென்ற ஆண்டு ஏப்ரலில், 27.3 கோடி மனிதநாட்களுக்கு வேலை அளிக்கப்பட்டது. இந்த ஆண்டு அது வெறும் 11.3 கோடி மனிதநாட்களுக்கு மட்டுமேயாகும். இது கடந்த பத்து ஆண்டுகளில் உள்ள அளவுகளில் மிகவும் குறைவான நாட்களாகும். இவ்வாறு, கிராமங்களுக்குத் திரும்பிக் கொண்டிருக்கும் லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்களை வேலையின்மை வேட்டையாட இருக்கிறது.

அதேபோன்றே, மத்திய நிதியமைச்சர், பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்கள் குறித்தும் மிகவும் இரக்கமற்றமுறையில் நடந்துகொண்டிருக்கிறார். வர்த்தக நிறுவனங்களுக்கு அளித்துள்ள அனைத்து எளிய கடன்திட்டங்களுக்குப் பதிலாக, அங்கே பணியாற்றிய தொழிலாளர்களைப் பாதுகாத்திடக்கூடியவிதத்தில், அவர்கள் பெற்ற வந்த ஊதியத்தில் ஒரு பகுதியை அளிக்கக்கூடிய விதத்தில்,  அவர்களுக்கு நேரடி நிதி உதவிக்கு உத்தரவாதம் அளிப்பதற்குப் பதிலாக, நிதியமைச்சர், பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு வேறு வேலைகளைச் செய்வதற்குத் “திறன்பயிற்சி” (“skilled”) அளிக்கப்படும் என்று கூறியிருக்கிறார். இது, அரசாங்கத்தின் தொழிலாளர்விரோத கொள்கை மனோபாவத்தையே காட்டுகிறது.

மேலும், மத்திய அரசு, காடு அழிப்புக்கான இழப்பீட்டு நிதியம் (Compensatory Afforestation Fund) கீழ் பெறப்படும் தொகையைப் பயன்படுத்துவது தொடர்பாக அறிவுரைகள் எதுவும் அளித்திட உரிமை கிடையாது.  இதனை, மாநில அரசுகள்தான் பாதிப்புக்கு உள்ளான மக்களுடன், குறிப்பாக பழங்குடியினருடன், கலந்தாலோசனை செய்து, இத்திட்டங்களால் யார் பாதிக்கப்படுவார்கள் என்று ஆராய்ந்து அவர்களுக்குச் செலவு செய்திடத் தீர்மானிக்கும்.  

தங்குமிடங்களில் தங்கியிருந்த புலம்பெயர் தொழிலாளர்களுக்கு மத்திய அரசு உணவு அளித்திருந்தது என்று கூறியிருப்பது, வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போன்றதாகும். மாநிலப் பேரிடர் நிவாரண நிதியத்திற்கு ஒதுக்கீடுகள் வழங்கப்பட வேண்டியது மத்திய அரசாங்கத்தின் சட்டப்படியான கடமையாகும். அந்த மாநிலம் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தாலும், இல்லாவிட்டாலும் மத்திய அரசு இதனைச் செய்திட வேண்டும். இது 75:25 என்ற விகிதத்தில் மாநில அரசாங்கங்களுடன் சட்டப்படி செய்யப்பட்டிருக்கும் நடைமுறையாகும். உண்மையில், எந்தவொரு மாநிலத்திற்கும் மத்திய அரசு கூடுதலாக ஒரு காசு கூட கொடுக்கவில்லை. இப்போது இவ்வாறான சட்டப்படித் தேவையைக் கூட மத்திய அரசின் தாராளமனதின் ஒரு பகுதி என்பதுபோல் பீற்றிக்கொண்டிருக்கிறது.

நாடும், நாட்டு மக்களும் ஒன்றுபட்டுநின்று ஒரேவித சிந்தனையுடன் எப்படி வேகமாகப் பரவிக் கொண்டிருக்கும் கொரானா வைரஸ் தொற்றை ஒழித்துக்கட்டுவது என்றும், மக்களுக்கு சுகாதாரமான வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரத்தை வழங்குவது என்றும்  சிந்திக்கவேண்டிய நேரத்தில், இந்த அரசாங்கமோ மிகவும் மோசமான முறையில், கொரானா வைரஸ் தொற்றை, பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாக்கவும், ஏழை மக்களை மேலும் வறியநிலைக்குத் தள்ளவும் வகைசெய்யும் விதத்தில், தன்னுடைய பொருளாதார சீர்திருத்தங்கள் என்னும் நிகழ்ச்சிநிரலை முன்னெடுத்துச் செல்வதற்கான வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறது.  

·         சமூக முடக்கம் அறிவிக்கப்பட்டபின்னர் வேலையில்லாதோர் எண்ணிக்கை 14 கோடியாக அதிகரித்திருக்கிறது. நகர்ப்புற ஏழைகளில் 80 சதவீதத்தினர் தங்கள் வேலைகளை இழந்துள்ளார்கள். எனவே, வருமானவரி செலுத்தும் வரையறைக்கு உட்படாத அனைத்துக் குடும்பங்களுக்கும் அடுத்த மூன்று மாதங்களுக்கு, குறைந்தபட்சம்  மாதந்தோறும் 7,500 ரூபாய் ரொக்க மாற்று அறிவித்திட வேண்டியது அவசியமாகும்.    

·         நாட்டிலுள்ளவர்களில் மூன்றில் ஒரு பகுதியினருக்கு, தாங்கள் ஜீவித்திருப்பதற்கான வள ஆதாரங்கள் தங்களிடம் ஒரு வாரத்திற்குக்கூட இல்லாத நிலையில் இருப்பவர்களே என்று மதிப்பிடப்பட்டிருக்கக்கூடிய நிலையில், தனி நபர் ஒருவருக்கு, மாதத்திற்குப் பத்து கிலோ உணவு தானியங்கள் வீதம் அடுத்த ஆறு மாத காலத்திற்கு அளிக்க வேண்டியது அவசியமாகும். இதனை அரசின் கிடங்குகளில் உள்ள 77 மில்லியன் டன்கள் (7 கோடியே 70 லட்சம் டன்கள்) இருப்பிலிருந்து இலவசமாக விநியோகித்திட வேண்டும்.

·         சமூக முடக்கத்தின் காரணமாக ஆழமாகியிருக்கும் விவசாய நெருக்கடி காரணமாக, அனைத்து விவசாயிகளுக்கும் அவர்கள் ஜீவித்திருப்பதற்கு, ஒரு தடவை கடன் தள்ளுபடி செய்ய வேண்டியது அவசியமாகும்.

·         மாநிலங்கள் அனைத்திற்கும் மிகப்பெரிய அளவில் நிதி உதவி அவசர அவசியமாகும்.

.         எல்லாவற்றையும்விட மிகவும் முக்கியமான விஷயம், வாழ்க்கையை இழந்து, கடந்த ஐம்பது நாட்களாக, சொல்லொண்ணா துன்ப துயரங்களுக்கு ஆளாகி, சாலைகளில் நடந்து சென்று கொண்டிருக்கிற நம்முடைய புலம்பெயர் தொழிலாளர்களை இலவசப் போக்குவரத்து வாகனங்கள் மூலமாக அவர்களின் சொந்த இடங்களுக்குக் கொண்டுசென்று சேர்த்திட வேண்டும். இது உடனடி, அவசர, அவசியமான பணியாகும்.

இவ்வாறு அரசியல் தலைமைக்குழு அறிக்கையில் கூறியுள்ளது.

Check Also

5000 பட்டதாரி ஆசிரியர்கள், 1250 தமிழாசிரியர்களுக்கு சிறப்பு ஒதுக்கீட்டின் மூலம் பணி வழங்கிட தமிழக முதலமைச்சருக்கு சிபிஐ(எம்) கடிதம்

03.8.2021 பெறுநர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்,தமிழ்நாடு அரசு, தலைமைச் செயலகம், சென்னை – 600 009. வணக்கம்.   பொருள்:- கடந்த ...