மத்திய அரசின் கொள்கைகள் நாட்டின் ஒற்றுமைக்கு உதவாது…

டி.கே.ரங்கராஜன்.எம்.பி
மத்தியக்குழு உறுப்பினர், சிபிஐ(எம்)

ஒரே கலாச்சாரம், ஒரே மொழி என்பது நாட்டின் ஒற்றுமைக்கு உதவாது என்றும் நாடு ஒற்றுமையுடன் நீடித்திருக்க வேண்டுமானால் நாட்டிலுள்ள பல்வேறு கலாச்சாரங்களையும் நாட்டிலுள்ள பல்வேறு மொழிகளையும் கணக்கில் எடுத்துக் கொள்ளுங்கள் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் கூறினார்.

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் திங்கள் அன்று தொடங்கியது. மாநிலங்களவையின் 250ஆவது அமர்வும் திங்கள் அன்று தொடங்கியது. வரலாற்றுச்சிறப்பு மிக்க இந்த அமர்வினைக் கொண்டாடும் விதத்தில், இந்திய அரசியலில் மாநிலங்களவையின் பங்கு குறித்தும், மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்தும் ஒரு சிறப்பு விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் பங்கேற்று டி.கே.ரங்கராஜன் பேசியதாவது:

“உண்மையிலேயே இது ஒரு மாபெரும் தினமாகும். நான், இந்த அவையுடன் 2008இலிருந்து தொடர்பு கொண்டிருக்கிறேன். மக்களவை உறுப்பினர்கள் ஒரு தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள்.

ஆனால், மாநிலங்களவை உறுப்பினர்களோ, ஒரு மாநிலத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள். எனவே, நாம், நம் கலாச்சார நடவடிக்கைகளை, மொழியியல் நடவடிக்கை களை இங்கே பிரதிநிதித்துவப்படுத்துகிறோம். இந்த அரசாங்கம், நம்முடைய மொழியியல் பகுதிகளின் மீது, கலாச்சாரப் பகுதிகளின் மீது ஆக்கிரமிப்பினைச் செய்துகொண்டிருக்கும் விதத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அச்சவுணர்வு, இந்தப் பக்கத்தில் அமர்ந்திருக் கின்ற உறுப்பினர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அச்சவுணர்வு, அதிலும் முக்கியமாக தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அச்சவுணர்வு, இந்த நாடு ‘ஒரு மொழி, ஒரு கலாச்சாரம் ஒரே உணவு’ என்பதை நோக்கி சென்றுகொண்டிருக்கிறதோ என்பதேயாகும். இது மிகவும் ஆபத்தான போக்காகும். இந்தப்போக்கு அரசமைப்புச் சட்டத்தையே மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளிவிடும். எங்களுக்கு தமிழ் மிகவும் முக்கியம். எங்கள் கலாச்சாரம் மிக மிக முக்கியம். ஆயிரம் ஆண்டு கலாச்சாரப் பாரம்பர்யத்தைப் பெற்றுள்ளவர்கள் நாங்கள். இதே போன்றே, கேரளாவைச் சேர்ந்தவர்களுக்கு, அவர்களின் கலாச்சாரம் மிகவும் முக்கியம். வங்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு அவர்களின் கலாச்சாரம் மிகவும் முக்கியம். இவ்வாறு ஒவ்வொரு மாநிலமும் தனித்தனி வழியே தங்கள் கலாச்சாரத்தைப் பெற்றிருக்கின்றன.

நம் நாட்டில் வளர்ந்த மாநிலங்களும் உண்டு, வளர்ந்து கொண்டிருக்கும் மாநிலங்களும் உண்டு. எல்லா மாநிலத்திற்கும் ஒரே மாதிரியான அணுகுமுறையைக் கடைப் பிடித்திட முடியாது. இங்கே பல உறுப்பினர்கள் தங்களின் சிறிய மாநிலங்கள் குறித்து குறிப்பிட்டார்கள். தங்களுக்கு தங்கள் மாநிலப் பிரச்சனைகளைப் பேசுவதற்காக, தங்கள் கட்சிக்கு அதிக நேரம் ஒதுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். அவர்கள் தங்கள் பிரச்சனைகளைக் கூறுவதற்கு அனுமதித்திட வேண்டும். அவர்கள் தங்கள் பிரச்சனைகளை எழுப்புவதற்கு நீங்கள் அனுமதிக்கவில்லையென்றால், பின் அவர்கள் இங்கே வந்து என்ன பயன்? எனவே அவர்களுக்கும் போதிய நேரம் ஒதுக்கும்படி தலைவர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

‘மக்களவையில் அவசரகதியில் நிறை வேற்றப்பட்டவற்றை, தாமதிக்க வைத்திடும் ஒரே இடம் மாநிலங்களவை’ என்ற முறையில்தான் நம் அரசமைப்புச்சட்டத்தை உருவாக்கியவர்கள் கூறினார்கள். ஆனால் இங்கே என்ன நிலைமை? நீங்கள் எல்லாவற்றையுமே ‘நிதிச் சட்டமுன் வடிவு’ என்று கூறி, நிறைவேற்றிக் கொண்டிருக்கிறீர்கள். நம் அரசமைப்புச்சட்டத்திற்கு முறையான கவுரவத்தை நாம் கொடுக்கிறோமா? இந்த அவையை நாம் கவுரவிக்கிறோமா? பிரிட்டிஷ் நாடாளுமன்றத்திடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள் என்று ஆளும் கட்சித் தரப்பினரைப் பார்த்து நான் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன். பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் சில சமயங்களில் ஆளும் கட்சித் தலைவரே, எதிர்க்கட்சியுடன் சேர்ந்துநின்று அரசாங்கத்திற்கு எதிராக வாக்களிக்கிறார். அப்படித்தான் இந்த அவையை நாம் பாதுகாத்திட முடியும்.

மாநிலங்களில் என்ன நடக்கிறது என்று நமக்குத் தெரியவில்லை. ஏ. நவநீதகிருஷ்ணன் மிகவும் சரியாகவே குறிப்பிட்டதைப்போல, தமிழ்நாடு சட்டமன்றத்தில் ‘நீட்’ தேர்வுக்கு எதிராக இருமுறை சட்டம் நிறைவேற்றப்பட்டது. எனினும் அவற்றை நீங்கள் அங்கீகரித்திட வில்லை. இது தொடர்பாக நீங்கள் முறையான பதில் கொடுக்க முடியும். நீங்கள் அவர்களை இணங்கச்செய்திட முடியும். ஆனாலும், உங்கள் சொந்த வழியில் நீங்கள் எல்லா வற்றையும் செய்து கொண்டிருக்கிறீர்கள். ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு நீங்கள்அறிவுரை வழங்க வேண்டும். ஏனெனில்அவர்கள் மத்திய அரசால் நியமிக்கப் பட்டவர்களேயொழிய, மாநில அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ளவர்கள் அல்ல. இவ்விஷயங்களை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன்.

மாநிலங்களின் அதிகாரம் சம்பந்தமாக, திடீரென்று நீங்கள் அனைத்தையும் நீக்கி விட்டீர்கள். அரசமைப்புச்சட்டத்தின் 370வது பிரிவைக் கண்டு, ஒவ்வொரு மாநிலமும் இப்போது பயந்துகொண்டிருக்கிறது. ஏனெனில் இங்கே உங்களுக்குப் பெரும்பான்மை இருக்கிறது. மாநிலத்தின் எந்த அதிகாரத்தையும் நீங்கள் வெட்டிச்சிதைத்திட முடியும். ஏற்கனவே மாநிலங்களின் அதிகாரம், பஞ்சாயத்துக்களுடன் இணைக்கப்பட்டிருக்கிறது. மாநில முதல்வருக்கோ அல்லது மாநில அமைச்சர்களுக்கோ போலீஸ்பாதுகாப்பு கொடுக்கலாம்.

ஆனால், அவர்களுக்கு எந்த அதிகாரமும் கிடையாது. இதே போன்று நிலைமைகள் சென்று கொண்டிருக்குமானால், பின் ஒற்றை ஆட்சி அமைப்பு முறைக்கு மாறிக் கொண்டிருக்கிறீர்கள் என்று பொருளாகும். நீங்கள் ஒற்றை ஆட்சிமுறைக்கு மாறினால், நாடு ஒன்றுபட்டு, ஒற்றுமையாக இருக்க முடியாது. நாடு பிளவுபடும். நாடுஒற்றுமையுடன் ஒன்றுபட்டு நீடிக்கும் விதத்தில் பார்த்துக் கொள்வது நம் பொறுப்பு. அடுத்து, மேலும் ஒரு முக்கியமான அம்சம் குறித்து உங்கள் கவனத்தை ஈர்க்க விரும்புகிறேன். ஆகஸ்ட் 5 அன்று அரசமைப்புச் சட்டத்தின் 370ஆவது பிரிவு ரத்து செய்யப்பட்டது போன்ற நிலைமை மீண்டும் ஏற்படக்கூடாது. ஏற்கனவே இது நடந்துவிட்டது.

அப்போது ஏற்பட்ட ரணங்களை இன்னமும் உங்களால் சரிசெய்ய முடியவில்லை. எனவே, இதனை நீங்கள் சரி செய்ய வேண்டும். காஷ்மீர் மக்கள், ஜம்மு மக்கள் இன்னமும் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அங்கிருந்து வந்த நம் அவையின் உறுப்பினர்கள் இங்கே அவையில் கலந்துகொள்ள முடியவில்லை. இதுமிகவும் அவலமான விஷயமாகும். நாம் ‘மாநிலங்களவையின் 250ஆவது அமர்வைக்’ கொண்டாடும் விதத்தில் விவாதித்துக் கொண்டிருக்கிறோம். ஆனாலும், நாம் நம் அரசமைப்புச் சட்டத்திற்கு நீதி வழங்காது இருந்து வருகிறோம்.

நாடு ஒற்றுமையாக இருக்க வேண்டுமானால் நாட்டிலுள்ள பல்வேறு கலாச்சாரங் களையும் கணக்கில் எடுத்துக் கொள்ளுங்கள், நாட்டிலுள்ள பல்வேறு மொழிகளையும் கணக்கில் எடுத்துக் கொள்ளுங்கள். அப்போதுதான் நாடு ஒற்றுமையாக இருந்திடும் என்று கூறி இவற்றைப் பரிசீலனை செய்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

Check Also

சாதிய அணி சேர்க்கைக்கு இடமளிக்க வேண்டாம்!

வன்னியர்கள் மீது அவதூறுகள் பரப்பப்படும் போது அது தொடர்பான உண்மை நிலையை சம்பந்தப்பட்டவர்களுக்கு உணர்த்துவதற்காகவும், தீய பிற்போக்கு சக்திகளிடமிருந்து வன்னியர் ...