மத்திய அரசின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு அறிவிக்கை – 2020ஐ உடனடியாக திரும்ப பெறுக! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

மத்திய அரசு கோவிட் 19ஐ கட்டுப்படுத்துவதை விட்டு விட்டு, இதனை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி பல மக்கள் விரோத, ஜனநாயக விரோத சட்டங்களையும், திட்டங்களையும் அமல்படுத்த முயற்சி செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக “புதிய சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு அறிவிக்கை – 2020”  ஒன்றை வெளியிட்டுள்ளது.  இந்த அறிவிக்கை ஜனநாயக விரோதமானது, அநீதியானது என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சுட்டிக்காட்டுகிறோம். மத்திய அரசின் இந்த அறிவிக்கைக்கு வன்மையான கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஏற்கனவே உள்ள சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்புச் சட்டம் 1986-ஐ, பல்வேறு அறிவிப்புகள், ஆணைகள் மூலம் நீர்த்துப் போகச் செய்து, பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக பாஜக அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வந்துள்ளது.

இப்போது அறிவித்துள்ள வரைவு அறிவிக்கையில், ஏற்கனவே நடந்துள்ள சுற்றுச் சூழல் மீறல்களை அனுமதித்து, மேலும் சுற்றுச் சூழல் மீறல்கள் தொடர்ந்திட வழிவகுக்கிறது. இது ஸ்டெர்லைட் போன்ற தவறு செய்த ஆபத்தான நிறுவனங்களுக்கு மீண்டும் உதவ வழிவகுக்கிறது. இந்த அறிவிக்கையில் உள்ள பல அம்சங்கள் கார்ப்பரேட் பெரு நிறுவனங்களுக்கு சாதகமாகவே அமைந்துள்ளது.

நிலச்சீரமைப்பு, சோதனை கிணறுகள் தோண்டுதல், தாதுக்களை கண்டறிய ஆய்வுகள் ஆகியவைகள் மேற்கொள்ள முன் அனுமதி தேவையில்லை என்பது மிகப் பெரிய ஆபத்துக்களை உருவாக்க வழிவகுக்கிறது. பி-2 என வகைப்படுத்தப்பட்ட திட்டங்களுக்கு மக்கள் கருத்து கேட்பு அவசியமில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. இதனால் மக்களுக்கு விரோதமான பல திட்டங்கள் கொண்டு வரப்பட்டு பலவகையான பாதிப்புகளும், அழிவுகளும் நேரக் கூடும். பி-2 வகை திட்டங்களில் பொருளாதார மண்டலங்கள், உள்ளூர் ஆறுகள் மற்றும் நீர்நிலைகளில் நீர்வழித்தடங்கள், நீர் மீதான விமான தளங்கள் என பல வகை திட்டங்கள் உள்ளன. எனவே, பி-2 வகை திட்டங்கள் அனைத்தையும், பி-1 திட்டங்களாக வகைப்படுத்துவதே அவசியமானது. அனைத்து திட்டங்களுக்கும் ஜனநாயக ரீதியில் கருத்து கேட்பு தொடர வேண்டும்.

அதேபோன்று, 50,000 ச.மீ. வரை கட்டுமானங்களுக்கு உள்ளூர் நிர்வாக அனுமதி தேவையில்லை என ஆலோசனையும் மிகவும் அநீதியானது. எந்த வளர்ச்சி திட்டமாக இருந்தாலும் உள்ளூர் நிர்வாகங்களின் உரிமைகள் மறுக்கக் கூடாது.

30 வருடங்களுக்கான அனுமதி என இருப்பதை 50 வருடங்களாக நீட்டிக்க ஆலோசனை வைக்கப்பட்டுள்ளது இதுவும் தவறானது. ஒவ்வொரு 10 வருடத்திலும் மறுபரிசீலனை செய்வது அவசியமாகும்.

தமிழகத்திற்கு இந்த சுற்றுச் சூழல் தாக்க அறிவிக்கை பேராபத்தை ஏற்படுத்தும் வாய்ப்புகள் உள்ளன. சேலம் பசுமை வழிச்சாலைத் திட்டம், காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடகம் அணை கட்டும் பிரச்சனை, டெல்டா மாவட்ட விவசாயத்தை அழித்து கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்க்கும் முயற்சிகள் அத்துணைக்கும் எதிராக தமிழக மக்கள் போராடிக் கொண்டிருக்கிற இந்த சூழலில் மக்கள் விரோத இந்த திட்டங்களையெல்லாம் அமலாக்குவதற்கு வழிவகை செய்வதாக மத்திய அரசின் இந்த அறிவிக்கை அமைந்துள்ளது. சுற்றுச்சூழல் முன் அனுமதி பெறவேண்டிய எண்ணற்ற திட்டங்களை அனுமதி பெறத் தேவையில்லை என்றும் பொதுமக்கள் கருத்துக் கேட்பு தேவை இல்லை என்றும் ஜனநாயக நடைமுறைகளை அழித்தொழிக்கிற நடவடிக்கையாக மத்திய அரசின் இந்த அறிவிக்கை அமைந்துள்ளது. மாநில உரிமைகளையும், உள்ளாட்சி அமைப்புகளின் உரிமைகளையும் பறிக்கிற அம்சங்களும் இதில் ஏராளமாக உள்ளன.

எனவே, அராஜகமான, இந்த சுற்றுச் சூழல் தாக்க அறிவிக்கையை உடனடியாக திரும்ப பெற வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. இந்த ஜனநாயக விரோத அறிவிக்கைக்கு எதிராக தமிழக மக்கள் அணி திரள வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது.

– கே. பாலகிருஷ்ணன்

மாநிலச் செயலாளர்

Check Also

5000 பட்டதாரி ஆசிரியர்கள், 1250 தமிழாசிரியர்களுக்கு சிறப்பு ஒதுக்கீட்டின் மூலம் பணி வழங்கிட தமிழக முதலமைச்சருக்கு சிபிஐ(எம்) கடிதம்

03.8.2021 பெறுநர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்,தமிழ்நாடு அரசு, தலைமைச் செயலகம், சென்னை – 600 009. வணக்கம்.   பொருள்:- கடந்த ...