மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை – 2012 மக்கள் வாழ்க்கை மீது சுமைகளை ஏற்றும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி

இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்தபின், சமர்ப்பித்துள்ள மூன்றாவது பட்ஜெட்  புதிய வடிவங்களில் மக்கள் மீது பொருளாதாரத் தாக்குதல்களை தொடுத்துள்ளது. புதிதாக ரூ.45,940 கோடி ரூபாய்க்கு மறைமுக வரிகள் மூலம் மக்கள் தலையில் ஏற்றி, ரூ,4500 கோடி நேரடி வரிகளைக் குறைத்து, முதலாளிகளுக்கு சலுகைகளை வாரி வழங்கியுள்ளார் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி அவர்கள். விலைவாசியைக் கட்டுப்படுத்துவதும், வளர்ச்சி விகிதத்தை உயர்த்துவதும் ஆகிய இரண்டு இலட்சியங்களை நிறைவேற்றுவோம் என பொருளாதார ஆய்வறிக்கை கூறுகிறது.

ஆனால் மறைமுக வரிகள் ஏற்றம் வருகிற மாதங்களில் கடுமையான விலையேற்றத்தை உருவாக்கி மக்கள் வாழ்க்கை மீது பெருஞ்சுமைகளை ஏற்றும். எரிபொருட்களுக்கான மானியம் ரூ.25,000 கோடிக்கு வெட்டப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது.கடுமையான நெருக்கடியில் சிக்கியுள்ள விவசாயிகள், தற்பொழுது மத்திய அரசு அறிவித்துள்ள ஆறாயிரம் கோடி ரூபாய்  உர மானிய வெட்டினால் மேலும் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாவார்கள்.

நிதிநெருக்கடியை சமாளிப்பது என்ற போர்வையில் சாமானிய மக்களுக்கு நிவாரணமாக உள்ள மானியங்களை வெட்டிச் சுருக்கும் மத்திய அரசு 2011-12 ஆம் ஆண்டில் வரிச் சலுகையாக ரூ.50,000 கோடிக்கு மேல் பெரிய நிறுவனங்களுக்கு வாரி வழங்கியுள்ளது.  தொழில்வளர்ச்சி, விவசாய வளர்ச்சி, வேலைவாய்ப்பு உருவாக்குதல் ஆகியவற்றுக்கு எந்தவிதமான  கூடுதல்முதலீடுகளும் அரசுத்தரப்பிலிருந்து செய்யப்படப் போவதில்லை.

விவசாயிகளுக்கு வங்கி மற்றும் நிதிநிறுவனங்கள் மூலம் கூடுதல் கடன்கள் வழங்கப்படும் என்ற அறிவிப்பை இலாப நோக்கே குறி என்று செயல்படக் கூடிய  அந்த நிறுவனங்கள் கண்டு கொள்ளப்போவதில்லை என்பதும் தெளிவு. பதினேழு சேவைகள் தவிர அனைத்து பிற சேவைகளும் சேவை வரிக்குட்படுத்தப்பட்டு, சேவை வரி விகிதம் 12 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

இதுவும் மேலும் சுமையை சாதாரண மக்கள் மீது ஏற்றும். இந்த ஆண்டு பொதுத்துறை பங்கு விற்பனை மூலம் ரூ.30000 கோடி திரட்டப்படும் என அரசின் நிதிநிலை அறிக்கை தெரிவிக்கிறது. இது தேசத்தின் பொதுச்சொத்துக்களை தனியார் கைகளுக்கு மாற்றும் கண்டனத்துக்குரிய நடவடிக்கை ஆகும். கல்வி மற்றும் சுகாதாரத்துக்கு போதிய முதலீடுகள் ஒதுக்கப்படவில்லை. நிதிநிலைஅறிக்கை சமர்ப்பிக்கப்படுவதற்கு 2 நாட்கள் முன்னதாகவே தொழிலாளர்களின் வைப்பு நிதிக்கான (ஞகு)  வட்டிவிகிதம்  8.25 சதவிகிதம் ஆக (1.25 சதவிகிதம் குறைவு) குறைக்கப்பட்டுள்ளது. 

இது தொழிலாளி வர்க்கத்தின் மீதான அப்பட்டமான தாக்குதல் ஆகும்.தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கான சிறப்பு திட்டத்துக்கான ஒதுக்கீடு கடந்த ஆண்டைப் போலவே தேவையை விட குறைவாக ஒதுக்கப்பட்டுள்ளதால் இந்த ஆண்டும் அவர்களுக்கான சிறப்பு நலத்திட்டங்கள் அமலாக்கப்பட முடியாது.

மாநிலத்தில் பால் விலை, பேருந்து கட்டண உயர்வு, உத்தேச மின் கட்டண உயர்வு ஆகியவற்றுடன் இரயில் கட்டண உயர்வுகளும் தமிழக மக்கள் மீது பெருஞ்சுமையை ஏற்றியிருக்கிற பின்னணியில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி  அரசின் நிதிநிலை அறிக்கை புதிய புதிய தாக்குதல்களை தொடுத்துள்ளது. அரசாங்கத்தின் நவீன தாராளமயக் கொள்கைகளின் திசைவழியின் தொடர்ச்சியாகவே இந்த நிதிநிலை அறிக்கையும் அமைந்துள்ளது.உடனடியாக மறைமுக வரிகள் உயர்வை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு மத்திய அரசை கோருகிறது.

Check Also

சிஐடியு இயக்கத்தின் முதுபெரும் தலைவர் கே.வைத்தியநாதன் மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்

சிஐடியு இயக்கத்தின் முதுபெரும் தலைவர்களில் ஒருவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராக பணியாற்றியவரும், கே.வி. என்று அனைவராலும் அன்பாக ...

Leave a Reply