மத்திய சிவில் சர்வீஸ் தேர்வுகளில் வெற்றி பெற்ற மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட தமிழக மாணவர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாராட்டு…

அகில இந்திய சிவில் சர்வீஸ் தேர்வில் தேசிய அளவில் சாதனை படைத்திருக்கக்கூடிய தமிழகத்தைச் சேர்ந்த இளம் சாதனையாளர்கள் அனைவருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தன்னுடைய பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறது. இவர்களது வெற்றி தமிழகத்திற்கு பெருமை சேர்க்கக் கூடியதாகும்.

இரண்டு குறிப்பிடத்தக்க வெற்றியாளர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பெருமையுடன் பாராட்டுகிறது. ஒன்று, மதுரையைச் சேர்ந்த பூரண சுந்தரி இவர் கண் பார்வையற்றவர். 25 வயதான இவர் ஐந்து வயதில் பார்வை இழந்தவர். கிராம வங்கியில் எழுத்தராகப் பணியாற்றி கொண்டிருந்த இவர் மிகவும் தீவிர முயற்சி எடுத்து இந்த தேர்வில் மிகச் சிறப்பான வெற்றி பெற்றுள்ளார்.

இரண்டாவதாக, சென்னையைச் சேர்ந்த பால நாகேந்திரன் என்கிற இன்னொரு மாற்றுத்திறனாளி. அவரும் இரண்டு கண்பார்வை இழந்தவர். எப்படியாவது ஐஏஎஸ் ஆகியே தீர வேண்டும் என்ற கனவை நனவாக்க 9 ஆண்டுகள் உழைத்து மூன்றாவது முறையாக இந்தத் தேர்வுகளில் கலந்து கொண்டு, இந்த முறை நடைபெற்ற தேர்வில் அவர் மிகவும் சிறப்பாக வெற்றி பெற்றிருக்கிறார்.

விடாமுயற்சி, கடின உழைப்பின் மூலம் எதையும் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியுள்ள இவர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்வதோடு, இவர்களது வெற்றி அனைத்து இளைஞர்களுக்கும் ஒரு உந்து சக்தியாக அமையும் என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துக் கொள்கிறது.

கே.பாலகிருஷ்ணன்
மாநிலச் செயலாளர், சிபிஐ(எம்)

Check Also

5000 பட்டதாரி ஆசிரியர்கள், 1250 தமிழாசிரியர்களுக்கு சிறப்பு ஒதுக்கீட்டின் மூலம் பணி வழங்கிட தமிழக முதலமைச்சருக்கு சிபிஐ(எம்) கடிதம்

03.8.2021 பெறுநர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்,தமிழ்நாடு அரசு, தலைமைச் செயலகம், சென்னை – 600 009. வணக்கம்.   பொருள்:- கடந்த ...