மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டித்து தமிழகம் முழுவதும் இடதுசாரி கட்சிகள் கண்டன இயக்கம்!

மத்திய பாஜக அரசின் மோசமான பொருளாதாரக் கொள்கைகளின் காரணமாக இந்தியா முன்னெப்போதும் கண்டிராத பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. நாடு முழுவதும் தொழிற்சாலைகள் மூடல், தொழிலாளர்கள் வேலையிழப்பு மற்றும் வேலையின்மை அதிகரித்துக் கொண்டுள்ளது. சிறு-குறு, நடுத்தர தொழில்கள் பொருளாதார நெருக்கடியால் சீரழிந்து வருகின்றன. விவசாய நெருக்கடியால் விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் வாழ்விழந்து தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

மத்திய அரசின் பண மதிப்பு நீக்க நடவடிக்கை, ஜி.எஸ்.டி., போன்றவைகளால் மக்களின் வாங்கும் சக்தி குறைந்து சந்தையில் பொருட்கள் தேக்கமும், ஆலை மூடல்களும் அதிகரித்துக் கொண்டுள்ளன. மக்களின் வாங்கும் சக்தியை உயர்த்தும் வகையில் வேலைவாய்ப்புகளையும், வருமானத்தையும் உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு மாறாக, மத்திய அரசு மீண்டும், மீண்டும் பெரும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கே சலுகைகளை வாரி வழங்கி வருகிறது.

சமீபத்தில் 1.40 லட்சம் கோடி ரூபாய்க்கு பெருமுதலாளிகளுக்கு வரிச்சலுகை அளித்துள்ளது. இவைகளின் காரணமாக அரசின் பற்றாக்குறை அதிகரித்து மக்கள் தலையில் கூடுதல் சுமைகளை உருவாக்குவதோடு பற்றாக்குறையை ஈடுசெய்ய பொதுத்துறையை அடிமாட்டு விலைக்கு விற்க முயற்சித்து வருகிறது.

எனவே, மத்திய அரசின் இந்த மோசமான பொருளாதார கொள்கைகளை கண்டித்து நாடு முழுவதும் இடதுசாரி கட்சிகள் சார்பில் 2019 அக்டோபர் 10 முதல் 16 வரை கண்டன இயக்கம் நடத்த வேண்டுமென புதுதில்லியில் நடைபெற்ற சிறப்பு மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனையொட்டி தமிழகத்தில்,

  • ரிசர்வ் வங்கியிலிருந்து எடுக்கப்பட்ட 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாயை பொது முதலீட்டுத் திட்டங்களுக்குப் பயன்படுத்த வேண்டும்;
  • வேலை வாய்ப்பை அதிகரித்திட பொதுமுதலீட்டை அதிகரித்திட வேண்டும். அதுவரை மத்திய அரசாங்கம், வேலையில்லா இளைஞர்களுக்கு வேலையில்லா கால நிவாரணம் வழங்கிட வேண்டும்;
  • குறைந்தபட்ச ஊதியம் ரூ.18 ஆயிரம் உத்தரவாதம் செய்திட வேண்டும்;
  • வேலையிழந்த தொழிலாளர்களுக்கு மாதாந்திர வாழ்க்கை ஊதியம் வழங்கிட வேண்டும்;
  • பொதுத்துறை நிறுவனங்களான பிஎஸ்என்எல், ராணுவ தளவாட தொழிற்சாலைகள், இந்திய ரயில்வே மற்றும் ஏர் இந்தியாவை தனியாருக்குத் தாரைவார்ப்பதை நிறுத்த வேண்டும்;
  • மகாத்மா காந்தி தேசிய வேலை வாய்ப்பு உத்தரவாதச் சட்டத்தின் கீழ் வேலை நாட்களை 200 ஆக அதிகரித்திட வேண்டும். நிலுவைத் தொகைகளை வழங்கிட வேண்டும்;
  • விவசாயிகளுக்கு விவசாய நெருக்கடியிலிருந்து மீள ஒரு முறை கடன் தள்ளுபடி செய்திட வேண்டும்;
  • வயதானவர்கள் மற்றும் விதவைகளுக்கான குறைந்தபட்ச ஓய்வூதியத்தை 3000 ரூபாயாக அதிகரித்திட வேண்டும்;

ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் சிபிஐ (எம்), சிபிஐ, சிபிஐ(எம்.எல்) லிபரேசன் ஆகிய கட்சிகளின் சார்பில் 2019 அக்டோபர் 13-14 தேதிகளில் மாநிலம் முழுவதும் பிரச்சார இயக்கமும், 2019 அக்டோபர் 16 அன்று மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் நடைபெறும் மேற்கண்ட இயக்கத்திற்கு தமிழக மக்கள் பேராதரவு அளிக்க வேண்டுமெனவும்; சிபிஐ(எம்), சிபிஐ, சிபிஐ (எம்.எல்) லிபரேசன் ஆகிய கட்சி அணிகள் சக்தியாக கலந்து கொள்ள வேண்டுமெனவும் இடதுசாரி கட்சிகளின் சார்பில் வேண்டுகோள் விடுகிறோம்.

கே. பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர், சிபிஐ(எம்)
ஆர். முத்தரசன், மாநிலச் செயலாளர், சிபிஐ
என்.கே. நடராஜன், மாநிலச் செயலாளர், சிபிஐ(எம்.எல்)லிபரேசன்

Check Also

பல்கலைக்கழக பாடப்புத்தகத்தில் அரசியல் கட்சிகளை கொச்சைப்படுத்துவதா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தில் தொலைதூரப் படிப்புகளைப் படிக்கும் மாணவர்களின் எம்.ஏ. சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் திமுக மற்றும் இடதுசாரி கட்சிகள் ...