மனித மலத்தை மனிதன் அள்ளும் இழிநிலையை முற்றாக ஒழித்திட உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு

மனித மலத்தை மனிதன் அள்ளக்கூடிய (Manual scavenging) முறையை முற்றாக ஒழிக்க வேண்டுமென இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இத்தீர்ப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வரவேற்கிறது.

தீண்டாமைக் கொடுமையை ஒழிக்க வேண்டுமென்று அரசியல் சட்டம் கூறுகிறது. மேலும், தீண்டாமைக் கொடுமைகளை ஒழித்திட பல சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. ஆனாலும், மனித மலத்தை மனிதன் அள்ளக்கூடிய கொடுமை உள்ளிட்ட தீண்டாமைக் கொடுமை பல வடிவங்களில் இன்றும் நீடித்து வருகிறது.

மனித மலத்தை மனிதன் அள்ளக்கூடிய கொடுமையை முற்றாக ஒழிக்க வேண்டுமென்று கூறியதோடு, தற்போது இப்பணியிலுள்ளவர்களை விடுவித்து, அவர்களின் குடும்பங்களுக்கு புனர்வாழ்வு அளித்திட பல வகைகளில் நிவாரணம் அளிக்க வேண்டுமென்று தீர்ப்பு கூறுகிறது.

மாநில அரசுகளும், யூனியன் பிரதேசங்களும் இத்தீர்ப்பை அமலாக்கிட உடனடியாக நடவடிக்கை எடுத்திட வேண்டுமென்றும் உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

மேலும், 1993 ஆம் ஆண்டிலிருந்து இதுவரையில் இத்தகைய பணியைச் செய்கிற போது இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் அளிக்க வேண்டுமென்றும் தீர்ப்பு கூறுகிறது.

மனித மலத்தை மனிதன் அள்ளும் இழிநிலை முற்றாக ஒழிக்கப்பட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் நீண்ட காலமாக போராடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்கண்ட வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வரவேற்பதோடு, இத்தீர்ப்பை அமலாக்கிட மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.
 

Check Also

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூண் இடிப்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரில் உயிரிழந்த தமிழர்களின் நினைவாக யாழ்பாண பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவுத் தூண் இடிக்கப்பட்டதற்கு மார்க்சிஸ்ட் ...

Leave a Reply