மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணியிடங்கள் நிரப்புவதில் முறைகேடு

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணியிடங்கள் நிரப்புவதில் முறைகேடு – உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசராணைக் கமிஷன் அமைக்க – சிபிஐ(எம்) வலியுறுத்தல்;

திருநெல்வேலி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வரும் பேராசிரியர் பணியிட நியமனங்களில் வெளிப்படையான நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை எனவும், இப்பணியிடங்களுக்காக ரூ. 30 இலட்சத்திலிருந்து ரூ. 60 இலட்சம் வரை இலஞ்சம் பெறப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. இப்பல்கலைக்கழகத்தில் 54 உதவிப் பேராசிரியர்/ இணைப் பேராசிரியர்/ பேராசிரியர் பணியிடங்கள் கடந்த சில ஆண்டுகளாக நிரப்பப்படாமல் இருந்து வந்தன. இந்நிலையில், 2016 பிப்ரவரியில் துணை வேந்தராக பேரா. பாஸ்கர் பொறுப்பேற்றவுடன் அனைத்துப் பணியிடங்களையும் நிரப்பும் நடைமுறை துவங்கியது. முதல் கட்ட நியமனங்களில் ஐ.ஐ.டி, எம்.ஐ.டி.எஸ். போன்ற பிற பல கல்வி நிலையங்களில் பயின்ற தகுதியான விண்ணப்பதாரர்கள் புறக்கணிக்கப்பட்டு, தகுதிக் குறைந்த நபர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. முதல்கட்ட நியமனங்களுக்கான நேர்காணல் முடிந்தவுடன் அவசரமாக 02.11.2016 ஆட்சிக்குழுவைக் கூட்டி அப்பணியிட நியமனங்களுக்கான ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இரண்டாம்கட்ட நேர்காணலுக்குப் பிறகு அதற்கு ஒப்புதல் அளிப்பதற்காக 11.11.2016 நடைபெறவிருந்த ஆட்சிக்குழுக் கூட்டம் திடீரென ஒத்தி வைக்கப்பட்டுள்ளது சந்தேகத்தை எழுப்புகிறது.

மேலும் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் அருந்ததியினர் பிரிவில் வரும் நியமனங்களில், விண்ணப்பங்கள் வந்த போதும் நேர்காணல் நடைபெறவில்லை என்பதும் சந்தேகத்தை எழுப்புகிறது. இப்பிரிவுகளில் பேரம் படியவில்லையோ எனவும் பேசப்படுகிறது. மேலும், நேர்காணலில் பங்கேற்றவர்கள் நிர்வாகத்தால் ஏற்கனவே கண்டறியப்பட்டவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு ஏதுவாக நேர்காணல் நடந்ததாக புகார் கூறியுள்ளனர். நேர்காணல் நடத்த வந்திருந்த கல்வியாளர்களும் தகுதிக் குறைந்த நபர்களைத் தேர்ந்தெடுக்க நிர்வாகத்தினால் நிர்பந்தப்படுத்தப்பட்டுள்ளனர்.

பல்கலைக்கழகங்கள் உயர்கல்வி போதிப்பதோடு, சமுதாய மேம்பாட்டிற்கு உதவும் வகையில் தரமான ஆய்வுகள் நடத்துவதை தனது முதல் கடமையாக கொண்டது. இந்நிலையில், தகுதி குறைந்த ஆசிரியர்களை நியமிப்பது உயர்கல்வியின் தரத்தையும் சமூக நலனையும் பாதிக்கும். எனவே பல்கலைக்கழக வேந்தரான தமிழக ஆளுநர் இப்பிரச்சனையில் தலையிட்டு முதல்கட்டமாக நடந்துள்ள நியமனங்களை இரத்து செய்வதோடு, அடுத்தடுத்து நடைபெற்றுள்ள நேர்காணல்களையும் இரத்து செய்துவிட்டு ஊழல்மயமான மற்றும் வெளிப்படைத்தன்மையற்ற இந்த நியமனங்களின் மீது பதவியிலிருக்கும் உயர்நீதிமன்ற நீதிபதி கொண்டு விசாரணை நடத்திட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழக ஆளுநரை வலியுறுத்துகிறது.

Check Also

5000 பட்டதாரி ஆசிரியர்கள், 1250 தமிழாசிரியர்களுக்கு சிறப்பு ஒதுக்கீட்டின் மூலம் பணி வழங்கிட தமிழக முதலமைச்சருக்கு சிபிஐ(எம்) கடிதம்

03.8.2021 பெறுநர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்,தமிழ்நாடு அரசு, தலைமைச் செயலகம், சென்னை – 600 009. வணக்கம்.   பொருள்:- கடந்த ...