மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல் – சிபிஐ(எம்) கண்டனம்

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் உயர்த்தப்பட்டுள்ள கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும்; தமிழில் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும்; வருகை பதிவு குறைவான மாணவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதக் கட்டணத்தை குறைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தின் தலைமையில் மாணவர்கள் நேற்று (09.10.2018) அமைதியான முறையில் போராட்டம் நடத்தினர். இதற்கிடையே நடந்த பேச்சுவார்த்தைகளில் கட்டண குறைப்பு கோரிக்கையை ஏற்றுக் கொண்டு, தமிழில் தேர்வு எழுதும் கோரிக்கையை பல்கலைக்கழகம் நிராகரித்தது.

இந்நிலையில் தமிழில் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டுமென்பதை வலியுறுத்தி வளாகத்திற்குள் செல்ல முயற்சித்த போது, காவல்துறையினர் திடீரென அவர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளது. மாணவிகள் என்று கூட பார்க்காமல் ஓட, ஓட விரட்டி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் இந்திய மாணவர் சங்கத்தின் மாநில தலைவர் வீ. மாரியப்பன், மாவட்ட தலைவர்கள் தினேஷ், சுரேஷ், ஜாய்சன், சத்தியா, பதில்சிங், வெற்றி, சச்சின், ரேஷ்மா, மாரி, பிரிஸ்கில் உள்ளிட்டு 50க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லமால் 147, 294 பி, 353, 506/1 ஆகிய பிரிவுகளின் கீழ் மாநிலத் தலைவர் மாரியப்பன் உள்பட 10 மாணவர்கள் மீது வழக்கும் பதிவும் செய்துள்ளது. காவல்துறையின் இந்த ஜனநாயக விரோத அத்துமீறல் நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

தமிழில் தேர்வு எழுத அனுமதிக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட மாணவர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக  நிறைவேற்ற வேண்டுமெனவும்,  மாணவர்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை ரத்து செய்ய வேண்டுமெனவும், காயமுற்ற மாணவர்களுக்கு உரிய சிகிச்சையும் அளிக்க வேண்டுமெனவும், எவ்வித முன்னறிவுப்புமின்றி தாக்குதல் நடத்திய காவல்துறையினர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.

Check Also

பிரதமரே நடிக்காதீர்… செயல்படுங்கள்… கொரானாவை எதிர்கொள்ள…

நாடு முழுவதும் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு கோவிட் பெருந்தொற்று அதிகரித்து வருகிறது. அதிகரித்து வரும் மரணங்களைத் தடுத்து நிறுத்தவும், மருத்துவ ...