மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம் தமிழில் தேர்வு எழுத விதித்துள்ள தடையை நீக்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்

மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம் தமிழில் தேர்வு எழுத விதித்துள்ள தடையை நீக்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்டச் செயலாளர் கே.ஜி.பாஸ்கரன், பேராசிரியர் பொன்ராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வீ.பழனி, கே.ஸ்ரீராம், பி.ராஜகுரு ஆகியோர் மசு பல்கலைக்கழக துணைவேந்தரை சந்தித்து தடையை நீக்க வலியுறுத்தினர்.


பெறுநர்

உயர்திரு துணைவேந்தர் அவர்கள்,

மசு பல்கலைக்கழகம்,

திருநெல்வேலி.

மதிப்பிற்குரிய துணைவேந்தர் அவர்களுக்கு,

வணக்கம்.

நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களைச் சார்ந்த ஏழை,எளிய கிராமப்புற மாணவர்களுக்கு உயர்கல்வி வழங்குவதில் ம.சு.பல்கலைக்கழகம் பெரும் பங்காற்றியுள்ளது. அதன் பொருட்டே இப் பல்கலைக்கழகம் துவக்கப்பட்டது. சமீபத்திய நடவடிக்கைக்கள் அந்நோக்கத்தில் இருந்து பிறழ்வதாக கருதுகிறோம். முக்கியமாக, ஆங்கிலத்தைப் பயிற்று மொழியாகக் கொண்டு பயிலும் மாணவர்கள் பல்கலைக்கழகத் தேர்வுகளில் தமிழில் எழுதக்  கூடாது என்று முடிவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.  இந்த தவறான முடிவைக் கைவிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நெல்லை மாவட்டக்குழு கேட்டுக்கொள்கிறது.

நம் பகுதியில் உயர்கல்வி பயிலும் மாணவர்களில் பெரும்பாலோர் முதல் தலைமுறை மாணவர்கள். அவர்களின் சமூகப் பின்னணியும் குடும்பப் பின்னணியும் அவர்களுக்கு ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும் எழுதவும் பயிற்சிப் பெற வாய்ப்பளிப்பதில்லை. இருப்பினும் பல காரணங்களால் ஆங்கில வழி வகுப்பில் அவர்கள் சேர வேண்டியதாக உள்ளது. ஆங்கிலத்தில் கேட்டுப் புரிந்து கொள்வதைக் காட்டிலும் ஆங்கிலத்தில் பேசுவதும் எழுதுவதும் கடினமானது என்பதை நீங்களும் மறுக்க மாட்டீர்கள். ஆங்கிலத்தில் பயின்று புரிந்து கொண்டதைத் தமிழில் எழுதுவதில் தவறில்லை என்று சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

மருத்துவம், சட்டம், பொறியியல் கல்வியினையும் தமிழில் கற்க ஆவண செய்ய வேண்டும் என்பதே கல்வியாளர்களின் கருத்து. தாய்மொழிக் கல்வியே சிறந்தது என பல ஆய்வுகளும் கூறுகின்றன.  துறைக்குரிய அறிவைப் பெறுவது தான் கல்வியேயன்றி, எந்த மொழி வழியே அதை வெளிப்படுத்துகின்றனர் என்பது அல்ல. மேலும் குறிப்பிட்ட பாடத்திற்கான பல்கலைக்கழகத்  தேர்வு ஒரு மாணவன் குறிப்பிட்ட பாடத்தில் என்ன கற்றுள்ளான் என்பதை மதிப்பிடுகிறதே அன்றி அம்மாணவனின் மொழி ஆற்றலை மதிப்பிடுவதில்லை.

மேலும் தமிழ்நாடு உயர்கல்வி மன்றம் (Tamilnadu State Council for Higher Education) சில ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த இதே முடிவை தமிழக அரசு ஏற்றுக் கொள்ளவில்லை என்பதையும் இங்கு பதிவு செய்ய விரும்புகிறோம். வேறு எந்த பல்கலைகழகத்திலும் தமிழில் தடை இல்லை என்பதை தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.

தாய்மொழி வழிக் கல்வியே சிறந்தது என்பதை எவரும் மறுப்பதற்கு இல்லை. மாணவர் நலன் கருதி  தமிழ் வழியில் ஏராளமான மாணவர்கள்  உயர்கல்வி பெற முயற்சி எடுக்க வேண்டிய பல்கலைக்கழகம் தேவையற்ற, கள யதார்த்தத்திற்குப் புறம்பான கட்டுப்பாட்டை விதிப்பது தவறான நடவடிக்கையாகும். இது சமூகநீதிக்கு விடப்பட்ட சவாலாகும். இவ்வுண்மைகளைப் புரிந்துகொண்டு  மாணவர் நலன் கருதி ம.சு.பல்கலைக்கழகம் தமிழில் தேர்வெழுதக் கூடாது என்ற தன் முடிவை உடனடியாக கைவிடுமாறு வற்புறுத்துகிறோம்.

நன்றி

இப்படிக்கு

கே.ஜி.பாஸ்கரன்

மாவட்டச் செயலாளர்

திருநெல்வேலி மாவட்டக்குழு

Check Also

சிறப்பு டிஜிபி ராஜேஸ்தாசையும், செங்கல்பட்டு எஸ்.பி. கண்ணனையும் பணியிடை நீக்கம் செய்க!

பெறுநர்உயர்திரு காவல்துறை இயக்குனர் அவர்கள்,தமிழ்நாடு காவல்துறை,மயிலாப்பூர்,சென்னை – 600 004. அன்புடையீர், வணக்கம். பொருள்: பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருக்கும் ...