மருத்துவக் கல்லூரி மாணவிகள் மர்ம மரணம் அமைச்சரை பதவி நீக்கி விசாரணை நடத்த சிபிஐ(எம்) வலியுறுத்தல்

விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி வட்டம், பங்காரம் கிராமத்தில் உள்ள எஸ்.வி.எஸ். ஹோமியோ மருத்துவக் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வரும் மாணவிகள் சரண்யா, மோனிஷா, பிரியங்கா ஆகிய மூவரும் 23.1.2016 அன்று கைகள் கட்டப்பட்டும், உடம்பில் காயங்களோடும் கல்லூரி அருகில் உள்ள கிணற்றில் பிணமாக மிதந்துள்ளனர். அரசு அங்கீகாரம் பெற்ற இந்த கல்லூரியில் முறையான வகுப்பறைகள், பரிசோதனைக் கூடங்கள், கழிவறைகள் உள்ளிட்டு எவ்வித வசதியும், பாதுகாப்பும் இல்லை. அரசு நிர்ணயித்த கட்டணத்திற்கு மேல் பல மடங்கு கட்டணங்கள் வசூலிக்கப்பட்டுள்ளது. கல்லூரிக்கு வந்த சில நாட்களிலேயே பல மாணவர்கள் போதிய வசதிகள் இல்லை என வெளியேற முயற்சித்துள்ளனர். கல்லூரி நிர்வாகம் அடியாட்களை வைத்து மாணவர்களையும், பெற்றோர்களையும் மிரட்டியும், தாக்கியும் விரட்டியடித்துள்ளது. இது குறித்து மாணவர்கள், பெற்றோர்கள், பொது நல அமைப்புகள், அரசியல் கட்சிகள் பல முறை மாவட்ட ஆட்சியர், துறை அதிகாரிகள், அமைச்சர் தொடங்கி முதலமைச்சர் வரை பலமுறை மனு கொடுத்துள்ளனர். கடந்தாண்டு அக்டோபர் மாதம் ஆட்சியர் அலுவலகத்தில் மாணவிகள் முறையிட்டு தங்களின் வலுவான எதிர்ப்பை காட்டியுள்ளனர். இதன் பிறகே வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடந்துள்ளது. விசாரணை அறிக்கையின் மீது கல்லூரி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததோடு சம்பந்தப்பட்ட மாணவர்களை மிரட்டி அச்சுறுத்தியுள்ளது, கொடுமைப்படுத்தியுள்ளது. இந்நிலையில் தான் மூன்று மாணவிகள் தலை மற்றும் உடம்பில் காயங்களுடன் கிணற்றிலிருந்து பிணமாக மீட்கப்பட்டுள்ளனர்.

கல்வியை குறிப்பாக உயர் கல்வியை – மருத்துவக் கல்வியை தனியார்மயமாக்கி கட்டணக் கொள்ளைக்கும், தனியார் லாப வெறிக்கும் உடந்தையாக இருக்கும் தமிழக அரசின் கல்விக் கொள்கையே இந்த மூன்று மாணவிகளின் மரணத்திற்கும், பல மாணவிகளின் படிப்பு மற்றும் எதிர்காலம் பாழானதற்கும், பலரது பொருளாதார இழப்பிற்கும் காரணமாக இருந்துள்ளது. தமிழக அரசின் இந்த உயர்கல்வி தனியார்மயக் கொள்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

தமிழக அரசு மூன்று மாணவிகளின் மரணம் குறித்து உடனடியாக நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். எவ்வித வசதியும் அற்ற ஒரு கட்டிடத்தை மட்டும் வைத்துக் கொண்டு மருத்துவக் கல்லூரி நடத்த அனுமதி வழங்கிய அரசு அதிகாரிகள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கல்லூரிக்கான அங்கீகாரத்தை ரத்து செய்வதோடு, அங்கு பயிலும் மாணவர்கள் கட்டமைப்பு வசதிகள் உள்ள, அரசு அங்கீகாரம் பெற்ற இதர கல்லூரிகளில் பயில்வதற்கு உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும். கல்லூரி நிர்வாகத்தினர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்து உரிய முறையில் விசாரித்து தண்டனை வழங்குவதோடு, இதுகாறும் மாணவர் குடும்பத்திலிருந்து அரசு நிர்ணயித்த கட்டணத்திற்கு மேல் அதிகமாக பெறப்பட்ட பணத்தை சம்பந்தப்பட்டவர்களுக்கு திருப்பி தருவதை உத்தரவாதப்படுத்த வேண்டும். மூன்று மாணவிகளும் கல்லூரி நிர்வாகத்தின் அச்சுறுத்தலுக்கு எதிராக போராட்டத்தை தலைமை தாங்கி நடத்தியவர்கள் என்பதால் அவர்களின் இந்த மரணம் குறித்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும். பலமுறை புகார் அளித்து முறையிட்ட பிறகும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத துறை அதிகாரிகள் மீது விசாரணை நடத்தி தண்டிக்க வேண்டும். முறையிட்டும் நடவடிக்கை எடுக்காத அமைச்சரை உடனடியாக அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும்.

இதே போன்று தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் மற்றும் சுயநிதி பொறியியல், மருத்துவம், பாலிடெக்னிக், ஐ.டி.ஐ., கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் போதுமான வசதிகளும், உரிய கட்டணங்களும் வசூலிக்கப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்து அவற்றை நிவர்த்தி செய்வதற்கு தமிழக அரசு உடனடியாக முன்வர வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

Check Also

பிரதமரே நடிக்காதீர்… செயல்படுங்கள்… கொரானாவை எதிர்கொள்ள…

நாடு முழுவதும் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு கோவிட் பெருந்தொற்று அதிகரித்து வருகிறது. அதிகரித்து வரும் மரணங்களைத் தடுத்து நிறுத்தவும், மருத்துவ ...