மருத்துவப் பட்டப்படிப்பில் மத்திய அரசு தொகுப்பில் – தமிழகத்தின் இட ஒதுக்கீடு உரிமையைப் பாதுகாக்க அவசரச் சட்டம் இயற்ற வலியுறுத்தி தமிழக முதல்வருக்கு கடிதம்

பெறுநர்

            மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் அவர்கள்,

            தமிழ்நாடு அரசு,

            தலைமைச் செயலகம்,

            சென்னை – 600 009.

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு,

வணக்கம்.

பொருள்:-     மருத்துவப் படிப்பு இளங்கலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பில் மத்திய அரசு தொகுப்பில்தமிழகத்தின் இட ஒதுக்கீடு உரிமையைப் பாதுகாக்க அவசரச் சட்டம் இயற்ற வலியுறுத்துவது தொடர்பாக

இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் விடுதலைக்கு முன்பாகவே பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியலின மக்களுக்கு இடஒதுக்கீடு அமலாக்கப்பட்டு வந்தது. இடஒதுக்கீட்டுக் கொள்கைக்கு ஊறு ஏற்படும் போதெல்லாம் தமிழகம் அதை எதிர்த்து முன்னணியில் நின்று போராடி இருக்கிறது. இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத அளவிற்கு சமூக நீதிக்கான போராட்டம் நடைபெற்றதன் காரணமாகவே பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மற்றும் பழங்குடி மக்களுக்கு 69 சதவிகித இடஒதுக்கீடும் அமலாக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய தொகுப்பு இடங்களில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு இதுவரை அமலாக்கப்படவில்லை. இதன் காரணமாக பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் நீண்ட காலமாக போராடிப் பெற்ற உரிமைகள் பறிபோகும் நிலை உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் மாநிலங்களிலுள்ள மருத்துவ இடங்களிலிருந்து மத்திய தொகுப்புக்கு இளங்கலை மருத்துவ இடங்களில் 15 சதவிகிதமும், முதுநிலை இடங்களில் 50 சதவிகிதமான இடங்களும் ஒதுக்கப்படுகின்றன. இவ்வாறு ஒதுக்கப்படும் இடங்களில் பட்டியலின மற்றும் பழங்குடி மக்களுக்கும், புதிதாக நிறைவேற்றப்பட்ட பொருளாதார ரீதியாக பின்தங்கியோருக்கான இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. ஆனால், பி.சி, எம்.பி.சி, மாணவர்களுக்கு மட்டும் இடஒதுக்கீடு வழங்கப்படுவதில்லை.

மத்திய தொகுப்புக்கு ஒதுக்கப்படும் இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான பட்டியலை இந்திய மருத்துவ கவுன்சில் இறுதிப்படுத்துகிறது. அவ்வாறு தேர்வு செய்யப்படும் மாணவர்கள் தமிழகத்திலுள்ள மருத்துவக் கல்லுரிகளிலேயே பயிலுகின்றனர். இவர்கள் உள்பட மருத்துவக் கல்லுரிகளில் சேர்க்கப்படும் அனைத்து மாணவர்களுக்கான கல்வி உள்ளிட்ட  அனைத்து செலவுகளையும் தமிழக அரசே மேற்கொள்கிறது. மத்திய தொகுப்பிலுள்ள இடங்களுக்கு மாணவர்களை தேர்வு செய்வதைத் தவிர வேறு எந்த பொறுப்பையும் மத்திய அரசு அல்லது இந்திய மருத்துவ கவுன்சில் ஏற்றுக் கொள்வதில்லை.

மத்திய தொகுப்புக்கு இடங்கள் ஒதுக்கப்படாமல் மாநிலத்துக்குள்ளேயே மாணவர்களை தேர்வு செய்யும் உரிமை இருக்குமானால் அந்த இடங்களுக்கும் தமிழகத்திலுள்ள 69 சதவிகித இடஒதுக்கீடு அடிப்படையில் மாணவர்களை தேர்வு செய்யும் வாய்ப்பு கிடைத்திருக்கும். மத்திய தொகுப்புக்கு மாநிலத்தின் இடங்களை விட்டுக் கொடுப்பதனாலேயே மாநிலத்தின் இடஒதுக்கீட்டு வாய்ப்பினை மறுப்பது நியாயமற்றதாகும்.

மேலும், மருத்துவ படிப்பிற்கான மாணவர் சேர்க்கையினை நடத்துவது குறித்து மருத்துவ கவுன்சிலின் ஒழுங்குமுறை விதி 2018ன் படி “மருத்துவப் படிப்பிற்கான இடங்களில் அந்தந்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசம் நடைமுறைப்படுத்தும் இடஒதுக்கீடு முறையே நடைமுறைப்படுத்த வேண்டும்” என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

“Postgraduate Medical Education Regulations, 2018”.

9 (IV): The reservation of seats in Medical Colleges/institutions for respective categories shall be as per applicable laws prevailing in States/Union Territories. An all India merit list as well as State-wise merit list of the eligible candidates shall be prepared on the basis of the marks obtained in National Eligibility-cum-Entrance Test and candidates shall be admitted to Postgraduate Courses from the said merit lists only.

“Regulations on Graduate medical education, 1997”

Clause 5: (5) (iii). The reservation of seats in medical colleges for respective categories shall be as per applicable laws prevailing in States/ Union Territories. An all India merit list as well as State-wise merit list of the eligible candidates shall be prepared on the basis of the marks obtained in National Eligibility-cum- Entrance Test and candidates shall be admitted to MBBS course from the said lists only.

கடந்த பல்லாண்டுகளாக சமூக நீதிக் கோட்பாட்டை மத்திய தொகுப்பு மருத்துவ இடங்களில் செயல்படுத்த வேண்டுமென பல கட்ட போராட்டங்கள் தமிழகத்தில் நடைபெற்று வந்துள்ளன.

மத்திய அரசு இக்கோரிக்கையை செவிமடுக்க மறுத்துவிட்டது. தற்போது இதனை செயல்படுத்த வேண்டுமென வற்புறுத்தி தமிழகத்திலுள்ள எங்கள் கட்சி உட்பட பல்வேறு எதிர்க்கட்சிகளும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளன.

இந்நிலையில் எம்.சி.ஐ விதிப்படி மத்திய தொகுப்புக்கு எடுத்துக் கொண்ட இடங்களிலும் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் 69 சதவிகித இடஒதுக்கீட்டை உறுதி செய்யும் வகையில் தமிழக அரசு ஒரு அவசரச் சட்டத்தை இயற்றுவதன் மூலம் நீண்ட காலமாக பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இழைக்கப்பட்டு வரும் அநீதியை களைந்திட முடியும்.

எனவே, தமிழகத்தின் சமூக நீதிக் கொள்கையை பாதுகாக்கும் வகையிலும், பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இடஒதுக்கீடு கிடைத்திடவும், பட்டியலின மக்களுக்கு கூடுதலான இடங்களை பெறவும் தமிழக அரசு உடனடியாக அவசரச் சட்டம் ஒன்றை இயற்ற வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

                                                                        நன்றி.

இங்ஙனம்,

தங்கள் அன்புள்ள,

(கே. பாலகிருஷ்ணன்)

மாநிலச் செயலாளர்

Check Also

கொரோனா பரவலை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தி தலைமைச் செயலாளருக்கு – கே.பாலகிருஷ்ணன் கடிதம்

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை தடுத்திட போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும், அனைத்து வயதினருக்கும் தடுப்பூசி செலுத்திட ...