மருத்துவர்கள் துயரம் பற்றி எழுதிய பத்திரிக்கையாளர் சிறையிலடைப்பு!

மருத்துவர்கள் துயரம் பற்றி கண்ணீர் வடிப்பது போலியானதா?

கோவையிலிருந்து செயல்படும் சிம்பிள்சிட்டி டிஜிட்டல் ஊடகத்தின் உரிமையாளர் சாம்ராஜா பாண்டியனை காவல்துறை கைது செய்து சிறையிலடைத்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக இந்த ஊடகத்தில் ‘இலங்கை தமிழர்களுக்கு உணவு கிடைக்கவில்லை’ என செய்தி வெளியிட்டதற்காக அவரது அலுவலகத்தை தொடர்பு கொண்டு அதிமுகவினர் கடுமையாக மிரட்டியுள்ளனர்.

இந்நிலையில் கோவை மருத்துவக் கல்லூரி முதுநிலை மாணவர்கள் உணவும், குடிநீரும் இல்லாமல் அவதிப்படுவதைப் பற்றியும், ரேசன் பொருட்கள் விநியோகம் முறையாக நடைபெறவில்லை என்பதையும் செய்தியாக வெளியிட்டதற்காக அந்த ஊடகத்தின் செய்தியாளர் ஜெரால் மற்றும் ஒளிப்பதிவாளர் பாலாஜியை விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்று பல மணி நேரம் தங்களின் கட்டுப்பாட்டில் காவல்துறை வைத்துக் கொண்டதோடு, யாரையும் சந்திக்கவும் அனுமதிக்கவில்லை. இறுதியாக, அவர்கள் இருவரையும் பல மணி நேரம் கழித்து விடுவித்துவிட்டு உரிமையாளர் சாம்ராஜ் பாண்டியனை சிறையில் அடைத்துள்ளனர். தமிழக அரசின் இந்த அடாவடித்தனத்தை மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

தன்னலமற்று சேவை செய்யும் மருத்துவர்கள் இடர்பாடுகளை எதிர்கொள்ளும்போது அதற்காக போலியாகக் கண்ணீர் வடிப்பதும், அதே மருத்துவர்கள் பிரச்சினைகளை எதிர்கொள்ளும்போது அதை அரசின் கவனத்திற்கும் அதிகாரிகளின் கவனத்திற்கும் கொண்டு வந்தால் அவர்களைப் பிடித்து சிறையிலடைப்பதும் தமிழக அரசின் நேர்மையற்ற அணுகுமுறையையே இது காட்டுகிறது.

கோவை மருத்துவக் கல்லூரி முதல்வர் இடமாற்றம் செய்யப்பட்டு, முதுநிலை மாணவர்களுக்கு உணவு வழங்கும் பொறுப்பிலிருந்த அதிகாரிகள் மீது விசாரணை நடைபெற்று வரும் நிலையில் அந்தப் பிரச்சினையை முன்வைக்கும் பத்திரிக்கையாளர் மீது வன்மத்துடன் வழக்கு தொடுத்து சிறையிலடைப்பது அரசுக்கு அழகல்ல.

ஆளும் கட்சியும், அமைச்சரும் தலையிட்டதன் பேரிலேயே மாநகராட்சி உதவி ஆணையர் இந்தப் புகாரை கொடுத்திருக்கிறார் என்பதே பொது மக்கள் மற்றும் அனைத்து பத்திரிக்கையாளர்களின் கருத்தாகவும் இருக்கிறது. எனவே, தமிழக அரசு உடனடியாக சம்மந்தப்பட்ட பத்திரிக்கையாளர் மீது தொடுக்கப்பட்ட வழக்கை திரும்பப் பெறுவதோடு சாம்ராஜா பாண்டியனை விடுதலை செய்ய வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

கே. பாலகிருஷ்ணன்

மாநிலச் செயலாளர்

Check Also

அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாக வழங்க இடதுசாரிக் கட்சிகள் வலியுறுத்தல்

மே தினமான இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ...