மருத்துவ படிப்பில் அரசு மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்களுக்கான கட்டணத்தை அரசே ஏற்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அவர்கள், மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் திரு. எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்களுக்கு இன்று (23.11.2020) அனுப்பியுள்ள கடிதம்.

23.11.2020

பெறுநர்
மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் அவர்கள்,
தமிழ்நாடு அரசு, தலைமைச் செயலகம், சென்னை – 600 009.

மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு, வணக்கம்.

தமிழக தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ள அரசுப்பள்ளி மாணவர்களின் கல்வி கட்டணம் மற்றும் விடுதி கட்டணத்தை தமிழக அரசே ஏற்றுக் கொள்ளும் என்ற தங்களின் அறிவிப்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக வரவேற்கிறோம்.

அதேசமயம், இந்த நடவடிக்கையையொட்டி எழுந்துள்ள உடனடியாக தீர்க்க வேண்டிய சில பிரச்சனைகளை தங்களின் மேலான கவனத்திற்கும், உடனடித் தீர்விற்கும் முன்வைக்க விரும்புகிறோம்.

அரசுப் பள்ளியில் பயின்று தனியார் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்த மாணவர்கள் சிலர் அந்த கட்டணத்தை கட்டுவதற்கு வாய்ப்பில்லை என்கிற காரணத்தினால் அரசின் அறிவிப்பு வருவதற்கு முன்பாகவே கலந்தாய்விலிருந்து விலகிக் கொண்டிருக்கிறார்கள். இதன் விளைவாக, மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து படிக்கும் அரிய வாய்ப்பு கைநழுவி போய்விட்டதாக அம்மாணவர்களும், அவர்களது குடும்பத்தினரும் பெரும் மன உளைச்சலுக்கும், அதிருப்திக்கும் ஆளாகியுள்ளனர். எனவே, சிறப்பு ஒதுக்கீட்டில் நிரப்பப்படாத இடங்களிலோ அல்லது உரிய அனுமதி பெற்று இந்தாண்டிற்கு மட்டும் கூடுதல் இடங்களை பெற்று இந்த மாணவர்களையும் மருத்துவ கல்லூரியில் அனுமதிக்க ஆவன செய்ய கேட்டுக் கொள்கிறோம்.

மருத்துவ படிப்பு கலந்தாய்வில் கூடுதல் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் அரசு மருத்துவ கல்லூரிகளில் பயில்வதற்கு வாய்ப்பு பெற்றிருக்கிறார்கள். அதில் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள பலரும் இருக்கக் கூடும். தனியார் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தவர்களுக்கு முழுமையான கட்டணத்தையும் அரசே ஏற்றுக் கொள்ளும் என்கிற நிலையில் அரசுக் கல்லூரிகளில் சேர்ந்தவர்களுக்கு பாரபட்சம் காட்டப்படும் நிலை உருவாகியுள்ளது.

எனவே, இந்தாண்டு அரசுக் கல்லூரியில் சேர்ந்த மாணவர்களுக்கும் கல்வி மற்றும் விடுதி கட்டணங்களை அரசே ஏற்றுக் கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

இந்த இரண்டு முக்கிய பிரச்சனைகளின் மீதும் தங்களின் நேரடியான உடனடி தலையீட்டின் மூலம் உரிய தீர்வு காண வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

நன்றி.

இங்ஙனம்,
கே.பாலகிருஷ்ணன்
மாநிலச் செயலாளர்

Check Also

கொரோனா பரவலை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தி தலைமைச் செயலாளருக்கு – கே.பாலகிருஷ்ணன் கடிதம்

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை தடுத்திட போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும், அனைத்து வயதினருக்கும் தடுப்பூசி செலுத்திட ...