மருத்துவ மாணவர் சேர்க்கையில் OBC இட ஒதுக்கீட்டுக்கான சமூக நீதியை நிலை நாட்ட வலியுறுத்தி பிரதமருக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்

பெறுநர்

        உயர்திரு. நரேந்திர மோடி அவர்கள்,

        இந்திய பிரதமர்,

        புதுதில்லி.

உயர்திரு இந்திய பிரதமர் அவர்களுக்கு,

வணக்கம்.

பொருள்:-    மருத்துவ மாணவர் சேர்க்கையில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடங்களை ஒதுக்கீடு – சமூக நீதியை நிலை நாட்ட வலியுறுத்துவது தொடர்பாக…

பின்வரும் பிரச்சனையைத் தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருவதோடு, அதனைத் தீர்த்திட உரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மருத்துவப் படிப்பில் நீட் தேர்வு முறை அமலாக்கப்பட்ட காலத்திலிருந்து முதுநிலை பாடப் பிரிவிற்கான சேர்க்கைகளில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான (OBC) இட ஒதுக்கீடு அகில இந்திய கோட்டாவின் அடிப்படையில் அமுலாக்கபடாமலேயே இருக்கிறது. இதுகுறித்து ஏற்கனவே பலமுறை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு வந்திருக்கிறோம்.

இந்நிலையில் ஊடகங்களில் வருகிற செய்திகள் வாயிலாக, கடந்த மூன்று ஆண்டுகளில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு (OBC) கிடைத்திருக்க வேண்டிய சுமார் பத்தாயிரத்திற்கும் கூடுதலான இடங்கள் மறுக்கப்பட்டிருப்பதாக அறிகிறோம். இத்தகைய செயல் என்பது ஒரு பெரும் சமூக அநீதி என்பதோடு, ஆயிரக்கணக்கான இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு ஈடு செய்ய முடியாத பெரும் இழப்புகளையும் உருவாக்கி இருக்கிறது என்பதையும் தங்கள் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறோம்.

இந்நிலையில் இப்பிரச்சனையை தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் (NCBC) மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு வந்திருக்கிறது என்பதோடு பொது வெளியிலும் ஒரு பெரும் விவாதத்தை உருவாக்கியிருக்கிறது.

சமூக நீதியை புறக்கணிக்கும் வகையிலும், அரசியல் சாசனம் வழங்கியிருக்கக் கூடிய உரிமைகளுக்கு மாறாகவும் எடுக்கப்படும் இத்தகைய நடவடிக்கைகள் மாணவர்கள் மத்தியிலும் பொது மக்கள் மத்தியிலும் பெரும் கொந்தளிப்பையும் போராட்ட மனநிலையையும் உருவாக்கியிருக்கிறது.

தமிழ்நாடு மாநிலம் என்பது அனைத்துத் துறைகளிலும் அனைத்து தளங்களிலும் சமூகநீதியை உறுதிசெய்து உள்ள மாநிலம் என்பதால், மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு மட்டும் சமூகநீதியில் இருந்து விலக்கு அளிக்க முடியாது.

நீட் தேர்வு முறை அமலாக்கப்பட்ட போதே இது சமூக நீதிக்கு எதிரானது என  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வலுவாக முன்வைக்கப்பட்ட ஆட்சேபனை தற்போது நடைமுறையில் நிரூபணமாகியுள்ளது.

எனவே, மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இப்பிரச்சனையில் தாங்கள் விரைந்து தலையிடுவதோடு, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இழைக்கப்பட்டுள்ள சமூக அநீதியை களைந்திடவும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

நன்றி.

இங்ஙனம்

தங்களன்புள்ள

(கே.பாலகிருஷ்ணன்)

மாநிலச் செயலாளர்

தமிழ்நாடு மாநிலக்குழு

Check Also

கொரோனா பரவலை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தி தலைமைச் செயலாளருக்கு – கே.பாலகிருஷ்ணன் கடிதம்

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை தடுத்திட போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும், அனைத்து வயதினருக்கும் தடுப்பூசி செலுத்திட ...