மழை வெள்ளத்தால் பாதிப்பு! நிவாரணப்பணிகளை துரிதப்படுத்துக!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்த பெருமழை காரணமாக மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மழை வெள்ளப்பெருக்காலும், ஏரிகள் நிரம்பியதால் திறந்து விடப்பட்ட அதிக நீர் வரத்தினாலும் நகர்ப்புறங்களில் குடிசைப்பகுதிகளும், தாழ்வான பகுதிகளும், கிராமப்புறப்பகுதிகளும் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன.   மழை, வெள்ளத்தால் 80-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பல இலட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களிலுள்ள வாழை, நெல், கரும்பு உள்ளிட்ட விவசாயப் பயிர்கள், சாலைகள், தரைப்பாலங்கள், நீர் நிலைகள், வாய்க்கால்கள் பெரும் சேதமடைந்துள்ளன. தாழ்வான பகுதிகளில் உள்ள சாதாரண மக்களின் வீடுகளில் வெள்ளம் புகுந்ததால் ஏழை, எளிய மக்கள் தங்கள் உடமைகளை இழந்துள்ளனர். கிராமப்புற மக்கள் கால்நடைகளை இழந்துள்ளனர். வெள்ளத்தால் சூழப்பட்ட பகுதியில் வாழும் மக்கள் வேலைக்குச் செல்ல முடியாததால் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது. தேங்கிக்கிடக்கும்  மழை நீரால் தொற்று நோய் பரவும் ஆபத்து உள்ளது.

எனவே, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் உரிய நிவாரணம் வழங்கிட வேண்டுமென்றும், உயிர் இழப்பு, உடமைகள் இழப்பு, கால்நடைகள் இழப்பு, விவசாயப்பயிர்கள் சேதத்தால் ஏற்பட்டுள்ள இழப்பு ஆகியவற்றை கண்டறிந்து உரிய இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்கிட வேண்டும்.

காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. அவர்களின் படகுகளும் சேதம் அடைந்துள்ளன. இதுபோல் கிராமப்புற விவசாயத்தொழிலாளர்கள் பல நாட்கள் வேலைக்கு செல்ல முடியாமல் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்குவதுடன், உணவுப்பொருட்களும் வழங்கிட வேண்டும். பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு தொகை வழங்குவதுடன், மீண்டும் பயிரிடுவதற்கு தேவையான வேளாண் கருவிகள், இடுபொருட்கள், பயிர்க்கடன் வழங்கப்பட வேண்டும்.

உடைந்து போயுள்ள சாலைகள்,  ஏரிகள், குளங்கள், நீர் நிலைகள், இடிந்த பாலங்களை உடனடியாக செப்பனிடுவதோடு, தொற்று நோய் பரவாமல் தடுப்பதற்கான முன்நடவடிக்கைகளையும்  எடுத்திட வேண்டுமெனவும் மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது. மேலும் மழை வெள்ளத்தால் சூழப்பட்டு பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான உடனடி நிவாரணப் பணிகளையும், உதவிகளையும் செய்திட கட்சி அணிகளை கட்சியின் மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

 

Check Also

அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்களின் நிலுவையில் உள்ள 9 மாத ஊதியத்தை உடனே வழங்கிடுக!

காலமுறை ஊதியத்தில் பணியமர்த்தி – பணிநிரந்தரம் செய்திடுக! தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்! அரசுப் பள்ளிகளில் உடற்கல்வி, ...

Leave a Reply