மாணவிகளின் உயிரைப் பறிக்கும் நீட் தேர்வினை ரத்து செய்க!

நீட் தேர்வில் தோல்வி அடைந்த திருப்பூர் மாணவி ரிதுஸ்ரீ தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை மாணவி வைசியா தீக்குளித்து மாண்டுள்ளார். இம்மாணவிகளின் மரணம் நெஞ்சை உலுக்குகிறது. நீட் தேர்வால் கடந்த ஆண்டுகளில் மூன்று மாணவிகள் உயிரிழந்துள்ள நிலையில், இச்சம்பவம் மேலும் அதிர்ச்சியளிக்கிறது. இம்மரணங்கள் தற்கொலை என்றாலும் உண்மையில் மத்திய அரசின் மருத்துவ கல்விக் கொள்கையால் நடத்தப்படும் படுகொலைகளே.

தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விதிவிலக்கு அளிக்க வேண்டுமெனவும் தமிழக சட்டப்பேரவையில் ஏகமனதாக நிறைவேற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள இரண்டு மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க வேண்டுமெனவும் தொடர்ந்து அனைத்து அரசியல் கட்சிகளும் சமூக மற்றும் மாணவர் அமைப்புகளும் தொடர்ந்து போராடி வருகின்றனர். ஆனால், மத்திய மோடி அரசு இதனை செவிமடுக்காமல் அடம்பிடித்து நீட் தேர்வை நடத்தி வருவதால் மாணவிகளின் உயிர் தொடர்ந்து பறிக்கப்பட்டு வருகிறது. இக்கொடுமைகளுக்கு மோடி அரசு பொறுப்பேற்க வேண்டும்.

தமிழகத்தில் உள்ள எடப்பாடி அரசு தங்களது அரசை பாதுகாத்துக் கொள்வதற்காக பாஜகவுடன் கூட்டணி அமைத்துக் கொள்வதும் மத்திய அரசின் எடுபிடியாக செயல்பட்டு வருகிறது. இதன் காரணமாக நீட் தேர்வை எதிர்த்து தமிழக மக்களை ஒருங்கிணைத்து மத்திய அரசை வற்புறுத்திட எடப்பாடி அரசு தயக்கம் காட்டி வருகிறது.

மோடி – எடப்பாடி அரசின் கூட்டுச் சதியினால் தமிழக மாணவர்களின் மருத்துவக் கனவு தகர்ந்து கொண்டுள்ளது. பல உயிரிழப்புகளும் தொடர்ந்து கொண்டுள்ளன. எனவே, உடனடியாக நீட் தேர்வுக்கு விதிவிலக்கு அளிப்பதுடன் குடியரசுத் தலைவரது ஒப்புதலுக்கு காத்துள்ள இரண்டு மசோதாக்களுக்கும் தாமதமின்றி ஒப்புதல் வழங்கிட வேண்டுமென மத்திய-மாநில அரசுகளை வற்புறுத்துவதோடு தமிழக மாணவர்களின் மருத்துவ படிப்பை உறுதி செய்திட அனைத்து அரசியல் கட்சிகளும் மாணவர்கள் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகளும் ஒன்று திரண்டு மீண்டும் களம் காண வேண்டுமென வற்புறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.

மாணவிகளது மரணத்தால் துயருற்றுள்ள அவர்தம் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். இவர்களது குடும்பங்களுக்கு ரூபாய் 50 லட்சம் நிவாரணத் தொகையினை அரசு வழங்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

மாணவ-மாணவிகள் இத்தகைய கொடுமையான முடிவுகளை மேற்கொள்ள வேண்டாமெனவும் ஒன்றுபட்டு போராடி நீட் தேர்விலிருந்து விதிவிலக்கு பெற அணிதிரள வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

Check Also

மருத்துவ படிப்பில் அரசு மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்களுக்கான கட்டணத்தை அரசே ஏற்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அவர்கள், மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் திரு. எடப்பாடி கே. பழனிச்சாமி ...